“நீயும் பெண்ணியவாதியா?” என மிரட்சியுடன் கேட்ட கவிதாவைச் சிறு புன்னகையுடன் பார்த்தாள் நித்யா.

”நான் மட்டுமல்ல, நீயும்கூட பெண்ணியவாதிதான்’ என்று சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தாள் நித்யா.

”அது ஒரு விளையாட்டு மைதானம். இரண்டு டீம்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். ஒரு டீம் ரொம்ப காலமாக விளையாடிக் கொண்டிருக்கிறது. இன்னொரு டீமில் உள்ளவர்கள் விளையாடுவதற்கான வாய்ப்பு தாமதமாகத்தான் கிடைத்திருக்கிறது.
தாமதமாக கிடைத்ததாலோ என்னவோ, இந்த இரண்டாவது டீமில் ,

  1. சிலர் மும்முரமாக விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
  2. சிலர் தாம் அடுத்த டீமில் இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள்.
  3. நிறைய பேருக்குத் தாம் களத்தில் இருக்கிறோம் என்பதே தெரியவில்லை.

இந்த இரண்டாவது அணியை, பெண்கள் அணி என வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால், வேலைக்குச் செல்லவோ, பொருளாதார சுதந்தரத்துடன் செயல்படவோ அல்லது சமுதாயத்தில் சுதந்திரமாகச் செயல்படுவதோ, சில பத்தாண்டுகளுக்கு முன்னால்தான் ஆரம்ப்பித்திருக்கிறோம்.
ஒட்டுமொத்த பொருளாதாரமும் சமூகத் தலைமையும் ஆண்களிடம்தான் பல காலமாக ஒப்படைக்கப்பட்டிருந்தன. ஆனால், இப்போதெல்லாம் தங்கள் வாழ்வுக்கான பொறுப்பைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். அப்படி பொறுப்பைப் பங்கிட்டுக்கொள்வது உண்மையில் ஆண்களுக்கு சௌகரியமான விஷயம்தானே? பெண்ணியம் என்பது உண்மையில் ஆண்களுக்கு உதவிதான் செய்கிறது.

சிலர் பெண்ணியம் பேசுபவர்களை, ஏதோ தங்களுக்குத் தீங்கிழைப்பவர்களாக நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில் சம உரிமையுடன் நடத்தப்படும்போது அங்கு சுரண்டல்கள் இல்லை.
ஒரு பெற்றோருக்கு ஓர் ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என வைத்துக்கொள்வோம். அந்தப் பெற்றோர், ஆண் குழந்தைக்கு அதிக கவனிப்பு கொடுத்து, சகோதரியை நீதான் கவனிக்க வேண்டும். நீதான் சம்பாதித்து, செலவு செய்து, திருமணம் செய்து கொடுக்க வேண்டும் எனச் சொல்லி வளர்க்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அந்த ஆண் குழந்தையும் பொறுப்பு அனைத்தையும் தன் தலைமேல் போட்டுக் கொண்டு, தனக்கான வாழ்க்கையை வாழ்வதுமில்லை. அடுத்தவரை சுதந்தரமாக வாழவிடுவதும் இல்லை.
ஆனால், பெண்ணியம் என்பது அவரவர் ஆட்டத்தை ஆடுவது . அவரவர் பொறுப்பை எடுத்துக்கொள்வது.

ஒரு பெண் குழந்தைக்கு மேற்படிப்பு படிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால், பெண் குழந்தைக்குச் செலவு செய்து படிக்க வைத்தால் நமக்கு என்ன கிடைக்கும்? என்ன நினைத்து, அதைத் தடுக்க நினைக்கும் பெண்கள், தங்களை அடுத்த டீம் என்றே நினைத்துக்கொள்கிறார்கள்.
சமீபத்தில் நடந்த சீமானின் விவகாரமும் இந்த வகைக்கு ஓர் உதாரணம். ஒரு பெண், அவர் மீது ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார். அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, அந்தப் பெண்ணைக் குறைத்து தன் மனைவி பேசியதாகச் சொல்கிறார். தன் கணவரின் குற்றத்தை நியாப்படுத்த, இன்னொரு பெண்ணின் மதிப்பைக் குறைத்துப் பேசுவது எப்படிச் சரியாகும்?.

இன்னொரு பெண்ணுடைய மதிப்பைக் குறைப்பதன் மூலம், தன்னுடைய மதிப்பை எப்படிக் கூட்ட முடியும்? ஒருவரைக் குறைத்துப் பேசுவதன் மூலம் எப்படித் தன்னை உயர்த்த முடியும்? சக மனிதரைச் சிறுமைப்படுத்துவதன் மூலம், என்ன சொல்ல வருகிறார்கள்?.

சில நேரம் ஆண்கள் என்றால் அப்படித்தான், நீதான் அட்ஜஸ்ட் செய்து வாழ வேண்டும். பொண்ணுங்கனா இப்படித்தான் இருக்க வேண்டும் எனப் பாடம் எடுக்கும் பெண்களும், தங்களை அடுத்த டீம் என்றே நினைத்துக்கொள்கிறார்கள்.

அந்தப் பெண்களிடம் சொல்ல நினைப்பது, ’நீங்கள் எவ்வளவுதான் அவர்களுக்காக விளையாடினாலும், அவர்கள் உங்களுக்குச் சிலை வைக்கப் போவதும் இல்லை. உங்களை அவர்கள் டீமில் சேர்த்துக்கொள்ளப் போவதுமில்லை.’

ஆக, பெண்ணாகப் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவருமே ஃபெமினிஸ்ட்தான், பெண்ணியவாதிதான். ஒத்துக்கொண்டும் ஆட்டத்தை ஆடலாம் இல்லை என்றால், மறுத்துக் கொண்டு அல்லது பெண்ணியவாதி எனச் சொல்லிக்கொள்ள தயங்கியபடியே களத்தில் நிற்கலாம். ஏன், விளையாடாமல்கூட இருக்கலாம்.

ஆனால், உண்மை என்னவென்றால் விரும்பியோ விரும்பாமலோ ஏற்கெனவே இந்தக் களத்தில் நுழைந்துவிட்டோம். யார் யாரை ஜெயிக்கிறார்கள் என்பதைவிட எவ்வளவு தூரம் முழு ஈடுபாட்டுடன் விளையாடப் போகிறோம் என்பதே முக்கியம். ஏனென்றால் விளையாடுவதில்தான் மகிழ்ச்சியே இருக்கிறது.
பெரும்பான்மையான ஆண்கள் தங்கள் ஆணாதிக்க மனநிலையை வெளியே இயல்பாக வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். சீமானும் சரி, நம் கல்லூரி நட்பு ஆண்களும் சரி, அன்றாடம் சந்திக்கும் ஆண்களில் பல பேர் இப்படித்தான் இருக்கிறார்கள்.

அன்று, காலேஜ் வாட்ஸ்ஆப் க்ரூப்பில் வந்திருந்த மெசேஜ்க்கு, ஏன் ஒருவரும் பதில் பேசவில்லை?. பேச வேண்டிய தருணங்களில், நாம் எத்தனை பேர் பேசுகிறோம்?

ஒரு பதில் சொல்வதில் என்ன வந்து விடப்போகிறது? ரம்யா… ஆமா… முதல் வருடத்தில் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தாள். இரண்டாவது வருடத்தில் இன்னொருவருடன் போய் வாழத் தொடங்கினாள். ஆனால், அதை இத்தனை வருடங்களுக்குப் பிறகு, பெண்கள் இருக்கும் குழுவில் நக்கலாகப் பேசிக் கொண்டிருப்பதற்குத் தேவை இல்லைதானே? எல்லோரும் இருக்கிற ஒரு குழுவில் ஒரு பெண்ணைக் குறித்து கமெண்ட் செய்யும் போது, மற்ற பெண்களுக்கு அது மறைமுகமான எச்சரிக்கையும் அச்சுறுத்தலும்தானே? முதலில் தெரிவிக்கப்படும் சிறிய வன்மம்தான், பின்னர் அடக்குமுறையாக, வன்முறையாக நீள்கிறது. அதனால் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய இடங்களில், பேச வேண்டிய நேரங்களில் பேசுங்கள்.

ஏனென்றால், பெண்ணியம் பேசுவதன் அடிப்படையே ஆண், பெண் சமத்துவத்தை நிலை நாட்டுவதே. சமமான வாய்ப்புகளோடு, சரிசமமான மரியாதையோடு, சமமான நீதியோடு இந்தச் சமுதாயத்தில் ஒருவர் மற்றவரின் வளர்ச்சியில் உதவிக் கொண்டு செழிப்பாக வாழ வேண்டும் என்பதே.

மேலும், இந்த முதல் அணியையும் இரண்டாவது அணியையும் ஒருபோதும் எதிராளிகளாகக் கருத முடியாது. இரண்டு அணியின் முழு ஈடுபாடும் அவசியம். யாரையும் யாரும் தோற்கடிப்பதால் இங்கு மகிழ்ச்சி கிடைப்பதில்லை. மாறாக இரு அணியும் ஆட்டக்களத்தில் இருப்பதிலும், ஈடுபாட்டுடன் விளையாடுவதிலும்தாம் மகிழ்ச்சி.”

”ஆண்களில் பெண்ணியவாதிகள் இல்லையா?” எனக் கேட்டாள் ஷாலினி.

”கண்டிப்பாக இருக்கிறார்கள், பெண்ணியம் பேசும் ஆண்களை நிறைய சந்தித்து இருக்கிறேன்.”

”நித்யா, நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டாள் கவிதா.

”கவிதா, நீ படித்திருக்கிறாய். இருந்தும், எல்லா விதத்திலும் கணவரைச் சார்ந்தே இருக்கிறாய். உனக்கு வீட்டைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்வது பிடித்திருக்கிறது என்றால், உன்னை யாரும் இங்கே கட்டாயப்படுத்தி மாற்றப் போவதில்லை. ஆனால், உன் உறவில் பிரிவு அல்லது தனியாக எல்லாவற்றையும் கையாள வேண்டிய நிலை வந்தால் உனக்கு அவற்றைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அந்தப் பொறுப்பு உன்னிடம்தான் இருக்கிறது என்பதை உணர்ந்துகொள். ஆட்டக் களத்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து செயல்படு.”

(தொடரும்)