UNLEASH THE UNTOLD

ஓர் ஊர்சுற்றியின் வியட்நாம் டயரி குறிப்புகள்

வியட்நாம் வாக்கிங் ஸ்ட்ரீட்டில் ஓர் இரவு

1993இல் Lonely Planet என்கிற பயணிகள் வழிகாட்டி நூல் இந்தத் தெருவை உலக சுற்றுலாவாசிகளுக்கு அடையாளம் காட்டி அறிமுகப்படுத்தியது. அதுவே சைகோன் சுற்றுலா வரலாற்றின் மைல்கல்லாக மாறியது. சுற்றுலாவாசிகளை மட்டுமல்லாது வியாபாரம் செய்ய வருபவர்களையும் ஹோ சி மின் கவர்ந்திழுக்க, 2009இல் இந்த இடம் மிக நெருக்கமான தெருவாக மாறியது. அதைத் தொடர்ந்த 20 வருடங்களில் இந்தத் தெரு பன்முகக் கலாச்சாரமிக்கத் தெருவாக, முடிவில்லாத பார்ட்டிகளாலும் சத்தங்களாலும் நிரம்பியது. ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் ஹாட் ஸ்பாட்டாக இந்த வாக்கிங் ஸ்ட்ரீட் மாறியது. பரபரப்பான நாளிலிருந்து மக்கள் இளைப்பாறுவதற்காக இதுபோன்ற இடத்தை அரசே வழங்குகிறது.

நேபாம் சிறுமியை மறக்க முடியுமா?

ஒரு வல்லரசு ஏகாதிபத்தியத்தை வெற்றிகொள்வதற்காக வியட்நாம் கொடுத்திருக்கும், கொடுத்துக்கொண்டிருக்கும் விலை மிக மிக அதிகம். பேராசைக்கான போர்களில் எப்போதும் அப்பாவி ஆடுகளே பலியாகின்றன.

‘Children are not for burning…’

சின்னஞ்சிறிய அந்தக் கூண்டுக்குள் கிட்டத்தட்ட 14 பேரை ஒரே நேரத்தில் அடைத்து மேலிருந்து ரசாயனங்களைத் தூவ, அந்தக் கைதிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் துடிதுடித்து உயிரிழக்கும் காட்சிகள் – கிராபிக் வீடியோக்களாகத் தரைப்பள்ளத்துக்குள் ஓட, குனிந்து பார்த்தபோது தத்ரூபமாக நேரில் பார்ப்பது போலவே இருக்கிறது. மனதைப் பிசைகிறது, நெஞ்சம் பதறுகிறது. வியட்நாம் போரின் போது பயன்படுத்தப்பட்ட ட்ஃபோலியன்ட் ஸ்ப்ரேக்கள் அடுத்தடுத்த தலைமுறைகளில் ஏற்படுத்திய பயங்கரமான விளைவுகள், ‘ஆரஞ்சு’ கண்காட்சிகள் என அத்தனையும் பார்க்க சகிக்க முடியாததாக இருக்கிறது. ஆங்கிலம், வியட்நாமிய மற்றும் ஜப்பானிய மொழிகளில் விளக்கங்கள் வேறு. விவரிக்க முடியாத கொடூரக் காட்சிகளைப் பார்க்க ஆரம்பித்து ஒரு மணிநேரம் கடந்திருந்தது.

போர்களின் தேசம்

சீனா, பிரெஞ்சு, அமெரிக்கா, ஜப்பான் என நான்கு ஏகாதிபத்தியங்களை முறியடித்து வெற்றிவாகை சூடிய வீரஞ்செறிந்த மக்கள் வியட்நாமிய மக்கள். தேச விடுதலைப் போராட்டம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோசலிசப் புரட்சி எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டது அவர்களது போராட்டம். உலகின் மிக நீண்ட போரைத் தன் மார்பில் சுமந்து தன்னைத் தொலைக்காமல் மீட்டெடுத்திருக்கும் இயற்கையின் பொக்கிஷமான வியட்நாம் உண்மையில் போர்களின் தேசம்தான். அத்தகைய போர்களை அனுபவித்தவர்கள், இன்று போர் குறித்த எந்தச் சிந்தனையும் இல்லாமல், அமைதியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். கொடூரமான போர்கள் அவர்களை மனிதநேயமிக்கவர்களாக மாற்றியிருக்கிறது. நிறைய புன்னகை செய்கிறார்கள். உதவி செய்வதில் தாராளமானவர்களாக இருக்கிறார்கள். வாழ்க்கையை வாழ்ந்து அனுபவிக்கிறார்கள்.

நள்ளிரவிலும் பெண்கள் ஊர் சுற்றலாம்!

ஆண்களும் பெண்களும் பகல் முழுக்கக் கடுமையாக உழைக்கிறார்கள். மாலையானதும் ஹோ சி மின் நகரின் முகம் மாறுகிறது. வீட்டுக்குள் யாரும் அடைந்து கிடப்பதில்லை. அத்தனை வீடுகளிலும் வாசலில் சின்ன சின்ன நாற்காலிகளில், வீட்டு மனிதர்களைக் காண முடிகிறது. யாரும் தொலைக்காட்சித் தொடர்களில் தங்களைத் தொலைப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு சாலையிலும் குறிப்பிட்ட பகுதி பொழுதுபோக்கு/விளையாட்டு மைதானமாக விடப்பட்டுள்ளது. இரவு ஆனதும் குடும்பம் குடும்பமாகவும் நண்பர்களுடனும் அங்கு திரள்கிறார்கள். கயிறு விளையாட்டு, நடனம், ஓவியர்கள், ஓவியங்கள், பலூன்கள், ஸ்கேட்டிங், உடல்முழுக்க பெயின்ட் அடித்துக்கொண்ட மனிதர்கள் என அந்தப் பகுதி களைகட்டுகிறது. இளைஞர்களை, இளைஞிகளைத் திருவிழா கூட்டம்போல, கும்பல் கும்பலாகப் பார்க்க முடிகிறது. அவர்களில் பலர் ஆங்காங்கே தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்திக்கொண்டிருக்க, சுற்றியிருக்கும் கூட்டம் கைதட்டி ஆர்ப்பரிக்கிறது.

ஹாய்… ஹோ சி மின்!

இந்தியர்கள் விரும்பும் முக்கிய விஷயமான மலிவுவிலைப் பயணங்களில் ஒன்றாக வியட்நாம் இருக்கிறது. ஆடம்பர ஹோட்டல்கள்கூட, நம் பணப்பையைப் பதம்பார்க்காமல் காப்பாற்றுகின்றன. ஷாப்பிங் பிரியர்களுக்கான வியட்நாம் ஆடைகள், நகைகள், கைவினைப்பொருள்கள் அத்தனையும் நியாயமான விலையில் கிடைக்கின்றன. வரலாற்று ஆர்வலர்கள், இயற்கை விரும்பிகள், உல்லாசப் பிரியர்கள், பட்ஜெட் பத்மநாபன்கள், ஷாப்பிங் ராணிகள் என அத்தனைபேரின் விருப்பத்தையும் நிறைவு செய்யும் வகையிலும் அனைத்துத் தரப்பினரும் காதல் கொள்ளத்தக்க நாடாகவும் வியட்நாம் இருக்கிறது.

விசாவில் வந்த வில்லங்கம்

ஏர்போர்ட்டில் மட்டுமல்ல, அடுத்த நான்கு நாட்களுக்கும் செல்லுமிடமெங்கிலும் புன்னகை முகங்களைத் தரிசிக்க முடிந்தது. வியட்நாமில் இருந்தவரை ஒரு கோபமான முகத்தையோ ஏன் சோகமான முகத்தையோகூட எங்களால் பார்க்கவே முடியவில்லை. மற்றவர்களிடம் உரையாடும்போது அவர்கள் உடல் மொழியே பணிவாக இருக்கிறது. நம்மை நேருக்கு நேர் சந்திக்கும்போது தலை குனித்து புன்னகையுடன் வணக்கம் சொல்கிறார்கள்.

அத்தனைக்கும் ஆசைப்படு...

மலேசியா ஏர்போர்ட்டில் ட்ரான்சிட். ப்ளைட் மாறுவதற்காக டிக்கெட் ப்ளஸ் விசா செக்கிங் இடத்தில் கெக்கேபிக்கேவென சிரித்துக்கொண்டே வரிசையில் நிற்க, மல்லிகா அக்கா அவரது மகள் ஆனந்தி இரண்டுபேரை மட்டும் தனியாக தள்ளிக்கொண்டு போனார்கள். காரணம் கேட்டு பின்னாடியே ஓடினேன். “உங்கள் இருவருடைய விசாவிலும் சென்றடையும் இடம் ஹோ சி மின் சிட்டி, சீ போர்ட் ( Ho Chi Min City, Seaport) என்று இருக்கிறது. அதாவது நீங்கள் கடல் மார்க்கமாகச் செல்வதற்குத்தான் விசா எடுத்திருக்கிறீர்கள். ஆகாய மார்க்கமாக நீங்கள் செல்ல முடியாது, உங்களுக்கு விசா எடுத்துக் கொடுத்த ட்ராவல் ஏஜெண்ட்டைத் தொடர்பு கொள்ளுங்கள்.”