ஒருவருடைய உணவுப் பழக்கம் எப்படிப் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாக இருக்க முடியும்?

ஒருவருடைய உணவுப் பழக்கம் இன்னொருவருடைய மனதைப் புண்படுத்துவதாக எப்படி மாறும்?

ஒருவருடைய உணவுப் பழக்கம் எப்படி இன்னொருவருக்குத் தீட்டாக மாறும்?

மாமிசம் சாப்பிடுவதால் ஒருவரைத் தீண்டத்தகாதவராக எப்படிக் கருத முடியும்?

உணவுப் பழக்கத்தைப் பொறுத்து ஒருவருடைய நடவடிக்கையை எப்படித் தீர்மானிக்க முடியும்?

சமீபக் காலமாக நடக்கும் நிகழ்வுகள் இப்படிப் பல்வேறு கேள்விகளை நமக்கு எழுப்புகிறது. பல்வேறு மொழி, பண்பாடு, சமூகப் பொருளாதாரத்தைக் கொண்ட இந்தியாவில் ஓர் உணவுப் பழக்கம் மட்டும் பொது சமூகத்தால் தொடர்ந்து வெறுப்பிற்கு உள்ளாகிவருகிறது. விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு உணவு தேர்வை அங்கீகரிப்பதுதானே ஜனநாயகம். ஜனநாயக உரிமைகள் மீறப்படும்போது ஏன் இந்தப் பொதுச்சமூகம் சொரணையற்றதாக இருக்கிறது. ஏனெனில் எல்லார் மனங்களிலும் இறுகிப்போன ’பொதுபுத்தி’ யாரையும் கேள்விகேட்க விடாமல் தடுக்கிறது. சாதிய, பொருளாதார, பாலினத் தடைகளைவிட ’மனத்தடை’ எல்லாரிடத்திலும் தொற்றுநோய் போல் பரவி இருக்கிறது.  

காலங்காலமாக நமக்குச் சொல்லப்பட்ட கதைகள் வாழ்வியலாக மாற்றப்படுகிறது. நாம் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் மாமிசத்திற்கு எதிரான பிரச்சாரம் பொதுச் சமூகத்தின் மனோநிலையில் எதிரான கருத்தியலை உருவாக்கி வைத்திருக்கிறது. சாமிக்கே மாமிசத்தைப் படையலாக வைத்த தமிழ்ச் சமூகம் இன்று வாரம் இரண்டிலிருந்து மூன்று நாட்களாவது விரதம் என்கிற பெயரில் மாமிசத்தைத் தள்ளிவைக்கிறது. 

பண்பாட்டு மேலாதிக்கம்:

உணவுத் தேர்வு காரணமாகக் குடும்பத்தில், பள்ளிகளில், கல்லூரிகளில், பணிபுரியும் நிறுவனங்களில், பொதுவெளிகளில் எனச் சுற்றியுள்ள அனைத்து இடங்களிலிருந்தும் அந்நியப்படுத்தவே இந்தச் சமூகம் எனக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறது. அருவருக்கத்தக்கவர் போல் பார்வையாலேயே புறந்தள்ளிவிடுகிற சக நண்பர்களும் இருக்கிறார்கள். நான் படித்தது முழுக்க அரசுப் பள்ளியில்தான். எனக்கு நினைவு தெரிந்தது வரை மதிய வேளைக்கு மாட்டிறைச்சி கொண்டுபோன நினைவே இல்லை. ஆனால் மீன், கருவாடு, கோழி என மாமிசம் எடுத்துச் சென்றது உண்டு. அதை எல்லாரிடமும் பகிர்ந்து சாப்பிடுவதும் வழக்கம். எங்கள் வீட்டிலும் மாட்டிறைச்சி கட்டிக் கொடுத்ததும் கிடையாது. என் அண்ணனும் மாமா மகளும் தனியார் பள்ளி என்பதால் அந்தக் கருவாடு, மீனுக்கும்கூடத் தடைதான்.

வீட்டில் செய்யப்படும் மாட்டிறைச்சி பள்ளிக்கோ கல்லூரிக்கோ ஏன் கொண்டு செல்லப்படுவதில்லை என்கிற கேள்வி என்னைத் துருவிய தருணங்களில், ”நண்பர்களுடன் சாப்பிடும் போது என்ன கறின்னு சொல்லுவ, இந்துக்களெல்லாம் மாட சாப்பிடமாட்டாங்க. சிக்கன், மட்டன்னா சரி” என்கிற குரல் எனக்கு மதியம் சாப்பாடு செய்து கொடுக்கும் மாமியிடமிருந்து (தாய்மாமன் மனைவி) வரும். மாட்டுகறின்னு நெருங்கிப் பழகும் நண்பர்களிடமும் சொல்ல முடியாத அசெளகரிய நிலைதான் எனக்கும், என் குடும்ப உறுப்பினர்களுக்கும். மாட்டுக்கறின்னு பேச்சு அடிபட்டாலே முகம் சுழிக்கிற, ’நாங்கலாம் அத சாப்பிடமாட்டோம்னு’ உடனடி பதில் கொடுக்கின்ற, சாப்பிட்டா துர்நாற்றம் அடிக்குமென்று நம்புகிறவர்களிடம். நான் மாட்டுக்கறி சாப்பிடுவேன் என்று சொல்லும் தைரியம் அப்போது எனக்கு இருந்ததில்லை.

பல்கலைக்கழக நாள்களில் மாட்டுக்கறி குறித்த பார்வை நண்பர்களிடத்தில் சாதாரணமாக இருந்தது. அது எனக்கு ஒரு செளகரியத்தைக் கொடுத்தது. அப்போதும் என் நட்பு வட்டாரத்திலிருந்த பெண் தோழர்கள் யாரும் சாப்பிடுவதில்லை என்பதால் பெரும்பாலும் குறுகிய ஆண் வட்டார நண்பர்களுடன் சாப்பிடுவதையே வழக்கமாக்கிக் கொண்டேன். சில ஆண் நண்பர்களும் மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கம் குறித்து தங்களது வீடுகளில் ரகசியம் காத்துக்கொள்வர்.

பிரபலமான டிஜிட்டல் பத்திரிக்கை தளத்தில் பணிபுரியும் போது எல்லாரும் சாப்பிடுவதற்காக அமர்ந்தோம். கறி டப்பாவைத் திறந்து வைக்கக்கூட பணிபுரியும் தோழி டப்பாவிலிருந்து ஒரு துண்டை வாயில் எடுத்து வைத்த பிறகு, ’என்ன கறி கா?’ என்றாள். மாட்டுக்கறி என்றேன். ’உடனே சாப்பிடுவதற்கு முன்னேரே சொல்ல வேண்டியதுதானே, நாங்க சாமி கும்பிடுறோம்னு’ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டார். மற்றவர்கள் மாட்டுக்கறி, எல்லாரும் சாப்பிடுறதுதானே என அந்தப் பெண்ணைச் சமாதானப்படுத்தினர். சமாதானம் சொன்னவர்களும் எனது உணவைப் பகிர்ந்துகொள்வதாக இல்லை. எல்லாரும் அவளைச் சமாதானப்படுத்த அந்த இடத்தில் குவிய. என்ன செய்வது என்று தெரியாமல் அந்த இடத்திலிருந்தும் மனிதர்களிடத்திலிருந்தும் அந்நியப்பட்டுப் போனேன். அதைவிட ஒரு சங்கடமான ஒரு சூழலை நான் சந்தித்ததே இல்லை.

பல்கலைக்கழக மாணவியர் விடுதியின் General secretary-யாக இருந்த போது மாதம் ஒரு முறை நிகழ்த்தப்படும் Monthly Dinner நிகழ்விலோ அல்லது வருடம் ஒருமுறை நடக்கும் விடுதி விழாவிற்கு மாட்டுக்கறியைப் பரிந்துரைத்தேன். எங்கள் மேனஜரின் முகம் சட்டென மாறிவிட்டது. ’அதெல்லாம் ஒத்துக்க மாட்டங்க. சமைக்க யாரும் வர மாட்டாங்க, அதெல்லாம் தேவை இல்லாதது. எப்போதும் இருக்குறத, ஏன் புதுசா மாத்தணும்’ என்று ஒரு சமாதானத் தோரணையில் பதில் அளித்தார். இது பற்றி மாணவர் விடுதி பிரதிநிதியிடம் கூறுகையில், ’நானும் மாட்டுக்கறி சாப்பிடுவேன்தான், ஆனால் விடுதியில் சமைப்பதெல்லாம் சாத்தியம் இல்லாதது’ என அவர் பங்குக்குப் பதில் கொடுத்தார்.

9 வருடங்களாக நாங்கள் நடத்தும் ரத்ததான முகாமின் மதிய உணவு விருந்தில் மாட்டிறைச்சியும் இருந்தது. விரும்பிக் கேட்பவர்களுக்குப் பரிமாறப்படும். இதற்கு எதிர்ப்பு வேறெங்கிருந்தும் வரவில்லை வீட்டிலிருந்தே எழுந்தது. அதற்குக் காரணங்களாக உறவுகள் சொன்னது, ’ஒருவருக்குப் பரிமாறும் போது அருகில் இருப்பவர் முகம் சுழிக்கிறார். மேலும் இது தேவையற்றது’ என்கிற வாதத்தையும் முன்வைத்தார்கள். இறைச்சி வகைகளான கோழி, ஆட்டுக்கறி போன்றவை பொதுத் தளத்திற்கு வருவதில் அலட்டிக்கொள்ளாத நீங்கள் (பொதுச் சமூகம்) மாட்டுக்கறி என்று வரும்போது அங்கலாய்ப்பு கொள்வது ஏன்? அசைவத்திற்கும் சைவத்திற்கும் தனித் தனிப் பண்ட பாத்திரங்களைக் கையாளும் இந்துக் குடும்பங்களும் இங்கு இருக்கத்தான் செய்கின்றன.

அரசியல் உட்பட பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் மாட்டிறைச்சி இடம் பெறாதது ஏன்? பிரபலமான தனியார் சமையல் நிகழ்ச்சிகளில் கூட மாட்டிறைச்சி உணவு வகை இடம் பெறாதது ஏன்?

யூடியூப் போன்ற சமூக வலைத்தளத்தில்கூட “Beef Recipe” என்று தேடினால். ’கேரளா பீஃப் சுக்கா’, ’பாய்வீட்டு பீஃப்’ போன்ற தலைப்புகளைக் கொண்ட வீடியோக்களைத்தான் பெரும்பாலும் பார்க்க முடிகிறது.

குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் சமீபக் காலங்களில் பல்வேறு சம்பவங்கள் மாட்டுக்கறி தொடர்பாக நிகழ்ந்திருக்கின்றன. மாட்டுக்கறி சாப்பிட்டு வாய் பேசுறீயா என்று கேட்டு கன்னத்தில் அறைந்திருக்கிறார் கோவையில் ஓர் ஆசிரியர். மாட்டுக்கறி சாப்பிடுறவனுக்குப் படிப்பு எப்படி வரும் என சக மாணவர்கள் முன்னிலையில் திட்டியதில் தென்காசியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் (Antonyraj, 2022).

அவினாசியில் மாட்டிறைச்சி விற்கக் கூடாது எனத் தடை விதித்த வட்டாட்சியரை எதிர்த்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் பேரவை போன்ற பல அமைப்புகள் போராட்டம் நடத்தியதின் விளைவாக வட்டாட்சியர் இடம் மாற்றம் செய்யப்பட்டார் (Vikatan, 2021).

மாட்டிறைச்சி வைத்திருந்த மூதாட்டியைப் பயணச்சீட்டு கொடுக்காமல் பாதி வழியிலேயே இறக்கிவிட்ட நடத்துநர். இந்தச் சம்பவம் வெளியுலகத்திற்குத் தெரியவந்ததும் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் இடை நீக்கம் செய்யப்பட்டனர் (BBC, 2024).

மாட்டிறைச்சியை ஒருவர் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டதற்கு. இது ’தேவையற்ற’ பதிவு என்று சென்னை மாநகரக் காவல்துறை எக்ஸ் தளத்தில் பதில் அளித்தது. இது சர்ச்சைக்குள்ளானதும் தவறாகப் பதிவிட்டுவிட்டதாகப் பதில் கூறியது. இவ்வாறு மாட்டிறைச்சிக்கு எதிரான பல்வேறு நிகழ்வுகள் தமிழகத்திலும் அரங்கேறி வருவது மாட்டிறைச்சிக்கு எதிரான வெறுப்புணர்வு தமிழகத்திலும் முளைவிடுகிறது என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ஓர் உணவு என்பது தனிப்பட்ட நபரின் விருப்பம் சம்மந்தப்பட்டது என்பதைக் கடந்து தீட்டாக, இழிவாக, கும்பல் வன்முறையாக மாறுவது இந்தியாவில் மட்டும்தான். இவ்வாறு பண்பாட்டு ரீதியிலான வெறுப்புணர்வை உருவாக்குவது ஒருபுறம் இருந்தாலும் அரசியல் நிறுவனங்கள் வழி அடக்குமுறையையும் வன்முறையையும் மத்தியில் உள்ள பாஜக அரசு செய்து வருகிறது.

அரச வன்முறை 

சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறை தொடர்பான தரவுகளைச் சேகரித்து வரும் புதுடில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட, The Documentation Of  The Oppressed-யின் (DOTO) தரவுகளின்படி கடந்த 2014 முதல் 2022 ஆகஸ்ட் வரை நடந்த 206 வன்முறைச் சம்பவங்களில் கிறிஸ்தவர்கள், தலித்துகள் உட்பட சுமார் 850 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் அதிகமாகப் பாதிக்கப்பட்டது முஸ்லிம்கள் என அத்தரவு கூறுகிறது.

2019ஆம் ஆண்டு நியூயார்க்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம். மே, 2015ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 2018 வரையிலான காலக்கட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மாட்டிறைச்சி தொடர்பான வன்முறைகள் நடந்துள்ளன என்று பதிவு செய்துள்ளது. இதில் சுமார் 280 பேர் காயமடைந்திருக்கின்றனர். 44 பேர் இறந்துள்ளனர். இதிலும் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள் என்றே அந்தப் புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது (Aljazeera, 2023)

2010ஆம் ஆண்டு முதல் பசு பாதுகாவலர்களால் தாக்கப்பட்டவர்களில் 86% முஸ்லிம்கள் என்றும், மோடி ஆட்சிக்கு வந்த 2014-ஆம் ஆண்டுக்குக் பிறகு இந்தத் தாக்குதல்கள் 97 சதவீதமாக அதிகரித்துள்ளதாக Indiaspend ஆய்வு குறிப்பிடுவதாக ஆய்வாளர் பதிவு செய்கிறார் (Sathyamala, 2018).

மாட்டிறைச்சி விற்பதற்கான தடை 2017ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டபோது தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. மாட்டிறைச்சி சமைத்து மக்களுக்கு வழங்கும் போராட்டத்தைக் கட்சிகள், அமைப்புகள் மேற்கொண்டன. மாட்டிறைச்சி விற்பதற்குத் தடை விதித்த மத்திய அரசை எதிர்த்து சென்னை பெரம்பூரில் உள்ள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் மாட்டிறைச்சி சமைக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது இன்றும் நினைவில் இருக்கிறது. விவசாயிகள், பழங்குடியினர், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட  மக்களின் வாழ்வியல் மற்றும் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்று திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சிறுபான்மை அமைப்புகள் இணைந்து அறிக்கை வெளியிட்டனர். கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா, ஆகிய மாநிலங்கள் மற்றும்  யூனியன் பிரதேசமான புதுச்சேரி அரசுகள் இதற்கு அடிபணிய மாட்டோம் என்கிற நிலை எடுத்திருப்பதைப் போல, தமிழக அரசும் இதனை எதிர்க்க வேண்டுமென இக்கட்சிகள் கோரிக்கை வைத்தன.

கேரளத்திலும் மக்கள் பல்வேறு வகையில் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். குறிப்பாக ட்விட்டர் தளத்தில் ஒருங்கிணைந்த தென்னிந்தியக் கோரிக்கை #drvidanadu #ussi போன்ற ஹேஷ்டேக்குகள் வைரலாகின. இது குறித்து பிபிசியிடம் கூறிய  மலையாளப் பத்திரிகையாளர் சைஃபுதின்: மாட்டிறைச்சி என்பது கேரளாவில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் விரும்பி உண்ணும் உணவாக இருக்கிறது என்றும் அது அவர்களின் வாழ்வில், கலாச்சாரத்தில் கலந்துவிட்ட ஒன்று எனவும் தெரிவித்திருந்தார் (பிபிசி, 2017).

தேர்தல் பரப்புரைகளில் வெறுப்பு பேச்சுகளை மட்டுமே பேசி வந்த பிரதமர் மோடி நவராத்திரி மாதங்களில் எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டன் சாப்பிடுகிறார்கள். இந்திய மக்களின் உணர்வுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள், முகலாய மன்னர்களின் மனநிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள் இருக்கிறார்கள் என்று மாமிச உணவிற்கு எதிரான, முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். வலதுசாரிகள் மாமிசத்திற்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எதிராகத் தொடர்ந்து பேசிவந்தாலும் ஓர் இந்திய நாட்டின் பிரதமர் இவ்வாறு பேசுவது விளிம்புநிலை, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், ஜனநாயகத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

தமிழக பாஜகவின் முன்னால் தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் போன்றோர் மாட்டிறைச்சி சாப்பிடுவது இந்துக்களின் மனதைப் புண்படுத்திவிடும் என்கிற பரப்புரையைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

காங்கிரஸ் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், “நான் Non-vegitarian, எனக்கு பீஃப் பிடிக்கும்” எனக் கூறியதற்கு, பத்திரிகையாளர் சந்திப்பில் பதில் அளித்த தமிழக பாஜகவின் மாநிலத்தலைவர் அண்ணாமலை, தனிநபர் உணவு முறைக்கு எதிராக இளங்கோவன் கூறியதுபோலவும், இது ஒரு சர்வாதிகார முறை என்பதாகவும் கூறினார். மேலும், கமலாலயத்தில் பீஃப் செய்ய உத்தரவிட்டது போலவும், பீஃப் சாப்பிடுவது அருவருக்கத்தக்கச் செயல் போலவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்தியாவில் மட்டும்தான் உணவு அரசியலாக்கப்படுகிறது. மாட்டிறைச்சி சாப்பிடுவது என்பது இந்து மதத்திற்கு, இந்தியாவிற்கு, இந்துக்களுக்கு எதிரான ஒரு கருத்துருவாக்கமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்துக்களிலும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறவர்கள் இருக்கிறார்கள். இந்துக்களில் தங்களை உயர்சாதியினராகக் கூறிக்கொள்ளும் பார்ப்பனர்கள் மட்டுமே உண்பதில்லை. இருப்பினும் பண்டைய இந்தியாவில் அனைத்து சாதியினரும், குறிப்பாக இந்துக்களும் மாட்டிறைச்சியை உண்டனர். பெளத்த மற்றும் சமண மதத்தின் எழுச்சிக்குப் பின்னரே சைவ உணவு என்பது இந்து தர்மமாகப் பார்க்கப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர் (Avenshi Centre for Women’s Studies, 2012).

இந்து சாதிய அமைப்பின் உணவுப் படிநிலை குறித்து அம்பேத்கர் பேசி வந்திருக்கிறார். உணவு குறித்து இந்துக்களிடையே இரண்டு விதமான தடை (taboo) இருந்ததை அவர் சுட்டிக் காட்டுகிறார். ஒன்று இறைச்சி உண்பதற்கு எதிரான தடை (Against meat-eating). இது இந்துக்களை இறைச்சி உண்பவர் (vegetarians) – உண்ணாதவர் (flesh-eaters) என்று இரண்டாகப் பிரித்தது. இரண்டாவது,  மாட்டிறைச்சி உண்பதற்கு எதிரானது (against beef-eating). இது இரண்டுவிதமாக இந்துக்களைப் பிரித்தது, அது மாட்டிறைச்சி உண்பவர் (eat cow’s flesh) – உண்ணாதவர் (who do not). தீண்டாமை கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் முதல் பிரிவு முக்கியம் பெறவில்லை. இரண்டாவது பிரிவு தீண்டத் தகாதவர்களிடமிருந்து தீண்டத்தகுந்தவர்களைக் குறிக்கிறது என்று குறிப்பிடுகிறார் அம்பேத்கர் (Cited by Sathyamala, 2018) . 

சைவ உணவு வகைகளின் மேலாதிக்கம் இன்று பல்வேறு பள்ளி, கல்லூரி விடுதிகள், சமூகம், குடும்பம் என அனைத்து நிறுவனங்களிலும் பொதுபுத்தியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதைதான் சிறுபான்மையினர், தலித்துகளின் உணவு பண்பாட்டை எதிர்க்கும் உணவு பாசிசம் (food fascism) அல்லது culinary apartheid என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் (Masoodi, 2016)

வலதுசாரி அமைப்பாளர்கள், பல அரசியல் தலைவர்கள் பசு ஒரு ’புனித’ விலங்கு என்று வேதங்களில் சொல்லிருப்பதாகச் சுட்டிக்காட்டுகின்றன. எனவே கிறிஸ்தவர்கள், தலித்கள் மற்றும் முஸ்லிம்களை புனிதமாகக் கருதப்படும் விலங்கிற்குத் தீங்கு விளைவிப்பவர்களாகக் கட்டமைக்கின்றனர்( (Siyech & Narain, 2018)

அரசியல் தலைவர்கள் வன்முறையை மூன்று வழிகளில் கொண்டுவருவதாக எல்செரோத் மற்றும் ரீச்சர் வாதிடுகின்றனர். அடக்குமுறை (repressively) மூலமாக வன்முறையைத் தூண்டுவது, கட்டமைப்பு (structurally) ரீதியாக வன்முறையை நிகழ அனுமதிப்பது மற்றும் குறியீடாக (symbolically) அதாவது வரலாற்று ரீதியாக இது போலச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றது என்பதாகச் சித்தரிப்பது (Elcheroth & Reicher, 2017).

இந்தியாவில் சிறுபான்மையினராக இருக்கக் கூடிய மக்கள் இந்து பெரும்பான்மை வாதத்தால் மிகப்பெரிய சிக்கல்களைச் சந்திக்கின்றனர். ஆளும் வர்க்கத்தின் சட்டம், போலீஸ், ராணுவம் போன்ற பலவந்தமான வன்முறைக்கு ஆளாவது ஒரு புறம் இருக்க, சத்தமே இல்லாமல் பண்பாட்டு  ரீதியாகச் சிறுபான்மையின மக்களை மேலாதிக்கம் செய்யும் செயல்பாட்டினை வலதுசாரி அமைப்புகள் செய்துவருகின்றன.

இவ்வாறு அரசியல் மற்றும் பண்பாட்டுத் தளத்தில் மாட்டிறைச்சிக்கு எதிரான பிரச்சாரம் பல்வேறு காலங்களில் பல்வேறு விதமாக வலதுசாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் விளைவாக மாட்டிறைச்சிக்கு எதிரான வெறுப்பு பொதுச் சமூகத்தின் மனோநிலையில் பதியவைக்கப்பட்டிருக்கிறது. மாட்டிறைச்சி உண்பது தீட்டாக, இழிவாகப் பார்க்கப்படுகிறது. எனவே மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காகத் தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் இந்தியாவில் கும்பல் வன்முறைக்கு ஆளாகின்றனர். இஸ்லாமியர்கள் மீது அச்சத்தை உருவாக்குவதன் மூலம்  அரசியல் ஆதாயத்தைத் தேடிக்கொள்கின்றனர். உணவு உள்ளிட்ட பண்பாட்டுத் தளத்தில் இந்து பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிறுவ வலதுசாரி அமைப்புகள் முயற்சிக்கின்றனர்.

இந்துத்துவ சக்திகள் ’பார்ப்பனியக் கருத்துநிலையை’ச் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களை ஒடுக்கும் பாசிசக் கருத்து நிலையாக வளர்த்தெடுத்துள்ளனர். எனவே இந்து பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு எதிரான கருத்துநிலையைப் பண்பாட்டுத் தளத்திலும், அரசியல் தளத்திலும் உருவாக்க ஜனநாயக கட்சிகள், அமைப்புகள் ஒன்றிணைய வேண்டும்.

படைப்பாளர்:

மை. மாபூபீ

சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் மற்றும் தொடர்பில் துறையில் முனைவர்பட்ட மாணவி. அரசியல், சமூகம் பெண்ணியம் சார்ந்த கட்டுரைகளை எழுதிவருகிறார். தீக்கதிர் நாளிதழ், கீற்று, Thenewslite போன்ற இணையதளங்களில் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.