கடந்த இரு தசாப்தங்களாக ஊடகங்களில் அதிகம் கையாளப்பட்ட தலைப்புகளில் முஸ்லிம் சமூகம், இஸ்லாமிய மத அடிப்படைவாதம், தீவிர இஸ்லாம், இஸ்லாமியபோபியா ஆகிய பிரயோகங்கள் அதிக இடத்தைப் பிடித்துள்ளன.
அடிப்படைவாதம், தீவிர இஸ்லாம், இஸ்லாமியோபோபியா ஆகிய மூன்று சொற்றொடர்களும் ஒன்றோடொன்று இணைந்தவை அல்லது ஒரே மாதிரியானவை என்ற கருதுகோள்களுடனே பெரும்பாலான ஊடகங்கள் பயன்படுத்துகின்றன. சில எழுத்தாளர்களும் சர்ச்சைக்குரிய இந்தச் சொற்றொடர்கள்குறித்து மீண்டும் மீண்டும் கடுமையான திணிப்புகளைப் பிரயோகித்துவருகின்றனர்.
ஒரு முஸ்லிம் பெண்ணாகவும், இந்தச் சொற் பிரயோகங்களை நீண்ட காலமாகப் பிரயோகிக்கத் தள்ளப்பட்ட ஒருவராகவும் இவை குறித்த சில நுணுக்கமான பார்வைகள் எனக்கிருப்பதாக நம்புகிறேன். சிலர், முஸ்லிம் சமூகம் பற்றிய எதிர்மறையான கருதுகோள்கள் எல்லாவற்றையும் இஸ்லாமியோபோபியா என்ற ஒரு வடிவத்திற்குள் கொண்டுவருகின்றனர். எதிர்மறையான வாதங்களை முன்வைக்கும் எல்லாரையும் எல்லாக் கலை அம்சங்களையும் முஸ்லிம் வெறுப்பாளர்கள், மேலைத்தேய நிகழ்ச்சி நிரலாளர்கள் என்று முத்திரை குத்திவிடுவது மிக எளிதாகச் செய்யப்படுகிறது.
இந்தச் சொற்களையும் இதன் அரசியல் பின்புலன்களையும் கேள்வியுற்றிராத அறியாத காலத்தில் மத அடிப்படைவாதத்தின் விளைவுகளால் பாதிக்கப்பட்ட என் போன்ற பெண்ணையே இஸ்லாமிய வெறுப்பாளர் என்று காண்பிப்பதற்குச் செய்யப்பட்ட இன்னமும் செய்யப்படுகின்ற முயற்சிகளையும் அதன் அரசியலையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். விளங்கிக் கொண்டுமிருக்கிறேன். மேலைத்தேய உலகின் இஸ்லாமியோபோபியோ என்ற சொல்லின் அரசியலையும், மத அடிப்படைவாதம் தான் வாழும் சமூகத்திற்குள் மத நம்பிக்கைகளின் பெயரில் எதைத் தருகிறது என்பதையும் தெளிவாக விளங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு என் நிலைப்பாடுகள் அதிர்ச்சியை ஏற்படுத்த முடியாது.
துரதிருஷ்டவசமாக கல்வியலாளர்கள் என்று மதிக்கப்படுவோரும் கற்ற சமூகத்தின் பெரும்பகுதியினரும் மதஅடிப்படைவாதிகளாக இருக்கிறார்கள். பெண்கள் உட்பட. இவர்கள் மத, கலாசார உரிமைகள், முஸ்லிம் சமூகத்தின் கௌரவம் என்கின்ற பதாதைகளின் கீழ் முல்லாக்களின் கடமைகளைப் புத்திசாலித்தனமாகச் செயல்படுத்துகிறார்கள். உண்மையில் அவற்றை அவர்கள் அறியாமல் செய்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை உரிமைகளையும் கௌரவங்களையும்தான் தூக்கிப்பிடிக்கிறார்கள். ஆனால், அவர்கள் அறியாமலேயே தீவிர மதப்பற்றாளர்களாக வெளிப்படுகிறார்கள். இந்த வேறுபாட்டை அல்லது குழப்பத்தைப் புரிந்து கொள்வதற்கு இஸ்லாமியோபோபியா என்ற சொல்லிலேயே பொருள் உள்ளது.
இஸ்லாமியோபோபியா – அதாவது, “ஃபோபியா“ (phobia) என்ற சொல்லானது, ”போபோஸ்”(Phobos) எனப்படும் பண்டைய கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. இதன் பொருள் வெறுப்பு. அதாவது இதுவொரு மனநலக் கோளாறைக் குறிக்கிறது. குறிப்பிட்ட பொருள் ஒன்றினால், செயல் ஒன்றினால், அல்லது சூழல்களால் தூண்டப்படும் வெறுப்பு.
இஸ்லாமோபோபியா (Islamophobia), ஜெனோபோபியா (Zenophobia), ஹோமோபோபியா (Homophobia) ஆகியன ஒரே மாதிரியான பொருள் கொண்ட வேறுபட்ட பயம் அல்லது வெறுப்பைக் குறிக்கின்றன. 1960களில் மருத்துவ வரையறைக்குள் மட்டும் கையாளப்பட்டுவந்த இந்தச் சொற்கள் பிற சமூகங்களுக்கு எதிரான பகுத்தறிவற்ற அச்சத்தை விவரிக்கப் பின்னர் பயன்பட்டன. இஸ்லாமிய அச்சுறுத்தல் என்பது, முஸ்லிம்களாக மத நம்பிக்கையுடன் அதற்குண்டான கலாசார பண்பாட்டுக் கௌரவங்களுடன் வாழ்வதற்கு முஸ்லிம்களுக்குப் பயத்தை விதைக்கும் பாரபட்சத்தைக் குறிக்கிறது. இஸ்லாமோபோபியாவின் வரம்பு நிச்சயமாக மாறுபடும். இது பாதிப்பில்லாதது போன்றவற்றைக்கூட ஆராய்ந்து, முழுமையாக அடித்து நொறுக்குவதற்கும் அவமதிப்பதற்கும் செல்லக்கூடும்.
சூப்பர் மார்க்கெட்டுக்களிலும், பொதுப் போக்குவரத்துகள், மருத்துமனைகளிலும் எல்லா இடங்களிலும் முகம் மறைத்த பெண்களை மக்கள் முறைத்துப் பார்க்கிறார்கள். முகத்தை மறைக்கும் அடர்ந்த தாடி வளர்த்ததற்காக முஹம்மது என்ற பெயருடன் ஒரு முஸ்லிம் அடையாளப் பெயரைச் சுமப்பதற்காக ரயில் நிலையங்களிலும், விமான நிலையங்களிலும் ஆண்கள் விசாரணைக்குத் தள்ளப்படுகின்றார்கள். இவை மேற்கத்தையே உலக வழிகாட்டுதல்கள் பரிந்துரைத்த பிரச்சாரங்களால் விளைந்த பயம் அல்லது வெறுப்பின் விளைவுகள்.
9/11 தாக்குதலுக்குப் பின்னர், முஸ்லிம்கள் அனைவரும் குண்டுகளைக் கட்டிக்கொண்டு அலைபவர்கள் போன்ற விம்பத்தை கட்டியமைப்பதில் வெகுஜன ஊடகங்கள் வெற்றிகண்டுள்ளன. மேற்கத்திய நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும் வலதுசாரிகளும் அரசியல் கட்சிகளும் இந்த யோசனையைத் தூண்டுவதில் பங்களித்துள்ளார்கள். இன்னமும் பங்களித்து வருகிறார்கள்.
நாம் வாழும் சூழல் மேற்கத்தையே உலகின் இஸ்லாமிய வெறுப்பு எனும் நச்சுக்காற்றில் மோசமாக மாசடைந்துள்ளது. 2019-ல் கொழும்பில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்குப் பிறகு இலங்கை சிறுபான்மை முஸ்லிம்களின் இருப்பும் கௌரவமும் முழுமையான ஒடுக்குதலுக்கும் அவமதிப்புக்கும் உள்ளாகியுள்ளது. பௌத்த பேரினவாதம் கொவிட் தொற்றினால் இறந்த இஸ்லாமியர்களின் உடலை தீயில் பொசுக்கிக் குளிர்காய்வது வரை முஸ்லிம்களின் உரிமைகளும் கௌரவமும் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்தியாவில் மாட்டு இறைச்சி அரசியல் தொடங்கி குடியுரிமைச் சட்டத் திருத்தம்வரை சிறுபான்மை முஸ்லிம்களை ஒடுக்குவதை அடிப்படையாகக் கொண்ட வலது சாரி அரசின் நிகழ்ச்சி நிரல்கள் நீள்கின்றன.
முஸ்லிம்கள் ஆபத்தானவர்கள், தீவிரவாதிகள் என்கின்ற அச்ச உணர்வைப் பொதுச்சமூகத்திடம் விதைத்து அரசுகள் நிகழ்த்தும் வெறுப்பரசியல் நிகழ்ச்சி நிரல் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. ஆனால், உலகம் பூராகவும் ஒரு பொதுத்தன்மையுடன் இந்த வெறுப்பரசியல் செயல்படுத்தப்படுகிறது.
இஸ்லாம் அடிப்படைவாதம் மத அடிப்படைவாத சிந்தனையை வரையறுக்கக்கூடிய ஒரு முக்கியமான அளவுகோல் அவர்களின் பார்வை. மதநம்பிக்கை கொண்டவர்கள் எல்லாரும் மத அப்படைவாதிகள் என்று முடிவு செய்வதற்கில்லை.
அடிப்படைவாதத்தின் இறுதி நோக்கம் இஸ்லாத்தை ஒரு மத நம்பிக்கையாக வைத்திருப்பதற்கு பதிலாக அதை அரசியலாக்குவதே என்பதை கடந்த இரண்டு தசாப்தகால இஸ்லாமிய சமூகத்தின் இயங்கியலிருந்தே புரிந்து கொள்ள முடியும்.
மத அடிப்படைவாதத்தின் கூறுகள் வெவ்வேறு தன்மைகளைக் கொண்டுள்ளன.
1) இஸ்லாத்தை அரச மதமாக நிறுவுதல். இந்துத்துவ ஆட்சி நடக்கும் இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதைப் போல பௌத்த பெரும்பாமை சிங்களவர்களின் ஆட்சியில் இலங்கைச் சிறுபான்மை முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதுபோலவே இஸ்லாமியப் பெரும்பான்மை மத ஆட்சிகள் நடைபெறும் நாடுகள் முஸ்லிமல்லாதவர்களை விலக்குகின்றன. இஸ்லாமிய ஆட்சிகள் நடைபெறும் நாடுகளில் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் ஒடுக்கப்படுகிறார்கள் அல்லது அவர்கள் நாட்டின் நலன்களிலிருந்து உள்வாங்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
விதிவிலக்காக மொராக்கோ மன்னர், யூத-விரோத உள்ளடக்கங்களைக் கொண்ட பள்ளிப் புத்தகங்களைத் திருத்துவதற்கு ஒரு குழுவை வைத்துள்ளார். யூத கலாச்சாரத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மையமான பேட்டக்கிராவை (அரபு மொழியில் நினைவகம்) திறந்து வைத்தார்.
லெபனான் ஒரு புரட்சிகரமான எடுத்துக்காட்டு. 2019 முதல், பொருளாதார காரணங்களுக்காக தொடங்கப்பட்ட போராட்டங்களில் பெருஞ் சாலைகளில் ஒன்றுகூடிய முஸ்லீம் பிரிவுகளும் கிறிஸ்தவர்களும் லெபனான் கொடிகளுடன் ”போதும்! நாங்கள் அனைவரும் குடிமக்கள்” என்பதாகச் ஒன்றுபட்டுக் கோஷமிட்டார்கள். குறுங்குழுவாத அட்டையில் நீண்டகாலமாக விளையாடிவரும் லெபனான் அரசாங்கத்தின் முகத்தில் இந்த மக்கள் புரட்சி ஓங்கி அறைந்தது.
2) ஷரியாவை அரசியலமைப்பாக்குதல். இறை விசுவாசத்திலிருந்து விலகியோரை (முர்தத்) என்கின்ற இஸ்லாமியச் சட்டம். இஸ்லாத்தில் நம்பிக்கையற்றவர்கள் காபிர்கள் / துரோகிகள் என்று வரையறுப்பது. விபச்சாரத்திற்கு மரணதண்டனை அளிப்பது போன்ற சட்டங்கள். திருமணத்திற்கு முன்பு பாலியல் ரீதியாக செயல்படுகிறவர்களையும் எல்ஜிபிடி சமூகத்தையும் இது கடுமையாகக் கண்டம் செய்கிறது. மேலும் இது பெண்களின் அடக்குமுறையை ஆதரிக்கிறது. திருடியவர்களின் கைகளை வெட்டுவதை இது சரியென காண்கிறது.
3) அடிப்படைவாதிகள் சர்வாதிகாரப் போக்குக் கொண்ட ஒற்றைத்தன்மையைப் பார்க்கிறார்கள். பில்லியன் கணக்கான மக்களை ஒரே அச்சுடன் வடிவமைத்து, அவர்களின் தனித்துவத்தை அழிப்பதை நினைத்துப் பார்க்க முடியாது. ஆனாலும், இவர்கள் முஸ்லிம் சகோதரத்துவத்தை ஓரணியாக்கும் ஒற்றைத்தன்மைக்கு முயல்கிறார்கள். இதிலிருந்துதான் ஒற்றைக்கலாசாரம் என்ற அடையாளம் வகுடெடுக்கிறது. உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் அனைவரையும் ஒரேவிதமாக உடை அணியவைப்பது ஓர் அரசியல் நிகழ்ச்சி நிரல். இது வித்தியாசங்களையும், வேறுபட்ட கலாசாரங்களையும் சவால் செய்யும் நடவடிக்கை. முஸ்லிம்கள் உலகத்தின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அவர்கள் ஒரேவிதமாகத் தோன்றவேண்டும் என்கின்ற அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒழுங்குபடுத்தப்பட்டது.
4) ஜிஹாத் எனப்படும் தந்திரமான செயல். ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற ஜிஹாதி இஸ்லாமியவாதிகளின் கூற்றுப்படி, அல்லாஹ்வின் பெயரால் ஒரு போரைத் தொடங்குவது முற்றிலும் ஆகுமானது, முறையானது. மோசமான போரையும், ஜிஹாதிசத்தை அனைத்து இஸ்லாமியர்களும் ஆதரிக்கவில்லை. ஆனால், இறுதிநாளையும் உலக அழியும்போது உலக மக்கள் அனைவரும் இஸ்லாமியர்களாக மட்டுமே இருப்பார்கள் என்றும் நம்புகிறார்கள். உலகிலுள்ள 87.8 டிரில்லியன் மக்களையும் ஒரே மத நம்பிக்கையும், ஒற்றை அடையாளமும் கொண்டவர்களாக மாற்றுவதற்கே ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகள் முனைகின்றன. ஈரான் போன்ற நாடுகள் சமூக, அரசியல், பொருளாதார அணுகுமுறைகள் அனைத்திலும் தீவிரவாதத்தின் முழு இலக்குகளையும் அடையும் நிறுவன ரீதியான இஸ்லாமிய ஆட்சியைச் செய்கின்றன.
இந்த நான்கு பொது மாதிரிகளின் சாயல்கள், தாக்கங்களுடன் பல அமைப்புகளும் நனிநபர்களும் முஸ்லிம் சமூகங்களுக்குள் ஊடுருவியுள்ளார்கள்.
மத அடிப்படைவாதக் குழுக்கள் அமைதியில் அக்கறை காட்டுவதில்லை. அவை வன்முறை உள்ளடக்கத்தை தீவிரமாகப் பரப்புகின்றன. தாங்களே ஒரே உண்மையான இஸ்லாம் மத விசுவாசிகள் என்று அவர்கள் நம்புகிறார்கள், மற்றவர்கள் அனைவரும் காஃபிர்கள். அடிப்படைவாதிகள் இஸ்லாமிய விரிவாக்கங்களை மிகப் பெரிய மத சாதனை என்று மகிமைப்படுத்துகிறார்கள். ”காஃபிர்களைக் கொல்வதால் ஹூர் – அல் – அய்ன்கள் (அழகிய கன்னிகள்) காத்திருக்கும் சொர்க்கத்தின் வாசல்களைத் திறக்கமுடியும்” என்று நம்புகிறார்கள்.
தீவிரவாதத்தின் பயம் துரதிர்ஷ்டவசமாக இஸ்லாமிய அச்சுறுத்தலுக்கு வழிவகுத்தது. ஆனால், முஸ்லிம்களின் பயம் இரு முனைகள் கொண்ட வாள். இது விடயங்களை மேலும் மோசமாக்கும். இஸ்லாமிய மத அடிப்படைவாதம் மதச்சார்பற்ற சமூகங்களுக்குள் முக்கிய இடத்தைக் காண்கிறது. மதச்சார்பற்ற சமூகங்களின் உளவியல் எளிதில் இஸ்லாமோபோபியாவுக்கு இடத்தைத் தந்துவிடுகிறது.
மத தீவிரவாதிகள் இந்த உளவியலையே பிரச்சாரத்துக்கும் துணையாக எடுத்துக் கொள்கின்றனர். முஸ்லிம் சமூகத்தைக் கொக்கி கொண்டு தூண்டுகிறார்கள். அவர்களின் இரை இளைஞர்கள். இதன் விளைவாக, முஸ்லீம் சமூகத்தில் மிகவும் பின்தங்கியவர்கள் அந்தத் தூண்டிலில் அகப்படுகிறார்கள். இஸ்லாமியப் போபியா முஸ்லிம்களை அடிப்படைவாதிகளாக மாற்றுவதிலும் தொழிற்படுகிறது என்பதே அதன் இன்னொரு முகம். முஸ்லிம் சமூகத்தின் மீதான எந்தவொரு விமர்சனத்தையும், கருதுகோளையும் மேலைத்தேய அரசியல் நிகழ்ச்சி நிரலாகவும், இஸ்லாம் வெறுப்பாகவும் கண்மூடித்தனமாகவும் பார்க்கும் புத்திஜீவிகள் இன்று மலிந்துவிட்டார்கள். சுய விமர்சனமும், அடிப்படையுமற்ற புகார்களின் மீது நின்று கொண்டு மதப்பிரச்சாரகர்களைப் போலவும் அவர்களை விடவும் மோசமாகவும் வெளிப்படும் புத்திஜீவிகள், கற்றவர்களால் மத இறுக்கம் இன்னும் வலுக்கிறது. முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வெறுப்பரசியலைப் போன்றே, ஆதரவான நிலைப்பாடுகளும் பகுத்தறிவற்ற அச்சத்தினால் மட்டும் இயக்கப்படவில்லை மாறாக வெறுப்பை ஊக்குவிக்கும் சமூக, கலாசார அல்லது மத சித்தாந்தங்களிலுள்ள நம்பிக்கையினால் இயக்கப்படுகிறது என்பதே அந்த இருண்ட பக்கம்.
உண்மையில், இங்கு ஒன்று மற்றொன்றை வளர்க்கிறது, ஒன்றால் மற்றொன்று வாழ்கிறது. இஸ்லாமியோபோபியாவும் இஸ்லாம் அடிப்படைவாதமும் இரண்டறக் கலந்த நச்சுத் தொடர்பாகிவிட்டிருக்கின்றன. ஒரு தெளிவற்ற சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டிய செயற்பாடும் ஒரு புதிய அறிவூட்டும் அத்தியாயத்தைத் திறக்க உதவும் செயற்பாடும் ஒரு புள்ளியிலிருந்து தொடங்கப்பட வேண்டியிருப்பதே மிகப்பெரிய சவால்.
ஸர்மிளா ஸெய்யித்தின் முந்தைய கட்டுரை
கட்டுரையாளர்
ஸர்மிளா ஸெய்யித்
விதிவிலக்கான துணிச்சலான சமூக செயற்பாட்டாளர். சமூக அநீதிகள்குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். சிறகு முளைத்த பெண் (கவிதை 2012), உம்மத் (2014 நாவல்), ஓவ்வா ( கவிதை 2015), பணிக்கர் பேத்தி (நாவல் 2019), உயிர்த்த ஞாயிறு (2021 அனுபவம்) ஆகியன இவரது நூல்கள்.