இன்றைக்கு எழுநூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டம். ஒரு கடுமையான கோடைக்காலம், சூரியன் யார் மீதோ இருந்த கோபத்தில் தனக்குக் கீழிருந்த உயிர்களையெல்லாம் ஆக்ரோஷமாகப் பழிவாங்கிக்கொண்டிருந்தது. மூட்டை முடிச்சுகளுடன், குடும்பம் குடும்பமாக வெகுதொலைவு நடந்தே வந்துகொண்டிருந்த பாதசாரிகள் ஆங்காங்கே நிழலில் அமர்ந்து, படுத்துத் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு நடையைத் தொடர்ந்தனர். நீர்நிலைகள் எங்கும் தண்ணீர் இல்லாமல் நிலம் வெடித்துக்கிடந்தது.

குஞ்சுகுளுவான்களுடன், கர்ப்பிணிப் பெண்களுடன் வந்துகொண்டிருந்த அந்தக் கூட்டம் தாகத்தால் தவித்துப் போயிருந்தது. ஒரு வாய்… ஒரு மிடறு தண்ணீர் கிடைத்தால் போதும் என உடம்பு தவித்தது. உஸ்ஸ்… புஸ்ஸ்… என்ற பெருமூச்சுடன் நடந்து வந்து கொண்டிருந்த குழுவின் கண்களில் அந்த மரம் தெரிந்ததும் ஒரே ஆரவாரம்… பெரியவர்கள் தலைக்கு மேலே கையுயர்த்தி வணங்கினர், இளைஞர்கள் குதித்துக் கூத்தாடினர். தலைவர் போலிருந்த அந்த முதியவர் அவர்களைக் கைசாடையால் அமைதிப்படுத்தினார். பெண்கள் தத்தம் குழந்தை குட்டிகளுடன் அந்த மர நிழலில் அமர்ந்து ஆசுவாசப் படுத்திக்கொள்ள, இளந்தாரிகள் வேகமாகச் செயலில் இறங்கினர். கையிலிருந்து சிறு சிறு ஆயுதங்களால், ஆங்காங்கே கிடந்த மரக்குச்சிகளால், கிடைத்த பொருளைக்கொண்டு மரத்தையொட்டி, போதுமான அளவிற்குக் குழி போல வெட்டி சமப்படுத்திக்கொண்டார்கள்.

பெருக்குமரம்

“பார்த்துப் பார்த்து மெதுவா… மரத்திற்குச் சேதம் வராமல் வெட்டு” என அந்த முதியவர் ஆலோசனை கூறிக்கொண்டிருக்க, அந்த இளைஞர்களில் ஒருவன் மட்டும் அந்தக் குழிக்குள் காலை வைத்து, அந்த மரத்தின் சதைப்பிடிப்பான பக்க வேர்களில் ஒன்றை மட்டும் குறி வைத்து கத்தியால் வெட்டினான். அடுத்த கணம்… குபுகுபுவெனத் தண்ணீர் மரத்திலிருந்து பெருக்கெடுத்து வர, கூட்டம் ஆர்ப்பரிக்க, மெதுவாக அடுத்த வேர்ப்பகுதியையும் வெட்டினான். “போதும் போதும்… நமக்குத் தேவையான தண்ணீர் கிடைத்துவிடும்” என்று பெரியவர் கூற, குழாய்த் தண்ணீர் போல அந்த மரத்தின் வேர்க்கால்களிலிருந்து தண்ணீர் சீராக வந்து அந்தப் பள்ளம் நிரம்பியது.

குழுவிலிருந்த அத்தனை பேரும், கையிலிருந்த சிரட்டை, சொம்பு, பாத்திரங்களால் அள்ளி அள்ளித் தாகம் தணித்துக்கொண்டனர். முகம் கழுவிக்கொண்டனர். உடல் குளிர்ச்சியாக மனமும் குளிர்ந்தது. நன்றி சொல்வது போல அந்த மரத்தை ஆரத்தழுவிக்கொண்டனர். கையெடுத்துக் கும்பிட்டு தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

“இண்டைக்கு உங்களுக்கு ஒரு அதிசய மரத்தைக் காட்டப்போறேன் வாங்க” எனத் தோழி மெரினா அழைத்துக்கொண்டு செல்லும் வழியில், இந்தக் கதையைக் கூறிக்கொண்டிருக்கும்போதே நிகழ்வுகள் மனதில் படமாக ஓட ஆரம்பித்திருந்தன. குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் கண்ணில் பட்டது பிரம்மாண்டமாகத் தனிமையில் நின்றிருந்த அந்த மரம். மன்னார் மாவட்டத்தில் பள்ளிமுனை பகுதியில் 19.51 மீட்டர் சுற்றளவுடனும் 7.5 மீட்டர் உயரத்துடனும் கம்பீரமாக நின்றிருந்தது. மெரினா சொன்ன அந்த அதிசயம் தெற்காசியாவின் மிகப்பெரிய சுற்றளவு கொண்ட மரம் என்ற பெருமையைப் பெற்றுள்ள பெருக்குமரம். சென்னையில் 4 ஆயிரத்து 670 சதுர மீட்டர் பரப்பளவில் பரந்துவிரிந்து கிடக்கும், 450 ஆண்டுகள் பழமையான அடையாறு ஆலமரத்தைப் பார்த்துப் பார்த்து வியந்திருந்தாலும், இந்த 800 ஆண்டு பழமையான பெருக்குமரம் ஏனோ பார்த்தவுடன் மனதில் பச்சக் என ஒட்டிக்கொண்டுவிட்டது. நாங்கள் போயிருந்த நேரம் இலையுதிர்காலமாக இருந்திருக்க வேண்டும். அடர்ந்து படர்ந்த இலைகள் இல்லை, ஓயாது கூவித் திரியும் பறவைக்கூட்டங்களில்லை, அடர்த்தியான நிழல்களில்லை…தனது இலைகளையெல்லாம் உதிர்த்துவிட்டுத் தனது பருத்த உடலுக்குச் சற்றும் பொருந்தாமல், சிறிது இலைகளுடன் ஆங்காங்கே கிளைகள் மட்டும் விரிந்திருக்க நின்றிருந்தது.

700 ஆண்டுகால வரலாற்றைத் தனக்குள் புதைத்துக்கொண்டிருந்த அந்த மரம் ஏனோ சோகமாக இருப்பது போல… ஏதோ செய்தி சொல்வதுபோல எனக்குத் தோன்றியது. மரத்திற்கு முன்னால் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்த அழகிய மேரிமாதா கருணை பொழியும் கண்களுடன் எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார். அருகிலுள்ள தேவாலயம்தான் இந்த மரத்தைப் பராமரித்துக்கொண்டுள்ளதாம். மரத்தைச் சுற்றிலும் பெரிதாகப் பாதுகாப்பு வேலிகள் ஏதும் இல்லை. சிமெண்ட் திண்டுகள் மட்டுமே கட்டப்பட்டிருந்தன. ‘எழுநூறு வயசாயிடுச்சா உனக்கு! எத்தனையெத்தனை துரோகங்களை, இந்த மண்ணில் நடந்த கொடூரங்களைச் சந்தித்திருப்பாய்! சாட்சியாக இருந்திருப்பாய்! அதனால்தான் சோகமாக இருக்கிறாயோ!’ என்று அந்த மரத்துடன் பேசிக்கொண்டிருந்தேன். இலங்கை குறித்த எந்தச் செய்திகளையும் வரலாறுகளையும் விரல் நுனியில் வைத்திருக்கும் நண்பர் மடுதீன், “இந்த மரத்திண்ட பெருமைகளைச் சொல்றேன், கேளுங்களேன்” என்று கதைக்கத் துவங்கினார்.

உலகிலுள்ள உயிர்களிலே ஆறாயிரம் வருடங்களுக்கு மேலாக உயிர் வாழக்கூடியது பெருக்குமரம் தான்! அரேபியர்கள் காவிரிபூம்பட்டிணத்தில் இருந்து மன்னாருக்கு முத்து வாங்க ஒட்டகங்களுடன் வந்தபோது, அவற்றுக்குத் தீனி போடுவதற்காக மன்னார் பள்ளிமுனையில் இந்தப் பெருக்குமரத்தை உண்டாக்கியதாக வரலாறு கூறுகிறது. அவர் முடிக்குமுன், “முத்து வாங்க வந்த அரேபியர் இந்த மரம் வளர்ந்து பெரிசாகிற வரைக்கும் ஒட்டகத்தோட இங்கேயே இருந்தாங்களா?” என்று முந்திரிக்கொட்டை போல நான் இடைச்செறுக, முறைத்துவிட்டுத் தொடர்ந்தார்.

வெப்பமண்டலக்காடுகளில் வளரும் இந்தப் பெருக்குமரத்திற்குப் ‘பப்பரப்புளிய மரம்’ என்ற பெயரும் உண்டு. போபாப் (baobab) என்றும் சொல்வதுண்டு. இது அடன்சோனியா என்னும் பேரினத்தைச் சேர்ந்தது. முதன்முதலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மைக்கேல் அடன்சன் என்னும் தாவரவியலாளர் பெருக்குமரத்தைப் பதிவு செய்ததால், அவர் பெயரில் அடன்சோனியா என அழைக்கின்றனர். பெருக்குமரத்தில் 9 இனங்கள் உள்ளன.  ஆறு இனங்கள் மடகாஸ்கருக்கும், இரண்டு இனங்கள் ஆப்பிரிக்காவுக்கும், அரேபியாவிற்கும், மற்றொன்று ஆஸ்திரேலியாவிற்கும் சொந்தமானதாம்.

கீழே விழுந்திருந்த இலைகளை எடுத்து ஆராய்ச்சி (!) செய்து கொண்டிருந்த மகள் பூஷிதா, இம்மரத்தின் இலை ஐந்தாகப் பிரிந்து கைவிரல் போல இருந்ததை வியப்புடன் சுட்டிக்காட்ட, அதற்குள்ளும் ஒரு செய்தி இருந்தது! மனிதனின் ஐந்து முக்கிய நோய்களான குருதிப் பெருக்கம், நரம்புத் தளர்ச்சி, அம்மை, ரத்த அழுத்தம், தொற்றுநோய் ஆகியவற்றுக்குப் பெருக்குமரத்தின் இலைகள், பட்டைகள், வேர்கள் போன்றவை பயன்படுகின்றன. சித்த மருத்துவத்தில் பெருக்குமரத்துக்கு மிக முக்கிய இடமுண்டாம்.

பரு – பெரு – பெருகு – பெருக்க – பெருக்கு யாவும் பருத்தலை, உப்புதலைக் குறிப்பதுடன் பல்கிப் பெருகி வரும் நீரோட்டத்தையும் குறிக்கிறதாம். அதிக வெப்பமான காலத்திலும்கூட ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரைத் தன்னிடத்தே சேகரித்து வைத்திருக்கும் இயல்புடையது. குழாயில் நீர் எடுப்பது போல, அந்நாளில் நீரற்ற, வறண்ட காலத்தில் இம்மரத்தின் வேரை வெட்டி ஆழ்கிடங்கு அமைத்து, தண்ணீர் எடுத்துப் பயன்படுத்தியிருக்கின்றனர். தமது உடற்பகுதியில் சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் லிட்டர் நீரைச் சேமித்து வைக்கக்கூடியது. சுரக்குடுவைக்குள் இம்மர இலைகளை விட்டு மூடி, மரத்தில் தொங்கவிட்டும் (transpiration) நீர் சேகரித்துள்ளனர். இதன் பருமனைக் கருத்தில் கொண்டும், வறட்சியான காலத்திலும் மரத்திலிருந்து நீர் பெருக்கெடுத்து வந்ததாலும் பெருக்கு என அழைத்திருக்கலாம். இம்மரங்கள் முன்பு வடமேற்குக் கரையோரத்திலும், யாழ்ப்பாணத்திலும், தீவுப்பகுதியிலும் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இருந்துள்ளன. பல்வேறு ஆக்கிரமிப்புகளின்போது அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது மன்னாரிலும் நெடுந்தீவிலுமாக இரண்டு பெருக்குமரங்கள் இலங்கையில் உள்ளன.

ரஷ்யர்கள் அளந்து பார்த்த பெருக்குமரம்!

நெடுந்தீவிலுள்ள மற்றொரு பெருக்குமரம் ஆறேழு பேர் உள்ளே சென்று நிற்கக்கூடிய அளவுக்கு மரத்திற்குள் குகை போல, தாராள இடவசதியுடன், மிகுந்த குளிர்ச்சியுடன் காணப்படுமாம். போர்த்துகீசியம், ஒல்லாந்தர் ஆட்சிக்காலங்களில் பெருக்குமரத்தினுள் ஒளிந்திருந்து அவர்கள் மீது நம்மவர்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

‘பெருக்குமரம் போல் இரு’ என வாழ்த்துவது இலங்கையில் வழக்கமாக உள்ளது. பெருக்குமரத்தின் பட்டைகளிலிருந்து நாருரித்து ஆடைகள் நெய்ததாகவும் கூறப்படுகிறது. அதற்குச் சான்றாக நிற்கிறது-

“பெருக்குப்பட்டையில பட்டு செஞ்சி தந்தவரே

கருக்கலுக்கு வந்து கட்டி விட்டுப் போனாலென்னெ?”

என்ற பெருக்குப்பட்டையில் ஆடை நெய்து தந்த காதலனை, மாலையில் வந்து அந்த ஆடையை அணிவித்துவிட அழைத்து காதலி பாடும் ஒரு நாட்டுப்புறப்பாடல். வைத்திய பரிபாடை, ஆயுர்வேத பாராவாரம் போன்ற நூல்கள் பெருக்குமரத்தை பூரிமரம், பப்பரப்புளி, யானைப்புளியமரம் என்ற பெயர்களால் தமிழர் அழைத்ததைச் சொல்கின்றன.

நீரை மட்டுமின்றி, பனைமரம் போல் உண்ணும் உணவையும்  அள்ளிக் கொடுத்துள்ளன பெருக்குமரங்கள். பெருக்கு இலையைக் குழம்பாக, வறையாகச் சமைத்துச் சாப்பிட்டிருக்கின்றனர். இலையைக் காய வைத்து இடித்து அரிசிமாவுடன் கலந்து களியாகவும் பிட்டாகவும் உண்டனர். பெருக்கம் பழத்தின் உள்ளே இருக்கும் பழுப்புநிறச் சதையை உண்டும், சாறு பிழிந்து சாற்றைக் குடித்தும், அச்சாற்றைப் புளிக்க வைத்து மதுபானமாகவும் அருந்தினர். கிளைகளில் இருந்து கிடைத்த கொம்புத்தேனையும் மதுவாகக் குடித்தனர். பழத்தின் சதையைக் காய வைத்து மாவாக்கி, மழைக்காலத்திற்காகச் சேகரித்து வைத்து ஒடியல் மாப் போல பாவித்தனர்.

வாய்மூடாமல் அந்த அதிசயமரத்தின் வரலாறு கேட்டு முடிக்கையில் அந்த மரத்தின் மீதான மதிப்பு இன்னும் கூடியிருந்தது. ‘மறந்தான் மறந்தான்… ஏன் இம்மரத்தை எல்லா இடங்களிலும் பரவலாக்க மனிதன் மறந்தான்?’ என்று மனதில் எழுந்த கேள்வியுடன், ஏதோ குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்க, “வாவ்… வாட் அ பியூட்டிஃபுல் ட்ரீ!” என்று மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்த அந்த ரஷ்யக் குடும்பம் கண்கள் விரித்து வியந்து வியந்து தடவிப் பார்த்தது. சுற்றுலா வந்திருந்த ஆறு பேர் கொண்ட மொத்தக் குடும்பமும் ஒருவர் கைகளை ஒருவர் கோத்துக்கொண்டு மரத்தைச் சுற்றி நின்றது. அப்படியும் பாதி மரத்தைக்கூடத் தொட முடியவில்லையென்றதும், மீண்டும் வியப்பும் சிரிப்புமாக மரத்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். 733 வயதாகும் அந்தப் பெருக்குமரம் இன்றும் உலகெங்கும் இருந்து வரும் சுற்றுலாவாசிகளைக் கவர்ந்து வரலாற்று ஆவணமாக, அமைதியாக நின்றுகொண்டிருக்கிறது.

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். இந்தத் தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரிக்கிறார்!