சமீபத்தில் சென்ற ஒரு விழாவுக்கு வந்திருந்த பெண்களில் பெரும்பாலானவர்கள் ஐம்பதை நெருங்கிக் கொண்டிருப்பவர்கள். அதையும் இதையும் பேசிக் கொண்டிருந்தவர்களிடையே ஒரு பெண் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் பற்றிச் சொன்னார். உடனே, “நீ பிறந்தநாள் கொண்டாடுவியா?”, “புள்ளையக் கட்டிக் கொடுக்கப் போற, இன்னும் என்ன பொறந்தநாளு?”, “நாங்கல்லாம் பிறந்தநாளை நினைச்சே பாத்ததில்லை”, “என் பையன் பிறந்ததுமே… அவன் பிறந்தநாளை மட்டும்தான் இனிக் கொண்டாடணும்னு முடிவு பண்ணிட்டேன்” என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர்.

நாம் அமைதியாகக் கவனித்துக்கொண்டிருந்தேன்.

இன்னொரு பெண்ணோ, “என் பொண்ணு எனக்குப் பிறந்தநாள் சர்ப்ரைஸ் தருவா… ஆன்லைன்ல எனக்குத் தெரியாம புடவை ஆர்டர் பண்ணிக் கொடுப்பா” என்றார் பெருமை பொங்க. “ஆஹா” என்றார்கள் அனைவரும். அவரே மீண்டும், “ஆனா, இப்பல்லாம் என் பொண்ணு இவ்ளோ நாள் பர்த்டே கொண்டாடியாச்சுல்ல… இனி எதுக்கு இதெல்லாம்? உனக்கு வயசாயிடுச்சு… வேணும்னா அன்னிக்கு உன் போட்டோவை வாட்ஸ் ஆப்ல ஸ்டேட்டஸ் வைக்கிறேன். அது போதும்னு சொன்னா. எனக்கும் அது சரின்னு பட்டுது” என்றபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஒரு பிறந்தநாளைக் கொண்டாட இயலாத பெண்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. கொண்டாட முடியும் என்பவர்களும் வளர்ந்த குழந்தைகள் இருக்கும்போது எனக்கெதற்கு என்று தியாகம் செய்துவிடுகிறார்கள். இந்த உலகில் என்னுடைய வாழ்வை வாழ்ந்தே தீர வேண்டும் என்று சொல்ல ஏன் எல்லாப் பெண்களாலும் முடிவதில்லை?

எனக்குத் தெரிந்த பெண் ஒருவரிடம் அவரது பிறந்தநாள் குறித்துக் கேட்டபோது, “அதெல்லாம் நமக்கெதுக்குன்னு அவர் சொல்லிட்டாரு… அதனால கொண்டாடுறது இல்லீங்க” என்றார். “அவரோட பிறந்தநாள் அன்னிக்கு என்ன பண்ணுவீங்க?” என்றேன். “கோயிலுக்குப் போவோம்… முடிஞ்சா அவரோட பிரெண்ஸுக்கு ஸ்வீட் ஏதாச்சும் செஞ்சு தரச் சொல்லுவாரு. இல்லேனா அவங்களோட பார்ட்டி செலப்ரேட் பண்ணிட்டு, நைட் லேட்டா வருவாரு” என்றார். “இதுக்குப் பேருதாங்க கொண்டாட்டம். அவரோட பர்த்டேயை இப்படி ‘சிம்பிளா’ கொண்டாடுவாரு. ஆனா, உங்க பிறந்தநாளை கொண்டாடும் போது மட்டும் எளிமையானவரா மாறிடுவாரு இல்லீங்களா?” என்றேன். அவர் அமைதியாக இருந்தார்.

நான் இத்தனை வருடங்களாகத் தவற விடாத ஒரு கொண்டாட்டம் என் பிறந்தநாள்தான். சிறு வயதில் அப்பா கட்டாயம் ஒரு புதுத்துணி தைத்துத் தருவார். ஆரஞ்சு மிட்டாய்கள் அக்கம் பக்கத்து வீட்டாருக்கும், பள்ளி நண்பர்களுக்கும் பகிரப்படும். மாலையில் மறக்காமல் எனக்கு மிகவும் பிடித்த கோதுமை வடை, ஜவ்வரிசி, சேமியா பாயசம் பள்ளிவிட்டு வரும்போதே மணக்கும். திருமணத்திற்குப் பிறகு ஆரஞ்சு மிட்டாய்கள் கேக்காக மாறியது. அப்புறம் அன்றைய தினம் கோயிலுக்குப் போய்விட்டு இயலாத சிலருக்கு அன்னதானம் செய்வதாக முன்னேறியது. என்னளவில் என் பிறந்த நாள் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்தான். ஆனால், என் அனுபவங்களைப் பகிர்ந்தபோது பலரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மேலை நாடுகளில் இருந்து வந்த வழக்கம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அன்றைய அரசர்கள் பிறந்த தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறார்கள் என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஆண்டுதோறும் கொண்டாடப்படும் அரசனின் பிறந்தநாள் பெருமங்கலம் என்றும் பெருநாள் என்றும் கொண்டாடப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் அரசர் தூய ஆடைகள் அணிந்து பலவிதமான தான, தர்மங்களை மக்களுக்கு அளிப்பார். சிறையில் இருக்கும் கைதிகளுக்கு விடுதலையும் தண்டனைக் குறைப்பும் வழங்கப்படும். அன்னதானமும் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடக்கும். வரித்தளர்வு, வரி விலக்கு போன்றவற்றை அளித்துள்ளனர். இசை, நாட்டியம், வீர விளையாட்டு விழாக்களையும் நடத்தியுள்ளனர்.

ஆடம்பர மக்களின் கொண்டாட்டம் என்றே பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இப்போதும் பொதுமைப்படுத்தப் படுகின்றன. ஆனால், எத்தகைய சூழ்நிலையில் இருந்தாலும் நம்மை உற்சாகமாக வைத்துக்கொள்ள இதுபோன்ற சின்னச் சின்ன செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பெரிய அளவில் கொண்டாட இயலவில்லை என்றாலும் இருப்பதை வைத்து கொண்டாடலாமே!

ஒருமுறை மாலை நேரம் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு சிறு வீட்டில் சிறுவர் கூட்டம் ஒன்று சின்னதாக ஒரு கேக்கை முக்காலியில் வைத்து சுற்றி நின்றிருந்தார்கள். நடுவில் சிறு பெண் குழந்தை. முகம் கொள்ளாச் சிரிப்போடு அந்த கேக்கை வெட்டியது. அவர்கள் பங்குக்கு ஆளுக்கொரு சிறு துண்டு கேக் மட்டுமே கிடைத்தது. இருந்தாலும் மகிழ்ச்சியாக அதைச் சுவைத்துக் கொண்டிருந்தார்கள். வீடு சிறியதாக இருந்தாலும் நம் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டால் எங்கேயும் எப்போதும் சந்தோஷத்தை மட்டுமே நுகரலாம்.

முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லங்களில் கொண்டாடுவோர் அவர்களது பொழுதுகளில் சிறு அளவிலான வசந்தத்தை வரவழைக்கிறார்கள். நாம் அவர்களோடு பிறந்தநாளைக் கழிப்பதோடு நமது நண்பர்களையும் இவ்வாறு கொண்டாட ஊக்குவிக்கலாம். தாங்கள் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் இல்லை என்ற எண்ணத்தை அந்த இல்லங்களில் உள்ளவர்களுக்கு ஏற்படுத்துவதோடு, வாழ்வின் மீதான நம்பிக்கையையும் அவர்களிடம் விதைக்கலாம். நமக்கே நமக்கான ஒரு நாளை நாம் மகிழ்வோடு கழிக்கலாம். அடுத்த பிறந்தநாள் வரை அது நமக்கு இனிய நினைவுகளை மீட்டுவதாக அமைத்துக் கொள்ளலாம்.

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.