அப்பாக்கள் அதிகம் பாடப்படாதவர்கள், எழுதப்படாதவர்கள், கொண்டாடப்படாதவர்கள், அதை கண்டுகொள்ளாதவர்களும்கூட. வரும் ஜுன் 18 தந்தையர் தினம் என்று கண்டிப்பாக அப்பாக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான்.

‘உலகில் ஒரே ஒரு சிறந்த அப்பாதான், அவர் கண்டிப்பாக எல்லாப் பெண்களுக்கும் கிடைத்த அப்பா’ என்கிற வரிகளின் உண்மை உணர்ந்த மகளாக இதை எழுதுகிறேன். ‘உன் அப்பா மாதிரியே நீ’ என்கிற கிரீடத்தைப் பெருமையுடன் சூடிக்கொள்ளக் கிடைத்த இளவரசியாக எழுதுகிறேன்.

எவ்வளவுதான் அம்மாவிடம் சண்டையிட்டாலும் அன்புடன் இருந்தாலும், எல்லாம் பகிர்ந்து கொள்ள முடிந்தாலும், அவர்களும் பக்கபலமாக இருந்தாலும், பெண் பிள்ளைகளுக்கு அப்பாவையே அதிகம் பிடித்துப் போகிறது. உலகம் இப்படி என்று அம்மா அவர்களைக் கண்டிப்புடன் வளர்க்க, அப்பாக்களோ உலகம் எப்படியும் இருந்துவிட்டுப் போகிறது, இவள் என் இளவரசி என்று அவளை பாராட்டி சீராட்டி வளர்க்கிறார்கள். அவர்கள் மனதில் என்றும் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்கிறார்கள் ராஜாவாக.

எதிர்மறை எண்ணங்களும் தாழ்வுமனப்பான்மையும் நிறைந்த அவளின் சின்ன உலகத்தில் அவளுக்குக் கிடைத்த முதல் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் அவள் அப்பாவுடையது. ‘வெற்றி உனக்குத்தான்’ என்று அவள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் போட்டிகளுக்கு முன்னும் புன்னகையுடன் ஆசி வழங்கியது அவள் அப்பா. அவள் வெற்றிகள் பல பெற்றாள். அவளுக்குத் தோசை ஊற்ற கற்றுத்தந்தது அவள் அப்பா தான். அவள் முதல்முறையாக வைத்த உலகின் கேவலமான முட்டைக் குழம்பைச் சாப்பிட்டுவிட்டு, ‘குழம்பு சூப்பர்’ என்று முகம் சற்றும் கோணாமல் சொன்னது அவள் அப்பாதான். அவள் மருத்துவத்துறையில் சேர விரும்பிய போது, “பொம்பிளை பிள்ளைய ஏன் இவ்வளவு செலவு பண்ணி படிங்க வைக்குற, வேற வீட்டுக்குப் போக வேண்டிய பொண்ணு. அவ சம்பாதிச்சு புருசன் வீட்டுக்குதான் குடுக்கப் போறா” என்று சொன்ன ஓர் அத்தையிடம், “பையன் என்ன பொண்ணு என்ன, எல்லாப் பிள்ளைகளும் எனக்கு ஒன்னுதான். பிள்ளைங்க படிக்கணும்னு ஆசைப்பட்டா நான் படிக்க வைக்கப் போறேன்” என்று புன்னகை மாறாமல் பதிலளித்தது அவள் அப்பாதான். அவள் கனவான சொந்த ஊரில் பல் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்றதற்கு உறுதுணையாக அம்மாவும் இருந்தாலும் ஓரவஞ்சனையாக அவள் அப்பாவைத்தான் முதலில் சொல்வாள்.

சிறு வயது முதல் ஓடி ஓடி உழைத்து தானாக முன்னுக்கு வந்து, எப்படி வாழ வேண்டும் என்று அவர்களுக்கு வாழ்ந்து காட்டி, அவர்கள் தேவைகள் கனவுகளை நிறைவேற்ற 60 வயதாகியும் இன்றும் தேனீபோலச் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நடமாடும் வழிகாட்டி அவள் அப்பா. கணினி அறிவியல் தொழில்நுட்பம் என்று எதுவும் அவள் அப்பாவுக்கு அப்பால் இல்லை. கற்றுக்கொள்ளும்போது மாணவராகிறார், அவளுக்கும் அவள் உடன்பிறப்புகளுக்கும் ஆசிரியரான அவள் அப்பா.

அப்பா என்னும் தேவதை. அவள் தோள்மீது கைபோட்டு கதைகள் சொல்லும், தான் வாசித்த புத்தகங்களை அவளுக்குத் தந்து சென்ற ஒரு பெரியப்பா. அவளை காணும்போதெல்லாம் அவளை அன்புடன் அணைத்து, தலையில் முத்தமிடும் ஒரு பெரியப்பா.

சிறு வயது முதல் அவளுக்கு மிகவும் பிடித்த ‘என்றும் மார்க்கண்டேயன்’ என்று அவர்கள் அன்புடன் கூப்பிடும் ஒரு சித்தப்பா. அவள் திறமைகளைப் பாராட்டும் முதல் ரசிகரான அந்தச் சித்தப்பா இவளின் இந்தப் புது முயற்சியைப் பாராட்ட இன்று இல்லையே என்று அவளை மிகவும் வருத்தப்பட வைத்த அந்தச் சித்தப்பா. ஒருவரின் இன்மை எவ்வளவு கடினமானது என்று அவள் உணர்ந்தாள்.

அவளின் சிறந்த நண்பனாக மாறிப்போன அவள் கணவன் தன் அப்பாவைப் பற்றி பேசும்போது, அந்த இன்மையின் வலியை உணர்ந்திருக்கிறாள். “எங்க வீட்டில நான் மட்டும்தான் பார்க்க எங்க அப்பா மாதிரி இருப்பேன். எங்க அப்பா எவ்வளவு திறமைசாலி தெரியுமா? எனக்கு வழிகாட்ட அவங்க இல்லையேன்னு நான் எப்பவும் வருத்தப்படுவேன். நம்ம கல்யாணத்தோட அவங்க இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்” என்கிற ஏக்க வார்த்தைகளில் அவள் நேரில் அறிந்துகொள்ள முடியாமல் போன ஓர் அப்பாவைக் கண்டிருக்கிறாள்.

அவள் நண்பர்கள் எத்தனை பேர் அவள் அப்பாவை அப்பா என்று அழைத்திருப்பார்கள். இவள் எத்தனை நண்பர்களின் அப்பாவை அப்பா என்று அழைத்திருப்பாள்.

தேவதைகள் என்ன செய்யும்?

பாதுகாக்கும்

நண்பனாக இருக்கும்

வழிகாட்டும்

தோள் கொடுத்து உதவும்

அறிவுரைகளாகக்கூட வரும் ஆசிர்வாதங்களை அள்ளி வழங்கும்.

தந்தையர் தின வாழ்த்துகள்!

படைப்பாளர்:

rbt

பி. அனிதா பாலகிருஷ்ணன்

பல்மருத்துவர். சிறுவயதுமுதல் தன் எண்ணங்களை கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைத்தளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகளைப் பெற்றுவருகிறார். மாநில அளவிலான கவிதைப் போட்டி, செஸ் ஒலிம்பியாட், ரங்கோலி போட்டி போன்றவற்றில் பரிசுகளை வென்றுள்ளார். இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர்.