அந்தமான் கைதி, 1952ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்.
கு. சா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதி நாடகமாக நடிக்கப் பட்டுக் கொண்டிருந்த இந்தக் கதை, வி. கிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில் திரைப்படமானது. ஜி. கோவிந்தராஜுலு நாயுடு அவர்கள் இசையமைக்க, ராதாகிருஷ்ணா பிலிம்ஸ் நிறுவனம் திரைப்படத்தைத் தயாரித்து உள்ளது.
இந்தப் படத்தில்தான் முதன்முதலில் எம்.ஜி.ஆரின் பெயர் எம்.ஜி. ராமச்சந்திரன் எனப் போடப்பட்டது என இணையம் சொல்கிறது. தொடக்ககாலத் திரைப்படங்களில் எம்.ஜி. ராமச்சந்தர் என்றே போட்டார்கள். Youtubeஇல் இருக்கும் இந்தத் திரைப்படப் பிரதியில் பெயர்ப் போடும் பகுதி இல்லை. ஆனால் கீழ்க்கண்ட நடிகர்கள் நடித்ததாக இணையம் சொல்கிறது.
நடிகர்கள்
நடராஜராக எம்.ஜி. ராமச்சந்திரன்
பாலுவாக திக்குறிசி சுகுமாரன் நாயர்
பொன்னம்பலமாக கே.சாரங்கபாணி
காமாட்சியாக எஸ்.டி. சுப்புலட்சுமி
லீலாவாக பி.கே. சரஸ்வதி
வள்ளிகண்ணுவாக எம்.எஸ். திரௌபதி
ஜம்புவாக டி.எஸ். பாலையா
பொன்னம்பலத்தின் சமையல்காரராக டி.என். சிவதாணு
இந்தியச் சுதந்திர தின கொண்டாட்டங்களின் செய்திக் காட்சிகள் படத்தின் தொடக்கத்தில் சேர்க்கப்பட்டது என்றும் இணையம் சொல்கிறது. தமிழ் வளர்ச்சிக் கழகம் என்ற தலைப்புடன், ‘பூரண சுதந்திரம்…’ என்றவாறு ஒரு சான்றிதழ் போடுகிறார்கள். அதற்குமேல் வாசிக்க முடியவில்லை.
திரைப்படத்தின் தொடக்கக் காட்சியில், இந்தியக் கொடி பறக்கும் அந்தமான் சிறையைக் காட்டுகிறார்கள். நடராஜனும் (எம்.ஜி.ஆர்), பெரியவர் ஒருவரும், சிறையிலிருந்தது விடுதலை அடைகிறார்கள். பணமும், பயணச்சீட்டும் பெற்றுக் கொண்டு கப்பல் தளத்துக்கு வருகிறார்கள். அதிகாரிகள் வழியனுப்ப, கப்பல் புறப்படுகிறது. பெரியவர், ‘இவ்வளவு நல்ல பையனான நீ எப்படி சிறை வந்தாய்?’ எனக் கேட்க, நடராஜன் தனது கதையைச் சொல்கிறார்.
நடராஜனின் அப்பா, கராச்சியில் பெரிய வணிகர். மனைவியின் (காமாட்சி) சொல் கேட்டு, திருச்சியில் இருக்கும் மனைவியின் அண்ணனுக்கு (பொன்னம்பலம்) ஐந்து லட்சம் ரூபாய் அனுப்பி வைத்து, நிலபுலன்கள் வாங்கி வைக்கச் சொல்கிறார். ஒரு காலகட்டத்தில் எந்த கடிதம் போட்டாலும் பதில் இல்லை. அதனால் அவரே நேரில் வருகிறார்.
பொன்னம்பலம், போர் நிதி, அது இது என இரண்டு லட்சம் செலவழித்து இருக்கிறார். அதனால் அவருக்குத் திவான்பகதூர் என்ற பட்டம் கிடைத்துள்ளது. தேர்தல், ரேஸ் எனப் பணத்தைக் கரைத்துள்ளார். இதனால், பணம் கேட்க வந்தவரை, ஆள் வைத்துக் கொலை செய்து விட்டார்.
ஓடும் ரயிலில் கோரக்கொலை என்ற செய்தியை நடராஜன் வாசிக்கிறார். அதே நேரம், பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுதியாக இப்போது மாறிவிட்டக் கராச்சியில், இந்திய விடுதலைக்குப் பின்னான கலவரம் தொடங்குகிறது. நடராஜன் தனது தங்கை, மற்றும் அம்மாவுடன் அங்கிருந்து Nilokheri नीलोखेड़ी வந்து, அங்கிருந்து திருச்சி வருவதாகக் காட்டுகிறார்கள். Nilokheri என்பது ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு ஊர். இந்திய விடுதலைக்குப் பின்னான கலவரம் என்பது இன்றைய தலைமுறைக்கு ஒரு வரலாற்றுக் குறிப்பு.
மூன்றாவது மனைவி இறந்ததில் மூன்று லட்சம் லாபம்; தங்கை கணவனைக் கொன்ற பணம் எனப் பொன்னம்பலம் வாழ்கிறார். அந்த நேரத்தில் நடராஜன் மாமா வீட்டிற்கு வருகிறார். பொன்னம்பலம், “உன் அப்பாதான் எனக்குப் பணம் கொடுக்க வேண்டி இருக்கிறது, நான் அவருக்குக் கொடுக்க வேண்டியதில்லை” எனக் கதையைத் திருப்பி அனுப்பி விடுகிறார்.
நடராஜன் தனது தங்கை, மற்றும் அம்மாவுடன் எளிய வீட்டில் குடி பெயர்கிறார். அந்த வீட்டின் உரிமையாளர் பாலு, லீலா இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால் பாலு ஒரு ஜமீன்தார்; வீட்டின் உரிமையாளர் என்பது இவருக்குத் தெரியாது. நடராஜன் ரயில்வேயில் கூலி வேலையில் சேர்கிறார்.
பொன்னம்பலம், பூ விற்கும் வள்ளிகண்ணுவிடம், சில்லறை இல்லை. அருகில் போய் மாற்றித் தருகிறேன் எனக் காரில் அழைத்துச் சென்று வன்புணர்வில் ஈடுபடுகிறார். தற்கொலை செய்யப் போன வள்ளிகண்ணுவை, நடராஜன் காப்பாற்றுகிறார். இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள்.
பாலுவைச் சந்திக்க வந்த பொன்னம்பலத்தின் உதவியாளர், ஜம்பு, லீலாவைப் பார்த்து, பொன்னம்பலத்திடம் போய், ‘உங்கள் தங்கைக்கு மகள் ஒருவர் இருக்கிறார். அவரைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என ஆலோசனை கூறுகிறார்.
கண் தெரியாத தங்கை காமாட்சி, வீடு தேடி வந்த பின்னும் தெரியாதவர் போலக் காட்டிக் கொண்ட பொன்னம்பலம், இப்போது வீடு தேடி வருகிறார். பெண் கேட்கிறார். நடராஜன் அவனை விரட்டி அடிக்கிறார். இதனால் பொன்னம்பலம், நடராஜனைப் பொய்க்குற்றம் சாட்டிச் சிறையில் அடைக்கிறார். மந்திரம் செய்பவனை வைத்து லீலாவைத் திருமணமும் செய்கிறார்.
வெளியில் வந்த நடராஜன், பாலுவிடம் வந்து, லீலாவை மறுமணம் செய்து கொள் எனச் சொல்கிறார். ஜம்பு கை வெட்டுப்பட்டதால் மனம் மாறி பாலுவிடம் நடந்தைதைச் சொல்கிறார். நடராஜன் பொன்னம்பலத்தைக் கொலை செய்கிறார். ஆனால் பாலு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட, நடராஜன் உண்மையைச் சொல்லித் தான் தண்டனையைப் பெறுகிறார்.
இப்போதுதான் தண்டனை நீக்கப்பட்டு வீடு திரும்புகிறார். துறைமுகத்தில் குடும்பம் இணைகிறது. மகிழ்ச்சியாக குடும்பம் வாழ்கிறது எனத் திரைப்படம் நிறைவு பெறுகிறது.
திரைப்படம் முழுவதுமே ஃப்ளாஷ்பேக் என்னும் முன்னால் நடந்தவற்றை நினைத்துப் பார்க்கும் கதையைத் தான் சொல்கிறது. பிற்காலத்தில் இவ்வாறு ‘நினைத்தாலே இனிக்கும்’ திரைப்படம் வந்தது. காரில் பயணம் செய்யும் கமல், தன் பழைய வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பதுதான் அந்தத் திரைப்படம். இதில் கப்பல் பயணம்; அதில் கார்ப் பயணம்.
நடராஜனாக வரும் எம்.ஜி.ஆருக்கு சோகம் ததும்பும் பாத்திரம். வழக்கமான அவரது படத்திலிருந்து சற்றே மாறுபட்டு நிற்கிறார். அவரது காதலி வள்ளிக்கண்ணுவாக எம்.எஸ். திரௌபதி வருகிறார்.
திரைப்படத்தில் கலக்கல் ஜோடி என்றால், அது பாலுவாக வரும் திக்குறிசி சுகுமாரன் மற்றும் லீலாவாக வரும் பி.கே. சரஸ்வதி ஜோடிதான். திக்குறிசி சுகுமாரன் அவர்கள் வாயைத் திறந்தவுடன் மம்முட்டிதான் பேசுகிறாரோ என நினைக்கத் தோன்றுகிறது. அவரின் அழகிய மலையாளத் தமிழ் இனிமையாக இருக்கிறது. அவர் மலையாளத் திரை உலகில், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், இயக்குனர், நடிகர் எனப் பிற்காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர். ஏறக்குறைய தனது நெடிய 47 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
பி.கே. சரஸ்வதி, குறும்பு ததும்பும் முகத்துடன் ஆடல், பாடல் என அசத்தி விடுகிறார். இவரும் கேரளாவைச் சார்ந்தவர்தான். எழுத்தாளரும் நடிகரும் பாடகருமான வி. என். சம்பந்தம் அவர்களின் மனைவி.
வழக்கமாக வயதான வேடத்தில் வரும் அங்கமுத்து, இதில் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக வந்து ஒரு பாடலில் கலக்குகிறார்.
பொன்னம்பலத்தின் சமையல்காரராக டி.என். சிவதாணு ஒரு கட்டத்தில் முதலாளி வீட்டிற்கு வரமாட்டார் என நினைத்து, முதலாளியின் ஆடை அலங்காரங்களைச் செய்கிறார். அப்போது அங்கு, ராவ் பகதூருக்கு மணப்பெண் வேண்டும் என்ற விளம்பரம் பார்த்து அங்கமுத்து வருகிறார். சமையல்காரரை ராவ்பகதூர் என நினைக்கிறார். “ஐ லவ் யூ ஐ லவ் யூ ஆசையானேன் உன் மேல” என்ற சந்திரபாபு, ஏ.ஜி. ரத்தினமாலா இருவரும் பாடிய தங்கலீஷ் பாடலுக்கு இவர்கள் இருவரும் ஆடும் நடனம் அபாரம். சந்திரபாபு அவர்கள் பாடும் இரண்டாவது தங்கலீஷ் பாடல். ஆனால் இதில் வேறு ஒருவருக்குப் பின்னணி கொடுத்து இருக்கிறார். இதற்குமுன் இவ்வாறு வேறு நடிகருக்குப் பாடியிருக்கிறாரா எனத் தெரியவில்லை.
பொதுவாக இப்படியான பெண்ணை, நாயகன், தங்கை என அழைத்து விடுவார். அதேபோல, திருட்டுத்தனமாகத் தாலி கட்டப்பட்ட தங்கையின் கணவனைக் கொன்று, தங்கை காதலித்த பையனுக்கே அதுவும் வேறு ஒரு மாநிலத்தைச் சார்ந்த பையனுக்கு மணமுடித்துக் கொடுப்பதும் அந்த காலகட்டத்திற்குப் பெரும் புரட்சியாக இருந்து இருக்க வேண்டும்.
ரேடியோ விலை 2000 ரூபாய் என இருந்து இருக்கிறது. மேலும் திருச்சி நகரின் வாழ்வியல் ஆங்காங்கே பிரதிபலிக்கின்றன.
திரைப்படத்தின் முகவரியாக இருப்பது பாரதியாரின் காணி நிலம் வேண்டும் பாடல்தான். அடிக்கடி, குறிப்பாகப் பாரதியாரின் பிறந்த / இறந்த நாள்களில் தவறாமல் இலங்கை வானொலியில் ஒலித்த பாடல். இந்த பாடல் தவிரத் திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் கதை எழுதிய கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி அவர்களே எழுதியுள்ளார்கள்.
அஞ்சு ரூபாய் நோட்டக் கொஞ்சம் மின்ன மாத்தி
மிச்சமில்லக் காசு மிச்சமில்ல
கத்தரிக்கா விலை கூட கட்டு மீறலாச்சு
காலங்கெட்டுப் போச்சு
காலணா வித்தது இப்ப நாலணாவா போச்சுது
கருப்பட்டி வெல்லத்துக்கும் கடும் பஞ்சம் ஆச்சுது
எப்படி பிழைப்பது இந்த நாட்டிலே
ஏய்ச்சிப் பிழைக்கும் சிலர் ஏற்றமுடன் வாழ்கிறார்
ஏழை மக்கள் பட்டினியால் ஏங்கி மனம் வாடுறார்
மேடைப் பேச்சைக் கேட்டு கேட்டு காதடச்சுப் போகுதே
மேலே மேலே திட்டம் போட்டு காலமும் வீணாகுதே
வேலையின்றி அகதிகள் போலே மனதில் ஏங்குறார்
வீடில்லாமல் ஏழை மக்கள் வீதியிலே தூங்குறார்
இந்தப்பாடல் முழுக்க முழுக்க திருச்சி நகர வீதிகளில் எடுக்கப்பட்ட பாடல். 1950களின் மலைக்கோட்டை, தெப்பக்குளம், காவிரிப் பாலம் போன்றவற்றை போன்ற இடங்களைப் பார்ப்பது அவ்வளவு அழகு.
படைப்பாளர்
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.