இந்த வருடம் வெளியான சிண்ட்ரெல்லா படத்தின் டிரைலர் பார்த்தவுடனே ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது. இன்றுதான் பார்க்கமுடிந்தது.
என்னால் நம்ப முடியவில்லை. சிண்ட்ரெல்லாவையே தலைகீழாக மாற்றிவைத்திருந்தனர். நம் ஊர் பாணியில் சொன்னால் சித்திக் கொடுமையுடன் வளர்க்கப்படும் ஏழைப்பெண் மந்திரம் மூலம் புதிய உடைகள் , காலணிகளுடன் அடுத்த ராணியைத் தேர்ந்தெடுக்கும் விழாவில் கலந்துகொள்கிறாள். இளவரசனுக்கும் அவளைப் பிடித்துவிடுகிறது. ஆனால், பன்னிரண்டு மணியானால் மந்திரம் சக்தியிழந்து விடும். அதனால் அங்கிருந்து தப்பிவரும்போது ஒரு கண்ணாடிக் காலணியை தவறவிட்டுவிடுவாள் சிண்ட்ரெல்லா.
பல்வேறு தடைகளுக்குப் பிறகு அந்த ஒற்றைச் செருப்பை வைத்துக் கண்டுபிடிப்பார்கள். இளவரசனும் இளவரசியும் சேர, சுபம் என்று முடியும். இதுதான் பழைய சிண்ட்ரெல்லாவின் கதை.
இந்த சிண்ட்ரெல்லா வேறுபடுகிறாள். அவள் கனவு காணும் பெண். தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள முயற்சி செய்கிறாள். நீ பெண், உனக்கு வியாபாரம் அடையாளம் இருக்கக் கூடாது, ஒருவனின் மனைவியாக மட்டும் இருக்கத் தகுந்தவள் என்ற பாலின வேறுபாடுகளை, பாத்திரங்களை உடைத்தெறிகிறாள் சிண்ட்ரெல்லா. இந்த சிண்ட்ரெல்லாவுக்கு இளவரசன் தேவையில்லை. அவன் மீது காதலிருந்தும் பிற்காலத்தில் ராணியாகக் கண்டுண்டு கிடக்க விருப்பமில்லை. அவள் சிந்திக்கிறாள். சுதந்திரத்தைத் தேர்ந்தெடுக்கிறாள்.
இளவரசன் ராபர்ட்டுக்கு நாட்டின் மீது நாட்டமில்லை. அவனும் அவனுக்குப் பிடித்ததைத் தேர்வு செய்ய முடிவெடுத்து, சிண்ட்ரெல்லாவைத் தேர்ந்தெடுத்து, அவள் கனவுகளை நிறைவேற்ற உதவுகிறான்.
இந்த சிண்ட்ரெல்லாவுக்கு வசதியாகவும் நாட்டின் ராணியாகவும் இருக்க வாய்ப்பு இருந்தது. சுலபமான வழியை அவள் தேர்ந்தெடுக்கவில்லை. அவள் தன்னைத் தானே நம்பி உழைத்து, முன்னேறும் வாய்ப்பைப் தேர்ந்தெடுக்கிறாள். தன் கனவை நிறைவேற்றினால் காதல் கிடைக்காது என்று தெரிந்தும் மறுக்கிறாள்.
கனவை நோக்கி அவள் முன்னேற, காதலும் அவளைத் தேடி வருகிறது. பழைய சிண்ட்ரெல்லாவுக்குக் காதல் மட்டும் போதும். சிண்ட்ரெல்லாக்களை ஒப்பீடு செய்வதைவிட ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. ஆணோ பெண்ணோ தனக்கு இதுதான் வாழ்க்கையில் தேவை என்று முடிவெடுக்கும் திறன் வேண்டும். அதற்கான வாய்ப்பு அளிக்கப்படல் வேண்டும். அப்படி ஒரு வாய்ப்புகூட அளிக்க முடியாத சமுதாயம் ஆரோக்கியமான சமூதாயமா என்ற கேள்வி எழுகிறது.
நான் இவர்களுக்காகச் செய்தேன். அவர்களுக்காகச் செய்தேன் என்று கூற நன்றாக இருக்கும். முக்கால்வாசிப் பேர் இப்படித்தான் கூறிக்கொண்டு, தான் நினைத்ததைச் செய்ய முடியவில்லை என்ற விரக்தியில், பிற்காலத்தில் தன்னுடன் இருக்கும் நபரை மனதளவில் துன்புறுத்துவர்.
அசெர்ட்டிவ்னெஸ் (ASSERTIVENESS) என்ற ஒரு சொல் இருக்கிறது. உளவியல் கலைச்சொல். தன் மனதில் இருப்பதை எதிராளியின் மனதைப் புண்படுத்தாமல் எடுத்துச் சொல்லும் திறன். தனக்கு இதுதான் தேவை என்று எடுத்துக் கூறுவது. சிண்ட்ரெல்லா அப்படிப்பட்ட பெண்தான்.
இளவரசன் ராபர்ட்டும் அருமையான கதாபாத்திரம். அவன் சிண்ட்ரெல்லாவை அவளது விருப்பத்திற்கேற்ப அனுப்பிவைக்கிறான். மதிப்பு கொடுக்கிறான். அவள் உறுதியான பெண், தான் கூறியதைக் கேட்கவில்லை என்று அடக்க முயற்சிக்கவில்லை. அவளுக்குத் தான் கீழே என்ற தாழ்வுமனப்பான்மை அவனுக்கு ஏற்படவில்லை. அவனும் ஓர் உறுதியான ஆண். பெண் யோசிக்கிறாள், முடிவெடுக்கிறாள் என்று உறுத்தல் கொள்ளாதவன். உலகம் மாறிவிட்டது. தேவதைத் கதைகளும் (ஃபேரி டெய்ல்ஸ்)மாற வேண்டிய நிலையில் இருக்கின்றன என்பதை அழகாக உணர்த்தியிருக்கிறது இந்த நவீன சிண்ட்ரெல்லா.
இந்த சிண்ட்ரெல்லா படத்தை முதல் முறையாக காண நேர்ந்த போதே அவளின் கோரிக்கை அபத்தமா இருக்கேன்னு நினைத்தேன்.ஆண்களின் கட்டமைப்பு, எத்தனை சிரமம் பட்டாலும் ,ஓருவனை அடைவதே ஒரு பெண்ணின் தலையாய / இறுதி கடமை என வடிவமைக்கப்பட்டுள்ளது.
எதையும் தர சக்தியுள்ள தேவதையிடம் கேட்க வேறெதுவும் தோணலையா?