வழக்கம் போல் மெட்ரோவில் ஏறி அமரும்போது… பல படிகள் ஏறி, நடைப்பாலத்தில் விரையும் கூட்டத்தில் தூங்கும் நாய்கள், பிச்சைக்காரர்கள் இவர்களைக் கடந்து மீண்டும் படிகளில் ஏறி வர வேண்டியிருந்தாலும் அந்தேரியிலிருந்து டி.என் நகருக்கு வர வேண்டிய முக்கால் மணி நேரத்தை ஐந்து நிமிடங்களாக்கிய மெட்ரோவுக்கு நன்றி கூறினாள்.
கடல் மேல் போகும் வாடகை வாகனங்கள் வரப் போகிறது என்கிறார்கள். வாடகையில் போகச் சிறு விமானங்களும் வரலாம் கடற்கரையருகே. என்ன வந்தால் என்ன இன்னும் பெண்கள் வெண்புரவியில் வரும் அரசகுமரானகத்தான் வருங்காலக் கணவனைப் பற்றி நினைக்கிறார்கள். நீள் துயிலில் இருக்கும் ராஜகுமாரியை ஒரு முத்தத்தால் எழுப்பும் ராஜகுமாரன். அவளுக்கு அப்படியில்லை.
சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் அம்பை அவர்களின் ‘சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பார்வை’ என்ற சிறுகதை தொகுப்பிலிருந்த எடுத்த வரிகள்தான் இவை. அவ்வரிகளில் குறிப்பிட்டது போலப் பெண்களின் கனவுகளில் ஓயாமல் வரும் ராஜகுமாரர்கள் பற்றித்தான் இந்தத் தலைப்பில் பேசப் போகிறோம். இந்த ராஜகுமாரர்கள் எங்கிருந்து வந்து பெண்களின் கனவுகளுக்குள் குதித்தார்கள். நீள்துயில் களைத்தார்கள். நிம்மதியைக் கெடுத்தார்கள்.
ஒரு வேளை பெண் குழந்தைகளின் கதைகளான சிண்ட்ரெல்லா, ஸ்லீப்பிங் பியூட்டி, பியூட்டி அன் தி பீஸ்ட் போன்றவற்றில் வரும் காக்கும் இளவரசர்களின் வெவ்வேறு பரிமாணங்கள்தாம் இவர்களா? அப்போதே பெண் குழந்தை மனங்களில் புகுத்தப்பட்ட விஷமங்களா இவை எல்லாம்?
யாருக்குத் தெரியும், இப்படிக் கதைகளில் வந்து காப்பாற்றிய இந்த அழகிய இளவரசர்களும் ராஜகுமாரர்களும்தாம் நாளடைவில் வளர்ந்து காவு வாங்கும் மில்ஸ் அன் பூன் நாயகர்களாகக் கொடூர அவதாரம் எடுத்திருப்பார்களாக இருக்கலாம்.
ஆமாம். யார் இந்த மில்ஸ் அன் பூன் நாயகர்கள்? முதலில் மில்ஸ் அன் பூன் என்றால் என்ன?
வாருங்கள். இந்த கேள்விக்கான விடையிலிருந்து கட்டுரையைத் துவங்குவோம்.
ஜெரால்ட் ரஸ்க்ரோவ் மில்ஸ் மற்றும் சார்லஸ் பூன் என்பவர்களால் 1908 இல் நிறுவப்பட்டதுதான் மில்ஸ் அன் பூன் என்கிற பதிப்பக நிறுவனம். அனைத்து வகையான நாவல்களையும் வெளியிட்டுக் கொண்டிருந்த இந்நிறுவனம் 1930 களில் பெண்களுக்கான எஸ்கேபிஸ்ட் காதல் புனைகதைகளை அதிகளவில் பதிப்பிக்க ஆரம்பித்தார்கள்.
அதாவது பெரும் மந்தநிலை (depression year 1929-1939) கடுமையான உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியில் பாதிக்கப்பட்ட மக்கள், அத்தகைய மோசமான சூழ்நிலையிலிருந்து தப்பிக்கும் உபாயமாகக் காதல் புனைகதைகளை நோக்கி நகர்ந்தார்கள். நூலகங்களிலிருந்து தேடி எடுத்து வாசிக்கத் தொடங்கினார்கள்.
அப்போதிலிருந்து மில்ஸ் அன் பூன் நிறுவனமும் காதல் புனைவுகளில் கவனம் செலுத்த முடிவு செய்தது. இது மிகப் பெரியளவில் வெற்றியும் பெற்றது. இத்தகைய தலைப்புகள் ஆரம்பத்தில் வாராந்திர, இரண்டு பைசா நூலகங்கள் மூலமாக விற்கப்பட்டன. அவற்றின் கெட்டி அட்டைகள் மற்றும் தனித்துவமான தோற்றத்தின் காரணமாக அவை ‘பிரவுன் புக்ஸ்’ என்று அழைக்கப்பட்டன.
1960களில் காதல் நாவல்களுக்கு வலுவான சந்தை இருக்கும் என்பதைக் கணித்து விட்டவர்கள், இன்னும் அவர்களின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இருப்பினும் அது புத்தகத்தின் விலையைப் பொறுத்தது. ஆகையால் குறைவான விலைக்குத் தங்கள் நாவல்களை வாசகர்களிடம் சேர்க்கக் கெட்டி அட்டைகளிலிருந்து மெல்லிய காகித அட்டைகளில் புத்தகங்களை அச்சிட்டு வெளியிடத் தொடங்கினார்கள். மேலும் கண்களைக் கவரும் அழகான காதல் ஜோடிகளைக் கொண்ட அட்டைப் படங்களை வடிவமைத்தார்கள். இது போன்ற உத்திகள் மூலமாக வாசகர்களைக் கவர்ந்து விற்பனைகளையும் பெருக்கினார்கள்.
இரண்டாம் உலகப் போரின் போது, தங்களுடைய புத்தகங்களை முன்பதிவு செய்து வாங்கலாம் என்கிற புதுமையான சந்தைப்படுத்தல் உத்திகளை அறிமுகம் செய்தார்கள்.
போரின் காரணமாக மக்களிடம் பணப்பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது. இருப்பினும் இத்தகைய விளம்பர அறிவிப்பினால் அவர்கள் நாவல்கள் எப்போதும் புத்தகக் கடைகளில் கையிருப்பில் இருப்பதற்கான உத்தரவாதத்தை உறுதி செய்தது. முன்பதிவு செய்யாதவர்களுக்கு நாவல்கள் கிடைக்காமல் போனதில் மில்ஸ் அன் பூன்களுக்கான டிமாண்ட் அதிகரித்தது.
அது மட்டுமல்லாது அவர்கள் நாவல்களின் விற்பனையின் கணிசமான லாபம் ஏற்றுமதி சந்தைகளிலிருந்து பெறப்பட்டது. குறிப்பாக இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ் நாடுகள். 1976இல் ஆசியா பசிபிக் பகுதிகளில் விற்பனைகளைக் கையாள ஆஸ்திரேலியாவில் அலுவலகம் நிறுவினார்கள்.
மேலும் 1989ஆம் வருடம் கிழக்கு ஜெர்மனியில் பெர்லின் சுவரின் வீழ்ச்சியின் போது அங்குள்ள பெண்களுக்கு மில்ஸ் அன் பூன் நாவல்களின் ஏழு லட்சம் இலவசப் பிரதிகளை வழங்கினார்கள். அடுத்த நான்கு மாதங்களில் ஜெர்மனி, போலாந்து, ஹங்கேரி போன்ற மத்திய ஐரோப்பியப் பகுதிகளில் இவர்கள் நாவல்கள் லட்சக்கணக்கான டாலர்களில் லாபம் ஈட்டியது.
2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆண்டுக்கு 20 கோடி மில்ஸ் & பூன் நாவல்கள் உலகளவில் விற்கப்பட்டன, ஐக்கிய ராஜியத்தில் சராசரியாக ஒவ்வொரு 6.6 வினாடிகளுக்கும் ஒரு பேப்பர்பேக் விற்கப்படுவதாகவும் அவற்றில் மில்ஸ் & பூன் அந்த ஆண்டில் பிரிட்டிஷ் காதல் புனைகதை சந்தையில் கிட்டத்தட்ட முக்கால் பங்கைக் கொண்டிருந்தது என்றும் குறிப்பிடுகிறது..
மில்ஸ் & பூனின் கூற்றுப்படி, ஓர் எழுத்தாளர் ஒரு புத்தகத்திற்கு 2 கலட்சம் முதல் 31 லட்சம் வரை ராயல்டி பெறுகிறார் என்றும் கூறப்படுகிறது.
2012 ஆம் ஆண்டு நிலவரப்படி, அச்சிடுவதைவிட அதிகமாக மின் புத்தகங்களை விற்றனர். டிஜிட்டல் வருவாய் CAN$16.1 மில்லியன் என அவர்களது தாய் நிறுவனமான Torstar தனது 2010 அறிக்கையில் மின் புத்தகங்களின் வலுவான வளர்ச்சியை மேற்கோளிட்டுள்ளது.
எலக்ட்ரானிக் பதிப்பகத்திற்கு ஆதரவான மற்றொரு காரணியாகப் பார்க்கப்படுவது அட்டை படம் இல்லாதது. வெளியீட்டாளருக்கான டிஜிட்டல் மற்றும் சந்தைப்படுத்தல் இயக்குநர் டிம் கூப்பர், “டிஜிட்டல் வாசிப்பின் முக்கிய அம்சம் என்னவென்றால், நீங்கள் என்ன படிக்கிறீர்கள் என்று யாருக்கும் தெரியாமல் இருப்பது” என்று குறிப்பிடுகிறார்,
இந்தக் கருத்தைப் படித்த போது என்னுடைய கல்லூரிக் காலம் நினைவுக்கு வருகிறது. இளம் பெண்களின் உலகத்தில் மில்ஸ் அன் பூன்களுக்கு என்று எப்போதும் தனி இடம் உண்டு. எனக்கு மில்ஸ் அன் பூன்கள் அறிமுகம் இல்லை என்றாலும் அக்கா அந்நாவல்களின் தீவிர வாசகியாக இருந்தார். மிகவும் விருப்பமாக அத்தகைய நாவல்களை வாசிப்பார்.
அக்கா இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த அதே கல்லூரியில்தான் நான் முதலாம் ஆண்டு சேர்ந்தேன். ஆதலால் இருவரும் ஒன்றாகப் பேருந்தில் பயணம் செய்த சமயங்களில் அக்கா மில்ஸ் அன் பூன் நாவல்களை நூலகங்களிலிருந்து எடுத்து வந்து வாசிப்பதைப் பார்த்ததுண்டு. அத்தகைய நாவல்களைப் படித்து அவள் கதைகளாகச் சொல்லி நான் அவற்றை எல்லாம் ஆர்வமாக கேட்டதும் உண்டு.
அதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அக்காவின் கையில் இருக்கும் இந்த நாவல்களின் மேல் அட்டைகள் நாளிதழ்கள் மூலமாக மூடி மறைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் நூலகங்களிலிருந்து வாங்கி வரும் போதே அக்கா அட்டை போட்டுவிடுவார்.
அந்த அட்டையின் ரகசியம் ஆரம்பத்தில் எனக்குத் தெரியாது. பின்னர் அக்காவிடமே கேட்ட போதுதான் பெரும்பாலான மில்ஸ் அன் பூன் நாவல்களின் அட்டைகள் சற்றே விரசமான வகையில் இருப்பதும் அதனை அட்டை போட்டு மறைப்பதற்கான காரணமும் தெரிய வந்தது.
மற்றபடி நானும் சில முறை இத்தகைய நாவல்களை வாசிக்க முயன்றதுண்டே ஒழிய முழுமையாக வாசித்ததில்லை. அதற்கு பெரிய காரணம் ஒன்றுமில்லை. அந்த வயதில் அக்கா அளவுக்கு எனக்கு ஆங்கிலப் புலமை இல்லை. அவ்வளவுதான்.
இதுவரையில் அந்த நிறுவனத்தின் வரலாறு மற்றும் வளர்ச்சியைப் பார்த்தோம். இப்போது மில்ஸ் அன் பூன் உருவாக்கிய பிரபலமான கதைக்கருக்களுக்கு வருவோம்.
Broad-shouldered and impossibly handsome, Slightly tanned skin. Six feet plus. Angular cheekbones, raw and masculine ,dark and dangerous. formidable man in every respect; wealthy, powerful and with a spectacularly handsome profile, night black hair, and Heavy lidded dark eyes.
இப்படிதான் பெரும்பாலான மில்ஸ் பூன் நாயகர்கள் வர்ணிக்கப்படுகிறார்கள். அதாவது ஆறடிக்கும் அதிகமான உயரம். கம்பீரமான உருவம். அகண்ட தோள்கள். கட்டமைப்பான உடல்வாகு. பெரிய பணக்காரன்.
பணக்காரர்கள் என்றால் எங்க வூட்டுப் பணம் உங்க வூட்டுப் பணம் இல்லைங்க. கணக்கிலடங்கா பணம் படைத்தவன். வசதியானவன். இளம் வயதிலேயே அவன் பெரிய வியாபார காந்தம். ஒரு கண்ணசைவில் எல்லாரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனாக இருப்பான். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அவன் ஓர் ஆல்பா ஆண். அப்படிதான் நம்ப வைக்கப்படுகிறது.
அந்த ஸோ கால்ட் ஆல்பா ஆண் நாயகியை அடித்தாலும் உதைத்தாலும் அசிங்கப்படுத்தினாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் வாசகிகள் அவனை ரசிப்பார்கள். ஆராதிப்பார்கள். பெண்களின் இந்தக் கண்மூடித்தனமான ரசனைதான் மில்ஸ் அன் பூன் நிறுவனத்தின் வெற்றிக்கான காரணம்.
சரி. அக்கதைகளின் நாயகிகள் எப்படி இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? அழகு என்றால் அப்படி ஓர் அழகு. ஆனால், அவள் ஓர் அப்பாவி ஜீவன். சிண்ட்ரெல்லா கதையில் கேள்விப்பட்டிருப்பீர்களே! உடல் நிலை சரி இல்லாத பாட்டி அல்லது நன்றாக வாழ்ந்து நொடிந்து போன குடும்பத்தின் வாரிசு, கடனாளியான தந்தை, கொடுமைக்கார சித்தி அத்தை என மில்ஸ் அன் பூன் நாயகிகள் பெரும்பாலும் பாவப்பட்ட ஜீவன்கள்தாம்.
நாயகிகளின் வாழ்க்கை நிலை இப்படி அவலமான பாத்திரங்களாகப் படைக்கப்படக் காரணம் வேறொன்றும் இல்லை. ஏதோ ஒரு வகையில் நாயகனை அவள் சார்ந்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அவன் கட்டுப்பாட்டின் கீழ் அவள் அடிபணிந்து வாழ வேண்டும். பச்சையாகச் சொல்ல வேண்டுமென்றால் அவன் காலுக்கடியில் கிடக்க வேண்டும். ஆனால் ஆரம்ப பார்வையிலேயே நாயகியின் அழகால் நாயகன் ஈர்க்கப்பட்டிருப்பான். இருப்பினும் அவளை மோசமாக வெறுப்பான். அதற்கு அவனுக்கு ஏதாவது ஒரு ஃப்ளேஷ் பேக்குகள் இருக்கும். அவனது அம்மா ஒழுக்கமில்லாதவள். நாயகியின் அப்பா அவனுக்கு அநியாயம் செய்திருப்பார். இப்படியாக.
இதனால் நாயகியை நாயகன் மிகவும் மோசமான முறையில் நடத்துவான். அவளின் உணர்வுகளை மருந்துக்குக்கூட மதிக்க மாட்டான். மேலும் அவளைக் கொடுமைப்படுத்துதல், உடலுறவுக்குப் பலவந்தப்படுத்துதல் போன்ற அறமற்ற செயல்கள் அத்தனையும் செய்வான். இறுதியில் திருந்திவிடுவான். நாயகியும் மன்னித்து விடுவாள். சில நேரம் அத்தகைய மன்னிப்புகூட தேவை இருக்காது. ஈருடல் ஓருயிராகக் கலந்து விடுவார்கள். பின்பு அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்கிற இளவரசிகள் கதைகள் போல முடிந்துவிடும்.
இதுதான் பெரும்பாலான மில்ஸ் அன் பூன்களின் கதைக்கருக்கள். பெயர்கள் மாறுபடலாம். ஆனால் பணக்கார நாயகன் பாவப்பட்ட நாயகி டெம்ப்ளேட்கள் மாறுவதில்லை. மாற்றப்படுவதும் இல்லை.
மில்ஸ் அன் பூன் எழுத்தாளர்களுக்கு எந்த வரையறைகளும் இல்லாவிட்டாலும் அவர்கள் அதிக முக்கியத்துவம் தருவது வாசகர்களின் விருப்பத் தேர்வுகளுக்குத்தான். ஆதலால் நூறாண்டுகளுக்கும் மேலாக இவர்கள் செக்கு மாடு சுற்றுவது போல இதே கதைக்கருவை வேறு வேறு விதமாக எழுதிப் பதிப்பித்து புத்தகங்களாக வெளியிட்டு வருகிறார்கள்.
இந்தக் கதாபாத்திரங்கள் காலாவதியானவை மற்றும் நவீன படைப்புகளுக்குப் பொருத்தமற்றவை என்று வாதிட்ட போதும் மில்ஸ் & பூன் வெளியீட்டாளர் தங்கள் வாசகர்களின் ரசனைகள் மற்றும் ஆர்வங்களைப் பின்பற்றுவதில் கவனமாக இருக்கிறார்கள்.
தற்போதைய மாடர்ன் மில்ஸ் அன் பூன் கதாநாயகிகள் கொஞ்சம் மாற்றம் பெற்றுள்ளனர். பெண்ணியச் சிந்தனையுடன் காட்டப்படுகின்றனர். இருப்பினும் கதாநாயகர்கள் இன்னும் மேலாதிக்கம் மிக்கவர்களாகவும், பெண் விரோதிகளாகவும் விவரிக்கப்படுவது எந்த வகையிலும் மாறவும் இல்லை. மாற்றப்படவும் இல்லை. அதுவும் நவீன நாவல்களில், அரபு ஷேக்குகள், இத்தாலிய கோடீஸ்வரர்கள், கிரேக்க அதிபர்கள் மற்றும் இளவரசர்கள் என்று நாயகர்களின் பின்புலங்கள் இன்னும் அதிக பலம் வாய்ந்தவையாகவே எழுதப்படுகின்றன. இவை எல்லாமே ஏதோ ஒரு பெண் வாசகியின் கற்பனையைப் பிரதிநிதித்துவப்படுத்தியே எழுதவும் விற்கவும் படுகிறது என்பதை மறுக்க முடியாது. ஒரு வகையில் இதன் மூலப் பிரச்சனையும் இதுதான்.
இந்த வகை நாவல்களை ரசித்துப் படிக்கும் பெண்கள், தங்கள் ஆழ்மனங்களில் கொடுமைப்படுத்தப்படுவது, ஆதிக்கம் செலுத்தி அடிமையாக வைத்திருக்கும் பிற்போக்கான விருப்பங்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
“இது போன்ற காதல் கதையை நம்புவது பலரின் குடும்ப வாழ்க்கைக்குச் சிக்கலாக முடிகிறது- பின்னர் அவர்கள் அந்தச் சிக்கலை எங்கள் ஆலோசனைக்குக் கொண்டு வருகிறார்கள்” என்று உளவியலாளர் சூசன் குயிலியம் மில்ஸ் & பூன் நாவல்களை உறவு முறிவுகளுக்கான காரணமாகச் சுட்டுகிறார்.
குடும்பத்தைக் கெடுக்கும் இந்த மில்ஸ் அன் பூன் நாயகர்கள்தாம் குடும்ப நாவல் உலகத்தின் செல்லப்பிள்ளைகள். பிரபலமான ஆன்ட்டி ஹீரோ நாவல்கள். இவர்கள் யாரும் ஆறடிக்கும் ஓர் அங்குலம்கூட உயரத்தில் குறைய மாட்டார்கள். பெரும்பாலும் ஆறடிக்கும் மேல்தான். அதே அகண்ட தோள்கள், அதே கம்பீரம், அதே கட்டமைப்பான உடல். இந்த விவரணைகள் இப்படியாக ஒரு பக்கத்திற்கு நீள்கிறது. நீள்கிறது. நீண்டு கொண்டே இருக்கிறது.
அந்த வரிசையில் A powerful infactuation with his modern day greek god. அதாவது நாயகன் நவீன கிரேக்கக் கடவுளைப் போன்று இருப்பானாம். அவன் மீது நாயகி தீவிரமான ஈர்ப்பு கொண்டிருக்கிறாள் என்கிற மில்ஸ் அன் பூனின் கிரேக்க நாயகர்களையும் விட்டு வைக்காமல் அதையும் சுட்டு ‘கிரேக்கச் சிற்பம்’ என்கிற ஒரு புது சொல்லைக் கண்டுபிடித்து குடும்ப நாவல் நாயகனை வர்ணிக்கப் பயன்படுத்தி வருகிறார்கள் சில குடும்ப நாவலாசிரியர்கள்.
எனக்கு இதில் புரியாத விஷயம் என்னவென்றால், இந்தியப் பாரம்பரியம் கொண்ட ஒருவன் எதற்குச் சம்பந்தமே இல்லாமல் கிரேக்கச் சிற்பம் போலிருக்க வேண்டும் என்பதுதான்.
ரைட்டு! இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் விடைகள் கிடைக்காது.
ஒரு வகையில் இந்தக் குடும்ப நாவல் ஆன்ட்டி ஹீரோக்களுக்கு ஆதிமூலம் மில்ஸ் அன் பூன் நாவல்கள்தாம் என்றாலும் இங்கே ஆழமாக இவ்வகை கதைக்கருக்களுக்கு அடித்தளமிட்டது என்னவோ நாவலாசிரியர் ரமணி சந்திரன்தான்.
நாயகியைக் கடத்துவது, நாயை விட்டுக் கடிக்க விடுவது, கையை உடைப்பது, பலவந்தப்படுத்துவது, கட்டாயப்படுத்தி உடலுறுவு வைத்து கொள்வது, தந்தையின் செயலுக்காக மகள்களை மணம் முடித்துப் பழிவாங்குவது, இன்னும் இன்னும் இது போன்று நிறைய வன்கொடுமைகள் செய்த ரமணி சந்திரன் நாயகர்களைக் குடும்ப நாவல் உலகம் எப்படி பார்த்தது?
அவர் எழுத்தின் தாக்கம் இன்றளவும் இங்குள்ள பெண்கள் எழுத்தில் பிரதிபலிப்பதற்கான காரணம் என்ன?
(தொடரும்)
படைப்பாளர்:
மோனிஷா. தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இன்று வரையில் இணையத்தில் 27 நாவல்களை எழுதி முடித்திருக்கிறார். அவற்றில் இருபது நாவல்கள் புத்தகமாகப் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.
பெண்ணியம் சார்ந்த கருத்துகளும் சூழலியல் சார்ந்த விழிப்புணர்வுகளும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன.
Super pa antihero ah en ippadi dan irukanum num ponnumga avana dan virumbi tholaika enna reason nu teriala pa athuve oru ponnu konj thimir thenavetta irunda ponnumga kuda ethukala aduvum puriyala enaku ponnumga thimir ah irunda pudikum pa
அருமை.இது போன்ற காரணங்களால் தான் ரமணி சந்திரன் வகையறா கதைகளை பிடிக்காமல்போனது.
பார்பரா கார்ட்லண்ட் விக்டோரியா ஹோல்ட் இருவரது நாவல்களும் வாசித்ததுண்டு. இவை மில்ஸ் அன்ட் பூன் அச்சிட்டதா எனத் தெரியவில்லை. ஆனால் கதாநாயகன் கதாநாயகி கதைக்கரு எல்லாம் அப்படியே இங்கு சொல்லியிருப்பது போலத்தான்.
இன்னும் சொல்வதெனில் பார்பரா கார்ட்லண்ட் கதைகள் அச்சு அசல் ரமணிசந்திரன் கதைகள் போலவே இருப்பதாகக்கூட வியந்திருக்கிறேன். நெடுநெடுவென்ற உயரத்துடன் கூர் விழிகளும் அழுத்தமான முகபாவமும் கொண்ட கதாநாயகன் , சிவந்த ஒல்லியான இளம் வயதுடைய அகண்ட விழிகள் கொண்ட கதாநாயகி. இதேதான் எல்லாக் கதைகளிலும்.
எஸ் நீங்க சொல்ற அதே குற்ற சாட்டு ரமணி சந்திரன் நாவல் நாயகர்கள் மீது எனக்கு இருக்கு… சைக்கோ நாயகர்கள் அவர்கள்…