“என் மனைவிக்கு உடலுறவு வைத்துக் கொள்ளவே பிடிப்பதில்லை… தினம் தினம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தவிர்த்து விடுகிறாள்” என்று குற்றம் சாட்டும் கணவர்கள், முதலில் கீழேயுள்ள இந்தக் கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அவற்றுக்கான உண்மையான பதிலை உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள், பிறகு தீர்வுகளை ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாம்.

  1. இப்போதுதான் உங்கள் மனைவிக்கு உடலுறவில் விருப்பம் இல்லையா, அல்லது உங்களைத் திருமணம் செய்துகொண்ட நாளிலிருந்தே அப்படித்தானா?
  1. உங்களுடன் உடலுறவு கொள்ள மட்டும்தான் பிடிக்கவில்லையா, அல்லது உங்களையே பிடிக்கவில்லையா?
  1. உங்களையே பிடிக்கவில்லையென்றால் திருமணமான முதல் நாளிலிருந்தே பிடிக்கவில்லையா, அல்லது இடையிலிருந்துதானா?
  1. மாதத்தின் ஒரு சில நாள்களில் மட்டும் உங்கள் மனைவிக்கு கலவியில் விருப்பமில்லையா, அல்லது மாதம் முழுவதும், வருடம் முழுவதுமே ஆர்வமில்லையா?
  1. உங்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ள விருப்பம் இல்லாவிட்டாலும்கூட கலவி தொடர்பான பேச்சுக்களைக் கேட்பதிலோ அல்லது படங்கள் பார்ப்பதிலோ உங்கள் மனைவி ஆர்வமாயிருக்கிறாரா?

       இப்போது ஒவ்வொரு சூழல் பற்றியும் தெளிவாகப் பார்ப்போம். 

  1. இப்போதுதான் உங்கள் மனைவிக்கு உடலுறவில் விருப்பம் இல்லையா, அல்லது உங்களைத் திருமணம் செய்துகொண்ட நாளிலிருந்தே அப்படித்தானா?

திருமணமான புதிதில் அவளுக்கு உடலுறவில் விருப்பமிருந்தது, ஆனால் திடீரென அதில் நாட்டமில்லாமல் போய்விட்டது என்றால், அந்த ‘திடீரென்று’ வார்த்தையைக் கொஞ்சம் அலசிப்பாருங்கள். குறிப்பாக எப்போதிருந்து, எந்த சம்பவத்திற்குப் பிறகு அவளுக்கு ஆர்வமில்லாமல் போனது? உங்களுக்குள் ஏதாவது கடும் வாக்குவாதம் ஏதாவது ஏற்பட்டதா? அதிலிருந்து அவள் உங்களுடன் உடலுறவு கொள்வதைத் தவிர்க்கிறாளா?  அல்லது இந்த திருமண பந்தம்  வெகுகாலத்திற்கு நிலைக்காது என்பது போன்ற வார்த்தைகளை நீங்கள் சண்டையின்போது உங்கள் மனைவியிடம் பேசினீர்களா என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அப்படி அந்தப் பிரச்சினைக்கான ஆணிவேரை (Root cause)  நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் முதலில் அதை சரி செய்யுங்கள். ஒரு உறவு நிலைக்குமா நிலைக்காதா என்ற நிச்சயத்தன்மைகூட இல்லாதபோது எப்படி உங்கள் மனைவி  உங்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வாள்?

முதலில் உங்கள் திருமண பந்தத்தின் உறுதிக்கு உங்கள் மனைவியிடம் உத்திரவாதம் கொடுங்கள். இது ஒரு எடுத்துக்காட்டுதான். இதைப்போல வேறு என்ன காரணங்கள் இருக்கின்றன என்று கண்டுபிடித்து நீங்களாகவோ அல்லது ஒரு உறவுகள் மேம்பாட்டு நிபுணரின் உதவியுடனோ அவற்றையெல்லாம் சரி செய்யுங்கள். 

இன்னும் சில பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் காலகட்டத்திலிருந்து,  குழந்தைப் பேறு முடிந்து சில மாதங்கள் வரை உடலுறவில் விருப்பமில்லாமல் போகும். அதைப்பற்றியும் இந்த அத்தியாயத்தில் விரிவாக விளக்கியுள்ளேன். திருமணமானதிலிருந்தே உங்கள் மனைவிக்கும் உங்களுக்கும் உடலுறவே இல்லையென்றால், திருமணத்திற்கு முன் அவளுக்கு வேறு ஏதாவது காதல் இருந்ததா, அவளது விருப்பத்துடன்தான் இந்தத் திருமணம் நடந்ததா அல்லது கட்டாயத் திருமணமா என்பதைப் பற்றியெல்லாம் அவளது குடும்பத்தில் உங்களுக்கு நெருக்கமான, நம்பகத்தன்மையுடைய உறவினருடன் கலந்தாலோசித்து அந்தப் பிரச்னையை சரிசெய்ய முயலுங்கள்.

நீங்கள் உங்கள் பிரச்னையைப் பகிர்ந்து கொள்ளும் அந்த நபர், உங்கள் இருவரின் நலன் மீதும் அக்கறை கொண்டவராகவும், உங்களுக்கும் உங்கள் மனைவிக்குமிடையேயிருக்கும் உறவுச்சிக்கல்களைப் பற்றி ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்காமலிருப்பவராகவும் இருத்தல் வேண்டும். உங்களது மனைவியின் குடும்பத்தில் அவருக்கு மதிப்பிருக்க வேண்டும். அவர் பேசினால் உங்கள் மனைவி அவரது வார்த்தைகளைக் காது கொடுத்து கேட்குமளவிற்கு அவர்கள் இருவருக்கும் ஒரு நல்ல புரிதலிருக்க வேண்டும். இந்த நுணுக்கமான பிரச்சினையைத் தீர்க்குமளவிற்கு அவருக்குத் திறமையிருக்கவேண்டும். இவையனைத்தையும் அலசி ஆராய்ந்து அந்த நபரைத் தேர்ந்தெடுத்து,  அவரது உதவியை நாடுங்கள்.

இன்னொரு முக்கியமான காரணம், உடலுறவு குறித்த பயமும் உங்கள் மனைவியின் பெண்ணுறுப்பில் இறுக்கத்தை ஏற்படுத்தி அதனாலும் அவளால் உடலுறவு வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படலாம். ஒருவேளை அப்படியிருந்தால் உங்கள் மனைவிக்கு வெஜைனிஸ்மஸ் (Vaginismus) மற்றும்  டிஸ்பெரூனியா (Dyspareunia) பிரச்னையாக இருக்கலாம். இதைப் பற்றியும் இதற்கான தீர்வுகளைப் பற்றியும் இந்த அத்தியாயத்தில் விளக்கியுள்ளேன். 

  1. உங்களுடன் உடலுறவு கொள்ள மட்டும்தான் பிடிக்கவில்லையா அல்லது உங்களையே பிடிக்கவில்லையா?

இதற்கும் தெளிவான பதிலைக் கண்டுபிடியுங்கள். உங்களுடன் உடலுறவு கொள்ள மட்டும்தான் பிடிக்கவில்லையென்றால் நீங்கள் செய்வதில் அவளுக்கு எது பிடித்திருக்கிறது, என்ன பிடிக்கவில்லை அல்லது எப்படி அவள் எதிர்பார்க்கிறாள் என்று அவளுடன் பேசுங்கள். கட்டாயம் ஒரு தீர்வு கிடைக்கும். 

ஆனால், உங்கள் மனைவி வெளிப்படையாகப் பேசும்போது, அவள் உங்களைக் குறை கூறுவதாகத் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளாதீர்கள். உடலுறவில் உங்களது செயல்பாடுகள் குறித்த அவளது எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறாள், அதுவும் நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க என்பதை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அவளைப் பேசச் சொன்னதே உங்கள் பாலுறவு வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளத்தான் என்பதையும் மறந்துவிடாதீர்கள். உங்களையே பிடிக்கவில்லை என்றால் அதற்கான காரணங்களைக் கேட்டு அவற்றை நிவர்த்தி செய்யப் பாருங்கள். 

ஆண்களுக்கு ‘நாம் எதற்கு இறங்கிப் போக வேண்டும் ஒரு பெண்ணிடம்?’ என்ற எண்ணம் இருப்பதுதான் திருமண உறவில் பல சிக்கல்களைப் பெரும்பாலும் ஏற்படுத்துகிறது. நீங்கள் ஒரு படி இறங்கி வந்தால், உங்கள் மனைவி பல படிகள் கீழே இறங்கி வருவாள் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் திருமண உறவில் இறுக்கமான மனநிலையில் இருந்தீர்கள் என்றால், அன்பையும், அக்கறையையும் பெரிதும் எதிர்பார்க்கும் பெண்கள் ஒரு கடடத்தில் அந்த உறவிலிருந்து தப்பித்து ஓடிவிட வேண்டுமென்றுதான் நினைப்பார்கள். அப்படி ஒரு திருமண பந்தம் பிரியும் போது ஆரம்பகட்டத்தில் வேண்டுமானால் ஆண்களை பெரிதாக பாதிப்பது போலவும் பெண்கள் தவிப்பது போலவும் தெரியலாம். ஆனால், போகப் போக நிலைமை தலைகீழாக ஆகி விடும். ஒரு பெண்ணுடனான உறவில் பிரிவு ஏற்படும் ஆரம்ப நாட்களில் தெளிவாகவும் உறுதியாகவுமிருக்கும் ஆண், நாள்கள் செல்லச் செல்ல பலவீனமாகி விடுவான். ஒரு ஆணைப் பிரிந்த ஆரம்ப காலகட்டத்தில் அழுது புலம்பும் பெண்கள் நாள்கள் நகர, நகர மனதளவில் பலமானவர்களாகாவும் எந்த சூழலையும் தைரியமாக சந்திப்பவர்களாகவும் மாறிவிடுவார்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Photo by Shifaaz shamoon on Unsplash
  1. உங்களையே பிடிக்கவில்லையென்றால் திருமணமானதிலிருந்தே உங்களைப் பிடிக்கவில்லையா அல்லது இடையிலிருந்தா?

ஏற்கெனவே சொன்னபடி திருமணமான நாளிலிருந்தே உங்களைப் பிடிக்கவில்லையென்றால், உங்கள் மனைவியின் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து அவர்களது உதவியுடன் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து அப்பிரச்னையை சரி செய்யுங்கள். இடையிலிருந்துதான் உங்களைப் பிடிக்கவில்லயென்றால், அவளுக்குப் பிடிக்காமல் போகுமளவிற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

ஒருவேளை, வேறொரு நபரின் மேல் உங்கள் மனைவிக்கு ஆர்வம் வந்து விட்டது, அதனால் உங்களிடமிருந்து விலகுகிறாள் என்று நீங்கள் நம்பினால், கட்டாயம் உங்கள் இருவருக்கிடையேயும் உடலளவிலோ அல்லது மனதளவிலோ ஒரு இடைவேளை ஏற்பட்டிருக்கும் போதுதான் அவள் அவ்வாறு செய்திருக்கக் கூடும், இல்லையா? எனவே முதலில் அந்த இடைவெளியைக் குறைப்பதற்கான முயற்சியை எடுங்கள். அதற்கு முன் உங்கள் மனைவியைப் பற்றி அவ்வாறு நீங்கள் நினைப்பது உண்மையிலேயே நடக்கிறதா அல்லது உங்கள் யூகமா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பல ஆண்கள் ஒன்று மனைவியை சுத்தமாகக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் அல்லது ‘பொசசிவ்னெஸ்’ என்ற பெயரில் இயல்பு நிலையை மீறி அவளை இறுக்கப் பிடித்து வைத்துக்கொள்வார்கள். பால்காரர், காய்கறிக்காரரிடம்கூட பேசவிடாமல், படுத்தி எடுப்பார்கள். இந்த செயல்களும், ‘நான் கல்யாணத்துக்கு முன்னாடியிருந்தே கோபம் வந்தால் கெட்ட வார்த்தையிலதான் திட்டுவேன், அதுல என்ன தப்பு இருக்கு?’ என்று சொல்லிக்கொண்டு ஆபாச வார்த்தைகளை மனைவியைத் திட்டுவதற்கு பயன்படுத்துவதும் தவறு. உங்கள் வீட்டிலும், நீங்கள் வளர்ந்த சூழலிலும் அல்லது நட்பு வட்டத்திலும் வேண்டுமானால் அது சாதாரண விஷயமாயிருக்கலாம். ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு ஆபாச வார்த்தைகளைக் கேட்பது சுத்தமாய் பிடிக்காது. அதுவும் கணவன் கோபத்தில் அவ்வாறு  திட்டும்போது எரிச்சலை உண்டாக்கும். 

இப்படி ஏதாவது நீங்கள் பேசி உங்களது மரியாதையை நீங்களே கெடுத்துக் கொண்டீர்களா என்று யோசித்துப் பார்த்து அதை சரி செய்யுங்கள், உங்கள் மனைவியிடம் மன்னிப்புக் கேளுங்கள். தவறேயில்லை. ஏனெனில் கணவன் அவன் மீதான மரியாதையை மனைவியிடம் கெடுத்துக் கொண்ட பிறகு அவளுக்கு அவன்மீது அன்போ, காதலோ, காமமோ வரவே வராது. மிகவும் பிரயத்தனப்பட்டுத்தான் நீங்கள் அதை சரி செய்து பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

  1. மாதத்தின் ஒரு சில நாட்களில் மட்டும் அவளுக்கு கலவியில் விருப்பமில்லையா அல்லது மாதம் முழுவதும் வருடம் முழுவதுமே அப்படித்தானா?

மாதத்தின் ஒரு சில நாட்களில் மட்டும் உங்கள் மனைவிக்கு உடலுறவில் ஆர்வம் இல்லையென்றால், இதைப் பற்றி மிக விளக்கமாக இந்தப் புத்தகத்தின் ஆரம்ப அத்தியாயங்களிலேயே சொல்லியிருக்கிறேன். பெண்களின் மாதவிடாய் சுழற்சியைப் பற்றியும் ஒவ்வொரு சுழற்சி காலகட்டத்திலேயும் அவளது உடல் நிலை, மனநிலை மற்றும் பாலுறவு ஆர்வம் எப்படி இருக்கும், எப்படியெல்லாம் மாறும், எந்தெந்த நாட்களில் நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எவ்வாறெல்லாம் நீங்கள் நடந்து கொண்டால் உங்கள் இருவருக்குமே கலவி மகிழ்ச்சியளிக்கக் கூடியதாயிருக்கும் என்பதைப்பற்றியெல்லாம் அதில் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். அம்முறைகளைப் பின்பற்றுங்கள்.

  1. உங்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ள விருப்பம் இல்லாவிட்டாலும் கூட அது தொடர்பான பேச்சுக்களைக் கேட்பதிலோ அல்லது படங்கள் பார்ப்பதிலோ உங்கள் மனைவி ஆர்வமாயிருக்கிறாளா?

உங்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ள விருப்பம் இல்லாவிட்டாலும்கூட அது தொடர்பான பேச்சுகளைக் கேட்பதிலோ அல்லது படங்கள் பார்ப்பதிலோ உங்கள் மனைவி ஆர்வமாயிருக்கிறாள் என்றால், கவலைப்படாதீர்கள். அது பெரும்பாலும் மிகவும் சாதாரணமான விஷயமாக, தற்காலிகப் பிரச்னை அல்லது கோபமாகத்தானிருக்கும்… அவற்றை ஆராய்ந்து, தகுந்த ஆலோசனைகள் கொடுத்தால் அவளது ஆர்வமின்மையை சரிசெய்துவிடலாம்.

உடலுறவு குறித்த பேச்சுக்களைக் கேட்பதிலோ அல்லது படங்களைப் பார்ப்பதிலேயே கூட விருப்பமில்லை, அவற்றையும் தவிர்க்கிறாள் என்றால் கட்டாயம் மனம் சார்ந்த தடைகள் அல்லது வெஜைனிஸ்மஸ், டெஸ்பெரூனியா போன்ற பிரச்னைகள் இருக்கலாம். அதானால் தன் மீதே சுய மதிப்பும் நம்பிக்கையுமில்லாத மனநிலையில் அவளிருக்கலாம். தகுந்த மகப்பேறு நிபுணர், உறவியல் மேம்பாட்டு நிபுணர், பாலியல் வல்லுனர் மற்றும் அவர்கள் வலியுறுத்தி வழிகாட்டினால், தேவைப்பட்டால் பிஸியோதெரபிஸ்ட் இவர்களோடு கலந்தாலோசித்து அவர்களது உதவியுடன் இந்தப் பிரச்னையிலிருந்து மீண்டு வந்து உங்கள் கலவியல் வாழ்க்கையைத் தொடங்கலாம்.

பொதுவாகப் பெண்கள் உடலுறவைத் தவிர்ப்பதற்கான காரணங்களில் முதலாவது முதன்மையான காரணம் இந்தப் புத்தகம் முழுவதுமே குறிப்பிட்டுள்ளபடி ‘பெண்களுக்கு உடலுறவில் உச்சக்கட்டமே ஏற்படாமல் தொடர்வதால் ஏற்படும் சலிப்பும், வெறுப்பும்’. இதை ஆண்கள் எப்படி சரி செய்வது, அதற்கு என்னென்ன முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம்தான் எல்லா அத்தியாயங்களிலும் பேசிக்கொண்டு இருக்கிறோம். அவற்றை கவனமாகப் படித்து, உள்வாங்கிப் பின்பற்றுங்கள்.

உடலுறவைப் பெண்கள் தவிர்ப்பதற்கான அடுத்த காரணம், வெகு நேரம் நீட்டிக்காமல் ஆண்கள் கலவியை விரைவாகவே முடித்து விடுவதுதான். ஆணுறுப்பு பெண்ணுறுப்பிற்குள் ஊடுருவும் இயல்பான கலவியில் (Vaginal penetrative sex) ஒரு பெண் உச்சக்கட்டமடைய பதினான்கு நிமிடங்கள் ஆகும் என்று என்பதைப் பற்றி ஏற்கனவே பேசிவிட்டோம். ஆனால், ஆண்களுக்கு சராசரியாக நான்கிலிருந்து ஐந்து நிமிடங்களுக்குள்ளேயே விந்து வெளியேறி விடுகிறது. பல சமயங்களில், ஒன்றிலிருந்து இரண்டு நிமிடங்களுக்குள்ளேயேகூட  அவர்களுக்கு உகச்சக்கட்டம் ஏற்பட்டு விந்து வெளியேறிவிடுகிறது. கலவியில் ஈடுபடத் தொடங்கிய இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு முன்பாகவே ஒரு ஆணுக்கு விந்து வெளியேறி விடுவதை முன்கூட்டிய விந்துதள்ளுதல் (Premature ejaculation) என்கிறோம். இதற்கு மிக முக்கியமான காரணம், ஆண்கள் இயல்பாக, ஓய்வாக இருக்கும் நிலையில் மனைவியிடம் வந்து, கலவிக்கு முன் இனிமையான பேச்சு, தொடுகைகள், கொஞ்சல்கள் எனப் படிப்படியாக செயல்பட்டு, அதன் மூலம் அவர்கள் தூண்டப்பட்டு பிறகு உடலுறவுக்குள் நுழைவதில்லை. 

வேறு ஏதாவது முறைகள் மூலமோ, அல்லது உணர்ச்சியைத் தூண்டும் படங்களைப் பார்த்து விட்டோ தங்களை உணர்ச்சியின் உச்சக்கட்ட நிலைக்குக் கொண்டு சென்றுவிட்ட பின்தான் மனைவியிடமே வருகிறார்கள். கிட்டத்தட்ட விந்து வெளியேறும் நிலையில்தான் உடலுறவையே தொடங்குகிறார்கள். பிறகு எப்படி வெகுநேரம் நீடித்து கலவியில் ஈடுபட முடியும்?

இரண்டாவது காரணம், கலவியில் ஈடுபட்ட பிறகும் விந்து வெளியேறுவது போலிருந்தால் பாதியில் உறவை நிறுத்திவிட்டு மீண்டும் தொடரும் முறையைப் பின்பற்றுவதில்லை. யாரிடமும் ஆலோசனை பெற்று அவர்கள் அதைக் கற்றுக்கொள்வதுமில்லை. விந்து வெளியேறிவிடப்போகிறது என்று உணர்ந்தவுடனே ஆண்கள் உடலுறவை நிறுத்திவிட்டு ஆழமாக மூச்சை உள்ளேயிழுத்து நிதானமாக வெளியே விடவும். ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடரலாம். அந்த இடைவெளியில் உங்கள் மனைவி உச்சக்கட்டம் அடையும் வகையில் உங்கள் விரல்களாலோ அல்லது நாவினாலோ அவளது கிளிட்டரஸைத் தூண்டலாம்.

இப்படி இடைவெளி விட்டுத் தொடரும்போது, பெண்கள் உங்கள் உள்ளங்கைகளை நன்றாகத் தேய்த்து உங்கள் கணவனின் நெற்றியிலும் ஆணுறுப்பின் மீதும் லேசாக அழுத்துங்கள். இது உங்கள் கணவனின் உடலில் வெப்பத்தை ஏற்படுத்தி மீண்டும் விறைப்புத் தன்மையை அதிகரித்து அவர் மீண்டும் உடலுறவைத் தொடர உதவும். இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நிறைய பெண்கள், “என் கணவர் இயல்பான உடல் வெப்பத்துடன்தான் இருப்பார். ஆனால், கலவியின் போது மட்டும் அவருக்கு காய்ச்சல் வந்து விடும்” என்று பயத்துடன் சொல்வார்கள்.

Photo by Winel Sutanto on Unsplash

இது மிகவும் இயல்பான ஒரு விஷயம்தான், பயப்படத் தேவையில்லை. தமிழில் பேச்சு மொழியில் ‘காதல் ஜூரம்’ என்பார்கள். கலவியின்போது உடலின் செயல் வேகம் அதிகரிப்பதாலும் மூச்சின் வேகம் மாறுபடுவதாலும் ஆண்களின் உடலில் இயல்பாகவே வெப்பம் அதிகரிக்கும்.

கடினமான விளையாட்டு, உடற்பயிற்சி செய்பவர்களுக்குக் கூட இவ்வாறு நிகழும். கூடல் முடிந்த சிறிது நேரம் கழித்து, அவர்களது மூச்சின் வேகம், உடல் செயல்பாட்டின் வேகம் மற்றும் இரத்த ஓட்டம் இவையனைத்தும் சீரானவுடன் அவர்களது உடல் வெப்பமும் சீராகிவிடும். எனவே, மனப்பதட்டத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். உடலுறவுக்கு முன்பும் கலவியில் ஈடுபடும்போதும், உங்கள் மனதைப் பதட்டமின்றி வைத்துக் கொள்ளுங்கள். புகைப்பிடித்தல் மற்றும் ஆல்கஹால் பழக்கத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். வாரத்தில் 75லிருந்து 150 நிமிடங்கள் வரை நன்றாக வியர்வை வெளியேறும்படி உடற்பயிற்சி செய்யுங்கள். ஓடுதல், நீச்சல் மற்றும் நடைப்பயிற்சியையும் நீங்கள் மேற்கொள்ளலாம். 

உடலுறவில் ஒரே மாதிரியான விஷயங்களையும் கோணங்களையும் திரும்பத் திரும்ப செய்து பெண்களுக்கு சலித்துப் போய்விடுவதும் அவர்கள் உடலுறவைத் தவிர்ப்பதற்கான காரணங்களில் ஒன்று. தயவுசெய்து இதை மாற்றிக் கொள்ளுங்கள் ஆண்களே. சுவையில்லாத டீயையோ அல்லது காஃபியையோ உங்கள் அலுவலகத்தில் தினம் தினம் குடித்து, உங்களுக்கு அதன் சுவை பிடிக்காமல் போய், பிறகு அதுவே எப்படி உங்களுக்கு ஒரு சலிப்பான கடமையாகி விடுகிறதோ அதேபோல்தான் உடலுறவும் ஆகி விடும். குறைந்தபட்சம் கலவி கொள்ளும் அறைகளையாவது அவ்வப்போது மாற்றிப் பாருங்கள்.

பெண்கள் கடுப்பாகி, “சே, போதும்… நீயும் உன் ….ம்” என வெறுப்பாகிப் போய் உடலுறவைத் தவிர்ப்பது எப்போது தெரியுமா…? அவள் அன்றைக்குத்தான் புதிதாக ஒரு புடைவையையோ, கவர்ச்சியான இரவு ஆடையையோ அணிந்து வந்திருப்பாள். அதைக் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் “ம்… கழற்று…” என்று சொல்லியபடி காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் பாய்வதைப்போல் அவள் மீது பாய்வீர்களே அப்போதுதான்… இதை எழுதும்போது எனக்கே காண்டாகிறது என்றால், பாவம் உங்கள் மனைவியின் மனநிலை அப்போது எப்படியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

உங்கள் மொழியில், உங்களுக்குப் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், மிகவும் முயற்சியெடுத்து உங்கள் மூளையைக் கசக்கி ஒரு வேலையை செய்துமுடித்து, அந்த ஃபைலை உங்கள் மேலதிகாரியிடம் காட்டுகிறீர்கள். அவர் கொஞ்சம்கூட அதை கவனிக்காமல், உங்கள் மெனக்கெடல்களை சட்டை செய்யாமல், உங்களைப் பாராட்டாமல், ஃபைலை மேஜையின் மேல் தூக்கிப்போட்டு விட்டு “ம்ம்… அடுத்த வேலையைப் பாருங்க…” என்று சொன்னால் உங்களுக்கு எப்படியிருக்கும்? முகம் வதங்கிய கத்தரிக்காயைப் போலாகிவிடாது? அதே வேலையைத்தான் உங்கள் மனைவியிடம் நீங்கள் தினம் தினம் செய்து கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், அவளுக்கு நீங்கள் நடந்து கொள்வது எவ்வளவு வெறுப்பாயிருக்கும் என்பது உங்களுக்கே புரியும்.

இன்னும் சில ஆண்கள் இருக்கிறார்கள்… ஒன்றும் சொல்லாமல் கண்டுகொள்ளாமல் இருப்பவர்களே பரவாயில்லை என்னும் சொல்லும்படி… தங்கள் மனைவியை உண்மையில் கவனித்திருக்கவே மாட்டார்கள். ஆனால், எதையாவது  படித்துவிட்டு அல்லது தொலைக்காட்சியில் யாரவது சொல்லும் அறிவுரையைக் கேட்டு விட்டு அவள் நூறாவது முறையாகக் கட்டும் சேலையை, “இது புதுசா, நல்லாயிருக்கே…!” என்று சொல்லி வாங்கிக்கட்டிக் கொண்டுவருவார்கள். நேர்மாறாக அவள் அன்றுதான் அணிந்திருக்கும் புதிய உடையையோ அல்லது நகையையோ, “இது அன்னைக்கு, அங்கே போட்டதுதானே…?” என்று உளறிக் கொட்டுவார்கள். தயவு செய்து அப்படியெல்லாம் சும்மா பேருக்கு சொல்லாமல் உண்மையிலேயே உங்கள் மனைவியை உற்றுக் கவனியுங்கள்.

“பூ வாசனை ஆளைத் தூக்குது…” “நெஜம்மாவே இந்தப் புடவை உனக்கு சூப்பரா இருக்கு…” என்று படுக்கையறையில் மட்டுமல்லாமல் சாதாரணமாகவே அவளிடம் நான்கு வார்த்தை நல்லதாய்ப் பேசினால் குறைந்து போய் விடுவீர்களா என்ன? 

நேர்பாலீர்ப்பில் (Lesbian) ஈடுபடும் பெண்களுக்கு அந்த உறவில் என்ன கிடைக்கிறது? எப்படி அது சாத்தியாமாகும் என எல்லோரையும் போலவே எனக்குள்ளும்  நிறைய குழப்பங்கள் இருந்தன. அவர்களைப் பேட்டியெடுக்கும் ஒரு சந்தர்ப்பத்தில்தான், ஒரு விஷயம் எனக்குத் தெளிவாகப் புரிந்தது. அவர்கள் சொன்னதை, அப்படியே வார்த்தை பிசகாமல் இங்கே எழுதுகிறேன்:

“உள்ளே போறது ஒண்ணும் முக்கியமில்லை மேடம், அன்பா ஆதரவா நம்மளை மடியில படுக்க வெச்சுக்கிட்டு தலையை வருடி, நாம பேசறதைக் கேட்கறாள்ல, அதுதான் பெரிய விஷயம்…” 

“ஏய் எப்படிடி உன்னுது இவ்ளோ அழகா இருக்கு, இந்த ஹேர்ஸ்டைல் உனக்கு டக்கர்…” இப்படித்தான் எங்கள் உறவு ஆரம்பித்தது.

“உடம்பு நோவுதுக்கா… வலியில நான் தரையில படுத்து உருண்டாக்கூட என் வூட்டுக்காரு கண்டுக்க மாட்டான். இன்னாத்துக்கு அவனாண்ட வீணா சொல்லிட்டு? தோ இவ எண்ணெயைக் காய்ச்சி எனக்கு நேத்து உருவிவிட்டா…”

பெரும்பாலும் இப்படியாகத்தானிருக்கின்றன அவர்களது உறவு இறுக்கமானதற்கான காரணங்கள். ஒரு கட்டத்தில் “எல்லாம் செய்யற உனக்கு நான் அதையும் பண்ண மாட்டேனா…” என்னும் நொடியில்தான் அவர்களது உறவு அடுத்த கட்டமான கைவழி உறவுக்கோ, வாய்வழிப் புணர்ச்சிக்கோ நகர்கிறதேயொழிய, அவையொன்றும் அடிப்படைக் காரணமாகயிருப்பதில்லை.

அப்படி ஒரு பெண் தனக்கான உணர்வியல் தீர்வுகளை இன்னொரு பெண்ணிடம் தீர்த்துக் கொள்ள சென்றுவிட்ட பிறகு, ‘அய்யோ, அம்மா…’ என வாயிலும் வயிற்றிலும் நீங்கள் அடித்துக் கொள்வதில் என்ன பயன்? இல்லை, கேவலமான வார்த்தைகளால் அந்தப் பெண்களைக் கொச்சைப்படுத்துவதில்தான் என்ன ஒரு குரூர சந்தோஷம்..? இதற்காக நான் நேர்பாலினச் சேர்க்கையில் ஈடுபடுவதுதான் தீர்வு என்று சொல்லவில்லை. அந்த வாதத்துக்கே நான் வரவில்லை. நான் கேட்பதெல்லாம், யாரோ ஒரு பெண் உங்கள் மனைவிக்குக் கொடுக்கும் உணர்வியல் அங்கீகாரத்தையும் ரசனையான வார்த்தைகளையும் அக்கறையான தொடுதல்களையும் ஆதரவான உரையாடல்களையும் கொடுக்காமல், அவற்ற விட வேறு என்ன முக்கியமான வேலையைச் செய்து கொண்டிருந்தீர்கள்..? என்பதுதான்.

உங்கள் மனைவி உங்களுக்குக் கிடைக்காதவரை எப்படியெல்லாம் அவள் பின்னால் சுற்றியிருப்பீர்கள்? உங்கள் மனைவியை விட சுமாராயிருக்கும் பெண்களிடம் இப்போதும்கூட எப்படியெல்லாம் கடலை போடுகிறீர்கள்? பிறகென்ன, ஒருத்தி கிடத்து விட்டதும், உங்களுக்கென்றானதும் அவளை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காமல் போவது? ‘மதிப்பு’ என்ற வார்த்தையை விட ‘ரசனை’ என்பது இங்கு பொருத்தமாயிருக்கும். உங்கள் மனைவியிடம் நீங்கள் ரசிப்பதற்கு எவ்வளவு விசயங்கள் இருக்கின்றன? காமத்தை விட பல சமயங்களில் அந்த ரசனைகளும் அவற்றை நீங்கள் வெளிப்படுத்திக் கொள்வதுமே இனிமையாயிருக்கும் என்பதை உணருங்கள். 

கலவி என்பது அந்தரங்க உறுப்புகள் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. உங்கள் ஐம்புலன்களும் அதில் ஈடுபடும்போதுதான் உடலுறவு என்பது முழுமையாகும். அப்படி இனிப்பாயிருக்க வேண்டுமென்றால், கண்களால் அவள் அழகுகளைப் பாருங்கள், காதுகளால் அவள் பேசுவதைக் கேளுங்கள், நாவினால் அவள் உடல் முழுவதையும் சுவைத்து, அவளது வாசனையை முழுமயாய் உணர்ந்து, அவளது தோலின் மென்மையை உங்கள் தொடுகையால் அனுபவித்து பிறகு கூடலில் ஈடுபடுங்கள். 

‘இதுக்கெல்லாம் ரொம்ப   நேரமாகுமே’ என்றால், அந்த இரவில் வேறென்ன எலெக்ட்ரிக் ட்ரெயினையா பிடிக்கப் போகிறீர்கள்? நேரம் ஆவதெல்லாம் ஒரு விஷயமா? விடிந்துவிட்டே போகட்டுமே, என்ன ஆகிவிடப் போகிறது? யார் கேள்வி கேட்கப் போகிறார்கள்?

கலவிக்கு முன் உங்கள் மனைவியைப் பார்த்து ‘கழற்று’ என்று சொல்வதே என்னைப் பொறுத்தவரை மிகவும் அநாகரீகமான சொல் பயன்பாடு. துளி உடையுமில்லாமல் கலவியில் ஈடுபடுவதுதான் சரி என்பதே ஒரு தவறான கண்ணோட்டம். ஆண்களுக்கு கால்சட்டை அணிவது அசௌகர்யமாய் இருப்பதால் அவர்கள் ஆடையில்லாமலிருப்பது அவர்களது விருப்பம். ஆனால் பெண்கள் புடைவையோ அல்லது ஸ்கர்ட்டோ அணிந்திருக்கும்போது அவற்றையும் கழற்றியாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தாதீர்கள். நிறைய பெண்களுக்கு புடவையைக் கழற்றாமலும், ஜாக்கெட்டின் சில பட்டன்களை மட்டும் கழற்றி விட்டு, முழுவதும் அவிழ்க்காமலிருப்பதும் வசதியாகவும், பிடித்துமிருக்கிறது என்று கருதுகிறார்கள். உங்கள் மனைவி என்ன நினைக்கிறாள், அன்று அவள் எவ்வாறிருக்க விரும்புகிறாள் என்று கேட்டு அதன்படி செய்யுங்கள்.  முழு ஆடைகளையும் இருவரும் கழற்றுவது ஒருபோதும் கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால், எப்போதுமே அப்படி மட்டும் செய்யவேண்டாம் என்றுதான் சொல்கிறேன். வித்தியாசமான ஆடைகளில் உடலுறவில் ஈடுபடுவது சலிப்பை ஏற்படுத்தாமலிருக்கும்.

ஆடைகளை இன்று முழுவதுமாகக் கழற்றிவிட்டு முயற்சி செய்யலாம் என்று இருவரும் தீர்மானித்திருந்தால்கூட அவ்வாறு செய்யும்படி உங்கள் மனைவிக்குக் கட்டளையிடாமல், நீங்கள் ஒவ்வொன்றாக அவளது ஆடைகளைக் கழற்றுங்கள். ‘போத்திக்கிட்டு படுத்தா என்னா? படுத்துக்கிட்டுப் போத்தினா என்ன? எல்லாம் ஒண்ணுதானே…?’ என்று நினைக்காதீர்கள். உங்கள் மனைவின் ஆடைகளை அவளைக் கழற்றச் சொல்வதற்கும், நீங்கள் உங்கள் மனைவியை முத்தமிட்டபடியே அவளது ஆடைகளைக் கழற்றுவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

முதலாவது, உங்கள் மனைவியை அதட்டாத, அதிகாரம் செய்யாத ஒரு காலாச்சாரம் மிக்க மனிதனாக உங்களைக் காட்டும். நான் ஏற்கெனவே சொன்னதைப் போல, உடலுறவிற்கு முன்னால் தன் மனைவியை பார்த்து “கழற்று” என்று சொல்வதே அநாகரீகத்தின், துளியும் அன்பும் அக்கறையும், நட்புமற்ற கீழ்த்தரமான அதிகாரத்தின் உச்சக்கட்டம்.

இரண்டாவது, நீங்கள் மென்மையாக அவளது ஆடைகளை அகற்றுவது அவள் மீதான காதலை உணர்த்தும் ஒரு செயலாக அமையும். 

மூன்றாவது, இதுவே உங்கள் மனைவிக்கு ஒரு முன்விளையாட்டாக அமைந்து விடும்.

நான்காவது, அவள் கொஞ்சம் ஓய்வாகவும், தான் கவனிக்கப்படுவதாகவும் கொஞ்சப்படுவதாகவும் உணர்வாள். ஜாக்கெட் மற்றும் ப்ராவின் ஹூக்குகளைப் பின்னோக்கிக் கைகளை மடக்கிக் கழற்றுவது எப்போதுமே பெண்களுக்குக் கொஞ்சம் சிரமம்தான். இந்த வேலைகளை எப்போழுதுமே கணவன் செய்துவிடுவது நல்லது.

Photo by Yoann Boyer on Unsplash

உங்கள் மனைவி இப்படி நீங்கள் செய்யும்போது மனதளவில் மகிழ்ச்சியாக உணர்வதாலும், உடலில் கூச்சவுணர்வு ஏற்படுவதாலும் அவள் உடலில் ஆக்ஸிடோசின் மற்றும் டோபோமின் சுரக்கத் தொடங்கும்.

அடுத்த காரணம், கலவி முடிந்ததும் ஆண்கள் தூங்கிவிடுவது. பெண்களைக் கோபத்தின் உச்சிக்கே கொண்டுசென்றுவிடும் இந்த செயலை ஆண்கள் முற்றிலும் தவிர்க்கவேண்டும். இதைப்பற்றி சென்ற அத்தியாயத்தில் சுருக்கமாகப் பார்த்தோம். இப்போது கொஞ்சம் விரிவாகப் பேசுவோம்.

உடலுறவு முடிந்ததும் ஆண்கள் ஏன் தூங்கி விடுகிறார்கள் என்பதைப் பற்றி பெண்கள் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.   கூடலுக்குப் பிறகு தூக்கம் வருவதென்பது ஆண்களுக்கு ஏற்படும் மிக இயல்பான ஒரு விஷயம்தான். கலவியல் உச்சக்கட்டம் அடையும்போது ஆண்களின் மூளையில் தூக்கத்தைத் தூண்டும்  ப்ரோலேக்டினின் அளவு (prolactin) அதிகரிப்பதால் அவர்களுக்குத் தூக்கம் வந்துவிடுகிறது. இது இயற்கைதான் என்றாலும், சிறிது நேரம் செலவழித்து பெண்ணின் உடல் முழுவதையும் மென்மையாக வருடிக் கொடுக்கவேண்டும்.

பெரும்பாலான சமயங்களில் பெண்களுக்கு உச்சக்கட்டமே ஏற்பட்டிருக்காது. ஆனால், ஆண்கள் தங்கள் வேலை முடிந்ததும் தூங்கி விடுகிறார்கள். இப்படி செய்வது கணவன் மீது மிகப் பெரிய அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தி, அதன் தொடர்ச்சியாக உடலுறவில் ஆர்வமில்லாத மனநிலையைப் பெண்களுக்கு ஏற்படுத்துகிறது. இதன் தொடர்ச்சியாக, கலவியில்லாத இந்த இடைவெளி அவர்களுக்கிடையேயான நெருக்கத்தில் விரிசலையும் புரிதலின்மையையும் உருவாக்கி விடும். எனவே ஆண்கள் இந்த நிலையை மிகவும் கவனமாகவும் அக்கறையுடனும் கையாள வேண்டியது அவசியம்.

கருத்தரிப்புக் காலத்தில், ஒருவேளை கரு கலைந்து விடுமோ என்ற பயத்திலும் குழந்தை பிறந்தவுடன் அதை வளர்ப்பதிலுமே கவனம் செலுத்துவதால் உடலுறவு கொள்வதில் ஒரு இடைவெளி ஏற்பட்டு விடுகிறது. சுகப்பிரசவமென்றால், பெண்ணுறுப்பின் வாயிலைக் கீறி அதில்  போடப்பட்ட தையல்கள், அறுவை சிகிச்சை செய்திருப்பின் அடிவயிற்றில் போடப்பட்ட தையல்களின் காரணமாக குறைந்தது ஆறு மாதங்களுக்காவது உடலுறவில் ஈடுபடுவதைப் பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. கணவரிடம் ஏதாவது காரணம் சொல்லித் தவிர்த்து விடுகிறார்கள். பிரசவ நேரத்தில் ஏற்பட்ட வலி மறைந்து போய்விட்டாலும் அப்போது அனுபவித்த வலியைத் திரும்பத் திரும்ப அவர்களது மனம் நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது. இதுவே இயல்பான உடலுறவு ஆசைக்கு ஒரு மிகப்பெரிய மனத்தடையாக அமைகிறது. 

ஒருவேளை அந்த பயத்தையும் மீறி கணவனின் ஆசைக்கிணங்க உடலுறவு வைத்துக் கொண்டால், உடனே அடுத்த குழந்தை வந்து விடுமோ என்ற பயத்திலும் பல பெண்கள் இந்த காலகட்டத்தில் உடலுறவு கொள்வதைத் தவிர்க்கிறார்கள். குழந்தைப்பேறு முடிந்தவுடன் அடுத்த மாதவிடாய் வருவதற்கு முன் உடலுறவு வைத்துக்கொண்டால் குழந்தை பிறக்காது என்ற நம்பிக்கையில் கலவியில் ஈடுபட்டு அடுத்த சில மாதங்களில் பெண்கள் கருத்தரித்து விடுவதையும் கேள்விப்பட்டிருப்போம். காரணம் ஒருவேளை அப்போது அவர்கள் கருமுட்டைகள் உருவாகும் காலகட்டத்தில் இருந்திருக்கலாம் (Ovulation period). அதை உணராமல் அவர்கள் உறவில் ஈடுபட்டதால் குழந்தை உண்டாகியிருக்கலாம். அதனால் குழந்தை பிறந்த பிறகு மாதவிடாய் தள்ளிப்போகும் நாட்களில் உடலுறவு வைத்துக் கொண்டால் பாதுகாப்பு என்று நினைத்து ஆணுறை அணியாமல் கலவியில் ஈடுபடாதீர்கள்.

மூன்றாவது காரணம், இப்படி அடுத்த குழந்தை உடனேயே கருத்தரித்து விடுவதால், மீண்டும் கணவனுடன் கலவியில் ஈடுபட முடியாத நிலை ஏற்படுகிறது. இந்தக் குழந்தை பிறப்பும் நடந்து முடிந்தவுடன் ஒருவேளை கருத்தடை செய்துகொள்ளாத பட்சத்தில், திரும்ப கணவனுடன் கலவியில் ஈடுபடவே பெண் பயப்படத் தொடங்கிவிடுவாள். நிறைய ஆண்களுக்கு தங்கள் மனைவிகள் கருத்தடை அறுவைசிகிச்சை செய்துகொள்வது (Tubectomy or Tubal sterilisation) ஏதோ ஒரு பெரிய குற்றம் என்ற எண்ணம் இப்போதுமிருக்கிறது. அவர்களாவது குடும்பக்கட்டுப்பாடு  ‘வாசக்டமி’ (Vasectomy) செய்துகொள்கிறார்களா என்றால், அச்செயலைப் பெண்கள் கருத்தடை செய்துகொள்வதை விட இன்னும் பெரிய குற்றமாகக் கருதுகிறார்கள். ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளவதென்பது தங்கள் ஆண்மைக்கே ஏற்படும் இழுக்கு என்று இன்றும் பல ஆண்கள் நினைக்கிறார்கள்.

சொல்லப்போனால், பெண்களுக்குக் கருத்தடை  அறுவைசிகிச்சை செய்வதை விட ஆண்களுக்கு செய்வது எளிது. வாசெக்டமி அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆண்குறியின் விறைப்புத்தன்மை, உடலுறவு கொள்வது போன்றவற்றில் எவ்வித பாதிப்புமிருக்காது. அறுவைசிகிச்சை முடிந்த நாற்பத்தியெட்டு மணி நேரங்களிலேயே உடலுறவு வைத்துக்கொள்ளலாமென்றாலும், மூன்றிலிருந்து நான்கு மாதங்கள்வரை ஆணுறை அணிந்து கலவியில் ஈடுபடுவதே சிறந்தது. அதன் பிறகு முறையான பரிசோதனைகள் மூலம் இப்போது ஆணுறை மற்றும் வேறெந்த பாதுகாப்பு முறைகளுமில்லாமல் கலவியில் ஈடுபடலாமா என்று உங்கள் மருத்துவரிடம் கேட்டறிந்த பிறகு நீங்கள் இயல்பாக உடலுறவு கொள்ளத் தொடங்கலாம்.  எப்போது மீண்டும் குழந்தை வேண்டுமென நினைத்தாலும் எளிதில் மாற்றியமைத்துக்கொள்ளக் கூடியதுதான் ஆண்களுக்கான இந்த அறுவை சிகிச்சை (Reversible surgery). 

அதேபோல் ஒருவேளை பெண்கள் அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என்றால், அப்போது அதன்கூடவே கருத்தடையும் (Tubectomy or Tubal sterilisation) செய்துவிடுவது நல்லதுதான். ஆண்கள் இதற்கு அனுமதிக்காத காரணத்தால், வாழ்க்கை முழுவதுமே கலவியில் ஈடுபடும்போது குழந்தை உண்டாகி விடுமோ என்ற பயத்திலேயே பல பெண்களால் உடலுறவில் பயமின்றி ஈடுபட முடிவதில்லை. இந்த பயம் கலவியில் ஈடுபடுவதற்கு ஒரு மிகப்பெரிய மனத்தடையாகவே அமைந்து விடுகிறது. அதனால், குழந்தை பிறந்த பிறகு, உடலுறவில் ஈடுபடும்போது பெண்ணுறுப்பை இறுக்கிக்கொள்ளத் தொடங்குகிறார்கள். கூடலில் ஓய்வாக ஈடுபடமுடியாமல், எங்கே கணவர் விந்தை வெளியேற்றி விடுவாரோ என்ற பயத்தில் அதைக் கவனிப்பதிலேயே தங்கள் கவனம் முழுவதையும் செலுத்தத் தொடங்குகிறார்கள்.

பெண்களின் இந்த மனத்தடையும் பதட்டமும் கண்டிப்பாக அவள் கணவனையும் தொற்றிக்கொண்டு, அவனையும் முழுமையாகக் கலவியில் ஈடுபட முடியாமல் செய்து விடும். ஆணுறை அணிந்து கொண்டு கலவியில் ஈடுபட பல ஆண்கள் விரும்புவதில்லை. அம்முறையில் தங்கள் துணையுடன் அந்தரங்கமாக நெருக்கமாய் உணர முடிவதில்லை எனச் சொல்கிறார்கள். ஆணுறை அணிவதால் மட்டும் 100% கருத்தரிப்பைத் தடுத்துவிடலாம் என்பதற்கு எந்த வித உத்திரவாதமுமில்லை. அதனால், அப்போதும் பெண்களுக்கு எங்கே தாங்கள் கருத்தரித்து விடுவோமோ என்ற பயம் தொடரத்தான் செய்கிறது.

Coitus interruptus, Pulling out method அல்லது Withdrawal  method என்று சொல்லப்படும் ‘விந்து பாய்வு இடைவிலக்கல் முறையை’ ஒரு கருத்தடை முறையாக நினைத்து பலர் பின்பற்றுகிறார்கள். அதாவது விந்து வெளியேறுவதற்கு முன்பே ஆணுறுப்பை, பெண்ணுறுப்பிலிருந்து முழுவதுமாக வெளியே எடுத்துவிடும் முறை. இம்முறையிலும் கருத்தரித்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதால் இப்படி செய்யும்போதுகூட பெண்கள் மனதளவில் ஓய்வாக இருக்கமுடிவதில்லை.

ஒருவேளை நீங்கள் இம்முறையை பாதுகாப்பான ஒன்றாகக் கருதி உடலுறவில் ஈடுபட்டு வந்தீர்களென்றால், இதிலும் குழந்தை உருவாகிவிட வாய்ப்புள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் கலவியின் உச்சக்கட்டத்தில் விந்துவெளியேறுவதற்கு முன்பே உருவாகும் precum அல்லது pre-ejaculatory fluid என்று சொல்லப்படும் முன் விந்துதள்ளல் திரவத்திலேயேகூட விந்தணுக்கள் வெளியேறி, அதனால் சிலசமயம் கருவுறவும் வாய்ப்புள்ளது. ஆக, குழந்தை பிறந்த பிறகு இப்படி மீண்டும் கருத்தரித்து விடுவோமோ என்ற பதட்டத்திலும் பயத்திலேயுமே தங்கள் கலவியல் வாழ்க்கைக்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைத்துக்கொண்ட பெண்கள் பலர். இந்த பயமும், கலவியல் இன்பம் கிடைக்காததும் சேர்ந்து அவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தையும் உளவியல் சார்ந்த உடல் பிரச்னைகளையும் உருவாக்குகிறது.

இந்தப் பயத்திலிருந்தும் மன அழுத்தத்திலிருந்தும் விடுபடவும் பெண்களின் கலவியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் தவிர்க்கவும் உதவும் கருத்தடை அறுவைசிகிச்சைகளுக்கு, ஒரு பெண் விரும்பியும் அதற்கு அனுமதிக்காமல் தடுப்பது ‘மனித உரிமை மீறலாகும்’. இதை ஆண்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். இப்படியெல்லாம் மனைவிக்கு மன உளைச்சல் தரும் விதிகளைப் போட்டுவிட்டு, பிறகு “குழந்தை பிறந்தபின் என் மனைவிக்கு உடலுறவில் விருப்பமேயில்லாமல் போய்விட்டது…” என்று குறைகூறிக் கொண்டு மற்ற பெண்களிடம் காமம் தேடி அலையும் ஆண்களை என்ன செய்யலாம்?

தனது மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், அவள் மனதளவில் பயமின்றி கூடலை அனுபவிப்பதற்கும் இரட்டைப் பாதுகாப்பு ஏற்பாடாக கணவன் மனைவி இருவருமே கருத்தடை செய்து கொண்ட தம்பதிகளையும் நான் பார்த்திருக்கிறேன். குழந்தைப் பிறப்புக்குப் பிறகு பெரும்பாலான பெண்கள் உடலுறவில் ஆர்வம் குறைந்திருப்பதற்கும், தவிர்ப்பதற்கும் இன்னுமொரு முக்கியமான காரணம் இருக்கிறது. அதுதான் ‘ஆக்ஸிடோனின் சுரப்பு’. 

கூடலுக்கு முன் கணவன் முன்விளையாட்டுக்களில் (Foreplay) ஈடுபடும்போதும், மார்பகங்களை விரல், உதடு மற்றும் நாக்கினால் தூண்டும் போதும், கலவியில் ஈடுபடும் போதும் பெண்ணின் உடலில் ‘ஆக்ஸிடோசின்’ சுரக்கிறது. இந்த சுரப்பிதான் அவளுக்கு மகிழ்ச்சியுணர்வைக் கொடுக்கிறது. கணவன் மனைவி கூடலின்போது சுரக்கும் இதே ‘ஆக்ஸிடோசின்’ குழந்தை பிறந்த பிறகும், தாய்ப்பால் கொடுக்கும் போதும் சுரக்கிறது. கலவியின் போதும், முன்விளையாட்டுக்களின் போதும் சுரக்கும் ஆக்ஸிடோசின் இப்போது குழந்தை பிறப்பிற்குப் பிறகு குறிபாக, பாலூட்டும் காலத்தில் சுரப்பதற்குக் காரணமிருக்கிறது. அப்போது சுரக்கும் ப்ரோலாக்டின் (Prolactin) இரத்தத்திலுள்ள சர்க்கரை மற்றும் சத்துக்களைப் பாலாக மாற்றிகொடுக்க, அந்தப் பாலை மார்பகங்களிலிருந்து வெளியே தள்ள வைப்பதுதன் ஆக்சிடோசினின் வேலை. அதனால், குழந்தைக்குப் பாலூட்டும் போது பெண்ணின் உடலில்  சுரக்கும் ஆக்சிடோசினால், கணவனின் தொடுகைகள் மற்றும் நெருக்கத்தின் மூலம் ஏற்படும் அதே மகிழ்வுணர்வு இதிலேயே  அவளுக்குக் கிடைத்து விடுகிறது. அதனால் கணவனின் நெருக்கம் அவளுக்குத் தேவைப்படுவதில்லை. 

தங்களுக்குத் தேவைப்படவில்லையென்றாலும், குழந்தை பிறந்ததற்குப் பின்பும் ஒரு ஆணுக்குத் தன் மனைவியின் நெருக்கமும் காமமும் தேவை என்பதைப் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் காலக்கட்டத்தில்தான் சில ஆண்கள் அவர்களது குழந்தையை, மனைவியிடமிருந்து தங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருந்த அன்பில் பங்கு போட்டுக்கொள்ள வந்தவர்களைப் போல நினைக்கத் தொடங்குகின்றனர். சில பெண்கள் கலவியில் ஆர்வமில்லாமலிருப்பதற்கு இன்னொரு பெரிய காரணம் ‘வெஜைனிஸ்மஸ் ‘எனப்படும் ‘யோனி தசைச்சுருக்கம்’(Vaginismus). 

சிறுவயதில் நடந்த பாலியல் வன்புணர்வு, கலவி என்றாலே வலிமிகுந்தது என்று பிறர் பேசக்கேட்டு அதனால் ஏற்பட்ட பயம், விருப்பமில்லாத நபருடன் உடலுறவு கொள்ள நிர்பந்திக்கப்படுவது, கட்டாயத் திருமணம், திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ளும் சூழல் ஏற்பட்டால், ஒருவேளை இந்நபர் திருமணம் செய்து கொள்ளாமல் நம்மை ஏமாற்றி விட்டால் என்ன செய்வது என்ற சந்தேகம்… இப்படி நிறைய மனம் சார்ந்த உளவியல் காரணங்களால் கலவியின் போது ஆணுறுப்பு உள்ளே நுழைய முடியாதபடி பெண்கள் இறுக்கிக் கொள்கின்றனர். தங்களது வீட்டைத் தவிர வெளியிடங்களில் உறவு கொள்ளும்போதோ, அல்லது முறைப்படித் திருமணமாகாததற்கு முன் உடலுறவு வைத்துக்கொள்ளும் போது யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயத்திலும் பதட்டத்திலும்கூட இவ்வாறு பெண்ணுறுப்பின் தசைகளைச் சுருக்கிக் கொள்ளும் செயல் நிகழ்கிறது. 

இப்படி  ஒருவேளை உங்கள் மனைவி  பெண்ணுறுப்பின் தசைகளை இறுக்கிக் கொண்டு கலவியில் ஈடுபட உங்களை அனுமதிக்காவிட்டால், தகுந்த பாலியல் மருத்துவர், மகப்பேறு நிபுணர், பாலியல் ஆலோசகர், உளவியல் மற்றும் உறவுகள் மேம்பாட்டு நிபுணர், ஃபிஸியோதெரபிஸ்ட்  இவர்கள் அனைவரையுமே கலந்தாலோசியுங்கள். ஏனெனில், இப்பிரச்னைக்கு ஏதாவது ஒரே ஒரு காரணம் மட்டுமில்லாமல் உளவியல், உடலியல் காரணங்கள் இரண்டுமே சேர்ந்திருக்கக் கூடும்.

வெஜைனிஸ்மஸ் நிலையின் போது பெண்ணுறுப்பின் சுவர்களில் ‘கலவியை எளிதாக்கும் திரவம்’ (Vaginal lubrication)  சுரக்காமல் போகும் நிலை பலருக்கும் ஏற்படும். கலவியின் போது பெண்ணுறுப்பைச் சுற்றியும், க்ளிட்டோரஸைச் சுற்றியுமுள்ள மென் நரம்புகளில் இரத்தம் பாய்வதால் பெண்ணுறுப்பு விரிவடையும் இல்லையா? அதுவும் நிகழாமல் போகிறது.   இப்படி பெண்ணுறுப்பின் தசைகளை இறுக்கிக் கொள்ளும் ‘வெஜைனிஸ்மஸ்’ அடுத்த கட்டமான ‘டிஸ்பெரூனியா’ (Dyspareunia) எனப்படும் பெண்ணுறுப்பில் வலி ஏற்படுத்தும் நிலையை உருவாக்குகிறது. 

‘DYSPARENIA’ என்பது கிரேக்க மொழி வார்த்தை. ‘DYS’ என்றால், ’மோசமான’ என்று அர்த்தம். ‘Pareunia’ என்றால் ‘Bedfellow or mate’. ‘படுக்கைத் துணைவன்’ என்று பொருள். ‘மோசமான படுக்கைத் துணைவன்’ என்ற பொருள்பட அமைந்த ‘Dyspareunia’  நிலையின்போது பெண்ணுறுப்பில் அதீத வலி ஏற்படுவதால் கணவர்களும், ‘இதற்கு என்ன காரணமோ..?’ என்று நினைத்து மனப்பதட்ட நிலைக்கு ஆளாகிவிடுவர். 

பயப்பட வேண்டாம். இந்தப் பிரச்னைக்கு மனோரீதியான காரணங்களும், சில சமயங்களில் பெண்ணுறுப்பில் பாக்டீரியா தாக்குதல் இருப்பதாலும்கூட கலவியின் போது அங்கு வலி ஏற்படலாம். தகுந்த மருத்துவ நிபுணரிடம் சோதனை செய்து கொள்ளுங்கள். ஒருவேளை ‘பாக்டீரியா தொற்று’(Bacterial infection) இருப்பின் ‘நுண்ணுயிர் எதிர்ப்பிகள்’ (ஆன்டி பயாடிக்ஸ் Antibiotics ) மூலம் சரிசெய்து விடலாம். ஒருவேளை உங்கள் சிறுவயதிலோ, திருமணத்திற்கு முன்போ, திருமணமான பிறகோ அல்லது யாராவது சொல்லக் கேட்டோ, ஊடகங்களைப் பார்த்தோ கலவியின் போது பெண்ணுறுப்பில் வலி ஏற்படும் என உங்கள் மனதில் பதிந்திருந்தால் தயவு செய்து அதை மாற்றிக்கொள்ளுங்கள். ஆண், பெண் இருவருமே நல்ல ஆரோக்கியத்துடனிருக்கும் போதும், சரியான முறையில் உடலுறவு கொள்ளும்போதும் கண்டிப்பாக வலி ஏற்படாது. கலவியின் போது வலிப்பதுதான் சரி என்ற மனநிலையை முதலில் மாற்றிக்கொள்ளுங்கள். உடலுறவின் போது வலி ஏற்படுவதென்பது ஒன்றும் கட்டாயம் நிகழ்ந்தேயாக வேண்டிய இயல்பான ஒரு உணர்வல்ல. உளவியல் ரீதியாகவோ, உடலிலோ ஏதாவது பிரச்னை இருந்தால் மட்டும்தான் உடலுறவின் போது வலி ஏற்படும் என்று முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

Photo by Yoann Boyer on Unsplash

அடுத்த காரணம், போதிய முன்விளையாட்டுகளின்றி (Foreplay) கலவியில் ஈடுபடுவது. முன்விளையாட்டுகள் திடீரென படுக்கையில் மட்டும் நிகழ வேண்டுமென்றால் அது சாத்தியமல்ல. இருவருக்கும் போதிய மன நெருக்கமும், நட்பும், காதலும், அன்புமிருந்தால் மட்டுமே முன்விளையாட்டுக்களில் ஈடுபட முடியும். அப்படியொரு உணர்வுப்பூர்வமான நெருக்கத்தில் மட்டுமே பெண்ணுக்கு இன்பத்தைத் தூண்டும் சுரப்பிகளும் பெண்ணுறுப்பின் சுவர்களிலிருந்து கலவியை எளிதாக்கும் திரவமும் சுரக்கத் தொடங்கும். 

கலவியின் போது உடலையும், பெண்ணுறுப்பையும் இறுக்காமல் இயல்பாக, தளர்வாக வையுங்கள். மூச்சை நன்றாக, ஆழமாக சுவாசித்து மனதையும், உடலையும் ஓய்வாக வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் பயம் அதிகமாக, அதிகமாக  தசைகளின் இறுக்கம் அதிகமாகும். தசைகளின் இறுக்கம் அதிகரிக்க, அதிகரிக்க, பெண்ணுறுப்பில் வலியும் அதிகமாகும் என்ற ‘சங்கிலித்தொடர் எதிர்வினைகளை’ப் (Chain reactions) புரிந்துகொண்டு அதற்கேற்ற சிகிச்சைகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளுங்கள். அதற்குமுன் வலுக்கட்டாயமாக பெண்ணுறுப்பின் உள்ளே ஊடுருவ முயற்சி செய்யாதீர்கள். குழந்தை பெற்றுக்கொள்வதை நினைத்து பயப்படுவதும் இப்பிரச்னைக்கு ஒரு காரணமாக அமைகிறது. சிறுவயதில் ஏற்பட்ட பயங்கள் காரணமாக உருவாகும் வெஜைனிஸ்மஸ் ‘முதல் நிலை வெஜைனிஸ்மஸ்’ எனப்படும். இவர்களுக்கு கலவியல் உறவே நிகழ்ந்திருக்காது. ஒருமுறை கூட ஆணுறுப்பு உள்ளே நுழைந்திருக்காத நிலைதான் ‘Primary vaginismus’ எனப்படும் ‘முதல் நிலை வெஜைனிஸ்மஸ்’.

இயல்பாக கலவியல் உறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண்களுக்கு குழந்தை பிறப்பிற்குப் பிறகோ அல்லது வேறு ஏதாவது உடல், மனநலப் பிரச்சினைகளாலோ வெஜைனிஸ்மஸ் ஏற்பட்டால் அது ‘இரண்டாம் நிலை வெஜைனிஸ்மஸ்’ (Secondary vaginismus) எனப்படும். இவையிரண்டுமே சரிசெய்யப்படக்கூடியவைதான்.

இது ஏதோ தனக்கு மட்டுமிருக்கும் ஒரு பிரச்சினையென்றும், ஆணுறுப்பை உள்ளே அனுமதிக்க முடியாததால், தான் ஒரு பெண்ணேயில்லையோ, தனக்குக் குழந்தை பிறக்காதோ என்றெல்லாம் அதிகமாய் யோசித்து பல பெண்கள் பயப்படுகிறார்கள். முதலில் அந்த எண்ணத்திலிருந்து வெளியே வாருங்கள். திருமணமான ஆரம்ப காலகட்டங்களில் பெரும்பாலான பெண்கள் கடந்துவரும் பிரச்னைதான் இது. சிலர் வெளியே சொல்கிறார்கள். பலர் வெளியே சொல்லாமலேயே சரிசெய்து கொண்டு அதிலிருந்து மீண்டு வருகிறார்கள். அதேபோல் இது திடீரென இன்றோ, நேற்றோ ஏற்பட்ட ஒரு நிலை கிடையாது. முதன்முதலில் வெஜைனிஸ்மஸ் பிரச்னை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டது எலிசபெத் ராணி(I) அவர்களுக்குத்தான். அப்போதிருந்தே இதைப்பற்றிய ஆராய்ச்சிகள் செய்து, அதற்கான தீர்வுகளையும் மருத்துவ உலகமும் உளவியல் துறையும் வெளியிட்டுக்கொண்டு தானிருக்கிறது.

மனதளவில் சுருங்கிப்போகாமல், தங்கள் மீதான சுயமதிப்பை இழந்துவிடாமல் பெண்கள் இந்த ‘உளவியல் ரீதியிலான பாலியல் பிரச்சினை’யைக் (Psycho sexual disorder) கடந்து வரவேண்டும். அதற்கு அவர்களது கணவர் துணை நிற்கவேண்டியது அவசியம். 

மேற்குறிப்பிட்டுள்ள இந்த அனைத்துக் காரணங்களிலும், உங்கள் மனைவி எந்தக் காரணத்தினால் உடலுறவில் விருப்பமில்லாமல் கலவியைத் தவிர்க்கிறாள் என்பதைக் கண்டறிந்து, அதை சரி செய்யுங்கள்.

படைப்பு:

செலின் ராய்

காட்சித்தகவலியல் (Visual communication) துறையில் இளங்கலையும்இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் (Mass communication & Journalism) உளவியல் (Psychology) இவையிரண்டிலும் முதுகலைப் பட்டமும் அழகியலில் (Advance Diploma in Beautician) அட்வான்ஸ்டு டிப்ளமோ பட்டமும் பெற்றவர்விரிவுரையாளருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று (UGC – NET) பல கல்லூரிகளில் துறைத்தலைவராகப் பணியாற்றியவர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடுமுறையில் எழுதத் தொடங்கிதமிழில் பல முன்னணி இதழ்களில் எழுதியவர். புத்தகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதியுள்ளார். பிரபல பெண்கள் பத்திரிக்கைக்கு 21 வயதிலேயே ஆசிரியரான போது, ‘ The Youngest Editor of Tamilnadu’ என ‘The Hindu’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டது53 ஆடியோ மற்றும் வீடியோ சிடிக்களை பல தலைப்புகளிலும் வெளிட்டுள்ள இவர் எழுதுவதுடன் உறவுச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான பல பயிலரங்குகளை தமிழகமெங்கும் நடத்தி வருகிறார்இவருக்கு மனித உரிமைக் கழகம் மனித நேயத்துக்கான விருது வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.