கடந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வரலாற்றினை அகிலத்திரட்டு அம்மானையிலும் படித்து உணர நேர்ந்தது. ஆனால் அவ்வரலாறு அம்மானை வரிகளாக, அறிவியலுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கைக் கதைகளின் கலப்போடு அகிலத்திரட்டு அம்மானையில் எழுதப்பட்டுள்ளது.
ராமாயணம் மஹாபாரதம் போன்ற புராணக்கதைகளும், முற்காலங்களில் நிகழ்ந்த சம்பவங்களோடு, அறிவியலுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கைக் கதைகள் மற்றும் இந்துத்துவத்தின் புரட்டுகளை கலந்து உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிப்பதை இவ்விடத்தில் நினைவு கூர விழைகிறேன்.
ராமாயணத்தில் வருகின்ற அரக்கர் கதாபாத்திரங்கள் அனைவரும் திராவிடர்கள் என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
இங்கே, அகிலத்திரட்டில் மூடநம்பிக்கைகள் கலந்து கூறப்பட்டுள்ள சம்பவங்கள் சில, நான் முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ள வரலாற்று சம்பவங்களோடு பொருந்திப் போவதைப் பார்க்க முடிகிறது. அதற்கான ஆதாரங்களை அகிலத்திரட்டு அம்மானையின் வரிகளில் இருந்தே காணலாம். ஆனால் ஒவ்வொரு வரலாற்று நிகழ்வையும் அகிலத்திரட்டு அம்மானையோடு ஒப்பிட்டு நிரூபிக்க விரிவான விளக்கங்கள் தேவைப்படுகின்றன. விரிவாக எழுத வேண்டியுள்ளது.
அகிலத்திரட்டு அம்மானையின் கூற்றுப்படி நீசன், முத்துக்குட்டி (அய்யா வைகுண்டர்) பிறப்பதற்கு முன்பே பிறந்து விட்டான். கானகத்து பட்சி, பறவை, மிருகங்கள் அனைத்தும் திருமாலைப் பார்த்து, நீசன் பிறந்து விட்டதால் இந்த தேசத்தில் இருக்கத் தங்களுக்கு விருப்பமில்லை என்று கூறியதாம். அதற்கு திருமால், “நீசனை அறுத்து நீதி யுகம் ஆள வாசத்தோடு மாயன் (அய்யா வைகுண்டர்) வர வேண்டுமென்று வரம் கேட்டு, சாம்பசதாசிவத்தை நோக்கி, நீங்களெல்லாம் தவமிருங்கள்”, என்று சொன்னாராம். ஆக, அய்யா வைகுண்டர் (முத்துக்குட்டி) பிறப்பதற்கு முன்பே நீசன் பிறந்து விட்டான் என்றுரைக்கின்றது அகிலத்திரட்டு.
‘வெண்பச்சியான மேலான பச்சிகளும்
இன் பச்சியெல்லாம் எங்கு இனி போவோம் என்று
கதறி அழுது கனைத்து நின்றார் காடதிலே
பதறியழுது பறவை மிருகமோடு
நிற்கும் அளவில் நீலவண்ணார்தாம் அறிந்து
பக்குவப்பிராயப் பண்டாரமாகி வந்து
ஏது காண் நீங்கள் இந்த வனவாசம் அதில்
ஓதிக்கரைய உங்கள் விதியானது என்ன
செப்போடு ஒத்த திருமால்தனைப் பார்த்து
அப்போது எல்லாம் அழுது அழுது ஏது சொல்லும்
நீசக்கலியன் நீனிலத்தில் வந்ததினால்
தேசம் அதில் எங்களுக்கு செல்ல விருப்பம் இல்லை அய்யா என்றுரைக்க’
‘மெய்வரம்பு கொண்ட மிகுந்த மிருகம் எல்லாம்
கும்பக் குரு மலையில் கூடியே நீங்கள் எல்லாம்
சாம்ப சதாசிவத்தைப் போற்றி உள்ளிருத்தி
நீசன் தனை அறுத்து நீத யுகந்தான் ஆள
வாசமுடன் மாயன் வரவே வரம் வேண்டி நில்லும்’ 1*
என்ற அகிலத்திரட்டு அம்மானையின் வரிகளை ஆராய்க!
நீசன் யார்?
நீசன், கலியன், கலி நீசன் என்றெல்லாம் அகிலத்திரட்டுக் குறிப்பிடுகின்ற அந்த நபரை பிறப்பால் அந்தணர் என்று சொல்கின்றது அகிலத்திரட்டு அம்மானை.
(வெண்ணீசன் பற்றி பின்வரும் பகுதிகளில் காண்போம்)
‘இயல்பு கெட்ட மாநீசன்
அன்று அந்த ஈசர் அடி வணங்கி ஏது சொல்வான்?
என்றனுக்கு ஏற்ற இளமயிலை உண்டாக்கித்
தந்து அருளிய கோவே சர்வ தயாபரனே
இனி எனக்கு ஏற்ற இயல் வரங்கள் ஆனதெல்லாம்
கனி இதழும் வாயானே கையில் தர வேணும் என்றான்
அப்படியே ஈசர் அவனை முகம் நோக்கி
இப்படியே உன்றனுக்கு ஏது வரம் வேணும் என்றார்
என்ற பொழுது இயல்பு கெட்ட மாநீசன்
தெண்டன் இட்டு ஈசர் திருவடியைத் தான் பூண்டு
கேட்பான் வரங்கள் கீழும் மேலும் நடுங்க
வீழ்ப்பாரம் கெட்ட விசை கெட்ட மாநீசன்
மாயவனார் தம்முடைய வாய்த்த முடியானதையும்
தூயவனார் சக்கரமும் சூதமுடன் தாரும் என்றான்
அரனுடைய வெண்ணீறும் அந்தணரின் தம்பிறப்பும்
வரமுடைய சத்தி வலக்கூறும் தாரும் என்றான்’ 2* என்ற அகிலத்திரட்டு அம்மானை வரிகளில் நீசன் ஈசரிடம் வரம் கேட்டுப் பெறும் நிகழ்வு வர்ணனையுடன் கூறப்பட்டுள்ளது. அதில் ‘அரனுடைய வெண்ணீறும் அந்தணரின் தம்பிறப்பும்’ என்ற வரியை நோக்குங்கால் நீசன், தான் அந்தணராகப் பிறக்க வேண்டும் என்று ஈசரிடம் வரம் வாங்கியது புலப்படுகின்றது. ஆக, அகிலத்திரட்டு அம்மானையில் ‘நீசன்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பவர் பிறப்பால் ஒரு அந்தணர். 18, 19ஆம் நூற்றாண்டுகளில் அந்தணர் என்ற சொல் பிராமண வர்ணத்தினரைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டது என்பதை நாம் அறிவோம். ஆக, அகிலத்திரட்டு அம்மானையில் கூறப்பட்டுள்ள நீசன் பிறப்பால் பிராமணர் என்பது உறுதி!
நீசன் பூலோகத்துக்கு வந்த போது,
‘முன்னிருந்த சாத்திரமும் முறையும் பஞ்சாங்கமதும்
பின்வந்த நீசனினால் போக வழி தேடிடுமாம்
நீசனுக்கு முன்னிருந்த நீதநெறி மானுபவங்கள்
போய் அகல்வோம் என்று புத்திதனில் எண்ணிடுமாம்’3* என்று சொல்கின்ற அகிலத்திரட்டு,
நீசன் வந்த பிறகு, அவன் செய்த காரியங்களில் ஒன்றாக பின்வருபவற்றை சொல்கின்றது.
‘சாத்திரத்தை ஆறாய்த்தான் வகுத்து வேதமதை
மாத்திரமே நாலாய் வகுத்தான் காண் அம்மானை
நட்சத்திரத்தை நல்ல இருபத்து ஏழாகப்
பொய்ச் சேத்திரமாய்ப் பிரித்தான்காண் அம்மானை
கோள் ஒன்பதுக்கும் கூடு பன்னிரெண்டாக
நாள் ஏழு வாரம் நகட்டி வைத்தான் அம்மானை
பக்கமது பத்து அஞ்சாகப் பவம் பிரித்துத்
தக்கமது லோகம்தான் ஆண்டு இருக்கையிலே
மாந்திரத்தால் செய்த வறுமை கேள் அன்போரே’4*
அதாவது நீசன் வருவதற்கு முன்பிருந்த சாஸ்திரங்களும், முறைகளும், நீசன் வந்தவுடன் மறையத்தொடங்கியது என்கின்றது அகிலத்திரட்டு அம்மானை. அதில் ‘நீசனுக்கு முன்னிருந்த நீதநெறி மானுபவங்கள்’ என்ற அகிலத்திரட்டு வரியில் இருக்கின்ற ‘நீதநெறி மானுபவங்கள்’ என்ற வார்த்தைகளைக் கருத்தில் கொள்க! அகிலத்திரட்டு அம்மானை பலமுறை பலரால் ஓலைச்சுவடிகளிலும், பிற்காலத்தில் அச்சுக்கோப்புகளிலும் பிரதி எடுக்கப்பட்டதால், ஒருசில வார்த்தைகளில் எழுத்துப்பிழைகள் இருக்கலாம் என்பதை முன்பே பார்த்திருந்தோம். அவ்வாறே மானுபவங்கள் என்ற வார்த்தையும் மருவியிருக்கிறது என்பது எமது கருத்து. இங்கு மானுபவங்கள் என்ற வார்த்தை ‘மா அனுபவங்கள்’ என்ற வார்த்தையின் மருவலாக இருக்கலாம், அல்லது மானுடங்கள் என்ற வார்த்தையின் மருவலாக இருக்கலாம். இவ்விரு வார்த்தைகளில் எந்த வார்த்தையாக இருந்தாலும், மேற்சொன்ன அகிலத்திரட்டு ஒரே பொருளையே பெறுகின்றது.
மா அனுபவங்கள் = மகா அனுபவங்கள், மனிதர்கள் பெற்ற சிறந்த அனுபவங்கள்.
மானுடங்கள் = மனிதங்கள்.
மேற்சொன்ன மருவல் சொற்களைக் கருத்தில் கொண்டு,
‘நீசனுக்கு முன்னிருந்த நீதநெறி மானுபவங்கள்
போய் அகல்வோம் என்று புத்திதனில் எண்ணிடுமாம்’ என்ற வரிகளுக்கு பொருள் காண்போம்.
‘நீசன் நானிலத்தில் வந்த பிறகு, நீசனின் வரவுக்கு முன்பிருந்த நீதி, நெறி, மனிதங்கள் அல்லது மனிதர்கள் பெற்ற சிறந்த அனுபவங்கள் எல்லாம் போய் அகன்று விடுவோம் என்று, மனிதர்களின் புத்திதனில் எண்ணிடுமாம்’ என்ற பொருளே அறியப் பெறுகின்றோம்.
ஆக, ‘நீசனின் வரவுக்கு முன்புவரைத் தமிழ்ச் சமூகத்தில், நீதியும் நெறிகளும், மனிதங்களும் அல்லது மனிதர்கள் பெற்ற அனுபவங்களும் ஆகியவையே சாஸ்திரங்களாக இருந்தன’ என்றுரைக்கின்றது அகிலத்திரட்டு. நீசன் பிராமணர் எனில், ‘பிராமண வர்ணத்தவர் என்னும் ஆரியர்களின் வைதீக மதம் தமிழ் சமுதாயத்தில் கலப்பதற்கு முன்பு, மனிதமே தமிழர்களின் சாஸ்திரமாக இருந்தது’ என்ற வரலாறு இதில் பொருந்திப் போகிறது.
‘ஆகமத்தைக் கூறழித்தான் அன்னீத மாபாவி’* என்ற அகிலத்திரட்டு வரியும் இங்கு ஆழ்ந்து நோக்கத்தக்கது. வழிபாட்டுத்தலங்கள் சார்பாக இருந்த தமிழ் ஆகமங்களை மாபாவி (நீசன்) சிதைத்தான் என்ற கருத்தை பதிவு செய்கிறது அகிலத்திரட்டு. இதுவும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய ஒன்றே!
நீசனின் வரவுக்குப் பிறகு, நீசன் ஆறு சாஸ்திரங்கள், நான்கு வேதங்கள், இருபத்தி ஏழு நட்சத்திரங்கள், பன்னிரெண்டு ராசிகள், ஒன்பது கோள்கள், வாரத்துக்கு ஏழு நாட்கள் என்று பிரித்தான் என்று சொல்கிறது அகிலத்திரட்டு. ஆறு சாஸ்திரங்களையும், ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களையும் மனித குலத்துக்கு அறிமுகம் செய்தது ஆரியர்கள் என்பதற்கு சான்று தேவையில்லை என்றே கருதுகிறேன். இப்போது இந்துத்துவத்தின் அடிப்படையாக ஆறு சாஸ்திரங்களையும் நான்கு வேதங்களையும் கட்டமைத்து வைத்திருப்பது பார்ப்பனியம் என்பதும் எல்லோரும் அறிந்ததே! எனில் அகிலத்திரட்டு அம்மானை சொல்கின்ற நீசன் பிறப்பால் யார்? என்ற புதிருக்கு விடை காண்பது ஒன்றும் கடினமல்ல.
மேலும் அகிலத்திரட்டு அம்மானையின் கீழ்க்காணும் வரிகளையும் கருத்தில் கொள்க!
‘கலியன் அவன் செல்ல கைம்மறந்து அவ்வுலகில்
பொலிவுள்ள தானதர்மம் பொன்றிச்சே நீதமதும்
முன்னிருந்த சாஸ்திரமும் முறைமை மிகத்தவறிப்
பின்னுதித்த நீசன் பிரித்தான் காண் வெவ்வேறாய்
ஆனதால் பூலோகம் அழிந்து மிகத்தவறி
ஊனம் அடைந்தார் உலகிலுள்ள சான்றோர்கள்’5*
ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் பலரும், அகிலத்திரட்டு அம்மானை ‘நீசன்’ என்று இடிந்துரைப்பது ‘திருவிதாங்கூர் அரசர்களை’ என்றுதானே சொல்கிறார்கள்? என்ற கேள்வி வாசகர்களுக்கு எழலாம். அவ்வளவு ஏன் நானும் கடந்த அத்தியாயங்கள் எல்லாவற்றிலும் நீசன் என்பவரை திருவிதாங்கூர் அரசர் என்றுதான் குறிப்பிட்டிருந்தேன். எனில் திருவிதாங்கூர் அரசர் அந்தணரா?
இந்த முரண்பாட்டு கேள்விக்கு விடை தேடிய போது, ‘மருமக்கள் தாயம்’ என்ற கொடிய வழக்கத்தையும், நாயர் சாதியைச் சார்ந்த சாமான்ய பெண்கள் முதல், திருவிதாங்கூர் அரச குடும்பத்துப் பெண்கள் வரை ‘தரவாடு’ என்ற கேடுகெட்ட அமைப்பால் பாதிக்கப்பட்ட இருண்ட வரலாற்றையும் படிக்க நேர்ந்தது.
தரவாடும் மருமக்கள் தாயம் முறையும்
சம்மந்தம், புடவ முறி, வஸ்திரதானம், உழம் பொறுக்குக, விதாரம்கயருக போன்றவை, அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை, மருமக்க தாயத்தை பின்பற்றிய, நாயர் பெண்களுக்கு நடத்தப்பட்ட கல்யாணச் சடங்கினை குறிக்கும் சொற்கள் ஆகும். இவ்வாறு நடத்தப்படும் நாயர் சாதிப் பெண்களின் திருமணச் சடங்கினை போலிக் கல்யாணம், கேலிக்கல்யாணம், ஒப்புக்கான கல்யாணம், கற்பனைக் கல்யாணம், கேவலக் கல்யாணம், புனிதக் கல்யாணம், கல்யாணத்தின் முன்னோடி, பொருளற்றச் சடங்கு, வெற்றுச் சடங்கு, கேவலமான நாடகம், முரணான வழக்கம், பணத்தை பாழ்படுத்துவது, கடன் காரனாக ஒரு வழி என்றெல்லாம் மக்கள் சொல்வதுண்டு. ஏனென்றால் இவ்வாறாக நடத்தப்படும் கல்யாணத்தில் மணமகளுக்கு தாலி கட்டும் மணமகன், அப்பெண்ணுடன் குடும்பம் நடத்த மாட்டான்.
இந்தத் திருமணச் சடங்குக்குப் பிறகு, அந்த மணமகள் தன் சாதியின் எல்லா பிரிவு சாதி ஆண்களுடனும், மற்றும் தன் சாதியை விட உயர்வான சாதி ஆண்களுடனும், எத்தனை பேருடன் வேண்டுமானாலும் உறவு வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டாள்.6* அனுமதிக்கப்பட்டாள் என்பதை விட கட்டாயப்படுத்தப்பட்டாள் என்பதே எனது கருத்து.
நாயர் சாதியைவிட கீழ்சாதியாகக் கருதப்பட்ட சாதி ஆண்களுடன் மேற்சொன்ன நாயர் சாதி பெண்கள் உறவு கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. மீறி உறவு கொண்டால், அவ்வுறவின் மூலம் பிறக்கும் குழந்தைகள் தரவாட்டில் தாயுடன்தான் தங்கியிருக்க வேண்டும். ஆனால் தரவாட்டின் சமையலறைக்குள் நுழையவோ, சாப்பிடுகின்ற பெண்களைத் தொடவோ அக்குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. தன் தகப்பனின் பிணத்தைத் தொடக்கூட அக்குழந்தைகளுக்கு அனுமதியில்லை. ஆக அக்குழந்தைகள், தரவாட்டினுள் தீண்டாமைக்குட்பட்டவர்களாக ஆயுள் முழுவதும் வாழ வேண்டும். ஒருவேளை நாயர் பெண்ணொருத்தி சாதியப்படிநிலையில் கீழ்சாதி என்று கருதப்பட்ட, அவர்ணர் இனத்து ஆண் ஒருவனுடன் உறவு கொண்டால் அப்பெண் அவளது சாதியிலிருந்து விலக்கி வைக்கப்படுவாள்.7* நாயர் சாதி பெண்களுக்கு இழைக்கப்பட்ட இவ்வாறான கொடுமைகளே ‘மருமக்கதாய முறை’ ஆகும்.
இத்தகைய கொடிய சம்மந்தம் என்ற கல்யாணம், நாயர் சாதி பெண்ணின் 11வது வயதுக்கு முன்பே நிகழ்த்தப்படும் என்பது மற்றொரு அதிர்ச்சியானத் தகவல். இதனைப் படிக்கும் போது, தாசி குலத்துப் பெண்களுக்குப் பொட்டுக் கட்டும் அசிங்கமான கொடிய வழக்கம் நினைவுக்கு வருகின்றது.8*
திருவிதாங்கூர் அரசர் பிறப்பால் பிராமணரா? என்ற கேள்விக்கு மருமக்கதாய முறைக்குள் மறைந்து கிடக்கும் பதில், அடுத்த கட்டுரையில்…
தொடரும்…
தரவுகள்:
- பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்: 87, 88. மற்றும் அகிலத்திரட்டு அம்மானை (மூலமும் உரையும்), பாகம் ஒன்று, நா. விவேகானந்தன்.M.A(PHI.,)B.L., இரண்டாம் பதிப்பு 2006,பக்கம் எண் : 216.
- பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்: 80. மற்றும் அகிலத்திரட்டு அம்மானை (மூலமும் உரையும்), பாகம் ஒன்று, நா. விவேகான்ந்தன்.M.A(PHI.,)B.L., இரண்டாம் பதிப்பு 2006,பக்கம் எண் : 198.
- பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்: 86.
- பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்: 92.
- பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்: 94.
- தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், தொகுதி 5, ஆங்கில மூலம்: எட்கர் தர்ஸ்டன், தமிழாக்கம்: க.ரத்னம், முதற்பதிப்பு:2003, பக்கம் எண்: 334,335,336,
- தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், தொகுதி 5, ஆங்கில மூலம்: எட்கர் தர்ஸ்டன், தமிழாக்கம்: க.ரத்னம், முதற்பதிப்பு:2003, பக்கம் எண்: 309, 310.
- தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், தொகுதி 5, ஆங்கில மூலம்: எட்கர் தர்ஸ்டன், தமிழாக்கம்: க.ரத்னம், முதற்பதிப்பு:2003, பக்கம் எண்: 327, 329.
படைப்பாளர்
சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.