’இப்போலாம் யாருங்க சாதி பாக்குறா’ என்பது போல ‘இப்போலாம் தேவதாசி முறைனு ஒன்னு எங்கேங்க இருக்கு?’ என்று கேட்போருக்கு மாலம்மாவின் போராட்டமே பதில். சென்னை சட்டமன்ற கவுன்சிலில் டாக்டர். முத்துலட்சுமியால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தேவதாசி ஒழிப்பு முறை 1947இல் சட்டமாக்கபட்டது. அதெப்படி சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைமுறையில் இருக்க முடியும் என்று நினைத்தால் அது தவறு. தீண்டாமையும் சாதிய ஏற்றத்தாழ்வும் சட்டத்திற்குப் புறம்பானதுதான். அது இன்னும் சாதி ஆதிக்கவாதிகளால் புழக்கத்தில் இருக்கத்தானே செய்கிறது? அதற்கு சமீபத்திய உதாரணங்கள் நிறைய இருக்கின்றன. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நாயக்கனேரி ஊராட்சித் தலைவர் இந்துமதி ஊராரின் அச்சுறுத்தலால் இன்று பதவியில் இல்லாமல் ஊரைவிட்டு வெளியில் இருக்கிறார்.
சமூக அங்கீகாரம் இல்லாததால் சட்டரீதியான உரிமைகள் பெண்களுக்கும், தலித்களுக்கும் மறுக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. தேவதாசி ஒழிப்பு முறைக்கு எதிராக டாக்டர் முத்துலட்சுமியால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்றும் ”மாலம்மக்களால்” தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
தேவதாசி முறையை ஒழிக்க டாக்டர் முத்துலட்சுமி சட்ட முன்வரைவு கொண்டு வந்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ”இச்சமூகம் சீரழியாமல் இருக்கத் தாசிகள் தேவை” என்று சத்தியமூர்த்தி ஐயர் பேசினார். அதற்குப் பதிலுரைத்த முத்துலட்சுமி, “இதுவரை பிற்படுத்தப்பட்ட பெண்கள் தேவதாசிகளாக இருந்து கடவுளுக்குப் பணியாற்றியது போதும், இனி உயர்சாதி பெண்கள் பொட்டுகட்டிகொண்டு கடவுளுக்குச் சேவை செய்யட்டும்” என்று கூறினார். இக்கூற்றை மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய தேவை இன்றும் உருவாகி இருக்கிறது.
தமுஎகச சென்னையில் நடத்திய ”சனாதன ஒழிப்பு” மாநாட்டில் சனாதனத்தின் ஒரு கூறாக இருக்கக்கூடிய தேவதாசி முறையை எதிர்த்துப் போராடி வரும் தோழர் மாலம்மா அவர்களின் மொழிபெயர்ப்பு உரை.
சாதிய மேலாதிக்க ஆண்கள் மூட நம்பிக்கைகள், மதநம்பிக்கைகளைத் திணித்து பெண்களைத் தேவதாசிகளாக மாற்றுகிறார்கள். ”தேவதாசி விமோசன அமைப்பின்” மூலம் 1982, 84களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் 46 ஆறாயிரம் தேவதாசிகள் உள்ளனர் என்பது கண்டறியப்பட்டது. பழமைவாத ஆண்கள் வலுக்கட்டாயமாக தலித் பெண்களைப் பொட்டு கட்டிவிடும் வழக்கம் இருக்கிறது. குழந்தைகளின் தகப்பன் யார் என்று தெரிந்தும் அவர்களால் சொந்தம் கொண்டாட முடியாது. அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டிருந்தன. தேவதாசி குடும்பத்தில் பெண் மட்டுமே குடும்பத்தைக் கவனிக்கவும் குழந்தைகளைப் பராமரிக்கவுமான சூழல் நிலவுகிறது.
”கர்நாடக மாநிலத்தில் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ’துர்கம்மா’ கோயில் உள்ளது. அந்தக் கோயில் பூசாரியின் கனவில் வந்த ’துர்கம்ம’ இந்தக் கிராமத்தில் உள்ள மரியம்ம, கனகம்மா என்ம் 9வது படிக்கும் இரண்டு பெண் குழந்தைகளைப் பொட்டுகட்டிவிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.”. ஏன் சாமி பூசாரி கனவுக்கு வந்து இதைச் சொன்னார் என்றெல்லாம் யாரும் கேட்கக் கூடாது.
“இதையடுத்து ஊர்கூடி இரு குழந்தைகளையும் பொட்டுகட்டி விடுவதாக அவர்களின் பெற்றோர் அறிவித்தனர்இதற்குப் பதிலீடாக அக்கிராமத்தின் அரசியல் பஞ்சாயத்துத் தலைவர் இருவருக்கு தலா ஒரு வீடு தருவதாகவும் கூறியிருக்கிறார். இப்படியாக அங்கிருக்கும் தலித் பெண்குழந்தைகள் தேவதாசிகளாக மாற்றப்படுகிறார்கள்.”
‘தேவதாசி விமோசன அமைப்பு’ என்னும் தங்களது அமைப்புக்கு இந்தச் செய்தி வர, விசாரணையில் இந்த விஷயங்கள் எல்லாம் தெரியவருகிறது. மேலும் சட்ட ரீதியாக மேற்கொள்ளும் போது தேவதாசி ஒழிப்புச் சட்டத்தில் என்னென்ன குளறுபடிகள் இருக்கிறது என்பதும் தெரியவருகிறது. பாதிக்கப்பட்ட தேவதாசி பெண்களிடம் இது குறித்துப் பேசும்போது ஒருவர் கூடத் தான் விருப்பத்துடன் வந்தேன் எனத் தெரிவிக்கவில்லை. எங்களை வலுகட்டாயமாகவே தேவதாசிகளாக ஆக்கினார்கள் என்கிற உண்மையைப் பெண்கள் போட்டுடைக்கிறார்கள்.
இதற்குக் காரணம் அவர்களின் குடும்பம் மட்டுமல்ல, அங்கு உள்ள பூசாரி, கெளடர்கள் போன்ற செல்வந்தர்கள் அனைவருமே குற்றவாளிகள்தாம் என்பதைச் சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்கிற தங்களின் கோரிக்கையை முன்வைத்துப் போராடி வருகின்றனர்.
”46 ஆறாயிரம் தேவதாசிகள் மற்றும் அவர்களின் குடும்பம் என மொத்தம் 10 லட்சம் பேர் உள்ளனர். இந்தப் பத்து லட்சத்தில் உள்ள குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்லும் போது தீரா அவமானத்திற்கும் தாழ்வுமனப்பான்மைக்கும் உள்ளாகிறார்கள். இப்படியான இன்னலுக்கு ஆளான தேவதாசிகளிடமும் அவர்களின் குழந்தைகளிடம், “நீங்கள் அவமானப்படுவதற்கோ, குற்றவுணர்ச்சிக்குள்ளாகவோ தேவையில்லை. உங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. உங்களை இந்த நிலைமைக்குத் தள்ளிய சமூகத்தின் மீதும், சனாதனத்தின் மீது மட்டுமே தவறே தவிர நீங்கள் அல்ல” என்று பேசிவருகிறோம்” என்றார்.
ஆயிரம் ஆண்டு காலமாக ஒடுக்கப்பட்டுவரும் தலித்துகள் உயர்சாதியினர் தெருக்களில் நடமாடக் கூடாது, துண்டை இடுப்பில்தான் கட்ட வேண்டும், எச்சைத் துப்புவதாக இருந்தாலும் அவர்களின் துண்டுகளில் தான் துப்பிக்கொள்ள வேண்டும் போன்றதான ஒடுக்குமுறைகள் இருந்தன. இதிலும் பலவந்தமான ஒடுக்குமுறைக்குத் தேவதாசி பெண்கள் உள்ளாகின்றனர்.
”இப்படித் தலித்துக்களையும் தேவதாசி பெண்களையும் இழிவாகக் கருதும் உயர்சாதியினராகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் நீங்கள், தேவதாசி பெண்களின் வீட்டுக்குள் வந்து அவர்களுக்கு இரண்டு குழந்தைகளைக் கொடுப்பதற்கு வெட்கமாக இல்லையா உங்களுக்கு?” என்று கேள்வியை எழுப்புகிறார் மாலம்மா..
பெண்கள் தேவதைகளுக்கு ஒப்பானவர்கள் என்று மனுஸ்மிருதி கூறுகிறது. 9வது படிக்கும் குழந்தை 11 வருடத்திற்கு முன் தர்மஷாலா என்னும் கோயிலுக்குள் சென்றிருக்கும் போது மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இதுதான் நீங்கள் தேவதையை நடத்தும் விதமா எனக் கேள்வி எழுப்பினார்.
ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடக மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மட்டும் இதுவரை தேவதாசி முறை இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறோம். ஆனால், பொட்டு கட்டும் வழக்கம் இன்னும் பல மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அது வெளியில் தெரியாமல் இருக்கிறது அவ்வளவே. இத்தகைய அநீதிகளை வெளியில் கொண்டுவர எங்களது அமைப்பு 2018லிருந்து ஒன்றிய அரசுக்கு இந்தியா முழுவதும் தேவதாசி முறை அடையாளம் காணப்பட்டு அவர்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
”வெறும் தேவதாசிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல அவர்களின் குழந்தைகளின் எண்ணிக்கையும் எடுக்கப்படவேண்டும். தேவதாசி பெண் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் போன்றவை மறுக்கப்படுகின்றன. எனவே தேவதாசி மற்றும் அவர்களின் குழந்தைகளை உள்ளடக்கிய கணக்கெடுப்பானது அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு என அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அனைத்து வாய்ப்புகளையும் அரசு உத்திரவாதப்படுத்த வேண்டும். தேவதாசிகளுக்கு விவசாயம் செய்யும் பழக்கம் இருப்பதால், அரசே அவர்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். ஏனெனில் மறுபடியும் அவர்கள் தேவதாசி முறைக்குச் செல்லாமல் இருக்க இத்தகைய திட்டங்கள் அவர்களுக்கு அவசியம்” என்றும் குறிப்பிட்டார்.
சனாதன சமூக கட்டமைப்பால் ஒடுக்குமுறைக்கு ஆளான தேவதாசி பெண்களின் உரிமைக்கு தன்னெழுச்சியான அவர்களது போராட்டம் முக்கியம் என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு பிரச்சாரங்களே எங்களது தொடர் போராட்ட வடிவமாக இருக்கும் எனக் கூறினார்.
மாலம்மா குறித்துச் சிறு அறிமுகத்தைக் கொடுத்த தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா கடவுளின் பெயரால் பெண்களின் மீது நடத்தப்படும் பாலியல் சுரண்டலுக்கு எதிராகப் போராடி
வரும் மாலம்மா போன்றவர்களை ஆரம்ப காலக்கட்டத்தில் அணிதிரட்டியவர்கள் ’ரேவதி’. இவர் மாதர் சங்கத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் இருந்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து மாலம்மாவும் மாதர்சங்கத்திலும், கர்நாடக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு பொறுப்பிலும் இருக்கிறார். என்று ஆதவன் தீட்சண்யா அறிமுகப்படுத்தினார்.
இதை ஏன் இங்குச் சுட்டிக்காட்ட வேண்டி இருக்கிறது என்றால், மாதர் சங்கம் இதற்கெல்லாம் போராடினார்களா, இதற்கு ஏன் போராடவில்லை என்றெல்லாம் தமிழகத்தின் அதிபராகத் தன்னை நினைத்துக்கொள்ளும் அண்ணனும், அவரின் தம்பிகளுக்கும் அடிப்படைத் தகவல்கூடத் தெரியாமல் சமூகவலைத்தளங்களில் பேசிவருதுதான் நம்மைச் சிரிப்பில் ஆழ்த்துகிறது.
ஆதவன் தீட்சண்யா குறிப்பிட்டுப் பேசியதில் மற்றொன்று, ’புனித பாவங்களின் இந்தியா’ நூலின் எழுத்தாளர், ’இவர்களையெல்லாம் வாக்கு வங்கிக்காக மார்க்சிஸ்ட் கட்சி திரட்டியதோ’ என்று எழுதி இருப்பதைச் சுட்டிக்காட்டினார். அதற்குப் பதில் அளிக்கும் விதமாக 46 ஆறாயிரம் தேவதாசிகளைத் திரட்டிவைத்து கர்நாடக மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்கிற மூடநம்பிக்கையோ, அசட்டுத் துணிச்சலோ மார்க்சிஸ்ட் கட்சிக்கு கிடையாது” என்று கூறினார்.
இது ஏன் இங்கு முக்கியமாகப் பார்க்கப்படிகிறது என்றால், கட்சி ஆரம்பித்த குறுகிய காலகட்டத்திலே ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்கிற ஆத்திரத்தில், ”இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் சாத்தானின் பிள்ளைகள்” என்று ”வாக்கு அரசியலுக்காக” ஆர் எஸ் எஸ் அஜெண்டாவை வெறுப்பு அரசியலைப் பேசிவரும் அதிபர் அண்ணன் பெரும்பான்மை இந்துக்களின் வாக்கே போதும் என்கிற பாஜகவின் 80-20 அரசியலைச் செயல்படுத்த முனைந்துவிட்டார்.
2016 தமிழகச் சட்டமன்றத்தில் தனக்கு ஒரு சீட்டுக்கூட இல்லாத நிலையிலும் மக்களின் பிரச்னைகளுக்காகப் போராடியவர்கள் மார்க்சிஸ்டுகள். ஜனநாயகத்திற்கு எதிரான ’அன்பான சர்வதிகாரம்’ எல்லாம் இங்கு ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. சமத்துவம், சுயமரியாதை, சகோதரத்துவம் கொண்ட சமூக நீதி கோட்பாடுகளே தமிழகத்தின் ஆட்சியை தீர்மானிக்கும்.
ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்திகளாக இன்று பெண்கள் மாறியிருக்கிறார்கள். அரசியலில், சமூகத்தில் ’முடிவெடுக்கும் அதிகாரத்தில்’ பெண்களின் எண்ணிக்கை வலுசேர்க்கும் போதுதான் ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சமூகம் உருவாகும்.
எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா?
படைப்பாளர்:
மை. மாபூபீ
சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் மற்றும் தொடர்பில் துறையில் முனைவர்பட்ட மாணவி. அரசியல், சமூகம் பெண்ணியம் சார்ந்த கட்டுரைகளை எழுதிவருகிறார். தீக்கதிர் நாளிதழ், கீற்று, Thenewslite போன்ற இணையதளங்களில் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.