காதல் ஆணவப் படுகொலையை நிகழ்த்துவதற்கான உளவியல் என்பது வெகுகாலமாகவே தமிழ்ச் சமூகச் சூழலில் நிலவி வந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் ஆண்களுக்கும் முன்பான முன்வடிவங்களிலிருந்து ஆணவப் படுகொலைகளை புரிந்து கொள்வதற்கான மிகச் சுருக்கமான மற்றும் ஆரம்ப நிலை ஆய்வாக இக்கட்டுரை அமையும்.
விலங்குகளின் இன்றைய வாழ்க்கை முறையில் ஈன்று பாலூட்டும் தாய் விலங்குகளைப் பின்பற்றி இரைதேட, எதிரி விலங்குகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள, சண்டையிடக் குட்டிகள் பழகிக் கொண்டு வளர்வதைப் போல் தொடக்கக் காலங்களில் மனித இனத்தின் குழந்தைகள் தாயைப் பின்பற்றிய வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தனர். தாய்மை என்பது தலைமைப் பண்பாக இருந்துள்ளது. தாய்மை பொதுமை நெறியில் மனிதக் குலத்தை வழிநடத்தியது.
அசலான தாய்வழிச் சமூகத்தின் அடையாளங்களை தற்பொழுது விலங்குகளின் வாழ்க்கை முறையில் மட்டுமே நாம் காண முடியும். தாய்மை மைய வாழ்க்கைமுறை சமநிலை நோக்கி நகர்ந்து தந்தைமைக்கும் தாய்மைக்கு நிகரான இடம் வழங்கிய பொழுது, பொதுமை மரபு மெல்லச் சிதைந்தது. தாயும் தந்தையும் வேட்டையாடிப் பெறும் உணவு, அவர்களது குழந்தைகளுக்கு மட்டுமே என்ற உடைமை சிந்தனைகள் எழத் தொடங்கின.
பொதுமை மரபை விடுத்து தலைமைப்பண்புகளை அதிகாரமாக நிறுவ நினைத்த தந்தைமை அடைந்த ஆண்கள், ஒரு தாய்க்குப் பிறந்த வெவ்வேறு தந்தைகளின் குழந்தைகளுக்குள் பகிர்ந்துண்ணல் முறையில் போட்டிகளையும் பொறாமைகளையும் உண்டாக்கினர். ஒரு தாய் வயிற்றில் வந்த குழந்தைகள் சண்டையிடுவதைத் தடுப்பதற்கான தீர்வாக தந்தைமைய வாழ்வியலை மனிதக் குலம் ஏற்றுக்கொண்டது. தந்தைமைய வாழ்க்கை முறை குழந்தைகளுக்குத் ‘தந்தை’ அடையாளத்தை முதன்மையாக்கியது. தந்தை அடையாளமற்ற குழந்தைகள் புறக்கணிக்கப்பட்டனர்.
தந்தைமைய சமூகத்தில் தந்தைமை அடைந்த ஆண்கள் அதிகாரத்தை உருவாக்கினர். நிலத்தை, நீரை அவர்களுடையதெனக் கொண்டனர். அவர்களுக்குப் பின் அவர்களுடைய வாரிசுகளுக்கு உரியதென விதி செய்தனர். தந்தை மைய வாழ்க்கை முறையில் இனக்குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்த வரலாற்றுக்கால மனித சமூகம், வேட்டையோடு சேர்த்து பயிர்களை விளைவிக்கவும், கால்நடைகள் பழக்கி வளர்த்து அதன் மூலம் பால் பொருட்களைச் சேகரிக்கவும் கற்றறிந்தது. நீராதாரத்தோடு கூடிய சமவெளிகளில் மலைகளில் நிலையான வாழ்விடத்தை அமைத்துக் கொண்டனர். தந்தை மைய மரபில் இயங்கிய இனக்குழுக்கள் பெரும்பாலும் அகமண முறையில் (endogamy) உறவுகளை ஏற்படுத்திக்கொண்டன.
ஆண்களுடன் உறவு கொண்ட பெண்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தந்தை அடையாளம் கிடைக்க வேண்டுமென எண்ணி, அவர்களது வாழ்விடத்தைத் துறந்து உறவு கொண்ட ஆணின் வாழ்விடத்தில் வாசம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். இவ்வழக்கம் பின்னாளில் பண்பாடாக மாறியது. ஐவகை நிலம் (குறிஞ்சி; முல்லை; மருதம்; நெய்தல்; பாலை) சார்ந்து இனம்கண்ட தமிழர்கள் புறமணமுறைகளை தடுக்க நிலம் சார்ந்த விதிகளை வகுத்துக் கொண்டனர்.
முல்லை நில மக்களின் பொருள் வளம் கால்நடைகளை மையமிட்டதாக இருந்தது. முல்லை நிலப் பெண்ணை விரும்பும் ஆண் ஏறுதழுவதலில் ( ஜல்லிக்கட்டு) வெற்றி கொள்ள வேண்டுமென்ற விதி இருந்துள்ளது. முல்லை நிலத்தின் பாரம்பரியமாக ஏறு தழுவுதல் இருந்தமையால், முல்லை நில ஆண்களுக்கு இப்பரீட்சையில் வெற்றிபெறுவது எளிதான காரியம்.
கடலோடியான நெய்தல் நில ஆண்களுக்கோ, அல்லது வேற்று நில ஆண்களுக்கோ இப்பரீட்சை எளிதான காரியமல்ல. இதுபோன்ற பலப்பரீட்சைகளால் வேறுபட்ட இரு நிலத்தாருக்கு இடையே ஏற்படக்கூடிய காதல் உறவுகள் தடைப்பட்டன. குழுக்களுக்கிடையே பந்தத்தை உண்டாக்கவல்ல காதல் மலர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், குழுக்களினிடையே பல்வேறு மோதல்கள் முளைத்தன. எதிரி இனக்குழுவின் கால்நடைகளைக் களவாடுவது; வளங்களைத் தீயிட்டுக் கொளுத்துவது; செல்வத்தைச் சூறையாடுவது உள்ளிட்ட பல சண்டைகள் நிகழ்ந்துள்ளன. இது போன்ற சிறு சிறு பகை முரண்கள் வலுக்கத் தொடங்கியதும், அகமணமுறை மட்டுமே அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வேறு இனக்குழுவைச் சேர்ந்த ஆணுடன் காதலுற்று இணைவதை, உடன்போக்கு மேற்கொள்வதைத் தடுப்பதற்காக தந்தைமைய சமூகம் பெண்களை வேட்டையாடுவதற்கோ, பொருள் ஈட்டுவதற்கோ வெளியில் செல்ல அனுமதியாமல் வீட்டோடு வைத்தது. பொருள் தேடுவதை ஆண்களின் குணப்பாங்காகவும், வீட்டிலேயே இருக்கும் பெண்களின் உயிருக்கு நிகரான குணப்பாங்கு என ஆண்களை மகிழ்விப்பதும்; நலன் பேணுவதும்; நினைந்துருகிக் காத்திருப்பதும் ஆகும் என்ற நிலைப்பாடு சங்க காலத்தில் இருந்துள்ள விதம்தனை,
“வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க் காடவர் உயிரென”
- குறுந்தொகை -135
என்ற சங்கச் செய்யுளின் வழி அறிய முடிகின்றது. பொருளீட்டும் உரிமை மறுக்கப்பட்டதால் பெண்கள் ஆண்களை சார்ந்தியங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பொருள் தேடும் ஆண், குடிகளை வழிநடத்தும் தலைவனாகக் கருதப்பட்டான்.
காட்டில் திரியும் விலங்குகளை வீட்டு வயப்படுத்தி, உணவிட்டு, வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கின்ற பொழுது அவ்விலங்குகளின் இயல்புகள் மாற்றமடையும். உதாரணமாகப் பூனைகளை எடுத்துக்கொள்ளலாம். பூனைகளின் முக்கிய இயல்புகளில் ஒன்று கேட்கும் திறன். ஓசையை வைத்தே எலி ஓடும் திசையை அறிந்து பின்தொடர்ந்து சென்று வேட்டையாடக்கூடிய ஆற்றல் கொண்டவை பூனைகள். அப்பூனைகளை வீட்டுவயப்படுத்தி செல்லப்பிராணிகளாக உணவிட்டு தொடர்ந்து வீட்டில் வளர்க்கின்ற பொழுது, அவற்றின் இயல்பு மாற்றமடைகின்றது.
வேட்டையாடவோ எதிரி விலங்குகளின் அச்சுறுத்தல்களில் இருந்து காத்துக்கொள்ளவோ தேவையமையாத வீட்டுப்பூனைகள், பரிணாமத்தால் அடைந்த பிறவி இயல்பான கேட்கும் திறனைப் பயன்படுத்தாமல் இருக்கின்றன. எனவே காட்டுப் பூனைகளின் கேட்கும் திறனை விட, வீட்டுப் பூனைகளின் கேட்கும் திறன் குறைவாக உள்ளது. வீட்டு வயப்பட்ட விலங்குகள் தங்கள் இயல்புகளை இழப்பது போல், வேட்டையாடியாகத் திகழ்ந்த பெண்களை வீட்டில் வைத்ததாலும் பெண்களின் பலம் பயன்படுத்தப்படாமல் போனதாலும், பெண்களின் பலமான மற்றும் வளமான இயல்புகள் மாற்றமடைந்தன.
தந்தைமைய சமூகம் வீட்டோடு பெண்களை வைத்து அவர்களை வலிமையற்ற இயல்புடையவர்களாக்கியது. ஒட்டு மொத்த மனிதக் குலத்தையே காத்து வழிநடத்திய பெண்களின் பாதுகாப்பை ஆண்கள் தீர்மானித்தனர். தந்தைமைய சமூகம் இத்தூய்மையைப் பெண்களின் மேல் ஏற்றி வைத்தது. வேற்று இனத்து ஆணுடன் நட்பு கொண்ட பெண்களை, தந்தைமை அடையாளமற்ற குழந்தைகளை ஈன்றெடுத்த பெண்களை, போர்களில் காதலனை இழந்த பெண்களை, பகை நிலத்திலிருந்து கவர்ந்து வரப்பட்ட பெண்களை, பொது மகளிராகத் தந்தை மைய சமூகம் நிறுவியது.
காதலனை இழக்கும் தங்கள் நிலத்தின் பெண்கள் வேறு இனத்தின் ஆண்களுடன் காதல்வயப்படாமல் தடுக்க அப்பெண்களை அலங்கோலப்படுத்தி, போதிய உணவு வழங்காமல் துன்புறுத்தும் விதிமுறைகளை வகுத்தது. கி.மு. 2- கி.பி 3 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டக் காலத்தில் கோப்பெரும்பெண்டின் காதலன்(கணவன்) அரசன் பூதப்பாண்டியன் போரில் இறக்கின்றான். அவனது உடல் எரிக்கப்படுகின்றது. அவனது உடலோடு சேர்ந்து எரிந்து மாண்டு போக கோப்பெரும்பெண்டு எரியும் சிதையை நோக்கிப் பாய்கிறாள். அங்கிருந்த பெரியோர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் கோப்பெரும்பெண்டைத் தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கி ஆற்றுப்படுத்த முயற்சிக்கின்றனர்.
அவர்களை இடைமறித்து கோப்பெரும் பெண்டு பேசுகிறாள். “பலவற்றையும் கற்றுத்தேர்ந்த சான்றோர்களே! என்னை எரியும் சிதையில் போகவிடாது தடுத்து நிறுத்தும் பொல்லாத சூழ்ச்சியுடைய சான்றோர்களே! கணவனை இழக்கும் பெண்கள் நெய் சேர்க்காத அரிந்த வெள்ளரிக்காய் விதை போல் தோன்றும் கைப்பிடி அளவு அரிசியை, வெள்ளை எள் சாந்து சேர்த்துப் புளி ஊற்றி வேகவைத்து சோறாக்கி உண்டும்; பரப்பிய பரல் கற்களை பாயாக்கித் தூங்கியும் வாழும்படி நீங்கள் வைத்துள்ள சட்டத்தின்படி வாழும் கைம்பெண்களைப் போல நான் வாழ விரும்பவில்லை. அப்படி வாழ்வதற்கு என் இறந்துபட்ட கணவனோடு எரிந்து போவதே சிறந்தது.”
” எரியும் சிதையோடு சென்று எரிவது உங்களுக்கெல்லாம் அச்சம் நிறைந்த காரியமாக இருக்கலாம். அன்புக் கணவனை இழந்து கைம்மை நோன்பு விதிக்கப்பட்ட எனக்கோ ஈமத்தீயானது தாமரை மலர்ந்துள்ள குளுமையான பொய்கை போன்றது” என்று கூறுகிறாள். இச்செய்தி,
‘பல்சான்றீரே பல்சான்றீரே
செல்கெனச் செல்லாது ஒழுகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான்றீரே
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்டக்
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்என் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை வல்சி ஆகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்றி வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரிது ஆகுக தில்ல எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே’ ( புறம்:246),
என்ற மேற்கண்ட சங்கச் செய்யுளில் இடம்பெறுகின்றது.
பெருங்கோப்பெண்டு போல் இறந்துபட்ட காதலனுடன் தற்கொலை செய்து கொண்ட பல பெண்களின் குறிப்புகளை வரலாற்றில் நாம் காண முடியும். கணவனை இழந்த பெண்களைப் பகை இனத்தார் கவர்ந்து சென்றாலும், இனத்தூய்மை கெட்டுவிடும், காதலனை இழந்த பெண் விரும்பி வேற்று இன ஆணுடன் காதலுற்றாலும், இனத்தூய்மை கெட்டுவிடும் எனக்கருதிய தந்தைமைய சமூகம், இதுபோன்ற தற்கொலைகளையும் அப்பெண்கள் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்று கருதும்படியான கட்டுப்பாடுகளையும் தோற்றுவித்தது.
இப்பெண்கள் இனத்தூய்மை என்ற ஆணவத்திற்காக, தந்தைமைய சமூகத்தால் கொலை செய்யப்பட்டவர்கள். பட்டியலின ஆண்களைக் காதலிக்கும் பிற்படுத்தப்பட்ட சாதிப் பெண்களை குடும்பத்தார் வற்புறுத்தி விசம் கொடுத்து தற்கொலை செய்யத் தூண்டி, திட்டமிட்டு ஆணவத் தற்கொலைகளை நிகழ்த்தும் சாதிவெறியர்களைப் போலவே, இனத்தூய்மைக்காக ஆணவத் தற்கொலை செய்துகொண்ட பெண்களையும் நாம் ஆராய்ந்தாக வேண்டும்.
பெண்கள் நேரிடையாக ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்படவில்லை. இனத்தூய்மை பேண ஆதியில் அடிமைப்படுத்தப்பட்டனர். பெண்களின் அடிமைத்தனத்தில் ஆணாதிக்கம் வேர்விட்டது. அது இனத்தின் பெருமையாலும், சாதியத்தின் தூய்மையாலும் கிளை பரப்பிக்கொண்டது. ஆணாதிக்கத்தின் எல்லாக் கிளைகளையும் நாம் வெட்டிப் போட முயன்றாலும், முளைக்கின்ற ஆண் குழந்தைகளின் குறிகள் கொண்டாடப்படுகின்றன.
பெண் குழந்தைகளின் யோனிகள் மறைக்கப்படுகின்றன. பெண் குழந்தையின் யோனியில்தான் இன்னமும் சாதியின், மதத்தின், இனத்தின், வர்க்கத்தின் புனிதங்கள் ஒழித்து வைக்கப்படுகின்றன. ஆணாதிக்கத்தோடு சாதியம் போன்ற பாகுபாடுகளையும் அழித்தொழிக்கையிலேயே, பெண்மை சமநிலையடையும். ஆணவப்படுகொலைகள் இனத்தூய்மையின் பொருட்டு தமிழ்ச் சூழலில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டன. அதன் தொடர்ச்சி பெண் எப்படியெல்லாம் அடிமையாக்கப்பட்டாள் என்பதையும் விவரிப்பதாக இருக்கும்.
- தொடரும்.
படைப்பாளரின் முந்தைய படைப்பு:
படைப்பு:
கல்பனா
அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். மலசர் பழங்குடிகளின் சமூகப் பண்பாட்டு இயங்கியல் என்னும் பொருண்மையில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுப்பணியினை மேற்கொண்டுவருகிறார். சர்வதேச ஆய்விதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
Best write up…