மருத்துவ வெப் தொடர்கள் பார்ப்பவர்கள் நிச்சயம் டாக்டர் ஹவுஸ் பற்றி அறிந்திருப்பார்கள். என்ன சிக்கலென்றே  புரியாமல் வரும் நோயாளிகளை விசாரித்து, ஆராய்ந்து நோயைக் கண்டுபிடிப்பார் டாக்டர் ஹவுஸ். மருத்துவத்துறையில் உள்ளதிலேயே சிடுக்கான வேலை அதுதான். நோயைக் கண்டுபிடித்துவிட்டால் மருந்து கொடுத்து அதைத் தீர்த்து வைப்பது எளிதாகிவிடும். இந்தக் கற்பனைத் தொடரின் அசல் நாயகர் ஒரு பெண் மருத்துவர். டாக்டர் லிசா சான்டர்ஸ்.

லிசா, நிஜ வாழ்க்கையில் தான் சந்தித்த விநோதமான மருத்துவச் சிக்கல்களைப் பற்றி நியூயார்க் டைம்ஸ் இதழில் பத்தி எழுதுபவர். அவர் எழுதிய கட்டுரைகளின் அடிப்படையில் உருவானதுதான் டாக்டர் ஹவுஸ் தொடர். அந்தத் தொடரின் ஆலோசகராகவும் பணியாற்றினார். அடுத்தகட்ட முயற்சியாக டயக்னோஸிஸ் என்கிற ஆவணத் தொடர் வெளியாகியுள்ளது.

டாக்டர் ஹவுஸ் தொடர் ஐஎம்டிபி மதிப்புரையில் 8.7 புள்ளிகளும் ராட்டன் டொமாட்டோவில் 90% பெற்றுள்ள புகழ் வீச்சுடைய தொடர். 8 சீசன்கள். நடிகர்களை வைத்து உருவாக்குவதெனில் எண்ணூறு எபிசோடுகள்கூடச் சாத்தியம். நிஜ வாழ்வில் நடக்கும் நிகழ்வைப் பதிவு செய்வதெனில் அப்படி அல்லவே. எனவேதான், ஏழே ஏழு எபிசோடுகளுடன் டயக்னோஸிஸ் ஆவணத் தொடர் முதல் சீசன் வெளியானது.

நமக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மருத்துவரைச் சென்று பார்க்கிறோம். காது வலிக்கிறது, கண் எரிகிறது என்று நாம் குத்துமதிப்பாகச் சொல்லும் அறிகுறிகளை வைத்து மருத்துவர் என்ன நோயாக இருக்கலாம் என்கிற முடிவுக்கு வருகிறார். நாம் எல்லா அறிகுறிகளையும் மறக்காமல் பட்டியலிடுவோமா? அப்படிச் சொல்வதற்கில்லை. மருத்துவர் மனதில் நினைக்கும் நோய்க்கு என்னென்ன அறிகுறிகள் இருக்குமோ அதெல்லாம் வரிசையாகக் கேட்பார். பெரும்பாலான அறிகுறிகள் நமக்கு இருப்பதாகச் சொன்னால் அதை உறுதி செய்வது எப்படி என்றும் அவருக்குத் தெரியும். சில நேரம் பொய் சொல்லும் நோயாளிகளும் இருப்பார்கள். அல்லது இல்லாத தலைவலியை இருப்பதாக நம்புவார்கள். எனவே உறுதி செய்து கொண்டு மருந்து கொடுப்பார்.

இந்த நடைமுறை நமக்கு அறிமுகமானதுதான். எப்போதும் தவறாமல் ஒன்றைச் சொல்லி அனுப்புவார் மருத்துவர். ‘மூன்று நாள்களில் சரியாகவில்லை எனில் என்னை வந்து மீண்டும் பாருங்கள்.’ சில நேரம் ஒரு வாரம், பத்து நாள் என்று எண்ணிக்கை மாறுமே தவிர, நல்ல மருத்துவர் இதைச் சொல்லாமல் அனுப்ப மாட்டார். ஏன் தெரியுமா? அவர் நமக்கு இருக்கும் நோய் என்று யூகித்ததும் அதற்கு அவர் கொடுத்த தீர்வும் 100 சதவீதம் சரி என்று சொல்ல முடியாது.

அவரோ நாமோ எதையோ தவறவிட்டிருக்கலாம். அதற்குத்தான் மீண்டும் வரச் சொல்வது. 99 சதவீதம் அவர் அனுபவத்தில் சரியாகத்தான் ஊகித்திருப்பார். நாமும் மீண்டும் போய்ப் பார்க்கவே மாட்டோம். ஆனால் ஒரு சிலருக்குச் சரியாகாமல் மீண்டும் சென்று பார்க்க வேண்டியிருக்கும். இந்த முறை வேறு ஊகம் ஒன்றின் அடிப்படையில் வேறு மருந்துகள் கொடுப்பார்.

மிகச் சிலருக்கு எத்தனை முறை சென்றாலும், எத்தனை பரிசோதனைகள் செய்தாலும் சிக்கல் தீரவே தீராது. ஆண்டுக்கணக்கில் என்ன நோய் என்பதையே கண்டுபிடிக்க இயலாத சிக்கல்கள் உடைய மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைத்தான் லிசா, டயக்னோஸிஸ் தொடருக்காகப் பார்த்துப் பேசுகிறார்.

அதுவரை என்னென்ன பரிசோதனைகள் செய்திருக்கிறார்கள்? எந்த நோய் என்று நினைத்து சிகிச்சை எடுத்தார்கள்? சிகிச்சையின் விளைவுகள் என்ன? இதையெல்லாம் ஆராய்ந்து அதைக் கட்டுரையாக நியூ யார்க் டைம்ஸில் வெளியிட்டார் லிசா.

மருத்துவர்கள்தான் தீர்வு சொல்ல வேண்டும் என்பதில்லை. எனக்கும் இப்படித்தான் இருந்தது என்று சாதாரண மக்கள்கூடத் தங்கள் கருத்தைச் சொல்லலாம். இந்த கிரவுட்சோர்ஸிங் திட்டம்தான் டயக்னோஸிஸ் ஆவணத் தொடர்.

தீர்வு காண இயலாத நோயைப் பற்றி எழுதியதும் பலர், பலவாறு கருத்துகளைச் சொல்கிறார்கள். எழுத்தாளர், மாணவர், கார் ஓட்டுநர், மனநல ஆலோசகர், மருத்துவர்கள், துறை வல்லுநர்கள், ஆய்வாளர்கள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆயிரக்கணக்கானோர் அனுப்பிய வீடியோக்களை ஆராய்ந்து அதில் தீர்வு எனத் தோன்றும் பரிந்துரைகளை நோயாளிகளிடம் முன் வைக்கிறார் லிசா.

உண்மைக் கதைகள் எப்படி முடிய வேண்டும் என்பதை இயக்குநர் தீர்மானிக்க முடியாதல்லவா? அதுதான் டாக்டர் ஹவுஸ் தொடரில் இருந்து டயக்னோஸிஸ் தொடரை வேறுபடுத்துகிறது. இதுதான் தீர்வென்று யார் சொன்னாலும் கேட்காமல், ‘மாட்டேன் போ’ என்று அடம்பிடிப்போரும் உண்டு. எதைச் சொன்னாலும் ‘முயன்று பார்க்கிறேன்’ என்கிற சமத்து நோயாளிகளும் உண்டு.

செவிலியர் ஏஞ்சலின் பார்கரின் கதை இது. 14 வயதில் முதன் முதலில் தீவிர வலியை உணர்ந்தார். உடலின் தசைகள் அனைத்தும் இறுக்கிப் பிடித்திழுக்கும் வலி. உடலை அசைக்கவே முடியாது. இடுப்புப் பகுதியில் ஆரம்பித்து கை, கால்கள் வரை பரவும். ஒன்றிலிருந்து பத்துக்குள் வலியை மதிப்பிடச் சொன்னால் 9 என்பார். இந்த நேரத்தில்தான் வரும் என்றில்லை. வந்தால் எவ்வளவு நேரம் வலி இருக்கும் என்பதற்கும் உத்தரவாதமில்லை. நினைத்த நேரத்தில் வந்து, சில நாள்கள் நின்று பெய்யும் சென்னை மழையைப் போலச் செயல்பட்டது வலி.

பத்தாண்டுகளாக அவர் போகாத மருத்துவமனையில்லை. முடக்குவாதத்தில் ஆரம்பித்து ஆட்டோஇம்யூன் நோய் வரை பலவற்றுக்குச் சிகிச்சையும் எடுத்துப் பார்த்தார். எதிலும் வலி சரியாகவில்லை. சில மருத்துவர்கள் அவர் பொய் சொல்வதாக வழக்குகூடத் தொடுத்தனர். சிகிச்சைக்குச் செலவழித்து கடனாளியானார். காதலனோடு இணைந்து வாழ்ந்தாலும் கல்யாணம், குழந்தை, குடும்பம் எல்லாம் கனவாகவே போய்விடும் நிலை.

வலி ஏற்படும் சமயத்தில் அதீத கேட்டமின் கினாஸ் இருக்கிறது என்பதைத் தவிர வேறு எதையும் யாரும் கண்டுபிடிக்க இயலவில்லை. ஏஞ்சலின், காபி டிகாஷன் நிறத்தில் சிறுநீர் கழிப்பதைப் பார்த்து அதை ஆய்வு செய்து தெரிந்து கொண்ட தகவல். ஏன்? எதற்கு? எப்படிச் சரிசெய்வது? அதெல்லாம் தெரியாது. இந்தச் சமயத்தில்தான் லிசா உதவிக்கு வந்தார்.  நியூயார்க் டைம்ஸ் இதழில் ஏஞ்சலின் கதையை விவரமாக எழுதிப் பதிப்பித்தார். யோசனைகள் குவிந்தன. அதில் பலவற்றை ஏஞ்சலின் முன்னரே முயன்று பார்த்திருந்தார்.

இத்தாலியில் ஜீன்களை ஆய்வு செய்யும் குழு தங்களால் சிக்கலைக் கண்டறிய முடியும் என்றது. அவ்வளவு தூரம் போய் சிகிச்சை எடுக்கப் பணம் இல்லையே. ஆனால் பாருங்கள், அவர்கள் நாட்டில் இந்த மாதிரி பெரிய நோய்களுக்கான ஆய்வு, சிகிச்சை எல்லாமே இலவசமாம். அமெரிக்காவில் அப்படி இல்லையே என்று நொந்து கொண்டே கைக்காசு செலவு செய்து விமான பயணச்சீட்டு மட்டும் வாங்கி இத்தாலி சென்றார். உடனே இல்லாவிட்டாலும் இரண்டு மாதங்களில் ஜீன் குறைபாட்டைக் கண்டுபிடித்து உறுதி செய்தனர்.

நோயைக் கண்டுபிடித்ததும் தீர்வும் எளிதானது. மருந்து மாத்திரைகூடத் தேவையில்லை. உண்ணும் உணவில் சிலவற்றைத் தவிர்த்தால் போதும். அதைக் கேட்ட மாத்திரமே ஏஞ்சலினின் வலி காணாமல் போனது. குடும்பம், குழந்தை, பிடித்த வேலை எல்லாமே சாத்தியம். இதெல்லாம் சாத்தியமே இல்லையென மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு ஏஞ்சலினுக்குத் துணையாக ஆதரவாக இருக்கும் காதலன் தீர்வு கிடைத்த நொடியில் உடைந்து அழுகிறார். ஆனந்தக் கண்ணீர். இப்படியான முதல் எபிசோடைப் போலவே ஒவ்வொரு எபிசோடும் உணர்ச்சிகரமான ஆனால் விறுவிறுப்பான துப்பறியும் கதையாகச் செல்கின்றன.

ஏழு வயதுச் சிறுமி சாடிக்கு ஏற்படும் வலிப்பு நோய்க்குத் தீர்வாகப் பாதி மூளையை நீக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். பேச்சு, நடை, அறிவு போன்ற பலவும் வழித்துப் போடும் மூளையோடு போய்விடும். மிச்சம் என்ன வாழ்வு இருக்கும்? எல்லாரும் அதைத்தான் தீர்வெனச் சொல்லும்போது, அந்தத் தாய் வேறு என்னதான் செய்ய இயலும்? லிசா மூலம் சாடியின் அம்மாவுக்குக் கிடைக்கும் யோசனைகளில் ஒன்று அவருக்கு மனத்திடம் அளிக்கிறது. “எஃப்.பி.ஐ. ஏஜென்டைவிடத் திறமையாக ஆராயக்கூடியவர் நோயுற்ற குழந்தையின் அம்மா” என்று தனக்குச் சொல்லப்பட்டதை ஒரு தாய் குறிப்பிட்டு, “உங்களுக்குச் சரியெனத் தோன்றும் தீர்வையே தேர்ந்தெடுங்கள்” என அறிவுறுத்துகிறார்.

சாடியின் அம்மா மூளை அறுவை சிகிச்சையைத் தள்ளிப் போட நினைக்கிறார். தன் குழந்தைக்கு வேறு ஏதேனும் வாய்ப்பிருந்தால் அதைத் தேடித் தந்தால் அவள் குறையற்ற வாழ்வை வாழ இயலுமே! இன்னொரு நவீனத் தீர்வு அவரைத் தேடி வருகிறது. நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தும் கருவி ஒன்றை மண்டையோடு பொருத்தும் சிகிச்சையை மேற்கொள்கிறார். விரைவில் அவள் குணமடைவாள் என்கிற நம்பிக்கையுடன் அந்த எபிசோட் முடிகிறது.

தீர்வே இல்லாத கதைகளும் உண்டு. 6 வயது கமையாவின் இதயம் உள்பட எல்லா உறுப்புகளும் செயல்படுவதைச் சில நொடிகள் நிறுத்திக் கொள்கின்றன. அதிகபட்சம் அரை நிமிடம் வரை இப்படி அசைவற்றுக் கிடக்கிறாள். நின்று கொண்டிருந்தால், விழுந்துவிடுவாள். சில நொடிகளில் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்து விளையாடுவாள். மாடிப்படியில் ஏறும்போது இப்படியானால்? கமையாவின் அம்மா முழு நேரமும் இவளுடன் இருந்து கவனித்துக் கொள்கிறார்.

இச்சிறுமிக்கு டி.என்.ஏ. குறைபாடு என்பதைக் கண்டறிந்தாலும் தீர்வு இப்போதைக்கு இல்லை. இந்தக் குறைபாட்டுடன் இருக்கும் மற்றவர்களை அடையாளம் காண லிசாவின் எழுத்து உதவுகிறது. குழந்தையை வளர்க்க மனக்குறைகளைப் பகிர்ந்து கொள்ள ஒருவருக்கு இன்னொருவர் ஆறுதலாகச் சில குடும்பங்கள் இணையம் மூலம் இணைகின்றன. இந்த ஆவணத் தொடரில் இருக்கும் ஒவ்வொரு எபிசோடும் ஒவ்வொரு விதத்தில் நம்மைப் பாதிக்கின்றன.

டயக்னோஸிஸ், டாக்டர் ஹவுஸ் தொடர்களின் மூலம் மருத்துவப் புதிர்களை அவிழ்க்கும் லிசா இளம் வயதில் தன் தாயை இழந்தவர். உடல்நலம் சரியாக இல்லை என்று மருத்துவரைப் பார்க்கப் போனார்கள் லிசாவின் அப்பாவும் அம்மாவும். அம்மா உள்ளே இருக்க, அப்பா வெளியே காத்திருந்தார். சிறிது நேரத்தில் வெளியே வந்த மருத்துவர், “உங்கள் மனைவி போய்விட்டார்” என்றார். லிசாவின் அப்பா, “அவள் போயிருக்க முடியாதே. கார் சாவி என்னிடமல்லவா இருக்கிறது” எனப் பதிலளித்தார். சிறிது நேரம் முன்னர் வரை நன்றாக இருந்தவரின் உயிர் பிரிந்து போய்விட்டது என்பதைப் புரிந்துகொள்ளவே கொஞ்சம் நேரம் எடுத்தது அவருக்கு.

என்ன சிக்கல் என்பதைக் கண்டறிந்து சரியான சிகிச்சை கிடைத்திருந்தால் ஒருவேளை தன் அம்மா இறந்திருக்கமாட்டாரோ என்கிற கேள்வி லிசா மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்த, எழுத்தார்வம் கொண்ட லிசா, மருத்துவம் படிக்க ஆரம்பித்தார். “யேல் மருத்துவக் கல்லூரியில் 10 சதவீதம் என்னைப் போல விநோத ஜந்துகளுக்காவே ஒதுக்கியிருந்தார்கள்” என வேடிக்கையாக அதைப் பற்றிக் குறிப்பிடுவார் லிசா.

எழுத்தையும் நிறுத்தவில்லை. செய்தி நிறுவனங்களின் மருத்துவம் தொடர்பான பத்திகளைத் தொடர்ந்து எழுதினார். சில நூல்களும் எழுதியுள்ளார். இலக்கியம் படித்து, எழுத்தாளராகி இருந்தால் துப்பறியும் நாவல்கள் எழுதியிருக்கக்கூடும். இறந்து போனது எப்படி என்கிற புதிர் அவிழ்க்கும் புனைகதைகளைவிட, வாழ்வை மீட்டெடுக்கும் புதிர்களைக் கையாளும் இந்த வேலை அவருக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது.

Diagnosis ஆவணத் தொடர் நெட்பிளிக்ஸில் உள்ளது.

டிரைலர் இங்கே.

படைப்பாளர்:

கோகிலா 

இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும்.  கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.

ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற தொடர், ‘இன்பாக்ஸ் இம்சைகளைச் சமாளிப்பது எப்படி?’ என்கிற புத்தகமாக ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. ‘உலரா ரத்தம்’ என்கிற அரசியல் வரலாறு நூல், சிறார்களுக்கு , ‘தரையை ஓங்கி மிதித்த பட்டாம்பூச்சி’ ஆகிய நூல்களும் இந்த ஆண்டு வெளிவந்துள்ளன.