இன்று காலையில் எழுந்ததிலிருந்து அவன் நியாபகமாகவே இருந்தது. அழுகை முட்டிக் கொண்டுவந்தது. எத்தனை தடவை அழுது தீர்த்தும் இந்த ஒரு விஷயத்தை ஏன் தன்னால் கடந்து வர முடியவில்லை என்று தன்னைத்தானே வெறுத்தாள் அவள். ‘யூ ஆர் வெரி போல்ட்’ன்னு சொல்லிச் சொல்லியே என்னை இப்படி வீக் ஆக்கிட்டுப் போயிட்டான் பாவி’ என்று மனதிற்குள்ளாகவே கடிந்துகொண்டாள்.
இப்படியாக அவள் நினைத்துக்கொண்டிருக்கையில் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அவனிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி. இனி வாழ்வில் அவன் வரப்போவதில்லை என்று தெரிந்தும் இப்படி ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கக் கூடாது. எப்படியாவது அடுத்த கட்டத்திற்கு கடந்து செல்ல வேண்டுமென்று அவள் தீர்க்கமாக முயற்சி செய்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில். மூன்று வருடங்களாக அந்த முயற்சியில் தோற்றுப் போய்க்கொண்டே இருந்தவள் கடந்த ஒரு மாதமாகத்தான் கொஞ்சம் தேறி வந்துகொண்டிருக்கிறாள். முன்பெல்லாம் அவள் அன்றாடத்தோடு ஒட்டிக்கொண்டே கிடந்த அவனது நினைவுகள், இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக விலகி நிற்க ஆரம்பித்திருக்கின்றன. அவன் நினைவுகளைப் புதைக்கும் முயற்சியில் முதல் ஆயுதமாக அவள் கையில் எடுத்திருந்தது ஓவியங்களை.
எல்லாவற்றையும் மீறியும் சில நாட்கள் மொத்தமாக அவளை ஆக்கிரமித்துக் கொள்ளும் அவனது நினைவுகள், அவள் உற்சாகத்தைக் கரும்பு சக்கையாகப் பிழிந்து வீசிக் கொண்டுதானிருக்கிறது.
இத்தனை வருடங்களாகத் தொலைந்து போனவன் இப்பொழுது ஏன் அவன் வாழ்வில் என்ன நடக்கிறது என்று தனக்கு தெரியப்படுத்த வந்தான் என்று அவன்மீது ஆத்திரம் வந்தது. நிலாவின் அறையில் யாரும் இல்லை. இருவர் பகிர்ந்துகொள்ளும் அறையை எடுத்திருந்தாள். ஆயிஷா அவளோடு பொருந்திப் போகிறவளாக இருந்தாள். அவளது காதலனைப் சந்திக்க அதிகாலையிலேயே கிளம்பிப் போயிருந்தாள். கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சென்னைக்கு வந்த பிறகு சமுத்திரனை நினைத்து வரும் அழுகையைக் கட்டுப்படுத்தவும் முடியாமல் அடுத்தவர்கள் முன் அழவும் பிடிக்காமல் கொஞ்ச நாட்கள் தனி அறை எடுத்து தங்கியிருந்தாள் நிலா. ஆறு மாதங்கள் தனிமையில் கழித்த பிறகே இப்பொழுது இருக்கும் இந்த அறைக்கு மாற்றிக்கொண்டாள்.
அந்த அறையைக் காலி செய்த பொழுது சுவரில் சிதறியிருந்த நிறங்களைச் சரி செய்யவதற்கு ஆகப்போகும் செலவுகளுக்காக அறையின் உரிமையாளர் பணம் கேட்டகவும் எதுவும் பேசாமல் அதற்கான பணத்தை ஜி பேயில் சொடுக்கி அனுப்பினாள்.
*
அவன்தான் அந்த அத்தனை நிறங்களையும் கொண்ட பெட்டியை ஒரு பிறந்தநாளில் பரிசளித்திருந்தான். அவளது படம் வரையும் ஆர்வத்திற்கு எப்பொழுதும் துணை நிற்பேன் என்றான் . அவளைப் புகழ்பெற்ற ஓவியராக்கிப் பார்ப்பதுதான் தனது லட்சியம் என்றான்.
‘நீ வந்த பிறகு என் லைஃப் ரொம்ப கலர்ஃபுல்லா மாறிடிச்சு. ‘
அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.
‘லவ் யூ நிலா. ‘
அவள் உண்டு அவள் படிப்பு உண்டு என்று நேர்கோடு போட்டு ஓடிக்கொண்டிருந்தவள். படிப்பில் எப்பொழுதும் முதலிடம். எல்லா ஆசிரியருக்கும் பிடித்தமான மாணவி. இருந்தால் அவளைப் போல இருக்க வேண்டுமென்று அவளது தெருவிலுள்ள மற்ற பிள்ளைகளின் பெற்றோர் அவளை கைநீட்டி தன் பிள்ளைகளுக்குப் போதிப்பார்கள். அப்படி இருந்தவள் வாழ்வில் எந்தப் புள்ளியில் சமுத்திரன் நுழைந்தான் என்பதை அவள் பலமுறை யோசித்துப் பார்த்திருக்கிறாள். சரியான அந்தப் புள்ளியை அவளால் ஒருபோதும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அவன்தான் அவளது தலை சிறந்த நண்பன் என்கிற இடத்தைப் பிடித்ததெல்லாம் ஒரே வேகத்தில் நடந்து முடிந்திருந்தது. நட்பையும் தாண்டி அவர்களுக்கிடையே வேறொன்று இருக்கிறது என்பதை அவள் உணர்ந்த பொழுது முதலில் தயங்கினாள். பின்பு அவளே முன் வந்து போட்டுடைத்தாள்.
*
‘எதுக்கு என்ன இவ்வளவு பிடிச்சிருக்கு உனக்கு?’
‘பாவம் அம்மா இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டுட்டான். லைஃப் முழுக்க இவன நல்லா பார்த்துக்கணும்’ என்று அவள் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது. அவனின் கேள்விக்குப் பதிலே சொல்லாமல் மெளனமாகப் புன்னகைத்தாள்.
‘சொல்லு.’
‘பிடிக்குறதுக்கெல்லாம் காரணம் இருக்கக் கூடாது.’
‘….’
அவன் கைபேசி வீடியோவில் அவளைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
‘அப்புறம் புராஜெக்ட் எப்படி போகுது?’ பேச்சை மாற்றி இழுத்துப் போனாள்.
கல்லூரி முடித்த கையோடு சமுத்திரன் அவனது சித்தாப்பாவின் பரிந்துரையில் வெளிநாட்டில் வேலையில் சேர்ந்திருந்தான். தூரம் அவர்களுக்குப் பெரும் குறையாகவே தெரியவில்லை. தினமும் இருவருக்கும் பொதுவான ஒரு மணி நேரத்தைத் தீர்மானம் செய்து பேசிக்கொண்டிருந்தார்கள். அலுவலகத்தில் ஏதேனும் பிரச்னை என்றால் சமுத்திரனிடம் பகிர்வாள். அவன் எந்த யோசனையும் சொல்ல மாட்டான். உன்னால முடியாததாடி என்பான். அந்த ஒற்றை வார்த்தை அவளுக்குத் தரும் துணிச்சல் அவளை வேறொருத்தியாக மாற்றிவிடும். அவள் மொத்த ஆன்மாவும் அவன் குரலுக்குள் தன்னை ஒப்புக்கொடுத்திருந்தது.
அவன் கைபேசி பழுதாகி அவர்கள் பேசிக்கொள்ள முடியாமல் போன அந்த நாள் அவள் மனம் அட்டைப்பூச்சியைப் போல சுருண்டு கிடந்தது. அவன் மாற்று கைபேசி வாங்கி மறுநாள் அழைத்தபொழுது, ‘உன்ன எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா?’ ஓவென்று அழ தொடங்கியிருந்தாள். ‘சாரிடி சாரி ப்ளீஸ்’ என்று அவளைத் தேற்றிக் கொண்டிருந்தான்.
*
இரண்டு வருடங்கள் கழித்து அவன் வெளிநாட்டில் இருந்து வந்தபொழுது வீட்டில் நண்பர்களைப் பார்க்கப் போவதாகச் சொல்லிவிட்டு அவளைப் பார்க்க சென்னை வந்துவிட்டான். மதுரையில் பேருந்தில் ஏறியதிலிருந்து சென்னை வந்து சேரும் வரையிலும் விடிய விடிய பேசிக்கொண்டிருந்தான். ‘கொஞ்ச நேரம் தூங்கலாம்.’ ‘பொறுடி. தினமும்தான் தூங்குறோம்.’ அவள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பேசிக்கொண்டே போனான். அவள் விடுதிக்குப் பக்கத்திலேயே இருந்த ஆண்களுக்கான விடுதியில் அவனுக்கான அறையை அவள் ஏற்பாடு செய்திருந்தாள். அவனுக்கு அந்த அறையில் சில சௌகரிய குறைபாடுகள் இருந்தாலும் அவன் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அவளும் அலுவலகத்தில் விடுப்பு எடுத்து நான்கு பகல்கள் அவனோடு கழித்தாள்.
‘நீ இங்க ஜாப் வாங்கி வந்திருடா. அப்புறம் நான் வீட்ல பேசுறேன்.’ சமுத்திரன் கல்யாணப் பேச்சு எடுத்தபொழுது நிலா சொன்னது.
‘என்னடி ஒரே ரொமான்ஸா.’ அவனை வழியனுப்பி விட்டு வந்த பொழுது அறைத் தோழி வம்பிழுத்தாள்.
‘ஆமா ரொமான்ஸ் பண்றாங்க.’
‘அட வெட்கத்த பாரு.’
‘நிஜமா அப்டிலாம் ஒண்ணுமில்லடி. அவன் அப்படிலாம் நடந்துக்கிற ஆள் இல்ல.’
‘என்னடி ஏதோ நான் தப்பா கேட்டுட்ட மாதிரி அப்படி சீரியஸா மூஞ்சிய வச்சிட்டுப் பேசுற. லவ்னா கிஸ் ஹக்ன்னு இருக்கதான செய்யும். தட்ஸ் நார்மல்.’
‘வி ஆர் டிவரண்ட் டி. நீ ப்யூயர்லி லவ்ஸ் மை ஹார்ட். நாட் மை ப்பாடி.’
‘பாத்துடி. ஹேவா இருக்கப் போறான்.’
‘ஏய்.’
‘சும்மா… சும்மா… ஜஸ்ட் ஃபார் ஃபன்.’
சமுத்திரன் நிலாவுடன் பேசும் நேரம் குறைந்திருந்தது. அவன் இந்தியாவில் வேலை வாங்குவதற்காகத் தீவிரமாக தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தான். பேசும் நேரம் குறைந்ததற்காக முதலில் அவள் அவனிடம் சண்டை பிடித்தாள். பின்பு புரிந்துகொள்ள ஆரம்பித்தாள். அவனுடன் பேசாத இடைவெளியை அவன் வாங்கிக் கொடுத்திருந்த வண்ணங்களால் ஓவியம் தீட்டி நிரப்ப ஆரம்பித்திருந்தாள்.
அவர்களின் அன்றாடம் எந்தப் பிணக்கும் இல்லாமல் நகர்ந்துகொண்டிருந்தது.
*
அன்று அவள் மும்முரமாக ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தபொழுது அவள் கைபேசி ஒளிர்ந்து அடங்கியது. எடுத்து பார்த்தபொழுது சமுத்திரனிடமிருந்து மின்னஞ்சல். வழக்கமாக அவனிடம் இருந்து குறுஞ்செய்தி வரும் நேரமும் இல்லை. அவசரமாக மின்னஞ்சலை திறந்து பார்த்தாள். அவனுக்கு வந்திருந்த மின்னஞ்சலை இவளுக்கு ஃபார்வேட் செய்திருந்தான். மும்பையில் வேலை. நல்ல சம்பளம் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்னும் மூன்று மாதத்தில் வேலையில் சேர வேண்டுமென்று தேதியும் குறிப்பிடப்பட்டிருந்தது. சந்தோஷத்தில் உறைந்திருக்க அவனிடமிருந்து அழைப்பு.
‘கன்ங்ராட்ஸ்டா.’
‘லவ் யூ பொண்டாட்டி.’
‘என்னடா புதுசு புதுசால்லாம் கூப்பிடுற?’
‘ஏன் கூப்பிடக் கூடாதா?’
‘இல்ல எப்பவும் இப்படிக் கூப்பிட்டது இல்லேல.’
‘ம்ம்… இன்னும் மூணு மாசம்தான். அப்புறம் இந்தியா வரேன். அடுத்து டும்டும்தான்.’
‘ஓ, வந்ததும் இழுத்திட்டு ஓடிடுவியோ. வீட்ல பேச வேணாமா?’
‘ஆமா, கூப்பிட்டா மட்டும் மேடம் அப்படியே வந்திருவீங்க.’
‘இரண்டு வீட்டு சம்மதத்தோட மேரேஜ் பண்ணணும். பெத்தவங்க மனசு கஷ்டப்படாதபடி புரிய வைக்கணும்னு டயலாக் பேசியே சாகடிப்ப.’
‘ஆமாடா அது…’
‘ஐயோ ஆரம்பிச்சிராத தாயே. என் வீட்ல, என் மாமியார் வீட்ல எல்லார்கிட்டேயும் நானே பேசி ஓகே வாங்கிக்கிறேன். லெக்சர் மட்டும் வேண்டாம் ப்ளீஸ்.’
ஒருவழியாக இந்தியா வந்து சேர்ந்திருந்தவன் ஒருவாரம் வீட்டில் தங்கிவிட்டு மும்பை கிளம்பும் முன்பு அவளைச் சந்திக்க வருவதாகச் சொல்லியிருந்தான். ‘உன்கிட்ட ஆசிர்வாதம் வாங்காம எப்படி?’ என்று நக்கலடித்தான்.
*
அவர்கள் போட்டு வைத்திருந்த திட்டம் அனைத்தையும் கொரோனா தகர்த்தெறிந்தது. நிலா அவளது சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தாள். அவனுக்கு வீட்டிலிருந்தபடியே மடிக்கணியின் மூலம் ட்ரெயினிங் தொடங்கியிருந்தது. இருவரும் தொலைபேசியில் தொடர்பில் இருந்தார்கள். வீட்டில் இருந்ததால் நிறைய நேரம் பேசிக்கொள்ள முடியாமல் இருந்தாலும் அவர்களின் அன்பின் சாரல் அப்படியே தொடர்ந்துகொண்டிருந்தது.
‘போன ஜார்ஜ்ல போட்டிருந்தப்ப உங்கிட்ட இருந்து வந்த மெசேஜ அப்பா ரீட் பண்ணிட்டாங்க. இதுலாம் நமக்குச் சரிபட்டு வராதுண்ணு வீட்டில ஒரே சண்ட. அதான் ஆன்லைன் வரமுடில சாரிடி.’ அவன் சொன்னபொழுது அவளுக்கு பக்கென்றது. பதறினாள்.
‘நீ எதுக்கு இப்ப பயப்டுற. எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன். எல்லாம் பேசி சரி கட்டிக்கலாம். நம்ம சொல்றதுக்கு முன்னாடி தெரிஞ்சிடுச்சு. ஒரு வேலை மிச்சம்ன்னு நினைச்சிப்போம்.’
அவள் உள்ளுணர்வு அவளை அமைதிபட்டுக்கொள்ள அனுமதிக்கவில்லை. ஆனாலும் அவன் மேல் இருந்த நம்பிக்கையால் அமைதியாக இருந்தாள்.
அவனிடம் இருந்து குறுஞ்செய்திகள் குறைய ஆரம்பித்தது. கேட்டபொழுது வீட்டில் அதிகமாக கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்குப் பேசி புரிய வைத்து முழுதாகச் சம்மதிக்க வைக்கும் வரை கொஞ்சம் பொறுத்துக்கொள் என்றான்.
அவனிடமிருந்து அன்று காலை வழக்கமான காலை வணக்கம் வராமல் இருந்தபொழுது அசதியில் இன்னும் தூங்கிக் கொண்டிருப்பான் என்று நினைத்தாள். பதினொரு மணி வரை குறுஞ்செய்தி வராதது கொஞ்சமாக அவளைக் கலவரப்படுத்த ஆரம்பித்தது. அவள் அழைத்த பொழுது அவனது மொபைல் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது மேலும் அவளைக் கதிகலங்கச் செய்தது.
அவனது எண்ணிற்கு அவளிடமிருந்து ஐம்பது அழைப்புகளுக்கு மேல் சென்றிருந்தது. எந்தப் பயனுமில்லை. நாட்கள் மாதங்களாகியது. நிலா தினமும் தளராமல் சமுத்திரனின் எண்ணிற்கு அழைத்துக்கொண்டிருந்தாள். குறுஞ்செய்தி மின்னஞ்சல் என்று அவளால் முடிந்த அனைத்து வகையிலும் அவனைத் தொடர்புகொள்ள முயற்சித்துக் கொண்டே இருந்தாள். எந்தப் பலனும் இல்லை
*
ஐந்து மாதங்களுக்குப் பின்பு ஒருநாள் எதிர்முனையில் அழைப்பு ஏற்கப்பட்டது. ‘ஹலோ’ சொன்ன ஆண் குரல் சமுத்திரனுடையது இல்லை.
‘யார் பேசுறீங்க?’
‘நான் சமுத்திரன் ஃப்ரெண்ட்.’
தயங்கித் தயங்கிச் சொன்னாள், ‘ஃபரெண்டுனா பெயர் இல்லையா?’
‘…’
அவள் பெயரைச் சொல்வதற்கு முன்னாலேயே இணைப்பு துண்டிக்கப்பட்டது. நிலாவின் உற்சாகம் தொலைந்து போயிருந்த முகத்தினால் அம்மா ஓயாமல் கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருந்தார். பல மாதங்களாகச் சமாளித்துக் கொண்டிருந்தவள் தாங்க மாட்டாமல் ஒருநாள் அனைத்தையும் உடைத்து அம்மாவின் மடியில் விழுந்து அழுதாள்.
அம்மாவிற்கு முதலில் கோபம் வந்தாலும் மகளின் நிலையை நினைத்து வருத்தமாகவும் இருந்தது.
*
எட்டு மாதங்கள் ஓடியிருந்தன. சமுத்திரன் தன்னிடம் வருவான் என்கிற நம்பிக்கை நிலாவை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய ஆரம்பித்திருந்தது. அவள் ஓர் இயந்திரம் போல இயங்கிக்கொண்டிருந்தாள். கொரோனா தளர்வுகள் ஏற்பட்டு ஒருசில அலுவலகங்கள் இயங்க ஆரம்பித்திருந்தன. அவள் அலுவலகத்தில் மடிக்கணினியிலேயே வேலையைத் தொடரச் சொல்லியிருந்தார்கள். இன்னும் ஆறு மாதம் கழித்து நேரடியாக வேலைக்கு வந்தால் போதுமென்றிருந்தார்கள். அவள் முன்னைவிடவும் அதிக வேலைகளை வேண்டுமென்றே இழுத்துப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள். சமுத்திரனில் மூழ்காமல் இருக்க அவள் ஏற்படுத்திக் கொண்டிருந்த உத்தி.
அன்று மும்முரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்த பொழுது தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நிராகரித்த பொழுது மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு.
‘ ஹலோ’
‘… ..’
‘ஹலோ…’
‘… .’
‘ப்ச்.’ இணைப்பை துண்டித்துவிட்டாள்.
மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு.
‘சாரி குண்டம்மா.’ எதிர்முனை குரல் அவளை முந்திக் கொண்டது.
அவள் எதுவும் பேசவில்லை.
‘சாரி, சாரி ஃபார் காலிங் இட். சாரி நிலா. எனக்கு… ஐ வாஸ் ஃபுல்லி லாக்ட். எமோஸ்னலா என்னென்னவோ பேசி. தெரில நான் ஏன் ஒத்துகிட்டேன் தெரில. ஜாப் போயிருச்சு. பேமிலி பிசினஸ்ல போட்டுடாங்க அன்ட். …ஐ காட் மேரீட்.’
அவள் எதுவும் பேசவில்லை. அவள் வலது கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.
‘எதாச்சு திட்டீறேன் ப்ளீஸ்.’
‘… ..’
‘ப்ளீஸ், ஏதாச்சு சொல்லு. எவ்வளவு கேவலமா வேணும்னாலும் திட்டு. உன் குரல கேக்கணும்.’
‘… .’
‘ப்ளீஸ் நிலா.’
‘ஹேப்பி மேரீட் லைஃப். அந்தப் பொண்ணையாச்சும் கடைசி வரைக்கும் நல்லபடியா பாத்துக்கோ.’ அவன் பதில் பேசிவிட கூடாதென்று இணைப்பை அவசரமாகத் துண்டித்தாள்.
அவளது நண்பர்கள் அவனைத் திட்ட ஆரம்பித்தபொழுதே வாயை அடக்கி நிறுத்தி வைத்தாள். அவளை விட்டுச் சென்றதற்காக அவனை யாரும் திட்டுவதை அவள் விரும்பவில்லை. அவளையும் அவனையும் பற்றித் தெரிந்திருந்த பொதுவான நண்பர்களிடமிருந்து தன்னை விலக்கிக்கொண்டாள். புதிதாக அவளோடு பழகுபவர்களுக்கு அவளது கடந்த காலம் தெரியாமல் பார்த்துக்கொண்டாள்.
அவன் இல்லாத வெற்றிடத்தை நிரப்ப ஓவியங்களைத் தீட்டித் தள்ளினாள். அவள் வரைந்து தள்ளிய எல்லா ஓவியங்களிலும் சூரியனின் வெப்பத்திற்குத் தாங்காமல் மேகத்தினுள் மறைந்து கிடக்கும் தேய்ந்த நிலவு துண்டு ஒன்று இருந்தது.
அம்மா கல்யாணத்தைப் பற்றிய பேச்சு எடுக்கும் பொழுதெல்லாம் ‘ ப்ளீஸ் கிவ் மீ சம் டைம்’ என்று நழுவிக் கொண்டேயிருந்தாள்.
*
‘ஐ டிடிண்ட் காட் எனி பீஸிங்ஸ் இன் பெட் இன் தீஸ் மெனி இயர்ஸ். எனக்கு ஏதோ பிரச்னை இருக்குனு எனக்கே லேட்டாதான் புரிஞ்சது. ஆம்பிளையே இல்லன்னு மொத்தமா கைகழுவிட்டுப் போயிட்டா. மை லைஃப் பிகேம் டூ டார்க். சாரி நிலா. எல்லாம் உனக்குப் பண்ணின பாவம். சாரி ஃபார் எவ்ரிதிங். சாரி டூ சென்ட் திஸ் அண்ட் டிஸ்டர்ப் யூ. சாரி ஃபார் எவ்ரிதிங்.’ சமுத்திரனிடமிருந்து வந்திருந்த குறுஞ்செய்தியை மீண்டும் வாசித்துக்கொண்டிருந்தாள்.
வாட்ஸப்பில் அவனது முகப்பு படம் தெரியாமல் சாம்பல் பூத்திருந்தது. பிளாக் செய்திருக்கிறான்.
‘நீ எனக்கு மெஸேஜ் பண்ணக்கூடாதுனு பிளாக் பண்ணல. என்னால உனக்கு மெசேஜ் அனுப்பாமா இருக்க முடியல. என்ன நானே கண்ட்ரோல் பண்ணதான் ஃபளாக் பண்ணினேன். ‘காதலின் ஆரம்ப நாட்களில் வந்திருந்த சண்டையின்போது சமுத்திரன் அவளை பிளாக் செய்துவிட்டு, சமாதானத்தின் போது இப்படியொரு விளக்கத்தைச் சொல்லியிருந்தது அவளுக்கு நினைவு வந்தது.
அன்று மாலை ஆயிஷா அறைக்குத் திரும்பி வந்தபொழுது நிலா மடியில் ஓவிய அட்டையோடு உட்கார்ந்திருந்தாள். அவளைச் சுற்றி வண்ணங்கள் இரைந்துக் கிடந்தன.
‘என்ன மேடம் ரொம்ப நாள் கழிச்சு ட்ராயிங்ல உட்கார்ந்திருக்கீங்க.?’
நிலா பதில் பேசாமல் வரைந்துகொண்டிருந்தாள்.
‘என்னடி இவ்வளவு கலருக்கு நடுவுல உட்கார்ந்திட்டு இருக்க? கலர்ஃபுல்லா ஏதோ வரைஞ்சிட்டு இருக்கேன்னு பார்த்தாக்க. இப்படி இருட்டுக்கு நடுவுல ஒரு கடல் வரைஞ்சு வச்சிருக்க.‘
‘ ம் .’
‘என்ன ம்… எனக்கு உன்னோட இந்த ட்ராயிங் பிடிக்கவே இல்ல. அமாவாசை ராத்திரி கடல். ஒரு நிலா வெளிச்சம்கூட இல்ல. டூ டார்க்.’ ஆயிஷா கண்ணாடியில் பார்த்தபடி ஒப்பனைகளைக் கலைத்துக்கொண்டிருந்தாள்.
‘…’
‘இதுல ஒரு ஃபுல் மூன் மட்டும் வரைஞ்சு விட்டனு வையேன். பளிச்சுன்னு ஆயிடும்.’
அமைதியாகக் கண்முன் விரிந்திருந்த இருண்டக் கடலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் நிலா.
*
படைப்பாளர்:
பத்மகுமாரி
நாகர்கோவிலைப் பூர்வீகமாகக் கொண்டவர். சென்னையில் ஐடி துறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக இணைய இதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார்.