பரபரப்பான காலை நேரம். தன் குழந்தையை 8 மணிக்குப் பள்ளியில் விட்டுவிட்டு அலுவலகப் பேருந்தைப் பிடிக்க ஓடி வந்தார் ராணி. ஏற்கெனவே அவருடன் பணிபுரியும் பெண்கள் நின்று கொண்டிருந்தனர்.
மலர் அன்று உற்சாகமாகப் பேசி கொண்டிருந்தார். “தீபாவளிக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கு ராணி?”
“ஹ்ம்ம், இது ஆடி, இன்னும் ஐப்பசிக்கு 3மாசம் இருக்கு. என்ன அக்கா இப்ப அதுக்கு?”
“மலர், தீபாவளி எப்ப வரும்னு இருக்கு? டபுள் போனஸ் கிடைக்கும் பிள்ளைங்களுக்கு நல்ல துணிகள் வாங்கலாம். என் பையன் பள்ளிக்கூட யூனிபார்ம் வேற கிழிஞ்சிட்டு. அதான் கேட்டேன் மலர்.”
“ஆமா அக்கா, துட்டுக்காகத்தான ஓடிட்டு இருக்கோம்… இன்னும் 3மாசம்தான் வேலை இருக்கும். அப்புறம் 2 மாசம் லீவு விட்ருவாங்க. தீபாவளி நேரம் நிறைய வெடியைத் தயாரிச்சு மத்த மாநிலத்துக்கு அனுப்பணும்ல. வேலைய போட்டுப் பின்னி எடுத்துடறாங்க நம்மள.”
“ஆமா, மலர் நேத்து அந்த ஓனர் ஏழுந்திரிக்க விடல, சாப்பிடக்கூட 15 நிமிஷம்தான் குடுத்தார் ராணி.
அதுவும் நேத்து வச்ச கரி மருந்து வாடை சாப்பிடவே முடியல.”
“எனக்கும் தான். கை கால் எல்லாம் வலி. காலையில 8மணிக்கு உக்காந்து 6மணி வரை அந்த இடத்துலயே இருந்து குறுக்கு வேற வலி. தூக்கமும் வரல.”
“ஆமா, எனக்கும் தான் தூக்கம் வரல. ஒரே தல வலி மாத்திரை போட்டுதான் படுத்தேன் மலர்.”
“தலைவலி மாத்திரை இருக்கா?” அருகில் இருந்த கருப்பாயி கேட்டார்.
“தினம் அந்த மாத்திரையப் போட்டா, உங்க கிட்னி போயிரும்” என்றார் ராணி.
“மாத்திரைய போடலான வேலைக்கு வர முடியாது. இந்த பட்டாசு வேலையை விட்டா வேற என்ன இருக்கு நம்ம ஊர்ல?”
“நம்மகூட வேலை பாக்குற எல்லார் நிலையும் இதுதான். ஒரு 150 ரூபாய்க்கு இந்தக் கஷ்டம் பட வேண்டி இருக்கு” என்றார் ராணி.
புதிதாக வேலைக்கு வந்த ஒரு பெண்ணைப் பார்த்து மலர், “அக்கா, நீங்க கம்பெனில எந்த இடத்துல வேல பார்க்குறீங்க” என்று கேட்டார்.
“நான் இன்னக்கிதான் புதுசா வரேன். நிறைய பிரிவு இருக்கா?”
“அக்கா திரி சுற்று, குண்டு சுற்று, சரம் பின்னல், கம்பி மத்தாப்பு, கரி மருந்து வைக்கிறது,பொட்டு வெடி தயாரிப்பு, ஃபேன்சி வெடி, ராக்கெட் வெடி ரோல் சுற்று இப்படி நிறைய பிரிவு இருக்கு” என்றார் மலர்.
“ஆனால், எல்லாருக்கும் ஒரே சம்பளம்தான். நீங்க புதுசுல ஒரு நாள் முழுதும் வேலை பார்த்தீங்கன்னா 50 ரூபா கிடைக்கும். அப்புறம் அதிகமா செய்ய முடியும்.”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது தூரத்தில் புகை மண்டலமாகத் தெரிந்ததைக் கவனித்தனர்.
“என்ன புகை?”
ஏதோ ஒன்று பொத்தென்று இவர்கள் அருகே விழுந்தது. எல்லாரும் அலறினர்.
“பக்கத்து கம்பெனில பட்டாசு வெடிச்சிடுச்சு” என்று ஒருவர் கத்திக் கொண்டே வந்தார். வெடித்துச் சிதறிய உடலின் ஒரு பகுதிதான் தங்கள் முன் விழுந்தது என்று தெரிந்துகொண்டனர்.
“நிறைய பேர் இருந்தாங்களா?” என்று மலர் பதற்றத்துடன் கேட்டார்.
“ஆமா மலர்.”
“எந்த வெடி?”
“பொட்டு வெடி.”
“ஏன் அக்கா பொட்டு வெடி கம்பெனி வெடிச்சா கூட இவ்வளவு பாதிப்பு வருமா?”
“ஆமா மலர், வெடி சின்னதோ பெருசோ லேசா ஒன்னு ஒன்னு ஒரசுனா போதும். அப்புறம் அவ்வளவுதான் போய்ச் சேர வேண்டியதுதான்” என்றார் ராணி.
“அது மட்டும் இல்ல அக்கா, அப்படியே பொழச்சாலும் வாழறது கஷ்டம்தான். அந்த வெடி மருந்து காயம் ஆற ரொம்ப காலமாகும்.”
எல்லாரும் பேசிக்கொண்டிருக்கும்போது, அலுவலகப் பேருந்து வந்தது.
“வருஷா வருஷம் ஏதாவது ஃபயர் ஆபீஸ் வெடிக்கிறது சாதாரணம்தானே? என்ன ஆனாலும் பொழப்பைப் பார்க்கணும்.”
பேருந்து நகர்ந்து செல்ல ஜன்னலோரம் அமர்ந்திருந்த மலரின் கண்களில் கண்ணீர் பெருகியது.
அரசு அனுமதியுடன் செயல்படும் தொழிற்சாலைகள் ஒருபுறம் என்றால், அனுமதியில்லாத பட்டாசுத் தொழில்கள் எத்தனை?
ஏழைகளின் உயிர்களுக்கு இங்கு மதிப்பு ஏது?
நட்சத்திரா
ஆய்வக நுட்பனராக மருத்துவமனையில் பணிபுரிகிறேன். இதுவரை புத்தக வாசிப்பு மட்டுமே கொண்டிருந்தேன். இது என்னுடைய முதல் எழுத்துப் பணி.