துலங்காத மர்மங்கள் 3
அந்த மே மாதத்திலும் பனி ஸ்வெட்டரைக் கிழித்து, உடலுக்குள் நுழைந்து எலும்பை உலுக்கியது. இலங்கையின் மிக உயரமான இடத்தில் பயணப்பட்டுக் கொண்டிருந்தோம். ஆங்கிலேயர்களால் ‘சின்ன இங்கிலாந்து’ (Little England) என்று அழைக்கப்பட்ட மத்திய மாகாணமான நுவரேலியாவில் இயற்கை வளம் நிரம்பிக் கிடக்கிறது. அதனாலேயே ஆங்கிலேயர்களின் உல்லாசப் பிரயாணத்திற்கும், ஓய்வெடுப்பதற்கும், வர்த்தக மையத்திற்குமான இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். கடல் மட்டத்திலிருந்து 1500 முதல் 8000 அடி உயரம் வரை இருக்கிறது. அடர்ந்த வனமும் நிறைந்த தேயிலைத் தோட்டமும் கண்ணெட்டும் தூரம் வரை பசுமையைப் போர்த்தி கண்களுக்குக் குளிர்ச்சியளிக்கின்றன. அந்த அடர்வனத்திற்குள் சோகம் ததும்பும் கதையொன்று புதைத்து கிடந்தது. அதை நோக்கியே எங்கள் பயணம் தொடங்கியிருந்தது. உயர்ந்த மலையும் கார்மேகமும் சிலீர்த் தூறலும் குளிர்காற்றும் அருவியும் நீரோடையும் என ஆனந்தமாக இருக்கிறது பயணம்.
‘ராமாயணபூமி’ என்று சொல்லுமளவிற்கு ராமாயணக் கதையின் பல்வேறு காட்சிகளுக்கான தடங்களை இலங்கையின் பல்வேறு இடங்களில் பார்க்க முடிகிறது. அப்படியான ஓர் இடம்தான் சீதையின் வாழ்வோடு இணைந்து முக்கியத்துவம் பெற்ற அசோகவனம், சீதை ராமனைப் பிரிந்து தவக்கோலத்தில் வாழ்ந்த இடம். அந்த இடம் நோக்கியே அடர்வனத்தைப் பிளந்து செதுக்கப்பட்டிருந்த நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தோம். பெயருக்கேற்றவாறு எங்கெங்கு காணினும் அசோகமரங்கள். இந்த அசோகவனத்தில்தான் ராவணனால் புஷ்பக விமானம் மூலம் தூக்கிவரப்பட்ட சீதாதேவி சிறைவைக்கப்பட்டார் என்கிறது ராமாயணம்.
ராவணனின் காவலில் சீதை இருந்த இடமே ‘சீதாஎலிய’ என்று அழைக்கப்படுகிறது. அவ்விடத்தில் சீதைக்காக கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. மலையும் மரங்களும் சூழ இயற்கையின் அழகோடு காட்சி அளிக்கிறது. கோயில் ஒரு மலைச் சரிவில் உள்ளது. கோயிலுக்குச் செல்லும் வழியெங்கும் சிவப்புப் பூக்கள் மயக்குகின்றன. வெண்மையாக இருந்த மலர்கள் அனுமனின் கைப்பட்ட காரணத்தால் சிவப்பு நிறத்திற்கு மாறின என்பது உள்ளூர் வாசிகளின் குரல்.
ஹக்களை பொட்டானிக்கல் கார்டனிலிருந்து 1 கி.மீ தூரத்திலும், நுவரேலியாவிலிருந்து 5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது சீதா எலிய என்ற ஊர். இந்த ஊரின் நெடுஞ்சாலையை ஒட்டியே அமைந்துள்ளது சீதா அம்மன் ஆலயம். நெடுஞ்சாலையிலிருந்து சில படிகள் இறங்கியே கோயிலுக்குள் செல்ல வேண்டியுள்ளது. வழக்கமாகக் கோயிலுக்கு மலையேறியே அனுபவப்பட்ட நமக்கு, கீழிறங்கி கோயிலைத் தரிசிக்கச் செல்வது விநோதமாக இருந்தது. மிக உயர்ந்த மரங்கள் நிறைந்த மலையின் பின்னணியில் கொள்ளை அழகைக் கொட்டி வைத்திருக்கிறாள் இயற்கை அன்னை.
கோயிலுக்குப் பின்புறம் ராவண அருவி மலையிலிருந்து விழுந்து காட்டாறாக ஓடிக்கொண்டிருக்கிறது. எப்போதும் வீழ்ந்துகொண்டிருக்கும் அருவியின் ஓசையைக் கேட்டபடியே கோயில் மண்டபத்தில் தீட்டப்பட்டுள்ள ராமாயணக் காட்சிகளை ஆழ்ந்து ரசிக்கலாம். ராமன் சீதா கல்யாணம், காடேறல், பொன்மானைப் பிடித்துத் தரும்படி வேண்டுதல், பரதன் பாதரட்சை பெறுதல், புஷ்பக வாகனத்தில் ராவணன் சீதையைக் கவர்ந்து வருதல், அசோகவனத்தில் அனுமார் கணையாழியுடன் சீதையைக் காணுதல் என ராமாயணத்தின் முக்கிய நிகழ்வுகள் அழகு ஓவியங்களாக மிளிர்கின்றன. கண்டு ரசித்ததும் அருகில் அனுமனுக்கு ஒரு சந்நிதி. கோயிலுக்குள் இரண்டு கருவறைகள் உள்ளன. இரண்டிலுமே சீதை, ராமர், லட்சுமணர் காணப்படுகின்றனர். ஆனாலும் சீதாதேவிக்கே பிரதான வழிபாடு. உலகிலேயே சீதையை மூலவராகக் கொண்டுள்ள ஒரே கோயில் இதுதான். இங்குள்ள தல விருட்சத்தில் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை வியந்து ஒரு துணியில் காசுகளைக் கட்டி வைத்து வணங்கிச் செல்கின்றனர்.
இவற்றைப் பார்த்துவிட்டு கீழே ஆற்றை நோக்கிப் படிக்கட்டு வழியே சென்றால், நீரோடையை ஒட்டிப் பாறைகளும் பாறைகளை ஒட்டி அசோக மரங்கள் சூழ்ந்த மலைவனமும் பாறையில் சீதையை அனுமன் சந்தித்து கணையாழி காட்டி தன்னை அறிமுகப்படுத்தும் நிகழ்வுகள் சிற்பங்களாகவும் அருமை. சீதையைத் தேடி இலங்கை வந்த அனுமன் சீதையிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட இடமாக நம்பப்படுவதால் அத்தகைய அழகிய சிற்பங்கள் உருப்பெற்றுள்ளன. இங்குள்ள அருவியில்தான் சீதை நீராடி, கரையிலுள்ள பாறையில் கூந்தலை உலர்த்துவாராம். இந்த ஆற்று நீர் எந்தச் சுவையும் இல்லாமல் இருக்கிறது, காரணம், சிறைவைக்கப்பட்ட சீதையின் கண்ணீர் மற்றும் அவரது சாபமே என்றும் அதற்கும் ஒரு கதை வைத்திருக்கிறார்கள்.
சிலைக்குக் கீழே பாறைகளில் காணப்படும் காலடி போன்ற இரண்டு பெரும் பள்ளங்கள் அனுமனின் காலடிகள் எனச் சொல்லப்படுகின்றன. சீதாதேவியைக் காண அனுமன் வானத்திலிருந்து குதித்த வேளையில் பாறையில் உருவான பள்ளங்கள் என நம்புவதால், அந்தப் பாதங்களில் விளக்கேற்றி வணங்குகிறார்கள். பாறைகளைவிட அனுமன் வலிமையாக இருந்திருக்கிறான் என்பதையே இது உணர்த்துகிறது. ஆங்காங்கே மேலும் சில பள்ளங்கள். அந்தப் பள்ளங்கள் சீதாதேவியின் கண்ணீர் தேங்கியவையாம். இந்த இடத்தில் பழைமையான சிலை ஒன்று கிடைக்க, அதன் பின்பே தற்போது காணப்படும் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது.
அந்தப் பாறைகளை ஒட்டி நீள்கின்றன தொடர் மலைகளும் வனங்களும். மரங்கள் வித்தியாசமாக கருநிறத்தில் காணப்பட, விளக்கம் கேட்டால், சொல்லும் காரணம் திகைக்க வைக்கிறது. தீயிட்ட வாலுடன் அனுமன் திரும்பிச் சென்ற மலையாதலால், அங்குள்ள காடுகள் கறுத்த மரங்களைக் கொண்டதாகவே காணப்படுகின்றனவாம். ஆலயத்தை ஒட்டிய ஒரு பகுதியில் நிலமும் மண்ணும் கருமையாகவும் பிற பகுதிகளில் இயல்பான நிறத்திலும் காணப்படுகின்றன. பார்க்கும்போது, சமீபத்தில் எரிக்கப்பட்ட இடம் போலவே தோற்றமளிக்கிறது அந்த நிலங்கள். அனுமனின் வாலில் பட்ட தீ காடுகளை எரித்ததால், அந்த நிலமும் கறுத்துப்போய் விட்டது என்கிறார்கள்.
சீதை தனக்கு ஏற்பட்ட நிலை வேறு யாருக்கும் நடந்துவிடக் கூடாது என்று அருள்பாலிக்கும் ஆலயம் என்று கருதப்படுவதால், உள்ளூர் மக்களின் விருப்பத் தெய்வமாக இருக்கிறாள் சீதை. இந்தியாவிலிருந்து இலங்கை சுற்றுலா செல்பவர்களின் முக்கிய தேர்வாகவும் இருக்கிறது அழகும் ஆச்சர்யமும் நிறைந்த சீதா எலிய. கோயிலுக்குத் தேவையான அர்ச்சகர்கள் தமிழகத்திலிருந்தே செல்கிறார்கள்.
ராமாயணத்தை முதன்முதலில் வால்மீகி எழுதியதும் ‘சீதாயாணம்’ என்றே பெயரிட விரும்பினாராம். ஆனால், சீதையே ராமாயணம் என்று பெயரிடுமாறு வேண்டினாராம். (ஒற்றைக் கோயிலுக்குள் தான் எத்தனை செய்திகள்!) இந்தியாவில் அயோத்தி நகரத்தில் அமைக்கப்படவுள்ள ஸ்ரீ ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகளுக்காக, இங்குள்ள கர்ப்பகிரகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நினைவுச் சின்னம் கடந்த ஆண்டு இலங்கை அரசின் சார்பாக இந்திய அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது கொசுறுச் செய்தி.
ராமாயணம் புனைவா அபுனைவா என்பதில் பல வாதங்கள் வைக்கப்பட்டாலும் இலங்கையில் ராமாயணம் கதை நடந்ததாகப் பல தடங்களைக் காட்டுகிறார்கள். ராவணன் அருவி, ராவணன் வெட்டு, தென்கிழக்கு கடற்கரைக் கோயிலாக இருக்கும் ராவணன் கோட்டை, சீதா எலிய, மலிகடென்னா, ராமராசாலா, சீத்தாவாகா, கெலனியா ராவணன் குகை என்று நீளும் இவ்விடங்கள் அனைத்தும் இந்தத் தீவெங்கும் விரவிக்கிடக்கின்றன. புராணங்களும் காப்பியங்களும் தோன்றியபின் மனிதன் இடங்களையும் நிகழ்வுகளையும் காப்பியங்களோடு தொடர்புபடுத்தி தங்களது நம்பிக்கைக்கு வலு சேர்த்திருக்கலாம்.
300 வகையான ராமாயணங்களில் வெவ்வேறு கதைகள் உண்டு என்று கூறப்படுவது ஒருபுறமிருக்க, தமிழ் மன்னன் ராவணன் வரலாற்றுத் திரிபுகளால் கொடுங்கோலனாகச் சித்தரிக்கப்பட்டு, அரக்கனாக்கப்பட்டு விட்டான் என்ற பெருங்குறையொன்றுடன் இருக்கிறார்கள் இலங்கைத் தமிழர்கள். இந்த ஆலயத்தின் வடக்கே மிகப்பெரிய மலை ஒன்று உள்ளது. அதன் உச்சியில்தான் ராவணன் கோட்டையும் அரண்மனையும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அருகிலிருந்த ஒருவர், “மலையின் முன் பகுதியைப் பாருங்கள் அனுமனின் முகம் போலவே இருக்கும்” எனக் கூற, உற்று நோக்கினேன். எந்நேரமும் சலசலத்துக்கொண்டிருக்கும் அருவியை நோக்கியவாறு காலங்களையும் நிகழ்வுகளையும் மர்மங்களையும் தனக்குள் புதைத்துக்கொண்டு சலனமற்று இருந்தது அந்த மாமலை.
(தொடரும்)
படைப்பாளர்:
ரமாதேவி ரத்தினசாமி
எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.