“தாமஸ் ஆல்வா எடிசன் பல்பை கண்டுபிடிச்சார்”… இதையேதான் நமக்கு பல பத்தாண்டுகளாக அறிவியல் நூல்கள் சொல்லிக்கொண்டு இருக்கின்றன. ஆனால் பல கோணங்களில் எடிசனை அணுகி, அவரைப் புரிந்துகொள்ள முற்பட்டால், அவர் ஒரு முன்னோடி, ட்ரென்ட்-செட்டர் எனப் புரிந்துகொள்ளலாம்.
உலகின் முதல் நெருக்கமான வாய் முத்தக் காட்சியை துணிச்சலாக திரைப்படமாக எடுத்தவர் எடிசன்! இதை எந்த அறிவியல் நூலும் நமக்கு சொல்லித்தருவதில்லை. பெரும்பாலும் மனித உடல்சார்ந்த அன்பை வெளிப்படுத்தும் முறைகளான முத்தம், அணைப்பு போன்றவற்றை ‘ஐயே’ என்ற அசூயையுடன் அணுகவே உலகம் நமக்கு சொல்லித்தருகிறது. போலவே அறிவியலாளர்கள் எல்லோரும் புனித பிம்பங்கள். எடிசன் என்றதும் நம் மனதில் வரும் பிம்பம் குண்டு பல்பை நோண்டிக்கொண்டிருக்கும் முதிய நபர் மட்டுமே. அவர் இந்தப் புரட்சியை முன்னெடுத்தார் என்பதை வரலாறு நமக்கு அதிகம் சொல்லாமல் விடக்காரணம், அவருக்கு கட்டப்பட்டிருக்கும் ‘புனித பிம்பம்’ உடைந்துவிடும் என்பதால்தான்!
சினிமாவில் ‘சுடப்பட்ட’ முதல் முத்தத்துக்கு எப்படி எடிசன் காரணமானார்?
1862ம் ஆண்டு கனடாவின் ஒண்டாரியோ நகரில் பிறந்த மே இர்வின் என்ற பெண்மணி, சிறந்த பாடகி. அந்தக் காலத்து நாடக மேடைகளுக்கு ஏற்ற குரலாக அவரது குரல் மிளிரவே, அவரது தாய், மகளுக்கு பாடவும் நடிக்கவும் பயிற்சி தந்தார். 21 வயதில் தன் முதல் மேசை நாடகத்தில் மே இர்வின் காமெடியென்னாகத் தோன்றினார். 1880களில், தன் 25 வயதில், வாரம் 2500 டாலர் ஊதியம் பெறும் நடிகையானார்! லண்டன் உள்ளிட்ட பெருநகரங்களில் நாடகங்களில் தலைகாட்டினார். பாடல்கள் எழுதினார், இசையமைத்தார், பாடினார்.
1880களில் கணவர் இறந்துபோக, மே இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். 1895ம் ஆண்டு பிராட்வே ஷோவான ‘விடோ ஜோன்ஸ்’ஸில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் மே இர்வின், தாமஸ் எடிசனின் கண்ணில் பட்டார். நாடகத்தின் இடையேவந்த மே மற்றும் நடிகர் ஜான் ரைஸ் இருவரும் பங்கேற்கும் முத்தக்காட்சியை வெகுவாக ரசித்த எடிசன், அதைத்தான் கண்டுபிடித்த ‘எடிசன் கினெடோஸ்கோப்’ திரையில் படமெடுக்க ஆசை கொண்டார். அப்போது பொது இடங்களில் முத்தம் கொடுப்பது குற்றமாக இருந்தது, அவமானகரமாகப் பார்க்கப்பட்டது!
‘தி கிஸ்’ என பெயரிடப்பட்ட இந்தக் குட்டித் திரைப்படம் வெளியானதும், அமெரிக்காவில் பெரும் புயலைக் கிளப்பியது. “அது எப்படி ஒரு பெண் ஆணை திரையில் முத்தமிடலாம்?” என்பதில் தொடங்கி, படத்தைத் தடைசெய்ய வேண்டும் எனக் கோருவது வரை அமெரிக்க கலாச்சாரக் காவலர்கள் பொங்கினார்கள். எடிசன் சட்டையே செய்யவில்லை.
சற்றே பூசின உடல்வாகு கொண்ட மே இர்வினை, ‘அசிங்கமாக இருக்கிறார்’ என்று நாளிதழ்கள் தலையங்கம் எழுதின. ‘மோசமான முத்தம்’ என்ற விமர்சனம் எழுந்தது. அதே சமயம், ஆதரவும் பெருகியது. அடுத்தடுத்து முத்தக்காட்சிகள் படமாக்கப்பட்டன. மே இர்வின் இதன் மூலம் புதுப் புகழடைந்தார்; நிறைய நடித்தார், சம்பாதித்த பணம்கொண்டு கிளேடன் பகுதியில் பெரும் பங்களா ஒன்றை வாங்கினார். முதலீடு செய்த பணத்தில் தீவு ஒன்றை வாங்கி, பெரும் முதலாளியாக வாழ்ந்து மடிந்தார்.
இன்றும் உலகின் முதல் சினிமா முத்தக்காட்சி மக்களால் பேசப்படுகிறது. முத்தம் காமத்தில் மட்டும் வருவதல்ல, அப்படி காமமாகப் பார்க்கப்பட்டாலும், வெளியிடங்களில் முத்தமிட்டால், அது முத்தமிடுபவர்களின் தனிப்பட்ட தேர்வு என நாம் நினைப்பதில்லை. அவர்கள் முத்தத்துக்குள் நம் மூக்கை நுழைத்து, ‘கலி முத்திடுச்சு’ என்கிறோம்! கலாச்சாரக் காவலர்கள், ‘உலகமே கெட்டுப்போச்சு’ என்று புலம்பும் அளவுக்கு ஒரு முத்தம் மோசமானதும் அல்ல. அன்பைப் பறிமாறிக்கொள்ளும் வழி, அவ்வளவே.
பொது இடங்களில் ‘டீசன்சி’ இல்லை என்று முத்தம், அணைத்தல் போன்றவற்றை வெறுப்புடன் பார்த்த அமெரிக்க சமூகத்தை, நூற்றாண்டுக்கு முன்பு ‘கொஞ்சம் திருந்துங்க சார்’ என்று புத்தி புகட்டிப் படம் எடுத்தவர் எடிசன். இன்று நமக்கு எத்தனை எடிசன்கள் வந்தாலும், நாம் தூய்மைவாதம் பேசி, ‘கலாச்சாரம் காப்போம்’ என அவர்களையும் கல்லால் அடிப்போம் தானே? பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் பிரச்னை இல்லை, முத்தமிட்டால் தவறா? Is it right to piss in public, but not to kiss? சிந்தியுங்கள்… முத்தநாள் வாழ்த்துகள்!