இந்தியாவில் 2024 மக்களவைத் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் மும்முரமாகப் பரப்புரை செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூரில் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி பரப்புரை மேற்கொண்ட பாஜகவினர் அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு பெண் பாஜகவினரை நோக்கி, ‘சானிட்டரி நாப்கின்களுக்குக்கூட ஜிஎஸ்டி வசூலிப்பது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் அப்பெண்ணின் கடைக்குள் புகுந்து, தகாத வார்தைகளில் திட்டியதோடு தாக்கவும் செய்துள்ளனர். அத்தோடு நில்லாமல் அப்பெண்ணின் துணிக்கடையையும் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. பாஜகவினர் இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல என்றாலும் பெண்களை, அதுவும் பொது இடத்தில் தேர்தல் பரப்புரையின் போது இப்படி வெளிப்படையாகத் தாக்கியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. இதுமட்டுமல்ல கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி இதேபோல பரப்புரையில் ஈடுபட்ட மேற்கு வங்கம் மாநிலம் மால்டா வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் ககென் முர்மு, பாஜகவிற்கு வாக்களிக்கக் கூறி, அங்கிருந்த ஒரு பெண்ணுக்கு அவர் அனுமதியின்றி முத்தம் கொடுத்துள்ளார். மதவாதத்தை வைத்து அரசியல் செய்யும் இது போன்ற அரசியல் கட்சியினரிடம் வேறு என்ன சமூக முன்னேற்றத்தையா எதிர்பார்க்க முடியும்?.

’நாரி சக்தி, நாரி சக்தி’ என்று மேடைக்கு மேடை பெண்களை மதிக்கிறோம்.. போற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் பிரதமர் மோடியின் ஆட்சியில் பெண்கள் மீதான வன்முறைகளைப் பட்டியல் போட்டால், அவர்களின் ஆஸ்தான நாயகன் அனுமனின் வால் போல் நீண்டு கொண்டே செல்கிறது. அதிலும் முதன்மையாக இருப்பது மணிப்பூர் கலவரம்தான். இரண்டு குட்கி இனப் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம் நாட்டையே உலுக்கியது. மெய்தி மற்றும் குட்கி இனத்தினரிடையே ஏற்பட்ட கலவரம் மாதக்கணக்கில் நீடித்தும் அதற்கு அரசங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கலவரத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததும், கலவரம் வெளியே தெரியாமல் இருக்க இணைய சேவை முதல் தொலைதொடர்பு சேவை அனைத்தையும் துண்டித்து வைத்திருந்ததும் தான் வக்கிரத்தின் உச்சம். இதுபோன்ற ஆட்சிமுறை மன்னராட்சியில்கூட இருந்திருக்கும் என்று தோன்றவில்லை.

அடுத்த மாபெரும் போராட்டமாக அமைந்து நீதி கிடைக்காமல் இருப்பது மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக சாக்ஸி மாலிக் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் கடந்த 2023ஆம் ஆண்டு டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் இறங்கினர். 18 வயதுக்கு பெண் உள்பட பல பெண் மல்யுத்த வீராங்கனைகளை பிரிஜ் பூஷன் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி மாதக்கணக்கில் போராட்டதில் ஈடுபட்டனர். ஆனால் பாஜக அரசாங்கம் குற்றம் சாட்டப்பட்ட அந்தப் பாஜக எம்.பி. மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள், அவர்களது ஆதரவாளர்கள் மீது கலவரம் மற்றும் அரசு ஊழியர்களின் பணிக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. இது மட்டுமல்லாது போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வது, அவர்கள் மீது தடியடி நடத்துவது , குண்டுக்கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்துவது போன்ற செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். அதோடு புதிய நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாகச் சென்றும், தாங்கள் வாங்கிய பதக்கங்களைக் கங்கையில் வீசுவதாக அறிவித்தும்கூட அரசாங்கத்தினர் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. என்னதான் பாலியல் துன்புறுத்தல் போன்ற  குற்றங்களுக்கு உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய இந்தியச் சட்டம் கட்டாயப்படுத்தினாலும், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகுதான் இவ்வழக்கில் பிரிஜ் பூஷனுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. பாஜாக அரசாங்கத்தினர் புகாரை வாபஸ் வாங்கக் கூறியும் போராட்டத்தைக் கைவிடக் கூறியும் போராட்டக்காரர்களை மிரட்டியும் உள்ளனர். போரடிப் பார்த்து விரக்தியடைந்த சாக்ஸி மாலிக் தான் மல்யுத்ததில் இருந்தே விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நாங்கள் தொடர்ந்து போராடினோம். ஆனால், பிரிஜ் பூஷன் போன்ற ஒருவரின் தொழில் பங்குதாரரும், அவரின் நெருங்கிய உதவியாளருமான சஞ்சய் சிங் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே நான் மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன். நாங்கள் பெண் ஒருவர் தலைவராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால், அது நடக்கவில்லை” எனக் கண்ணீர்மல்கப் பேசினார். ஆனால், இத்தனை போராட்டங்களுக்கும் கண்ணீருக்கும் பிறகும் நாட்டின் மிகப் பெரிய விளையாட்டு வீராங்கனையை இழக்கும் தறுவாயில்கூட ‘நாரி சக்தி’ என்று பெண்களை மேடைக்கு மேடை வாய் வார்த்தைகளில் போற்றிக் கொண்டாடும் மோடி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. போரட்டக்காரர்களைச் சந்திக்கவும் இல்லை. அதுசரி, மணிப்பூர் பக்கமே செல்லாத மோடி இவர்களுக்கு மட்டும் எப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவார்? 

 இன்னும் பின்னோக்கிச் சென்றால் கடந்த 2018ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய ஆசிஃபா கொலை வழக்கிலும் இதே மெத்தனப்போக்கைக் காட்டியுள்ளது பாஜக அரசாங்கம். கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காஷ்மீரைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் தன் குதிரைகளை மேய்த்துவிட்டு வீட்டிற்கு வரும் வழியில் கடத்தப்பட்டு அங்குள்ள ஒரு கோயிலில் வைத்து 6 நாட்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கால்கள் முறிக்கப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கிலும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து ஓர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, நான்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் மைனர் ஒருவர் உள்பட எட்டு ஆண்களைப் போலீசார் கைது செய்தனர்.ஆனால், இந்தக் கைதுகளை எதிர்த்து ஜம்முவில் போராட்டங்கள் நடந்தன. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்குச் சென்ற போலீசார் நீதிமன்றத்தில் நுழைவதை வழக்குரைஞர்களே தடுக்க முயன்றனர். இன்னும் குறிப்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் பெண்களை மிகவும் மதித்துப் போற்றுவதாகப் பறை சாற்றிக் கொள்ளும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் பங்கேற்றனர் என்பதுதான் அவர்கள் பெண்களைப் போற்றும் லட்சணத்தைக் காட்டுவதாக அமைகிறது. நாடு முழுவதும் கண்டனம் எழுந்த பிறகு அந்த அமைச்சர்கள் இருவரும் ராஜினாமா செய்தது வேறு விஷயம் என்றாலும் பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவா எம்.பி.களே போராடும் அவலம் எல்லாம் பாஜக ஆட்சியில்தான் நடக்கிறது. 

இது மட்டுமா, பில்கிஸ் பானோ கூட்டு வன்கொடுமை, கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று நிரூபணம் செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகள் 11 பேரையும் சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு விடுதலை செய்தது. கருவைச் சுமந்த நிலையில் இருந்த ஒரு பெண்ணைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து, அவரது இரண்டரை வயது குழந்தையை அவர் கண் எதிரே பாறையில் அடித்துக் கொலை செய்து, சிறார்களான அவரது இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் உட்பட அவர் குடும்பத்தைச் சேர்ந்த 14 நபர்கள் கொலை செய்த மகா யோக்கியன்களை நம் நாட்டின் சுதந்திர தினத்தன்று இந்தப் பாஜக அரசு விடுதலை செய்தது. விடுதலையான அன்று பாஜகவைச் சேர்ந்தவர்கள் அந்த மகாயோக்கியன்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த காட்சிகளையெல்லம்கூட நாம் கண்டோம். இதிலிருந்தே தெரிய வேண்டாமா? பெண்களை இக்கட்சி எந்த அளவிற்கு மதிக்கிறது என்று.

கடந்த பத்து ஆண்டுகளில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளையும் அதற்கு பாஜகவினர் தெரிவித்த ஆதரவுகளையும் சொல்லி மாளாது. உதாரணத்திற்கு மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கடந்த 2017ஆம் ஆண்டு வலதுசாரி ஆதரவாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனைப் பாராட்டிய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சமூக ஊடக ஆலோசகர் ஆஷிஷ் மிஸ்ரா ஜெய்சி கர்னி வைசி பர்னி ‘நீங்கள் எப்படி விதைக்கிறீர்களோ, அப்படியே அறுவடை செய்வீர்கள்’ என்று ட்வீட் செய்திருந்தார். 

பெண்களை மிகவும் போற்றுகிறோம், அதற்கு எடுத்துக்காட்டாக நாங்களே தலித் பெண் ஒருவரைக் குடியரசுத் தலைவராக்குகிறோம் எனக் கூறி திரௌபதி முர்முவைக் குடியரசுத் தலைவராக நியமித்தது அக்கட்சி. ஆனால் நம் நாட்டின் முதல் குடிமகளான குடியரசுத் தலைவரையே புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்புவிழாவிற்கும் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கும் அழைக்கவில்லை. அவர் தலித் என்பது ஒரு காரணம் என்றால், பெண் என்பது மற்றொரு காரணம்.

மோடி இன்னும் பெருமிதமாக நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியுள்ளோம் என்று கூறிக்கொண்டு இருக்கிறார். ஆனால், அந்த மசோதா கடந்தாண்டு நிறைவேற்றப்பட்டும் இன்னும் அமலுக்கு வரவில்லை. இதனைக் கேட்டால் மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பின் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பின், இந்தச் சட்டம் அமலுக்கு வரும் என்று கூறிகொண்டிருக்கிறார்கள். உடனடியாக 2024 தேர்தலுக்கு முன்பே இச்சட்டத்தை அமல்படுத்தக் கூறிய வழக்கிலும் உச்சநீதிமன்றத்தில் அதற்கு ஒன்றிய அரசு எதிர்ப்புதான் தெரிவித்திருக்கிறது. ஒன்றிய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து தொடர்ந்து அவர்களுக்கு எதிராகக் கேள்வி எழுப்பி வந்த மஹுவா மொய்த்ராவை இந்த அரசு என்ன பாடுபடுத்தியது என்பதும் நாடறிந்ததே. பெண்களுக்குப் பாதுகாப்பான ஒரே கட்சி பாஜக என்று கொஞ்சமும் நாக்கூசாமல் மார்தட்டிக்கொள்ளும் பாஜக ஆளும் மாநிலங்களில்தாம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தலைவிரித்தாடுகின்றன. இதனை தேசிய மகளிர் ஆணையம் கூறியுள்ளது. தேசிய மகளிர் ஆணையம் (NCW) கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 28,811 புகார்களைப் பதிவு செய்துள்ளது. அதில் அதிகபட்சமாக 16,109 புகார்கள் பதிவாகி, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதல் மாநிலமாக உத்தரப்பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. கடந்த ஆண்டு ஜார்ஜ்டவுன் இன்ஸ்டிடியூட் சமர்ப்பித்த ஆய்வறிக்கையின்படி பெண்கள் பாதுகாப்புக் குறியீட்டில் இந்தியா 1 புள்ளிகளில் 0.595 மதிப்பெண்களைப் பெற்று, குறியீட்டில் மதிப்பிடப்பட்ட 177 நாடுகளில் 128வது இடத்தில் உள்ளது. 

எல்லாக் காலக்கட்டங்களிலும் பெண்கள் மீதான வன்முறைகள் என்பது நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன என்றாலும், ஆளும் கட்சிகளும் அரசும் அதற்கு எதிரான நடவடிக்கைகளைத்தான் மேற்கொள்ளுமே தவிர, அவற்றைத் தூண்டக்கூடிய செயலைச் செய்ததாக வரலாறு இல்லை. ஆனால், பாஜக அரசு அதற்குப் பகிரங்கமாக லைசன்ஸ் கொடுக்கிறது. பெண்களின் உடை முதல் அனைத்திலும் கற்கலாத்திற்கு மீண்டும் இழுத்துச் செல்லும் அனைத்து வேலைகளையும் செவ்வனே செய்து வருகிறது. நம் நாடு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றபோது காந்தி, “நம் நாட்டில் எப்போது ஒரு பெண் நள்ளிரவில் யார் துணையும் இன்றி சுதந்திரமாக நடமாட முடிகிறதோ அன்றுதான் நமக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாகப் பொருள்“ என்று கூறியதாகச் சொல்வார்கள். ஆனால், அந்த நிலை இன்று தழைகீழாக மாறி வருகிறது.

சாதி, மதம், கடவுள் என்கிற அனைத்தும் பெண்களை அடிமையாக்கக் கண்ட உத்திகளே. ஆனால், பாஜக சாதி, மதவாதம், சனாதனம் ஆகியவையே பிரதானமாகக் கொண்டு அரசியல் செய்து வருகிறது. இப்படிப்பட்ட ஒரு கட்சி நாட்டை ஆண்டால் பெண்கள் போராடிப் பெற்றுள்ள இத்தனை ஆண்டுகாலச் சுதந்திரமும் சமத்துவமும் இனி வரும் காலங்களில் வெறும் கனவாகவே சென்றுவிடும் சாத்தியங்கள்தாம் அதிகமாக உள்ளன. பெண்களின் ஓட்டு அரசியலில் மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. ஆகவே பெண்களாகிய நாம் நம் முன்னேற்றத்தை மனதில் கொண்டு சிந்தித்து வாக்களிப்போமாக!

படைப்பாளர்:

சண்முகப் பிரியா. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். வாசிப்பதிலும் எழுத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 

.