திருமணம் முடிந்து பல வருடங்களாகியும் கர்ப்பம் தரிக்காத பெண்களை நோக்கி உறவுக்காரப் பெண்கள், “அவ வயிற்றில் புழுப் பூச்சிகூடத் தங்கிறதில்லை” என்று கூறுவதுண்டு. மனித உயிரியான பெண்ணின் வயிற்றில் எப்படிப் புழுவும் பூச்சியும் உருவாகும் என்று கேட்கையில் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை பேர்வழியில் ஒரு விளக்கத்தைப் பெற முடிந்தது.

ஆண் குழந்தைகள் புழுவைப் போல பெற்றோர்களை விட்டு நீங்காமல் வீட்டோடு இருந்து குடும்பத்தைக் காக்க கூடியவர்கள்; பெண் குழந்தைகள் பூச்சியைப் போல இறக்கை முளைத்ததும் (திருமணமானதும்) வேறு இடத்திற்குச் சென்றுவிடுவார்கள் என்ற வாழ்வியல் லட்சணங்களை உள்ளடக்கியதாகப் புழு என்பது ஆண் குழந்தையையும் பூச்சி என்பது பெண் குழந்தையையும் குறிப்பதாக வழங்கப்படுகின்றதுஎன்ற விளக்கம்தான் அது.

ஆண் வாரிசுகளுக்குத்தான் பெற்றோரது சொத்தில் நிரந்தர உரிமையுண்டு, காலம்போன கடைசியில் வேண்டுமானல் சொத்தின் சமபங்கைப் பெண்கள் எடுத்துக் கொள்ளலாம்.ஆனால், திருமணத்திற்குப் பின்பு பெற்றோரது வீட்டில் வசிக்கக்கூடிய உரிமை பெண்களுக்கு இல்லை என்று கணவனது வீட்டிற்கு அனுப்பி வைக்கும் முறை பெண்களின் மீது கணவனும் கணவனது வீட்டாரும் ஆதிக்கம் செலுத்த வழிவகுக்கின்றன.

கணவனது வீட்டில் வசிப்பதற்கான வாடகையாக வரதட்சணையும் ஓய்வில்லாத உடல் உழைப்பையும் பெண்கள் செலுத்த வேண்டிய சூழல் இயல்பாகவே உருவாகிவிடுகின்றது.

வரதட்சணைக்கும் பெண்கள் மீதான எல்லையற்ற உழைப்புச் சுரண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் திருமணம் முடித்த கையோடு கணவனின் வீட்டிற்குப் பெண்களைக் குடிபெயரச் செய்யும் வழக்கங்களை நாம் கைவிட வேண்டும். திருமணத்திற்கு முன்பு வரை பிறந்த வீட்டிலிருந்து விரும்பிய பணிக்குச் சென்று, கைநிறைய சம்பாதிக்கின்ற பெண்கள் கணவனது வீட்டிற்குச் சென்ற பின்பு கணவனது வீட்டிற்கும் பணியிடத்திற்குமான தொலைவு, பணியிடச் சூழலிற்குச் சென்று வருவதற்கான வசதியின்மை போன்ற காரணங்களுக்காகப் பணியினைப் பாதியில் விடவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.

பெண்களைப் போட்டியிடவே அனுமதிக்காமல் தோற்கடிக்கின்ற ஆண்மைய சமூகக் கட்டமைப்பில் பெண் தீட்டானவள், வலிமையற்றவள், மிகவும் கீழானவள் என்றெல்லாம் இருந்த பண்பாட்டு வடிவங்கள் ஏற்படுத்திய தற்காலிகமான பெண் வெறுப்பை வரதட்சணை முறை நிரந்தரமானதாக வளர்த்தெடுத்தது.

பெண்களை நசுக்கிய மற்ற எல்லா ஏற்பாடுகளும் நம்பிக்கை ரீதியாகக் கட்டமைக்கப்பட்டிருந்தன. ஆனால், வரதட்சணை முறை பொருளாதார ரீதியாக இருந்ததால் பெண் என்றாலே கழுத்தை நசுக்கிவிட வேண்டும் என்ற வெறுப்பை ஏற்படுத்தியது.

கருவில் வளர்வது பெண் சிசு என்று தெரிந்தாலே கொன்றுவிடக்கூடிய அளவிற்கு பெண் வெறுப்பை வரதட்சணை முறை தோற்றுவித்தது. அதனால் தான் கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தைப் பெற்றோருக்குத் தெரியப்படுத்துவது நம் ஊர்களில் தடை செய்யப்பட்டது.

திருமணப் பருவத்திலிருந்துதான் பெண்களின் வாழ்க்கையை வரதட்சணை முறை சீரழிப்பதாகத் தோன்றினாலும் உண்மையில் பெண்களின் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் நசுக்கக் கூடியதாக வரதட்சணை முறையும் அதன் மதிப்பீடுகளும் இருந்து வருகின்றன.

கருத்தரித்த பெண்களுக்கு வளைகாப்பு சீர் நிகழ்த்தி தாய் வீட்டிற்கு அழைத்து வரும் வழக்கம் என்பது வரதட்சணை முறையோடு நெருங்கிய தொடர்புடையதாகும். குழந்தை பிறப்பதற்கான செலவுகளை ஏற்பது; குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழாவில் சீர் செய்வது; தாய் மாமன் மடியில் குழந்தையை வைத்து நிகழ்த்தப்படுகின்ற காதணி விழாவுக்கான சீரைச் செய்வது; குழந்தை பிறந்த வருடத்தில் வருகின்ற பண்டிகைகள் அனைத்துக்கும் சீர் வழங்குவது போன்று பல சீர்களைப் பெண் வீட்டார் செய்ய வேண்டுமென்ற முறையைப் பெரும்பான்மையான சாதிகள் பின்பற்றி வருகின்றன.

குறிப்பாகத் தாய்மாமன் சீர் முறை பெண் குழந்தைகளை மையமிட்டதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. பருவம் எய்துவதற்கு முன்பாக பெண் குழந்தைகளுக்கு நடத்தப்படுகின்ற வளர்த்தி சீர், பருவம் எய்தியதும் நிகழ்த்தப்படுகின்ற பூப்பு நன்னீராட்டு விழா போன்ற நிகழ்வுகளுக்குத் தாய்மாமன் சீர் இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகின்றது.

தமிழர்களுக்கே உரிய உயரிய பண்பாட்டின் தனிச்சிறப்பான அடையாளமாகத் தாய்மாமன் முறை அமைந்திருக்கின்றது என்றெல்லாம் பண்பாட்டு அறிஞர்களே போற்றக்கூடிய வண்ணம் தமிழ் மரபில் தாய்மாமன் உறவுமுறைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.

பாண்பாட்டுப் பார்வைகளைக் கடந்து பெண்ணிய நோக்கில் ஆராயும் பொழுது பொருளாதார ரீதியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்கள் ஓர் ஆண் உறவை சார்ந்திருக்கும்படியான சூழலுக்கு அடித்தளமிடுபவையாக உறவு முறைகள் அமைந்திருப்பதை உணரலாம்.

தனக்குத் தேவையான பொருள் வளத்தை ஈட்டிக்கொள்ள அனுமதிக்கப்படாமல் வளர்த்தெடுக்கப்படுகின்ற பெண்கள் காலம் காலமாகத் தந்தையையும் தாய்மாமனையும் கணவனையும் நம்பி வாழ வேண்டுமென்று உறவென்னும் கூண்டுக்குள் அன்பெனும் விலங்கிட்டு அடைக்கப்பட்டுள்ளனர்.

தாய்மாமன் சீர்முறை போன்ற வழக்காறுகள் தான் மட்டும் வாழ வேண்டுமென்ற சுயநலச் சுவர்களைத் தகர்த்து, தன்னோடு பிறந்தவர்களும் நல்ல முறையில் வாழவேண்டுமென்ற பொதுநல அறத்தில் வாழ, தனிமனிதர்களை நெறிப்படுத்துவதாகப் பலர் கருதி வருகின்றனர்.

உண்மையில் இது போன்ற உறவு முறைகள் சாதி என்னும் இழிவான சுயநலக் கோட்டையை உடைக்க முடியாதபடி வலுப்படுத்தி வருகின்றன. சாதியைக் கடந்து இது போன்ற உறவுமுறைகளை ஏற்படுத்திக்கொள்ள அனுமதியாத ஓர் அமைப்பு எப்படித் தனிமனிதனைப் பொதுநல அறத்தோடு வாழ வழிவகை செய்யும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

திருமணத்திற்குப் பின்பு தாய் வீட்டிலிருந்து பிரிந்து சென்று கணவன் வீட்டில் வாழ்க்கை நடத்தும் சகோதரிகளுக்கும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரனுக்கும் இடையேயான உறவு தொடர்ந்து நீடிக்கவே தாய்மாமன் சீர்முறை போன்ற சீர்முறைகளை மக்கள் பின்பற்றி வருவதாகவும் ஒரு கருத்து நிலவுகின்றது. இதே தாய்மாமன் சீர்முறை ஏற்படுத்துகின்ற பொருளாதாரச் சிக்கல்களால் ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையே தீராப் பகை உண்டாவதையும் சமூகத்தில் பார்க்க முடிகின்றது.

Hands of indian bride and groom intertwined together making authentic wedding ritual

பொதுவாக முந்தைய தலைமுறையினர் இன்றைய இளசுகளை நோக்கி வைக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்றாக இன்றைய தலைமுறையினர் பணத்தை வைத்து பாசத்தை வாங்கிவிடலாம் என்று நினைக்கின்றனர்என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகின்றது. இப்படிக் கூறும் தலைமுறையினர் சகோதர சகோதரி உறவைப் பலப்படுத்த தாய்மாமன் சீர் முறையைப் பின்பற்றி வந்திருக்கின்றனர் என்று கூறுவது மிகவும் வேடிக்கையான ஒன்று.

அன்பையும் அரவணைப்பையும் கருணையையும் காதலையும் பணத்தால் வாங்கிவிட முடியாது என்று அறிவுரை வழங்கும் மூத்த தலைமுறையினரும் ஒன்றை உணர வேண்டும். அன்பும் அரவணைப்பும் காதலும் கருணையும் மனித நேயத்திலிருந்து பிறப்பவை; மனித நேயமற்ற சாதியை வைத்து விலை பேசப்படுகின்ற உறவுமுறைக்குள் பாசத்தை வரதட்சணை போன்ற பணப் பரிவர்த்தனைகளால் மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதையும் மூத்த தலைமுறையினர் உணர்ந்துகொள்வது அவசியமாகும்.

தன்னைப் பொருளாதாரக் கைதியாக உருவாக்கிய தாய் வீட்டிலிருந்து வரும் தாய் வீட்டுச் சீரையும் தாய்மாமன் சீரையும் கேட்பதற்கு அஞ்சியும் வருந்தியும் கருவில் இருக்கக் கூடிய குழந்தை பெண் குழந்தையாகப் பிறந்துவிடக்கூடாது என்று நினைக்கக்கூடிய கர்ப்பிணிப் பெண்களை இன்றளவும் பார்க்க முடிகின்றது.

பெண் குழந்தையே வேண்டாமென்ற பெண் வெறுப்புணர்வை பெண்களிடமே வரதட்சணை முறை விதைத்திருக்கின்றது.

பெண்கள் மீது கட்டவிழ்க்கப்படுகின்ற வன்முறைகளுக்குக் காரணமாய் இருக்கின்ற பெண் வெறுப்புணர்வை ஒழித்து பெண்கள் வாழத் தகுதியுள்ள சமுதாயமாக நமது சமுதாயத்தைத் தகுதிப்படுத்திக்கொள்ள நமது பண்பாட்டு ஒழுகலாறுகளைச் சீர்திருத்திக் கொள்வது அவசியமாகின்றது.

பாலினப் பாகுபாட்டை வளர்த்தெடுத்துக் குப்பைக் கூளமாகத் திகழ்ந்த குடும்பங்கள் சமத்துவத்தைப் பின்பற்றி குழந்தைகளைப் பாலினப் பாகுபாடின்றி வளர்த்தெடுப்பதில் அக்கறை காட்ட வேண்டும்.

படைப்பாளர்:

கல்பனா

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். மலசர் பழங்குடிகளின் சமூகப் பண்பாட்டு இயங்கியல் என்னும் பொருண்மையில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுப்பணியினை மேற்கொண்டுவருகிறார். சர்வதேச ஆய்விதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.