என் நண்பர் த.வி. வெங்கடேஸ்வரனிடம் பேசினேன். அவர், “டாக்டர் நளினி கோவையில்தான் இருக்கிறார். அவங்க அம்மாவுக்கும் புற்றுநோய் என்று ஆறு மாதங்களுக்கு முன் ஆபரேஷன் பண்ணினாங்க. அவரிடம் பேசுங்க” என்றார். நளினி என்றதும் எனக்குத் தைரியம் பிறந்தது. நான் அவரைத் தொடர்புகொள்வதற்குள் நளினியே அழைத்துவிட்டார்.
“டிவிவி சொன்னார். அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்துவிட்டு, உடனே கிளம்பி வாங்க. நான் பார்த்துக்கறேன்” என்றார்.
நானும் கோகுலும் நளினியைச் சந்தித்தோம். நீண்ட காலத்துக்குப் பிறகு இருவரும் சந்திப்பதால் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
“டாக்டர் கார்த்திகேஷிடம் போகலாம். அவர்தான் அறுவை சிகிச்சை நிபுணர். எங்க அம்மாவுக்கும் அவர்தான் ஆபரேஷன் செய்தார். எனக்கும் நண்பர்” என்றார் நளினி.
டாக்டர் கார்த்திகேஷைச் சந்தித்தோம். 63 வயது என்றதும் 40 ப்ளஸ் போல் இருக்கிறீர்கள் என்று டாக்டர் சொன்னதும் கொஞ்சம் சில்லென்று இருந்தது. பரிசோதனை செய்தார். வலியே இல்லாமல் திசு எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பினார்.
“நீங்க புதன்கிழமை வாங்க, என்னவா இருந்தாலும் ஆபரேஷன்தான் செய்யணும். கேன்சராகவும் இருக்கலாம்” என்றார்.
“இப்படியே தங்கிவிடுகிறேன். நாளையே ஆபரேஷன் வைத்துக்கொள்ளலாமே?” என்று கேட்டேன்.
“நாங்க செவ்வாய்க்கிழமை ஆபரேஷன் செய்றது இல்லே”.
“ஏன் டாக்டர், அது ஆபரேஷனுக்கு உகந்த நாள் இல்லியா?”
“இங்கே சில விதிமுறைகள் இருக்கு… அதைக் கடைப்பிடிப்பது என் கடமை.”
நாங்கள் பழனிக்குத் திரும்பினோம். டாக்டர் தேவ் ஆனந்தையும் ரத்தினவிஜயனையும் கூப்பிட்டு, “எனக்குப் புற்றுநோய் வந்திருப்பதால், இதன் ஒவ்வொரு நிலையையும் டாகுமெண்ட் செய்ய வேண்டும், படம் எடுக்க வேண்டும், இவற்றை எல்லாம் தொகுத்து, டாக்டர் தேவ் ஆனந்த்துடன் சேர்ந்து கிராமங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்” என்றேன்.
அறுவை சிகிச்சை முடிந்தால் நான் நன்றாகிவிடுவேன் என்கிற ஆழ்ந்த நம்பிக்கை எனக்கு இருந்தது. புற்றுநோய் குறித்து நண்பர்கள், மகன், தங்கை தவிர வீட்டில் தம்பி, உறவினர்கள் யாருக்கும் சொல்லவில்லை. என் தங்கை பிரேமா எனக்காக சென்னையிலிருந்து பழனிக்கு வந்துவிட்டார். நண்பர் பேரா. பழனிச்சாமியிடம் புற்றுநோய் பற்றிச் சொன்னேன். ஏற்கெனவே புற்றுநோயால் நண்பர் அருணந்தியை இழந்ததால், பழனிச்சாமி நிலைகுலைந்து போனார். பத்திரமாக வந்துவிடுவேன் என்று நான் அவரைத் தேற்றினேன்.
நான், பிரேமா, கோகுல், கமர், அன்வர், கனகராஜ் என ஒரு கூட்டமே பாயசம் சாப்பிட்டுவிட்டு, மருத்துவமனைக்குக் கிளம்பினோம். ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அட்மிஷன் போட்டாயிற்று. ஓசை செல்லா பார்க்க வந்தார்.
மறுநாள் காலை ஆபரேஷன். எட்டு மணிக்கு 30 ஆயிரம் ரூபாய் கட்டச் சொன்னார்கள்.
ஆகஸ்ட் 25. நான்கு மணிக்கு எழுந்து குளித்து தயாராகிவிட்டேன். எனக்கு அறுவை சிகிச்சைகான வெள்ளை உடை மாட்டப்பட்டது. என்னை அறுவை சிகிச்சை அறைக்குள் அழைத்துச் சென்றார்கள். டாக்டர் நளினி வந்தார். மயக்க மருந்து கொடுக்கும்வரை இருவரும் பழைய கதைகள் எல்லாம் பேசி, சிரித்துக்கொண்டே இருந்தோம். மயக்க மருந்து டாக்டர் வந்தார். இன்னும் சற்று நேரத்தில் புதிய மோகனாவாக மாறப் போகிறேன் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, நினைவிழந்தேன்.
நான் விழித்தபோது கோகுலும் தேவியும் என்னருகில் நின்றார்கள். எனக்கு அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது என்பதை உணர்ந்தேன். ஆனால், வலி இல்லை. அறுவை சிகிச்சை அறையிலிருந்து வேறு அறைக்கு மாற்றியிருந்தார்கள். காபி கொடுத்தார்கள். அதிகம் குடிக்க முடியவில்லை. பகல் முழுவதும் தூக்கமும் விழிப்புமாகவே இருந்தது. வலி இல்லாததால், ஆபரேஷன் செய்யவில்லையோ என்றெல்லாம் நினைத்துக்கொண்டேன்.
மறுநாள் காலை ஐந்தரை மணிக்கு விழிப்பு தட்டியது. சிஸ்டரை அழைத்தேன். அவர் பேஸ்ட், பிரஷ் எடுத்துக்கொண்டு என் பற்களைத் தேய்த்துவிட வந்தார். நான் எவ்வளவோ மறுத்தும் பல் தேய்த்துவிட்டுதான் அகன்றார்.
டாக்டர் கார்திகேஷ் வந்தார். “எப்படி இருக்கிறீர்கள்? நர்ஸ், இவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைக்காமல், வீல் சேரில் அமர வைத்து வார்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
அறுவை சிகிச்சை மூலம் எடுத்த மார்பகத்தையும் புற்றுநோய்க் கட்டியையும் பிரேமாவிடம் காண்பித்திருக்கிறார்கள் என்கிற தகவல் தெரிந்தது. நிணநீர்க்கட்டிகள் பரிசோதனைக்காக மும்பைக்கு அனுப்பட்டன. நிணநீர் கட்டிகளின் எண்ணிக்கை, நிலை அறிந்து, புற்றுநோய் என்ன Stage/Grade என்று கணிப்பார்கள். வார்டுக்குப் போனதும் மடிக்கணியைப் பயன்படுத்தி, கடுகு எண்ணெய் பற்றிய ஒரு தகவலை ஃபேஸ்புக்கில் போட்டேன். என்னைப் பார்க்க கோவை பாலா வந்தார். நான் உட்கார்ந்து, வேலை செய்வதைப் பார்த்து அவருக்கு ஆச்சாரியமும் மகிழ்ச்சியுமாக இருந்தது.
ஒரு மார்பகம் நீக்கப்பட்டு, கட்டுடன் இருந்த கோலத்தைப் படம்பிடிக்கச் சொன்னேன். எனக்குத் துணையாக வந்தவர்கள் அசதியில் தூங்க, நான் ஒரு நாற்காலியில் அமர்ந்து முகலாயர்கள் வரலாறு படிக்க ஆரம்பித்துவிட்டேன். 600 பக்கங்களை இரண்டே நாட்களில் படித்துமுடித்துவிட்டேன்.
மருத்துவர் வந்தார். என் நிலை குறித்துக் கேட்டேன். “இந்தப் புற்றுநோய் ஆபரேஷனுக்குப் பிறகு 85 சதவீதம் முன்கணிப்பு உண்டு. 5 ஆண்டுகளுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியும். மீதி 15 சதவீதம் குறித்துக் கேட்காதீர்கள். வலி எப்படி இருக்கிறது?” என்றார் . நான் வலி இல்லை என்றேன்.
மகன் ஜோதி, த.வி. வெங்கடேஸ்வரன், பேரா. மணி, தம்பி குடும்பம், தோழர் பாண்டி, கே.ஆர். கணேசன், முத்து ராஜ் எனப் பலரும் பார்க்க வந்தனர்.
அறுவை சிகிச்சை செய்த புண்ணிலிருந்து வரும் ரத்தம் கலந்த திரவம் சேகரிக்க ஒரு ஒரு நெகிழிப் பை கொடுத்தார்கள். அதை ஒரு ஜோல்னாபையில் போட்டுக்கொண்டு, சிகிச்சை முடிந்த அடுத்த நாளிலிருந்து தினமும் காலை, மாலை இருவேளையும் மருத்துவமனையின் மொட்டை மாடியில் நடந்தேன். நான் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து என்னைச் சுற்றியிருந்தவர்களும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
(இன்னும் பகிர்வேன்)
படைப்பாளர்:
மோகனா சோமசுந்தரம்
ஓய்வுபெற்ற பேராசிரியர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர். 35 ஆண்டுகளாக அறிவியலை மக்களிடம் பரப்பி வருகிறார். துப்புரவுத் தொழிலாளர்களுக்காகப் போராடி வருகிறார். ‘மோகனா – ஓர் இரும்புப் பெண்மணி’ என்ற இவரின் சுயசரிதை சமீபத்தில் வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிவியல் நூல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.