ஒரு பெண்ணின் வாழ்வில் காலம் காலமாக இன்றளவிலும் சமுதாயம் மற்றும் கலாசாரக் கூறுகள் செல்வாக்கு செலுத்துகின்றன, அதைத் தீர்மானிக்கின்றன.

நான்காம் அலை பெண்ணியம் நிகழ்ந்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், இன்று திருமணம் மற்றும் குடும்பம் எனும் கோட்பாடுகள் பெரும் வாதங்களுக்கான பேசு பொருளாக இருக்கின்றன. இந்த கோட்பாட்டு நிறுவனங்களை ஒரு சாரார் தக்க வைத்தக் கொள்ள கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருவது மட்டுமில்லாமல், கலாசாரம் சீரழிவதாகவும் வாதிடுவர். இன்னொரு சாரார் விவாகரத்து என்பது அவமானத்துக்குரிய செயற்பாடு இல்லை; அதைப் பயன்படுத்தும் உரிமை, சம்பந்தப்பட்ட ஆணுக்கும் பெண்ணுக்குமுரியது, சமுதாயம் குறுக்கிடுவது முறையன்று என வாதிடுகின்றனர்.

சமுதாயம் மற்றும் கலாசாரம் என்ற சொற்கள் அடிக்கடி பெண்ணியம் சம்பந்தப்பட்ட விவாதங்களில் பயன்படுத்தப்படுவதை நாம் அவதானிக்கலாம்.

மனிதன் தன் இனத்தாரோடு கூடிக் கலந்து வாழ்வதில் சமூகம் (Community) உருவாகின்றது. தனி மனித வாழ்வுக்கும் சமூக வாழ்வுக்கும் இடையில் நிரம்ப வேறுபாடு உண்டு. சமுதாயம் (Society) என்பது மனித இனத்தின் சமூக, பொருளாதார, அரசியல் தொடர்புகளினால் இயங்கிவரும் ஓர் அமைப்பாகும். சமூகம், சமுதாயம் ஆகிய இருசொற்களையும், பெரும்பாலும், ஒரே பொருளைக் குறிக்கப் பயன்படுத்துவது வழக்கம். 

சமூகம்/சமுதாயம் பண்பில் வடிவமற்றது; உருவமற்றது என்கிறார்கள் மானிடவியலாளர்கள். இத்தகைய வடிவமற்ற, உருவமற்ற சமூகத்தின் அதிகாரம் எவ்வாறு இயங்குகிறது என பார்த்தோமானால், அது பெளதிகத்தன்மை கொண்டதல்ல என்று மானிடவியலாளர்கள் விளக்குகிறார்கள். இத்தகைய பெளதிகத்தன்மையற்ற சமூகங்களின் அதிகாரமே பெளதிகப் புலன்களைச் சமூகப் புலன்களாக உருமாற்றுகிறது. சமூகப் புலன்கள் ஊடாகவே தினசரி சமூகம் கட்டமைக்கப்படுகிறது.

கலாசாரம் என்றால் என்ன ? பல சமூகவியலாளர்களும் எழுத்தாளர்களும் வரைவிலக்கணங்கள் கூறியுள்ளபோதும், அவற்றில் டய்லர் என்ற மானுடவியலாளரின் வரைவிலக்கணம் முக்கியமானது. கலாசாரம் என்பது அறிவு, கலை, சட்டதிட்டங்கள், பழக்கவழக்கங்கள், உணவு மற்றும் சமூகத்தில் வாழும் பிரஜை என்ற ரீதியில் அவர்களால் பெற்றுக் கொள்ளப்படும் சிந்தனைகளும் அதன் வழி வரும் ஆற்றல்களுமாகும். கலாசாரம் காலத்துக்கேற்ப படிப்படியாக மாற்றமடைந்து விருத்தி பெறும் செயற்பாட்டு ஒழுங்கு ஆகும்.

நாம் கூர்ந்து கவனித்தோமானால் சமுதாயம் மற்றும் கலாசாரம் எனப்படுபவை மனிதர்களின் ஈடுபாடுகளாலும் சிந்தனைகளாலும் உருவாக்கப்பட்டபோதிலும், அவற்றுக்கு முகங்கள் கிடையாது. சமுதாயம், கலாசாரம் இரண்டுக்குமே முகங்கள் கிடையாது. ஆனால் இவற்றை அமுல்படுத்துவோருக்கு முகங்கள் உண்டல்லவா?

Photo by Eduardo Sánchez on Unsplash

ஆக மொத்தத்தில் முகமுள்ள மனிதர்கள் முகமற்ற கலாசாரத்தின் பின்னும், சமுதாயத்துக்குள்ளும் மறைந்து விடுகிறார்களா? ஆதிக்கம் கூடிய மனிதர்கள் லாவகமாக சமுதாயத்தை ஆட்டிப்படைக்கிறார்களோ என்ற சந்தேகம் எழத்தொடங்குகிறது. மனிதர்கள் உருவாக்கும் விதிகள், சம்பிரதாயங்கள் மேலும் பல மரபு கோட்பாடுகளை நோக்கிக் கேள்வி எழுப்பும் போது, அதன் ‘காரணகர்த்தா’ சமுதாயமும் கலாச்சாரமும்தான் என்று கை காட்டி விட்டு, தப்பித்துக் கொள்கிறார்கள்.

இதன் வழியில் தான் திருமணம், குடும்பம் மற்றும் வீடு என்ற கருத்தியல் நிறுவனங்கள் கட்டமைக்கப்பட்டன. இவற்றால் பெண் அடிமையானாள்.

இவற்றின் அடிப்படையை சரிவர புரிந்து கொண்டோமானால், ஆணாதிக்கத்தின் உருவாக்கம் புரிந்துவிடும். 

திருமணமும் குடும்பமும் இயற்கையிலேயே பின்னிப் பிணைந்தது, அதில் அதிசயப்பட எதுவுமில்லை என பொதுவிலே மக்கள் நினைப்பதுண்டு. அவர்களைப் பொறுத்த வரையில் முதலில் காதல் தோன்றும், பின்னர் திருமணம் தொடரும், குழந்தையுடன் அது நகர்ந்து செல்லும் என்பது ஜனரஞ்சகமான கருத்தியல் போக்கு. திருமணம் மற்றும் குடும்பத்தைச் சுற்றி கட்டப்பட்ட விழுமியங்களும் கோட்பாடுகளும் ஆணுக்கும் பெண்ணும் இடையிலான காதலை மையமாகக் கொண்டவை. காதல் கொண்ட ஆணும் பெண்ணும் தனிக்குடும்பமாக மாறி வாழ்வின் பொறுப்புக்களையும் துக்கங்கள் சந்தோஷங்களையும் ஒன்றாகப் பகிர்ந்து கொள்பவர்கள் என்பதும் இதில் அடங்கும். இந்த பகிர்வு எத்தகையதாக இருக்கிறது? ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாகப் பங்கிடப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. இதை விரிவாக அடுத்து வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.

சரி, திருமணங்கள் காதல் எனும் உறவினால் மட்டுமா என்றால் இல்லை என்பதே பதில்.

குறிப்பாக மானுடவியலாளர்கள் அதை ஏற்பதாக இல்லை. நாமும் நம் அன்றாட வாழ்க்கையில் அதைப் புரிந்து கொள்கிறோம். உதாரணமாக மூன்று குழந்தைகளுக்கு தந்தையான ஒரு ஆணை எடுத்துக்கொள்வோம், அவர் தன் மனைவி இறந்தால் மறுமணம் செய்ய விழைகிறார். இன்னொரு பெண்ணை மணந்து தன் மூன்று பிள்ளைகளுக்குத் தாயாக வீட்டுக்குள் அழைத்து வருகிறார். அங்கு காதல் உணர்வைவிட, குழந்தைகளையும் வீட்டையும் பராமரிக்க ஒரு பெண் தேவை என்ற யதார்த்தம் காரணமாக ஒரு திருமணம் அந்த ஆணுக்கு அவசியமாகிறது. ஆகவே குடும்பம் காதல் அல்லது அன்பு என்பதன் அடிப்படையில் மட்டுமே உருவாவதில்லை. காதலும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். காதல், வேறு புறக்காரணிகளோடு சேர்ந்தும் குடும்பத்தின் தேவையை ஏற்படுத்திவிடுகிறது.

மேலும் பண்டைய காலத்தில் ஆண் பெண் இருவரும் சேர்ந்து இணையாக சடங்கு சம்பிரதாயங்களில் பங்காற்றினர். குறிப்பாக தெற்காசிய நாடுகளில் நிலவி வந்த பண்பாடு, இன்றும் நம்மை துன்புறுத்துகிறது.

Photo by Dendy Darma Satyazi on Unsplash

திருமணங்கள் பாலுறவை ஒழுங்குபடுத்துவற்காக உருவாக்கப்பட்டவையா? ஒரு ஆணும் பெண்ணும் தம்மிடயே பாலியல் தொடர்பை அங்கீகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட திருமணங்களில், பெண்கள் குழந்தைகளை பெற தகுதியானவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். குடும்பங்களும் வீடுகளும் தோன்றிய பின்னரே திருமணங்கள் நிறுவப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதன் தலைகீழ் நிலையாக இன்றைய நவீன சமுதாயத்தில், திருமணத்திற்குப் பின் குடும்பங்களும் வீடுகளும் கட்டமைக்கப்படுகின்றன.

திருமணம், குடும்பம் மற்றும் வீடு என்ற அடிப்படையில் பெண் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டாள்  என்பது பெண்ணியல்வாதிகளின் வாதம் மட்டுமல்ல, அதுவே மானுடவியலாளர்கள் மற்றும் சமூகவியலாளர்களின் கண்டுபிடிப்புகளாகவும் உள்ளன.

சமுதாயம் மற்றும் கலாசாரம் எனும் கருத்தியல்கள் மூலம் பெண் ஒடுக்குமுறையின் கருவியாகவும், திருமணம் மற்றும் குடும்பத்தின் மரபு வழித் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் சாதனமாகவும் பயன்படுத்தப்படுகிறாள் என நம்மால் ஓரளவேனும் விளங்கிக் கொள்ள முடிகிறது.

தாய்வழிச் சமூகங்கள் நம் தமிழர்களில் வரலாறுகளில் இருந்த போதும், பெண்கள் ஆண்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தும் பெண்ணாதிக்க சமுதாயம் உலகில் இருந்தாகவோ இருப்பதாகவே இதுவரை சான்றுகள் இல்லை. ஆனால் ஆணாதிக்க சமுதாயங்கள் ஆசிய நாடுகளில் மட்டுமல்லாது, மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமல்லாது, உலகம் முழுமையும் பரவியுள்ளன.

பெண்களுக்கே உரித்தான குழந்தைப்பேறுக்கு, அவர்கள் ‘இயற்கையினால்’ தீர்மானிக்கப்படுகிறார்கள்; ஆண்கள் கலாசாரத்தை  காக்கும் வீரர்கள் போன்ற பரவலான சிந்தனைப் போக்குகள், மெதுவாக ஆணாதிக்க சமுதாயங்களை உருவாக்கியது என்பது மானுடவியலாளர்களின் கருத்தாக இருக்கின்றது. 

இன்றய நவீன காலத்தில் திருமணங்கள் இன்று எதற்காக நடைபெறுகின்றன? ஆண் பெண் இருவரின் நோக்கங்களும் நிறைவேறுகின்றனவா? இவை வெறும் ஒப்பந்தங்களா அல்லது காதலின் அடிப்படையில் உருவானதா ?

குடும்பம் என்பது யாருக்கு உதவுகிறது? திருமணங்களும் குடும்பங்களும் தோல்வியுற்ற அமைப்புக்களா? அதன் வீழ்ச்சியில் மனித இனப்பெருக்கம் ஆட்டம் காணுமா? அடுக்கடுக்காய் கேள்விகள் துளைக்கின்றன அல்லவா, தொடர்ந்து ஆராய்வோம் தோழர்களே…

படைப்பாளர்

அஞ்சனா

பத்திரிகைத் துறையில் பட்டயப் படிப்பு முடித்து ஊடகவியலாளராக இலங்கையிலும், இங்கிலாந்து சட்டத் துறையிலும் பணியாற்றியுள்ளார். தற்போது கணக்கியல் துறையில் பணியாற்றிவரும் இவர்,  MSc. Public Policy பயின்று வருகிறார். லண்டனில் புத்தக விமர்சனங்கள் மற்றும் பெண்ணிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.