ரமணிசந்திரனுக்குப் பிறகு வந்த காஞ்சனா ஜெயதிலகர், உமா பாலகுமாரன், ஜெய்சக்தி, முத்துலஷ்மி ராகவன், உஷா ராணி, ஸ்ரீ கலா இன்னும் இது போன்ற நிறைய பேரின் எழுத்திலும் ஆன்ட்டி ஹீரோக்களின் தாக்கம் இருந்தன.

ஆறடி உயரமான பணக்கார ஆளுமை மிக்க ஆண்களை நாயகர்களாகக் கொண்டு கதை எழுதினார்கள். நாயகர்கள் குணாதிசயங்கள் மாறுபட்டு இருந்தாலும் அவர்களின் ஆளுமையான தோற்றமும் பணகாரத்தனங்களும் மாறவில்லை. ஏன் இன்று வரையில் கடத்துதல், கொடுமைப்படுத்துதல், பழிவாங்குதல், பலாத்காரம் செய்தல் என்று அச்சு அசல் ரமணி அம்மாவின் நாயகர்களை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களும் இங்கு உண்டு. இன்றும்கூட கொடுமைப்படுத்தும் நாயகர்களுக்குத்தான் குடும்ப நாவல் உலகத்தில் அதிக மவுசு.

சரி. ரமணிசந்திரனுக்கு முன்பு எழுதிய பெண்களின் நாவல்களில் இது போன்ற பணக்கார நாயகன், ஏழை நாயகிகள் கான்ஸப்டே இல்லையா என்று கேட்டால், இருந்திருக்கிறது. குடும்ப நாவல்களுக்கு முன்பும் இந்த வகை நாயகன் நாயகிகள் வைத்துக் கதைகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால், அத்தகைய களங்கள் கையாளப்பட்ட விதமே வேறு.

உதாரணத்திற்கு லக்ஷ்மி எழுதிய ‘பெண் மனம்’ நாவலை எடுத்துக்கொள்ளலாம். இந்த நாவலில் வரும் ஜெகநாதனும் இதே ஆன்ட்டி ஹீரோ வகைதான். ஊரிலேயே மிகப் பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பொறுப்பின்றி ஊர்சுற்றுவதும் வரையறை இல்லாமல் பெண்களுடன் பழகுவதும் என்று திமிரும் ஆதிக்கம் பிடித்தவனாக இருக்கும் இவன், பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் சந்திரா என்கிற சாதாரணக் குடும்பத்துப் பெண்ணைப் பார்த்துக் கவரப்படுகிறான். காதல் வயப்படுகிறான்.  

அவளைத் திருமணம் செய்ய விரும்பும் ஜெகநாதன் சூழ்ச்சி செய்து அவளைத் தனியாகச் சந்திக்கத் தன் வீட்டிற்கு வரவழைக்கிறான். இதனால் ஊருக்குள் சந்திராவின் பெயர் கெட்டுப் போகிறது. வேறு வழி இல்லாமல் குடும்ப கௌரவத்திற்காக அவள் ஜெகநாதனை மணக்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.

மணந்த பிறகும் இருவருக்கும் இடையிலும் சுமுகமான உறவு ஏற்படவில்லை. ஜெகநாதனும் அவளை வற்புறுத்தவில்லை. குடும்பத்தினர் முன்பு நெருக்கமாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் அறைக்குள் தனித்தனியாகத்தான் வாழ்கிறார்கள். இப்படியாக நாள்கள் கடந்து போக, மெது மெதுவாக ஜெகநாதனிடம் ஏற்பட்டிருக்கும் நல்ல மாற்றங்களைச் சந்திரா கவனிக்கிறாள். அவன் மீது அவளுக்கும் நேசம் ஏற்படுகிறது.

இந்த நிலையில் திடீரென்று ஒருநாள் பணம் கையாடிவிட்டதாக ஜெகநாதன் கைது செய்யப்படுகிறார். தந்தைக்கோ மகன் மீது நம்பிக்கையில்லை. அவனுடைய பழைய மோசமான செய்கைகளைச் சுட்டிக்காட்டி மகனுக்கு உதவ மறுக்கிறார்.

ரமணி சந்திரன்

இதனால் சந்திராவே முன்வந்து கணவனைக் காப்பாற்றக் களத்தில் இறங்குகிறாள். தன்னுடைய நகைகளை எல்லாம் விற்று ஒரு பெரிய வக்கீலை ஏற்பாடு செய்கிறாள்.

ஐந்து மாதம் கழித்து ஜெகநாதன் குற்றமற்றவன் என்று தீர்ப்பாகிறது. சந்திரா அகமகிழ்கிறாள். மனைவி தன்னை இக்கட்டான நிலையில் காப்பாற்றியதில் ஜெகநாதனுக்கு நன்றியுணர்வு மட்டும் ஏற்படவில்லை. குற்றவுணர்வும் உண்டாகிறது.

முன்பு செய்த தவறுகளை எண்ணி குற்றவுணர்வில் தவிக்கும் கணவனைச் சந்திரா மறந்து மன்னித்து, அவர்கள் உறவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதாகக் கதை முடிகிறது.

1964ஆம் வருடம் “இருவர் உள்ளம்” என்கிற பெயரில் லக்ஷ்மியின் பெண் மனம் நாவல் படமாக்கப்பட்டது. திரைக்கதை வசனம் எழுதியவர் கலைஞர் மு. கருணாநிதி. சிவாஜி, சரோஜாதேவி, எம். ஆர். ராதா, எஸ்.வி. ரங்காராவ் போன்ற மிகப் பெரிய நடிகர்களின் சிறப்பான நடிப்பில் வெளிவந்த இப்படம் திரையில் வெற்றிகரமாக ஓடியது.

ஆனால், நாவலிலிருந்த நாயகிக்கான முக்கியத்துவம் படத்தில் குறைக்கப்பட்டுள்ளது. லக்ஷ்மி எழுத்தில் நாயகனை நாயகி தனித்து நின்று காப்பாற்றுவது போல எழுதி இருந்தாலும் படம் அதில் கொஞ்சம் முரண்பட்டு இருக்கிறது.

நாவலில் இல்லாத எம்.ஆர்.ராதா கதாபாத்திரத்தைப் படத்தில் உருவாக்கி, நாயகனைக் காப்பாற்றும் பாத்திரமாகப் படைத்திருக்கிறார்கள்.

சினிமா எப்போதும் பெண்களைக் கோழைத்தனத்துடன் அழுதுவடிந்த முகமாகவே சித்தரிக்கிறது. எப்போதும் பெண்கள் ஆணின் கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்று நினைக்கிறது. நாயகி பிரச்னையில் மாட்டிக் கொள்ளும் போதெல்லாம் நாயகன் காப்பாற்ற வேண்டும் என்பதெல்லாம் சினிமாவில் எழுதப்படாத விதிகள்.

சரி. இதே போலப் பெண் எழுத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட மற்றொரு படத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 1966இல் வெளிவந்த சித்தி என்கிற திரைப்படத்தின் மூலக்கதை வை.மு.கோ. எழுதிய ‘தயாநிதி’ நாடகம். சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுத்துலகில் பிரபலமாக இருந்தவர் வை.மு.கோதைநாயகி அம்மாள். அவரே தமிழின் முதல் பெண் நாவலாசிரியர்.

1901 ஆம் ஆண்டு பிறந்த கோதைநாயகி, முறையான கல்வி பெறாதவர். ஆனாலும் கதைகளைத் தனது தோழி உதவியுடன் எழுதினார். பின்னர் எழுதக் கற்றுக்கொண்டே தானே எழுத ஆரம்பித்தார்.

அவருடைய நாவல்கள் பெண்ணியச் சிந்தனை கொண்டவை. அதிலும் அவரது மூலக்கதையான தயாநிதியைக் கொண்டு படமாக்கப்பட்ட ‘சித்தி’ ஆழமாகப் பெண்களின் வலிகளைப் பேசுகிறது. மீனாட்சி பாத்திரத்தில் பத்மினி, முத்தையா பாத்திரத்தில் ஜெமினி கணேசன், பெரியசாமி பாத்திரத்தில் எம்.ஆர். ராதா என மிகப் பெரிய நடிகர்கள் அப்படத்தில் முக்கியக் கதாபாத்திரமாக நடித்துள்ளார்கள்.

மீனாட்சியும் முத்தையாவும் ஒருவரை இன்னொருவர் நேசிக்கிறார்கள். ஆனால், குடும்பத்தின் ஏழ்மை நிலையால் அவர்கள் காதல் கைகூடவில்லை. அதற்குக் காரணம் பணக்கார, வயதான பெரியசாமி மீனாட்சியை இரண்டாவதாக மணம் செய்யக் கேட்கிறார். ஒரு வகையில் அவளின் ஏழ்மையைப் பயன்படுத்திக் கொள்கிறார்.

ஏழ்மை நிலை காரணமாக அந்தப் பெண்ணின் ஆசைகள் சாம்பலாக்கப்படுகின்றன. கல்யாண வயதில் ஒரு மகனும் பதினாறு, பத்து, ஐந்து வயது முதல் கைக்குழந்தை வரை பெரியசாமிக்குப் பிள்ளைகள் என்று ஒரு பட்டாளமே அவ்வீட்டில் குடியிருக்கின்றனர். மீனாட்சி எல்லாரையும் நல்ல முறையில் கவனித்துக்கொள்கிறார். தாயாகவே மாறுகிறார்.

அப்படியாக அவள் கவனித்துக் கொள்ளும் காட்சியில், ‘காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே! காலம் இதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளே!’ என்கிற ஒரு தாலாட்டுப் பாடல் வரும். பெண்களின் வாழ்க்கையையும் வலியையும் உணர்வுபூர்வமாகப் பேசும் அந்தப் பாடல் இன்று கேட்டாலும் கண்களில் கண்ணீர் நிறைந்து போகும்.

ஆனால், பெரியசாமியோ தன் குழந்தைகளுக்காக வேண்டி மட்டும் மீனாட்சியை இரண்டாம் மணம் புரியவில்லை. அவருடைய உடல் தேவைகளைத் தீர்த்துக் கொள்ளத்தான் மணக்கிறார். அந்தக் கிழட்டு மனிதன் தன் உடல் தேவைக்காக மீனாட்சியை அணுகுகிற விதம் மிகவும் அருவருப்பாக இருக்கிறது.

என்னைக் கேட்டால் சித்தி படம்தான் உண்மையான ஆன்ட்டி ஹீரோ கதை. நிஜத்தில் அப்படிப்பட்ட பணக்கார ஆண்கள்தாம் பெண்களின் ஆசையை, இளமையைச் சூறையாடுபவர்கள். பழிவாங்குபவர்கள். இந்த ஆறடி உயரமும் ஆளுமையுடன் வரும் நாயகர்கள் எல்லாம் பெண்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் கற்பனை.

அதுவும் சமீபத்திய குடும்ப நாவல்களில் இது போன்ற கற்பனைகள் அதிகமாகப் பொங்கித் தளும்புகின்றன. ஆனால், நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதிய பெண்களின் நாவல்கள் பெண் சுதந்திரம், பெண் கல்வி, பெண் மறுமணம் என்பன போன்ற முற்போக்கான கருத்துகளை வலியுறுத்துகின்றன.

அப்படி எழுத்தை ஆயுதமாக்கிய ஒரு முக்கியமான நாவல் ‘தாசிகள் மோசவலை’ அல்லது ‘மதிபெற்ற மைனர்.’ இந்த நாவல் மூலமாகத் தேவதாசி முறை ஒழிப்புப் போராடத்தைக் கையிலெடுத்தார் மூவலூர் ராமாமிர்தம்.

‘பொட்டு கட்டுதல்’ எனும் கொடுமையை நீண்டகாலமாக அனுபவித்துவந்த சமூகத்தில் பிறந்தவர் மூவலூர் ராமாமிர்தம். ஈராயிரம் ஆண்டுகளாக இழிநிலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு சாதியில் பிறந்து, அந்த இழிநிலையைப் போக்கப் போராடி வெற்றி கண்ட ராமாமிர்தத்தின் நீண்ட களப் போராட்டத்துக்கும் அவருடைய நாவலுக்கும் பெரும் பங்கிருந்தது எனலாம். வெகுமக்கள் இலக்கிய வகையைச் சேர்ந்த இந்தப் படைப்பைத் தமிழக அரசாங்கம் ஒரு முக்கிய ஆவணமாக மாற்றியுள்ளது.

அடுத்த மூத்த பெண் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். அவர் பெண் அடிமை நிலையையும் மற்ற சமூக அவலங்களையும் தன் படைப்பின் மூலமாக வெளிச்சம் போட்டுக் காட்டினார் என்று சொன்னால் அது மிகையில்லை.  

எண்பதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதிய இவரின் நாவல்கள் சிலவற்றை நான் தேடிப் படித்தேன். அதில் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கை முறையை, ‘கரிப்பு மணிகள்’ என்கிற நாவலின் மூலம் அப்படியே கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருப்பார். அந்த நாவலில் வரும் மருதாம்பா என்கிற கதாபாத்திரத்தை அத்தனை தீரமான பெண்மணியாக வர்ணித்துள்ளார்.

அவருடைய ‘வனதேவதையின் மைந்தர்கள்’ நாவலில் ராமன் என்கிற கடவுளையே ராஜம், ஆன்ட்டி ஹீரோவாக படைத்துள்ளார் எனலாம்.

அரசர்கள் ஆட்சியில் பாலாறும் தேனாறும் மட்டும் ஓடவில்லை. அடிமைகளும் அடக்குமுறைகளும் இருந்தன என்பதை எல்லாம் எடுத்துச் சொல்லும் இந்த நாவலில் சீதைக்கு நடந்த அநியாயங்களை மட்டும் அவர் கேள்வி எழுப்பவில்லை. சூர்ப்பனகைக்கு நிகழ்ந்த தாக்குதலுமே நியாயமில்லாத செயல் என்று குற்றம்சாட்டுகிறார்.

ராஜம்கிருஷ்ணனின் துணிச்சலான படைப்பிற்கு நிகரான படைப்பைத் தந்தவர்தான் எழுத்தாளர் வாஸந்தி. அவருடைய படைப்புகள் எதார்த்தத்தை மட்டும் பேசவில்லை. பெண் சிசுக் கொலை தொடங்கி லிவிங் ரிலேஷன் எனப் பலதரப்பட்ட சமூகச் சிக்கல்களைக் கதைக்களமாக மாற்றியுள்ளன. அதுவும் சமூக அவலங்களைப் பேசும் நாவல்களைக்கூட ஜனரஞ்சகமான எழுத்தில் மிகச் சுவாரசியமாகத் தந்திருப்பார்.

மேலும் வாஸந்தி நாவல்கள் என்றாலே புத்திசாலியான தைரியமான நாயகிகள்தாம். படித்தவர், படிக்காதவர் என்று எப்படிப்பட்ட பெண்களாக இருந்தாலும் அவர் நாவலின் நாயகிகள் துணிச்சலாகச் சிந்திக்கவும் செயலாற்றவும் கூடியவர்களாக இருப்பார்கள். முக்கியமாக நாயகனைச் சார்ந்து செயல்படவே மாட்டார்கள்.

அதில் குறிப்பிட்ட ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் ‘ஒரு சங்கமத்தைத் தேடி’ நாவலின் நாயகி தாராவைக் குறிப்பிடலாம்.

தப்பைக் கண்டால் முதல் ஆளாகப் பொங்கி எழுந்து அதனைத் தட்டிக் கேட்கக்கூடிய பெண்தான் தாரா. களத்தில் நேரடியாக இறங்கி சமூக அநியாயங்களுக்கு எதிராகப் போராடக் கூடியவள்.

அப்படி ஒரு போராட்டக் களத்தில்தான் தாராவை பார்த்துப் பழகுகிறான் கார்த்திக். ஆனால், அவன் தந்தையோ கோயில் குருக்கள். கோயில் கைங்கரியம் செய்வதில் துளியும் விருப்பமில்லாத கார்த்திக் படித்து நல்ல வேலைக்குச் செல்ல விரும்புகிறான். இந்த நிலையில்தான் தாராவிற்கும் கார்த்திக்கிற்கும் இடையிலும் காதல் மலர்கிறது.

அவன் படிப்பை முடித்து நல்ல வேலையில் அமர்ந்ததுமே தாராவை மணக்கிறான். இருவரின் வாழ்க்கையும் சுமூகமாகச் செல்கிறது. இந்த நிலையில் தாரா குழந்தை பெறுகிறாள். ஆனால், குழந்தை பார்க்கக் கொஞ்சம் வித்தியாசமான ஜாடையில் இருக்கிறது.

அதுவும் செம்பட்டை முடியும் பூனைக் கண்ணுமாக அவன் வேலை செய்யும் நிறுவனத்தின் தலைமை பொறுப்பாளர் லோபாவின் ஜாடையில். ஆரம்பத்தில் அப்படி எல்லாம் இருக்காது என்று கார்த்திக் தன் மனதைத் தேற்றி கொண்டாலும் குழந்தையின் ஜாடை வளர வளர அவனை வெகுவாகப் பாதிக்கிறது.

வாஸந்தி

தாராவிடமே தன் சந்தேகத்தைக் கேட்டு விடுகிறான் கார்த்திக். அப்போது அவள் வெளியிட்ட உண்மை கார்த்திக்கின் தலையில் இடியாக இறங்குகிறது. ஒருமுறை லோபாவின் பார்ட்டிக்குத் தாராவைக் கட்டாயப்படுத்தி கார்த்தி அனுப்பி வைத்த சமயத்தில், அந்த லோபா தாராவிற்கு அவள் அறியாமல் போதை மருந்து கொடுத்து மயங்கிய நிலையில் பலாத்காரம் செய்துவிடுகிறான்.

அது மட்டும் இல்லாமல் போலிஸிடம் சென்றால் அவன் மீது புகார் செய்ய அவள் உடலில் எந்த ருசுவும் இல்லை என்று தாராவிடம் மிக இழிவாகப் பேசுகிறான். அவன் சொன்னதில் இருக்கும் உண்மை நாயகியை அதிர்ச்சியில் தள்ளுகிறது.  

அதேநேரம் இதனை கார்த்திக்கிடம் சொல்வதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அவன் மிகவும் கலங்கித்தான் போவான். அது மட்டும் அல்லாது இந்தச் சம்பவம் அவளுக்குத் தெரியாமல் நேர்ந்த விபத்து.  இதனால் தன் புனிதம் கெட்டுவிட்டதாக அவள் நினைக்கவில்லை. ஆனால், கார்த்திக் வளர்ந்த விதம் வேறு. அவன் தன்னைப் போல யோசிப்பானா என்று எண்ணி அந்த உண்மையை அவனிடம் சொல்லாமல் மறைக்கிறாள்.

அதே நேரம் கதையின் எந்தக் காட்சியிலும் இந்தச் சம்பவம் குறித்து, தாரா கூனிக் குறுகிப் போவதாகவோ குற்றவுணர்வு அடைவதாகவோ காட்டப்பட்டிருக்காது. அதுதான் மற்ற எழுத்தாளரின் நாயகிகளுக்கும் வாஸந்தியின் நாயகிகளுக்குமான வித்தியாசம்.

மேலும் அந்த நாவலில் வருகிற ஒரு வசனம், ‘ஒரு பெண்ணுக்கு அநீதி ஏற்பட்டால் மொத்தப் பெண் சமூகத்தையும் அது பாதிக்கும். எனக்குள்ள இது எவ்வளவு பெரிய துக்கத்தை ஏற்படுத்துறதுன்னு உன்னால புரிஞ்சுக்க முடியாது கார்த்திக். it is the biological difference that makes her we… இயற்கை ஏற்படுத்தியிருக்கிற இந்த நியதியை புரிஞ்சுண்டு, அதை ஒரு சவாலா ஏத்துகிறதுக்கும் சுயகௌரவத்தை இழக்கமா இருக்கிறதுக்கும் ரொம்பத் தைரியம் வேணும். அந்த ரூபாவுக்குத் தைரியம் இல்லன்னு தெரியறது.’

உண்மையில் அத்தகைய தைரியம் இந்த வசனத்தை பேசிய தாராவுக்கு உள்ளது. அவளுக்கே அத்தகைய துயரம் ஏற்படும் போது அவள் அதனை மிகத் துணிச்சலுடன் கையாள்கிறாள்.

இதே போன்றதொரு வசனம் கதையின் இறுதிக் காட்சியிலும் வரும். ‘ஏனென்றால் நான் ஆண். இந்த அனுபவத்தால் என்னுள் எந்த விபரீத விளைவும் ஏற்படாது என்கிற மமதை உள்ளவன். தைரியம் உள்ளவன். It is the biological difference that makes women weak.’

உண்மை தெரிந்த பிறகு தாரா மீது கார்த்திக் கோபித்துக் கொண்டு தன் கிராமத்தில் வந்து தனியே தங்கி இருந்த சமயத்தில் அங்கு வசிக்கும் ஒரு பெண்ணின் மீது அவனுக்குச் சபலம் ஏற்படுகிறது. அப்போது அவனுக்கு எழுகிற சிந்தனைதான் இது. இதெல்லாம் யோசித்து கார்த்திக் மனமாறிய போதும் தாரா அவனுடன் இணைந்து வாழச் சம்மதிக்க மாட்டாள். அப்படியே கதை முடிகிறது. தாராவைப் போன்ற நாயகிகள் தமிழ் நாவல்களில் மிக மிகக் குறைவு. குடும்ப நாவல்களில் சொல்லவே தேவையில்லை.

நூற்றாண்டுகளைக் கடந்து பெண்களின் நாவல்கள் பேசப்பட்ட புரட்சியும் பெண்ணியமும் ஜனரஞ்சக வாசிப்பில் பிரதிபலிக்காவிட்டால் கூடப் பரவாயில்லை.

முகம் சுளிக்க வைக்காத மென் காதல் கதைகள், இன்றைய காலகட்டத்திற்குப் பொருந்துகிற அளவிற்கான குடும்ப உறவுகளின் சிக்கல்கள், அதில் பெண்களின் பங்கு போன்றவற்றை மிகை இல்லாமல் எதார்த்தமாகச் சொல்லும் கதைகள் போன்றவையும்கூட அரிதினும் அரிதாகவே காணக் கிடைக்கின்றன.

முக்கியமாகப் பேசப்பட வேண்டிய விஷயங்களை விடுத்து கற்பு, தாலி, புனிதம் போன்றவற்றிலேயே சுற்றிச் சுழன்று இன்னும் சில நூற்றாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்வதைத்தான் எப்படிப் புரிந்துகொள்வது என்கிற மிகப்பெரிய கேள்வி, எனக்கு மட்டுமில்லை என்னைப் போன்றே பலருக்கும் இருக்கிறது.

(தொடரும்)

படைப்பாளர்: 

மோனிஷா. தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர்.  இன்று வரையில் இணையத்தில் 27 நாவல்களை எழுதி முடித்திருக்கிறார். அவற்றில் இருபது நாவல்கள் புத்தகமாகப் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.   

பெண்ணியம் சார்ந்த கருத்துகளும் சூழலியல் சார்ந்த விழிப்புணர்வுகளும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன.