தலைமைப் பண்புகள் பற்றிப் பேசும் போது அடுத்த முக்கியப் பண்பு உறவாடும் திறன்.

நமது சகாக்களோடு நமது உறவு எவ்வளவு சுமூகமாக இருக்கிறதோ அதே அளவுக்கு நம் இலக்கையும் இயல்பாக அடைவோம்.

என் மேல் பரிவும், என் வளர்ச்சியில் அக்கறையும் இல்லாத, என் திறமையை அங்கீகரிக்காத தலைமையின் வார்த்தையை நான் எப்படி மதிப்பேன் ? மனதளவில் தலைமையாக எப்படி ஏற்றுக் கொள்ளவேன்?

தலைமையின் வெற்றியே தன்னுடன் இருப்பவர்களை எப்படி உணர வைக்கிறோம் என்பதில்தான் அடங்கி உள்ளது.

உலகப் புகழ் பெற்ற தலைவர்களான சே குவேரா, நெல்சன் மண்டேலா, மகாத்மா ஆகியோரின் வெற்றிக்கு காரணம், அவர்களைப் பின்பற்றும் மக்களுக்கு அவர்கள் மேல் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, அவர்கள் தன்னைப் பின்பற்றுபவர்களிடம் பழகிய விதம், கொண்டு சேர்த்த செய்தி அனைத்தும் சேர்ந்ததுதான்.

உங்கள் குழுவுக்கு நீங்கள் ஒரு வழிகாட்டி மட்டுமல்ல, எடுத்துகாட்டும்கூட. ஒவ்வொருவரும் இந்தச் சூழ்நிலையில் தன் தலைவன் / தலைவி எப்படி யோசிப்பார்கள், எப்படி நடந்து கொள்வார்கள் என்கிற தெளிவாகத் தெரியும்போது அவர்களும் அந்த அடி ஒற்றிதான் நடப்பார்கள். Think like a leader என்று சொல்வது உண்டு. நீங்கள் பின்பற்றக்கூடிய ஒரு தலைவர் என்கிற எண்ணம் மேலோங்கும் போது உங்களைப் போலவே நடக்க, வளர அவர்களும் முயற்சிப்பார்கள்.

முதலில் உங்களிடம் வேலை செய்பவர்களை அறிந்துகொள்ளுங்கள். எது அவர்களை ஊக்குவிக்கும், எதெல்லாம் பின்னுக்கிழுக்கும் என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம்.

அவர்களுக்கு வேலையிலோ அல்லது தனிபட்ட வாழ்விலோ உதவியோ ஆலோசனையோ தேவைபட்டால் நீங்கள் உங்களால் ஆனதைச் செய்வீர்கள், செய்வதற்குண்டான அறிவும் பெற்றவர்கள் என்கிற நம்பிக்கையை விதைக்க வேண்டும். உதவியோ ஆலோசனையோ செய்யும் அளவுக்கு உங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அவர்களின் பங்களிப்புக்கான அங்கீகாரத்தைத் திறந்த மனதுடன் அணுகி, அளிக்க வேண்டும். வெற்றி வரும் போது அதில் தனிபட்ட ஒருவரின் பங்களிப்பு அதிகமென்றால், குழுவாகக் கொண்டாடும் போதும், அவருக்கான தனி அங்கீகாரம் தருவது முக்கியம்.

தோல்வி வரும் போது, அதையும் குழுவாக ஏற்றுக் கொண்டாலும், அதைத் தலைமைதான் தோளில் சுமக்க வேண்டும். இல்லாவிடில் தோல்வி வரும்போது தன் பெயர் கெட்டு விடுமென எவரும் புதிய முயற்சிகளில் ஈடுபட மாட்டார்கள்.

எப்போதும் எங்கேயும் நான் என்கிற எண்ணமின்றி நாம் என்கிற எண்ணத்தோடு தலைமையும் செயல்பட்டு, குழுவையும் அந்த மனநிலைக்குக் கொண்டு வருதல் அவசியம்.

வெற்றியில் வரும் எந்தப் பயனும் குழுவில் உள்ள அனைவரும் அடைந்த பின், பயன் பெறுவதுதான் தலைமைக்கு அழகு. தோல்வியில் வரும் எந்தச் சவாலையும், பின்னடைவையும், முதலில் தான் சந்தித்து பின் குழுவோடு பகிர்ந்து கொள்வதுதான் அடுத்த உயர் தலைமைப் பண்பு.

இந்த மனநிலையோடு நீங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களை வழிகாட்டினால் அவர்கள் வேலையை அவர்களுக்காக அல்ல உங்களுக்காகச் செய்வார்கள். மகிழ்ச்சியோடு உத்வேகத்தோடு செய்வார்கள்.

தலைவர்கள் பிறப்பதில்லை. தன்னை தானே உருவாக்கி கொள்கிறார்கள்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.