தோழியொருவர் மனச்சோர்வுடன் தொலைபேசியில் பேசினார். இன்னெதென்று தெரியாத வெறுமையும், மனச்சோர்வும் இருப்பதாக பகிர்ந்து கொண்டார். ஒரு நாய்க்குட்டி வாங்க ஆசைப்படுவதாகச் சொன்னார். ” வாங்குங்க” என்றேன். ” எங்க சின்ன வீட்டில் வளர்க்கற அளவுக்கு உள்ள ஒரு நாய்க்குட்டியைக் கண்டுபிடிச்சுட்டேன், அந்தக் குட்டி கொள்ளை அழகு, எனக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனா…” என்று இழுத்தார்.

என்ன பிரச்சனை என்று கேட்டேன். பணம் கொடுத்து வாங்க வேண்டியிருப்பதாகச் சொன்னார். ” பணம் இல்லையா?” விசாரித்தேன்.” இருக்குப்பா” என்றார். ” அப்புறம் என்ன தயக்கம்?”. ” இந்த கொரோனா காலத்துல, நிறைய பேர் பணம் இல்லாம ரொம்ப கஷ்டப்படுறாங்க. நாய்க்குட்டி வாங்குற பணத்தை அவங்களுக்கு தரலாம்லன்னு மனசு சொல்லுது… இப்ப இந்த நாய்க்குட்டி உனக்குத் தேவையான்னு குற்றவுணர்வா இருக்கு… ஆனா, இதுவரைக்கும் நான் எனக்குன்னு எதுவும் வாங்கினது இல்ல, பெரிசா ஆசைபட்டதோ, செலவழிச்சதோ இல்ல… அதனால நா ரொம்ப ஆசப்படற இதைக்கூட எனக்கு செஞ்சுக்க முடியலைன்னு மனச்சோர்வாவும் இருக்கு…”, என்று கூறினார்.

Photo by Richard Brutyo on Unsplash

” உங்க மகளோ, அப்பாவோ இதே நாய்க்குட்டியை வாங்கிக் கொடுக்கச் சொல்லி கேட்டா என்ன செய்வீங்க?” என்று கேட்டேன். ” உடனே வாங்கிக் குடுத்திருப்பேன்”, என்று பதிலளித்தார். ” உங்க கிட்ட மட்டும் ஏன் இவ்வளவு கடுமையா இருக்கீங்க? உங்க மேல ஏன் இவ்வளவு விமர்சனம்? உங்க மேலயும் கொஞ்சம் பரிவையும், அன்பையும் காட்டுங்கப்பா. உடனே அந்த நாய்க்குட்டியை வாங்கிடுங்க”, என்று ஆலோசனை சொன்னேன்.

அவர் மட்டுமல்ல, நம்மில் பெரும்பாலானோருக்கு சுயபரிவு (Self-compassion) இருப்பதில்லை. சிலருக்கு இந்த சொல்லே புதிதாகக் கூட இருக்கலாம். நம் குடும்பத்தினர், நண்பர்கள் ஏன் முன்பின் தெரியாவர்களிடம் கூட நம்மால் பரிவுடன் நடக்க முடிகிறது. ஆனால், நம்மீது நமக்கு பரிவு இல்லை. இந்த உலகத்திலேயே நம்மை மோசமாக விமர்சிப்பவர், அதிகமாக நம்மீது கோபப்படுபவர், தயவுதாட்சண்யமின்றி குற்றம் சாட்டுபவர், குறை சொல்பவர், குற்றவுணர்வுக்கு ஆளாக்குபவர், ஆத்திரப்படுபவர், திட்டுபவர்… யாரென்று பார்த்தால்… அது நாமே தான். ஆம், நம்மீது குறைந்தபட்ச பரிவைக்கூட நாம் காட்டுவதில்லை. அது, சுயநலம் என்றும், நம்மைவிட அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவதுதான் சிறந்தது என்றும், தப்புத்தப்பாக இந்த சமூகம் நமக்கு சொல்லித் தந்திருக்கிறது.

ஆண் பெண் இருபாலருக்கும் இது பொருந்தும். என்றாலும், வீட்டில் அனைவரின் தேவைகளையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு (Care-givers) பெண்கள் மீது சுமத்தப்பட்டிருப்பதால், அவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

ஆமாம், சுயபரிவு என்றால் என்னங்க ? நீங்கள் என்ன செய்தாலும், செய்யாவிட்டாலும் உங்களை நீங்களே பரிவுடன் நடத்துவதுதான்.

அலுவலகத்தில் புதிதாக ஒரு வேலையை எடுத்துச்செய்கிறீர்கள், சரியாகச் செய்யவேண்டும் என்று முனைப்புடன் உழைக்கிறீர்கள். ஆனால், ஒழுங்காக வரவில்லை, சொதப்பிவிடுகிறீர்கள். யாரும் திட்டவில்லை, கோபப்படவில்லை, ” பரவாயில்லை, அடுத்தமுறை பார்த்துக் கொள்ளலாம்”, என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள். ஆனால், நீங்கள் என்ன செய்வீர்கள்? ” இந்த சின்ன வேலையைக் கூட உனக்கு செய்யத் தெரியலை, சரியான முட்டாள் நீ, தெரியாட்டி யாருகிட்டயாவது கேட்டு செய்திருக்கலாம், இப்படி சொதப்பிட்டயே, அவங்கெல்லாம் என்ன நெனப்பாங்க, உனக்கு அறிவேயில்ல”, இப்படியெல்லாம் உள்ளுக்குள்ளேயே திட்டிக் கொண்டிருப்பீர்கள். குறைந்தது இரண்டு நாள்களுக்காவது இது தொடரும்.

வீட்டில் புதிதாக ஒரு ஸ்வீட் செய்திருப்போம். எதிர்பாராமல் அடிப்பிடித்து, கருகிவிடும். குடும்பத்தினர், ” பரவால்ல விடு, அடுத்தவாட்டி பாத்துக்கலாம்”, என்று சமாதானப்படுத்தியிருப்பார்கள். ஆனால், நமக்குத்தான் பொறுக்காது.” சே.. இப்படி ஊத்திக்கிச்சே. கால்கிலோ நெய்யும், சர்க்கரையும் வேஸ்ட்டா போச்சே, செய்யாமலே இருந்திருக்கலாம், அப்படி என்ன கவனமில்லாத்தனம், ஒரு வேலை உனக்கு உருப்படியா செய்யத் தெரியுதா?” என்று உள்ளுக்குள் பொருமிக் கொண்டே இருப்போம்.

நமது குறைகளை, imperfections-ஐ ஏற்றுக்கொண்டு நம்மை கனிவுடன் தட்டிக்கொடுப்பது, அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் சுயபரிவு. அலுவலகத்தில் நண்பரான உங்கள் சகஅலுவலர், அதே வேலையை செய்து, சொதப்பிவிட்டு, வருந்தினால், ” பரவால்ல விடுப்பா, இப்பதான புதுசா செய்யுறே, தப்பு வரத்தான் செய்யும். அதை சரிபண்ணிடலாம். அடுத்த தடவை தப்பு வராம பாத்துக்கலாம், இது ஒரு பெரிய மேட்டரா?” என்று சொல்வோம்தானே? மகனோ, மகளோ, கணவரோ, தம்பியோ, தங்கையோ, ஸ்வீட் செய்யப் போய், கருக்கிவிட்டு, ” எல்லாத்தையும் வேஸ்ட் பண்ணிட்டனே”, என்று கண்ணைக் கசக்கினால், ” புதுசா செய்து பார்க்கிறேன்னு நீ முயற்சி பண்ணியிருக்கிறதே பெரிய விசயம், இந்த முறை சரியா வராட்டி என்ன, அடுத்த முறை சூப்பரா செஞ்சு கலக்கிட மாட்டே, டோண்ட் ஒர்ரி”, என்று அன்போடு அணைத்துக் கொள்ளமாட்டோமா? இதே பரிவை நமக்கு நாமே கொடுத்துக் கொள்வதுதான் சுயபரிவு !

தினந்தோறும், நம்மைப் பற்றி நாம் எடை போட்டுக் கொண்டே இருக்கிறோம். நாம் எதிர்பார்த்தபடி, நம் வேலைகளை செய்து முடித்தால், நம்மை பாராட்டிக் கொள்கிறோம். ஒரு வேளை செய்து முடிக்கவில்லையென்றால் உடனே, ” நீ எதுக்கும் லாயக்கில்ல, உருப்படியாக எதுவும் செய்யத் துப்பில்ல”, என்று மனதிற்குள்ளாக திட்டிக் கொள்கிறோம், நம்மை காயப்படுத்திக் கொள்கிறோம். ஒவ்வொரு நொடியும், முன்முடிவுகளுடன் நம்மை மதிப்பிட்டுக் கொண்டே இருக்கிறோம். நமது ஒவ்வொரு செயலையும், ‘இது நல்லது’, `அது மோசம்’ என்று தராசில் அளந்து கொண்டே இருக்கிறோம்.

Photo by Tasha Jolley on Unsplash

இப்படிச் செய்வதால் என்ன லாபம் ? நம்மைக் குறை சொன்னால், அதை சரிசெய்து மேலும் மேம்படலாம், முன்னேறலாம் என்பது நமது எண்ணம். ஆனால், இது நம்மை பின்னோக்கித்தான் இழுக்கிறது என்கிறார் கிரிஸ்டின் நெஃப் தனது `செல்ஃப்-கம்பேஷன்’ (self-compassion) நூலில். நம்மை நிறைகுறைகளுடன் ஏற்றுக் கொண்டு, சுயபரிவுடன் அரவணைத்துச் செல்வது தான் உள்ளார்ந்த வளர்ச்சியை நோக்கிச் செலுத்தும் என்றும், நம் மனதை அமைதிப்படுத்தி, செயல்திறனை பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் சொல்கிறார். மட்டுமல்ல, சுயபரிவுடன் உள்ளவர்களால்தான் சகமனிதர்கள் மீது முழுமனதுடன் அன்பு செலுத்த முடியும் என்கிறார்.

நீங்கள் உங்கள் மீது பரிவு காட்ட மற்றவர்களைவிட `சிறப்பாக’ (உங்கள் மதிப்பீட்டில்) செயல்பட வேண்டும் என்ற அவசியமில்லை என்பதை கிரிஸ்டின் சுட்டிக்காட்டுகிறார். எல்லாரும் எல்லா பணிகளிலும் சிறந்து விளங்குவது இயலாத காரியம், சில வேலைகளில் நாம் சூப்பர் என்றால், சிலவற்றில் சராசரியாகத்தான் இருப்போம். சூப்பரும், சராசரியும் கலந்த கலவைதான் நாம். ஆனால், இந்த யதார்த்தத்தை உணராமல், எல்லாவற்றிலும் சூப்பராக இருக்க ஒவ்வொருவரும் போராடுகிறோம், அதில் வெற்றி பெறமுடியாமல் தவிக்கிறோம், இறுதியில், இயலாமையால் நம்மை நாமே காயப்படுத்திக் கொண்டு, வெறுப்புணர்வால் வெதும்புகிறோம். நம்மால் ஒரு விசயத்தை செய்ய முடிந்தால் நம்மைக் கொண்டாடுவதும், முடியவில்லை என்றால் வெறுப்பதும் என்ன நியாயம்?

வேலைகளுக்கு மட்டுமல்ல, நாம் தவறு செய்யும்போது நம்மை மன்னிக்கவும் சுயபரிவு உதவுகிறது. தவறு செய்வது மனித இயல்பு. அதை மன்னித்து திருத்திக் கொள்வதை விடுத்து, நம்மேல் கோபப்படுவதாலும், குற்றவுணர்வு கொள்வதாலும் எந்தப் பயனும் இல்லை. நம்மை மன்னிக்கும் போதுதான், பிறரையும் மனதார மன்னிக்க முன்வருகிறோம்.

எந்த மோசமான சூழலிலும் `இட்ஸ் ஓகே டியர், இது எவ்வளவு கடினமானது என்பது புரிகிறது’ என்று நம்மை நாமே தேற்றிக் கொண்டு அன்பு செலுத்தினால், விரைவாக அதிலிருந்து மீளமுடியுமென்று கிரிஸ்டின் நெஃப் கூறுகிறார். Self-compassion-க்கும், Self-esteem-க்கும் உள்ள நுணுக்கமாக வேறுபாட்டை விவரிக்கும் விதம் அற்புதம்.

கிரிஸ்டின் நெஃப் சுயபரிவு குறித்து மேற்கொண்ட நீண்ட ஆராய்ச்சியின் விளைவே செல்ஃப் கம்பேஷன் என்ற இந்த அருமையான நூல். இதை அமேசானில் வாங்கலாம். கிண்டிலிலும் இருக்கிறது.

சுயபரிவின் தேவையை, அற்புதங்களை பல்வேறு கோணங்களில் இது முன்வைக்கிறது. கடந்த ஒரு மாதமாக நிதானமாக வாசித்தேன். கொரோனாவால் நம்மைச் சுற்றியும் ஏற்பட்டுள்ள இழப்புகளையும், குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பையும் எதிர்கொண்டு மீண்டு வர இந்த நூல் பெரிதும் உதவியது. நீங்களும் வாசியுங்கள் தோழர்களே. நிறைய அன்பு!

தொடரும்..

கீதா பக்கங்களின் முந்தைய பகுதி:

படைப்பு:

கீதா இளங்கோவன்

‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.