ஔவையார் என்பது 1953ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.

திரைப்படத்தில் எழுத்து பின்வருமாறு போடுகிறார்கள்- 

ஜெமினியின் சித்திரம் ஔவையார்

ஸ்ரீமதி கே. பி. சுந்தராம்பாள் நடித்தது 

கதை வசனம் : கொத்தமங்கலம் சுப்பு, கி. ரா 

ஆராய்ச்சி : ஜெமினி கதை இலாகா 

பாடல்கள் : ஔவையின் பாடல்கள், பாபநாசம் சிவன் மற்றும் கொத்தமங்கலம் சுப்பு 

சங்கீதம் : எம்.டி. பார்த்தசாரதி, பி.எஸ். அனந்தராமன், மாயவரம் வேணு

ஸ்ரீமதி கே. பி. சுந்தராம்பாள் – ஔவையார்

குசல குமாரி – குமாரி ஔவை

பேபி சரஸ்வதி – ஔவை (நடிகை சச்சு)

குமாரி வனஜா – ஏலங்குழலி 

எம் எஸ் சுந்தரிபாய் – அம்மான்னு 

டி வி குமுதினி – சிவகாமி 

நாகரத்தினம் – குறத்தி 

உதயத்தாரா – குறத்தி 

மீரா – அங்கவை 

துளசி – சங்கவை 

மற்றும் சொக்கம்மா, சந்திரா, ஜமுனா, செல்வம், சகுந்தலா, சரோஜா, ராதா முதலியவர் 

ஸ்ரீ எம் கே ராதா – பாரி 

டி பாலசுப்ரமணியம் – பாணர் 

எல் நாராயணராவ் – ஆழ்வார் 

கொத்தமங்கலம் சுப்பு – வீரய்யன் 

கணேசன் – தெய்வீகன் (ஜெமினி கணேசன்)

கே ராமசாமி – புலவர் 

ஜி பட்டு – வள்ளுவர் 

புதுக்கோட்டை சீனு – சக்கரம் 

ஸி வி வி பந்துலு – புலவர் 

வேலாயுதம் – குறவன் 

அசோகன் – சோழன் 

நடராஜன் – காரி 

ஸ்ரீ பி எம் தேவன் – அதியமான் 

ஸி எம் துரை – கபிலர் 

டி இ கிருஷ்ணசாமி – பாண்டியர் 

வி பி எஸ் மணி – மந்திரி 

ராஜா தண்டபாணி – சேனாதிபதி 

நடனம் நடராஜன் – பண்டாரம் 

பாலன் – சேரன் 

குமார் – முருகன் 

இன்னும் ஆயிரக்கணக்கானோர் 

டைரக்ஸன் – கொத்தமங்கலம் சுப்பு

தயாரிப்பு – எஸ். எஸ். வாசன்

சோழ அரசராக நடிக்கும் அசோகன் அவர்களுக்கு இதுதான் முதல் திரைப்படம். எஸ். ஏ. அசோகன் (S. A. Ashokan) என அழைக்கப்படும் ஆன்டனி, அந்தக்காலகட்டத்தில் பட்டம் பெற்று இருந்த சில நடிகர்களில் ஒருவர். தொடக்கக் காலத்தில் சிறு சிறு வேடங்கள், பின் நாயகன் என வலம் வந்த அவர், விரைவில் வில்லனாக உருமாறினார். பல நகைச்சுவை பாத்திரங்களும் ஏற்று நடித்து இருக்கிறார். உயர்ந்த மனிதன், கப்பலோட்டிய தமிழன் (ஆஷ் துரை) போன்ற திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்திருந்த குணச்சித்திர பாத்திரங்கள் அவருக்கு அழியாய் புகழைக் கொடுத்தவை. மிகவும் இளம் வயதில் (52) மாரடைப்பால் இறந்து போனது சோகம் தான். இப்போது அவரது மகன் வின்சென்ட் அசோகன் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

காட்டில் ஆதியும் பகவனும் சென்று கொண்டிருக்கிறார்கள். நிறைமாதமாக இருக்கும் ஆதிக்குப் பெண் குழந்தை பிறக்கிறது. 

அசரீரி ஒன்றும் கேட்கிறது. “இக்குழந்தை உலகிற்கான குழந்தை. அதை அங்கேயே விட்டு விட்டு வரவேண்டும்” என்கிறது. இருவரும் குழந்தையைக் காட்டில் விட்டு விட்டுச் செல்கின்றனர். 

பெரும் மழை வருகிறது. ஓடும் தண்ணீரில் குழந்தை அடித்துச் செல்லப்படுகிறது. ஆற்றில் குளிக்க வந்த ஒருவர் குழந்தையை எடுத்து வருகிறார். 

அவரும் அவரது மனைவியும் தங்களின் குழந்தையாக வளர்கின்றார்கள். குழந்தை பிள்ளையாரைக் கேட்கிறது. குழந்தைக்கு ஔவை எனப் பெயர் வைக்கிறார்கள்.

ஔவை வளர்கிறார். கவிதை எழுதி, மன்னருக்கும் மக்களுக்கும் அறிவு புகட்டும் ஆற்றலை அவருக்குப் பிள்ளையார் கொடுக்கிறார். 

தமிழ்நாடு முழுவதும் நடந்து சென்று பாடும்படி பிள்ளையார் சொல்கிறார். ஔவைக்குத் திருமண ஏற்பாடு நடக்கிறது. அவர் பிள்ளையாரிடம் வந்து வேண்டுகிறார். 

பிள்ளையார் அவருக்கு வயதான தோற்றத்தை அவர் விரும்பிக் கேட்டதன் பெயரில் கொடுக்கிறார். முதிர்ந்த ஔவையார் பல நாடு முழுவதும் செல்கிறார். முதலில் தஞ்சை மன்னர் வரவேற்பு கொடுக்கிறார். அடுத்து அவர் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, பஞ்சத்தால், சிரமப் படுவதைப் பார்க்கிறார். அரசருக்குக் கொடுக்க வேண்டிய நெல்லைக் குறுநில மன்னர் காரி, மக்களுக்கு வழங்குகிறார். இதனால் அதியமான் மன்னரின் அதிகாரிகள் அவரை சிறை பிடிக்க வருகிறார்கள். மக்கள் ஒன்று கூடி எதிர்கிறார்கள். ஔவையார் அதியமானிடம் சென்று மக்கள் நன்றாக இருந்தால் தான் நீ நன்றாக இருக்க முடியும் என்கிறார். அப்போது 

வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும் 

நெல் உயர குடி உயரும்

குடி உயர கோல் உயரும் 

கோல் உயர கோன் உயர்வான்

என்கிறார்.

உன் நாட்டில் பசி வரலாமா என 

“நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் அங்கே பொசியுமாம் – தொல்லுலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை”

பாடுகிறார்.

மழை பெய்கிறது. 

பின்னும் நடக்கிறார். பெண்களுக்கு அறிவுரை வழங்கிச் செல்கிறார். 

வழியில் ஒரு முல்லைச் செடி, படர இடமில்லாமல், கிடக்கிறது. ஏனென்றால், அது படர்ந்திருந்த மரத்தை யாரோ வெட்டி விட்டார்கள். பாரி தனது தேரை அங்கு விட்டு, முல்லைக் கொடியைப் படர விடுகிறார். அவரும், அவருடன் வந்திருக்கும் அவரது மகள்களான அங்கவையும் சங்கவையும் அரண்மனைக்கு ஔவையாரை அழைக்கின்றனர். இவரோ அதற்குத் தனக்கு நேரமில்லை என்கிறார். அவர்கள் சென்ற பின், ஒரு கொள்ளைக் காரன் வந்து ஔவையாரின் பொருளைக் கொள்ளை அடித்துச் செல்கிறான். கோபத்தில் முறையிட அரண்மனைக்கு ஔவையார் செல்கிறார். அதன் பிறகுதான் தெரிகிறது,  ஔவையாரை வரவழைக்கப் பாரி செய்த ஏற்பாடு தான் இது என. 

பாரி, தனது பெண்கள் இருவரையும் திருக்கோவிலூர் தெய்வீகன் அரசருக்குத் (ஜெமினி கணேசன்) திருமணம் செய்து கொடுக்கப் போவதாகவும், மூவேந்தரும் வந்து பெண் கேட்டார்கள்; நான் கொடுக்க விரும்பவில்லை என்றும் சொல்கிறார் (பாரி இரு பெண்களையும் ஒரே ஆணுக்கு மணம் முடிக்க நினைத்தது ஏன் என்ற கேள்வி வருகிறது. அப்போதே ஒருவனுக்கு ஒருத்தி என்பது அடிவாங்கி விட்டது). மூவேந்தரும் வந்து கேட்டார்கள் என்றால், அதில் ஏதோ சூது இருக்கிறது; நான் வந்து திருமணத்தை முடித்து வைக்கிறேன் என ஔவையார் சொல்கிறார்.

மீண்டும் பயணத்தைத் தொடங்குகிறார். பசித்த புலவர் ஒருவரை நாளை வா நாளை வா என ஒரு பணக்காரர் ஏமாற்றுகிறார். அந்த பணக்காரருக்கு வயிற்று வலி வரவழைத்து புத்தி புகட்டுகிறார்.   

மீண்டும் நடக்கிறார். 

திருவள்ளுவரைச் சந்திக்கிறார். திருக்குறளை அரங்கேற்ற மறுக்கிறார்கள் என வள்ளுவர் சொல்கிறார். ‘திருக்குறளைச் சங்கத்தில் அரங்கேற்றாவிட்டால், அது திருக்குறளுக்கு இழுக்கு அல்ல; பாண்டியனுக்கு இழுக்கு’ எனச் சொல்லி, அரசவைக்கு வள்ளுவரையும் அழைத்துச் செல்கிறார். அங்குக் குறளின் வடிவம், எந்த பாவின் வடிவிலும் இல்லாமல் இரண்டு வரிகளில் இருக்கிறது எனப் புலவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ‘சிவனால் நிறுவப்பட்டு, முருகனால் அருளப்பட்டு அகத்தியரால் வளர்க்கப்பட்ட சங்கம் இது. தமிழ் இவர்களுக்கு மட்டும் சொந்தமில்லை’ எனச் சொல்கிறார். 

அகத்தியர்

தண்ணீரில் ஏட்டைப் போடுகிறார். அது தாமரை மலர் மீது உள்ள பெட்டகத்தில் வருகிறது. ஈசன் ஏற்றுக் கொண்டு விட்டார் என அனுமதி கிடைக்கிறது. ‘நக்கீரர், பரணர், கபிலர் முதலிய மாபெரும் புலவர் வளர்த்த தமிழுக்குத் திருக்குறள் பதக்கமாக இருக்கும்’ என்கிறார் ஔவையார்.

மீண்டும் நடக்கிறார். மழைக்காக ஒதுங்கும் ஒரு வீட்டில் அங்கவையும் சங்கவையும் இருக்கிறார்கள். பாரி இவர்களை மூவேந்தருக்கு மணமுடித்துக் கொடுக்காததால், அவரை அவர்கள் கொன்று விட்டதாக அங்கவையும் சங்கவையும் கூறுகிறார்கள். மாப்பிள்ளையான தெய்வீகனையும் அவர்கள் சிறை வைத்து இருக்கிறார்கள். ஔவையார் பிள்ளையாரை வேண்ட, யானைகள் பல சென்று தெய்வீகனை விடுவிக்கின்றன. மூவேந்தர் படையுடன் வருகின்றனர். ஔவையார் மலை மேல் நிற்கிறார். படை வரமுடியாத படி மலை இரண்டாகப் பிரிகிறது. ஔவையார் புத்திமதி சொல்கிறார். நிலம் மீண்டும் இணைகிறது. தெய்வீகன் அங்கவை சங்கவை இருவரையும் திருமணம் செய்கிறார். 

ஔவையார் மீண்டும் நடக்கிறார். நிறையக் குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் இனிப்பு தருவதாக, ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை போன்ற ஏடுகளைக் கொடுக்கிறார். அந்த சிறுவர்களில் ஒருவராக ஓமக்குச்சி நரசிம்மன் இருந்து இருக்கிறார்.

பின், காட்டில் முருகனைச் சந்திக்கிறார். முருகர், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா எனக் கேட்கிறார். பாட்டி சுட்ட பழம் கேட்க அவர் பழத்தைக் கீழே விழ வைக்கிறார். பாட்டி, மண் போவதற்காக ஊதியதும்  சுடுதா பாட்டி எனக் கேட்க இவர் பாடுகிறார். முருகனாக நடிகர் பாலாஜி வருகிறார். இதுவே அவருக்கு முதல் திரைப்படம். சிவன் பார்வதி தரிசனம் கிடைக்கிறது. இத்துடன் திரைப்படம் நிறைவடைகிறது.

சிறு சிறு வேடங்கள், பின் நாயகன், குணச்சித்திர நடிகர், வில்லன் என நடித்து வந்த அவர், விரைவில் பெரும் தயாரிப்பாளராக, குறிப்பாக சிவாஜி அவர்களின் திரைப்படங்களைத் தயாரிப்பவராக உருமாறினார். பிரபல மலையாள நடிகர் மோகன்லால் இவரது மருமகன். 

ஔவையாரின் பாத்திரத்தை கே.பி.சுந்தராம்பாள் அவர்களால் மட்டுமே செய்ய முடியும் என வாசன் நம்பினார். ஆனால், கணவர் கிட்டப்பாவின் மறைவுக்குப் பிறகு, கே.பி.சுந்தராம்பாள் நடிப்புலகிலிருந்து விலகி விட்டார். வாசன், கே.பி.சுந்தராம்பாளை வற்புறுத்தினார். ஒரு லட்சம் ரூபாய் தருவதாக இருந்தால் நடிப்பதாக ஒரு பேச்சுக்கு சுந்தரம்மாள் சொல்ல, வாசன் கொடுத்து விட்டார்.

இத்திரைப்படத்தில், குமாரி ஔவையாராக வரும் குசலகுமாரி அவர்களுக்கு, நடிகையாக இதுவே முதல் திரைப்படம். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக சுமார் நூறு படங்களிலும், பின் ஐம்பதுக்கும் அதிகமான படங்களிலும் நடனமாடி இருக்கிறார். நடிகை டி. ஆர். ராஜகுமாரி, குசலகுமாரியின் அத்தை ஆவார். 

பிரமாண்டத்தை நம்பும் வாசன் அவர்கள், இவ்வாறான ஒரு வயதானவரின் கதையை எடுப்பதற்கும் கூட அதை நம்பி இருக்கிறார். ஆயிரக்கணக்கான நடிகர்களை வைத்துப் பிரமாண்டமாகப் படத்தை எடுத்து இருக்கிறார். படமும் நல்ல வசூலைப் பெற்று இருக்கிறது.

ஊரின் அமைப்பு, நடனம், வாழ்க்கை முறை என அவர் செல்லும் ஊர்களின் தனிச்சிறப்பைச் சொல்லும் வண்ணம் இருக்கிறது. இடி, மின்னல், புயல், தண்ணீர், மழை அருவி, குளம், யானைகள் என ஒவ்வொரு நில அமைப்பிற்கும் ஏற்றவாறு காட்சிகள் உள்ளன என்பது இப்படத்தின் சிறப்பு.

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.