சவால்கள் இல்லாத மனிதரே இல்லை. நாம் அனைவரும் சிறியதோ பெரியதோ அவரவர் சூழ்நிலைக்கேற்ப ஏதோ ஒரு சவாலை எதிர்கொண்டுதான் இருக்கிறோம்.

சவாலே இல்லாத மனிதரெனில் அவர் இன்னும் வாழ்க்கையை வாழவே இல்லை என்றுதான் பொருள்.

சவாலை சுவாரசியமாகப் பார்க்கும் ஒருவர், அதைத் சந்தோஷ சிலிர்ப்புடன் எதிர்கொள்கிறார். வெற்றியோ தோல்வியோ எது கிடைத்தாலும் அதை எதிர்கொண்ட அனுபவமே அவருக்கு இன்பம்தான்.

அவர் தான் பெரியதாகவும் சந்திக்கும் சவால் சிறியதாகவும்தான் நினைப்பர். இந்த மனநிலையில் ‘எதை எதையோ செஞ்சோம் இதைச் செய்ய மாட்டோமா’ என்கிற உத்வேகத்துடன் செயல்படுவர். அந்த அனுபவம் கொடுத்த அறிவும் சேர்ந்து அவர் மேலும் சவால்களைச் சந்திக்க சந்தோஷமாகத் தயாராகிறார். வாழ்வே கொண்டாட்டம்தான். அங்கே சவால்கள் வரம்.

சவாலைப் பிரச்னையாகப் பார்க்கும் ஒருவர், அதை வெற்றி கிடைக்குமா கிடைக்காதா என்கிற சந்தேகத்துடனும் பயத்துடனும் எதிர்கொள்கிறார். இந்த மனநிலையில் நாம் மிகச் சிறியவராகவும், பிரச்னை பெரிதாகவும் தோன்றும். நம்மைவிடப் பலமான எதிரியிடம் கண்டிப்பாகத் தோற்போம் என்கிற மனநிலையில் தோல்விக்கே வாய்ப்பு அதிகம். அதையும் மீறி ஜெயித்தால் அவர் அதிர்ஷடத்தையோ கடவுளையோதான் காரணம் சொல்லுவாரேயன்றி தன் திறமையை அல்ல. அப்போது ஒவ்வொரு சவாலும் மிகப்பெரிய மன அழுத்தத்தைத் தரும். மன அழுத்தம் நம் சிந்திக்கும், செயல்படும் திறனை மொத்தமாக அழித்துவிடும். வாழ்வு முழுவதும் போராட்டம்தான். சவால்கள் சாபம்தான்.

எப்படியும் சவால்கள் இல்லாமல் வாழ முடியாதெனில் அதைக் கொண்டாட்டமாக எப்படி எதிர்கொள்வது, வரமாக எப்படி மாற்றிக்கொள்வதென யோசிப்பதே புத்திசாலித்தனம்.

சரி, சவாலை எப்படிச் சமாளிப்பது?

முதல் படி, சவாலின் வேரைக் கண்டறிதல். ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் காய்ச்சலுக்கான மருந்தளிப்பது தீரவாகாது, காய்ச்சலுக்கான காரணத்தைச் சரி செய்யும் வரை காய்ச்சல் திரும்பத் திரும்ப வரும். எந்தச் சவாலுக்கும் ஓர் எளிமையான தீர்வு அதன் வேரைக் கண்டறிவதிலேயே கிடைக்க வாய்ப்பதிகம்.

எல்லாச் சவாலுக்கும் தீர்வுண்டு. அதை எதிர்கொள்ளாமல் இருப்பதால் தானாகத் தீரப்போவதில்லை. தள்ளிப் போடுவதால் சிக்கலாகும் வாய்ப்புதான் அதிகமாகும்.

அதைத் தைரியமாக எதிர்கொள்ளத் தீர்மானிப்பது அடுத்த படி.

எந்த ஒரு சவாலையும் தீர்க்க, நாம் எளிமையான ஒரு முறையைப் பார்ப்போம்.

ஏழு படி முறை ( Seven step problem solving )

   1. Identify / கண்டறிதல் 
   2. Explore / ஆராய்தல்
   3. Set goals / என்ன விளைவை எதிர்பார்க்கிறோம் என்கிற தெளிவு
   4. Checking out all the options / எல்லா வழிமுறையையும் ஆராய்தல்.
   5. Select / சரியான வழிமுறையைத் தேர்ந்தெடுத்தல்.
   6. Implement / தேர்ந்தெடுத்த வழியைச் செயல்படுத்துதல்
   7. Evaluate / செயல்படுத்திய திட்டத்தின் பயனை

சிறப்பாகச் சவாலை ஏற்க இன்னும் சிலவற்றை மனதில் இருத்திக்கொள்ளலாம்.

எந்தச் சவாலையும் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொன்றாகச் சரி செய்யலாம். ஒவ்வொன்றாகச் சரி செய்ய செய்ய மனதிற்கு ஊக்கம் வரும். நம் மீது நம்பிக்கையும் கூடும்.

எல்லாவற்றையும் பாரம்பரிய முறையில் கையாளாமல், புதிய கோணங்களில் அணுகும்போது சுவாரசியம் கூடும், சிக்கல்கள் சுலபமாகத் தீரும்.

சில நேரம் பின்னோக்கித் திட்டமிடல்கூட மிகுந்த பயன் தரும். இலக்கை மையப்படுத்தி அங்கிருந்து சவாலின் மையத்திற்குத் திட்டமிடலாம்.

எப்படியும் நாம் சவாலைச் சந்திக்கப் போகிறோம், அதைச் சரியான அணுகுமுறையில், நிதானப்போக்குடன், ஓய்வான மனதுடன் செய்யும்போது. பதறாத காரியம் நிச்சயம் சிதறாது.

வாங்க, சவாலைச் சமாளிக்கலாம். வாழ்வைக் கொண்டாடலாம்!

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.