விடுதலை நாள் சிறப்புக் கட்டுரை
“நீ என்ன பெரிய விக்டோரியா ராணியா, சட்டம் பேச?”, என்று அடிக்கடி பெண்களிடம் கேட்கப்படுவதுண்டு. அப்படிப்பட்ட விக்டோரியா ராணியின்பிரகடனத்துக்கே எதிர் பிரகடனம் செய்து போரிட்ட இந்திய அரசியான பேகம் ஹஸ்ரத் மஹலின் பெயரைத்தான் இனி நாம் இந்தச் சொலவடைக்கு பயன்படுத்த வேண்டும்!
1857ம் ஆண்டு நடந்த முதலாம் இந்தியப் போரில் (சிப்பாய்க் கலகம்) ஜான்சி ராணி போர்க்களத்தில் உயிர்துறந்து இந்திய விடுதலை வேள்வியில் வீழ்ந்த முதல் பெண் என்று சொல்லப்படுவதுண்டு. அதே போரில் ஆங்கிலேயரை எதிர்த்து யானை மேல் அமர்ந்து போரிட்டு, தான் ஆண்ட சொந்த நாட்டை இழந்து, எஞ்சிய வாழ்நாள் முழுக்க அகதியாய், உயிரிருந்தும் அனாதையாய், வேற்று மண்ணில் வாழ்ந்து உயிர்விட்ட பெண்ணை உங்களுக்குத் தெரியுமா?
பேகம் ஹஸ்ரத் மஹல்.
இன்றைய உத்தரப் பிரதேசத்தின் வடக்குப் பகுதியான ‘அவத்’தின் ஃபைசாபாத் நகரில் 1820களில் மிகச் சாதாரண சையது குடும்பத்தில் பிறந்தாள் முகமதி கானும் என்ற பெண். ஏழைக் குடும்பத்தால் அவரைப் பராமரிக்க முடியாமல் போகவே, தாசி வம்சத்தைச் சேர்ந்த முகமதி, அவள் குடும்பத்தால், ‘அவத்’ அரண்மனைக்குச் சேவகம் செய்ய விற்கப்பட்டாள். அப்போதைய அவத் நாட்டு மன்னரான சுல்தான் வாஜித் அலி ஷா, ‘பரிகானா’ என்ற ஆடல் பாடல் கற்றுத்தரும் பள்ளியை அரண்மனையில் நிறுவ, அதில் கற்றுத் தேர்ந்தாள் முகமதி.
கதக் நாட்டியத்தை புத்துயிர் தந்து மீட்ட இடம் இந்த பரிகானா. அதில் முகமதிக்கும் பங்கு இருந்திருக்க வேண்டும். ‘மஹ்ருக் பரி’ என்ற பட்டத்துடன் கலைகளில் சிறந்து விளங்கிய முகமதி கானுமின் மேல் மன்னர் வாஜித் அலி ஷாவின் பார்வை விழுந்தது. ‘ஷியா’ பிரிவு இஸ்லாம் அனுமதிக்கும் ‘முடா’ என்ற தற்காலிக திருமணம் ஏற்கனவே இருமுறை மணமான மன்னருக்கும், முகமதிக்கும் இடையே நடைபெற்றது. பணமின்றி அரண்மனைக்கு விற்கப்பட்ட பரம ஏழைப் பெண் மன்னரின் மனைவியானார். முகமதிக்கும் வாஜித் அலிக்கும் 1845ம் ஆண்டு பிர்ஜிஸ் காதிர் என்ற மகன் பிறக்க, முகமதி கானும், அரசி ‘பேகம் ஹஸ்ரத் மஹல்’ ஆனார்.
வாஜித் அலியின் ஆட்சி தொடங்குவதற்கு முன்பே, 1801ம் ஆண்டு அவத் அரசின் பெரும்பான்மை நிலத்தை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி பிடித்துக்கொண்டது. எஞ்சிய நாட்டைக் கப்பம் கட்டி ஆண்டுவந்தார் வாஜித். அவரது ஆட்சியில் கலைகள் மீட்கப்பட்டன, ஆட்சி எளிதாக்கப்பட்டது.
ஆனால் மக்களிடம் பணம் புழக்கத்தில் இல்லை. இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு வாஜித் அலி ஷாவின் ஆட்சியில் சரியாக இல்லை என்று காரணம் காட்டி வில்லியம் ஸ்லீமன் என்ற ஆங்கிலேய அதிகாரி டல்ஹவுசி துரைக்கு தகவல் அனுப்பினார். எவ்வித முகாந்திரமும், உண்மையும் இல்லாமல் 1856ம் ஆண்டு, அவத் அரசைக் கிழக்கிந்தியக் கம்பெனி தன் கட்டுக்குள் கொண்டுவந்து தன்னை ஆட்சியாளராக அறிவித்துக்கொண்டது. வாஜித் அலியை அன்றைய பெங்கால் ராஜதானிக்கு ‘நாடு’ கடத்தியது.
ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள மக்களிடமே செல்ல வேண்டும் என்பதை உணர்ந்த ஹஸ்ரத், மீரட் தொடங்கி லக்னோ வரை மக்களை ஒருங்கிணைத்தார். நானா சாகிப் மற்றும் மௌல்வி அஹ்மதுல்லா ஷா ஆகியோர் பேகத்துடன் போர்க்களம் கண்டனர். புரட்சி பரவியது. ஷாஜஹான்பூரை கிழக்கிந்தியக் கம்பெனியின் பிடியிலிருந்து விடுவிக்க, ஃபைசாபாதின் மௌல்விக்கு துணை நின்றார் பேகம். 1857ம் ஆண்டு ஜூன் 5 அன்று அவத் தலைநகரம் லக்னோ பேகத்தின் ஆளுமையின் கீழ் வந்தது. 14 வயதான குட்டி இளவரசன் பிர்ஜிஸ் காதிர் அவத் அரசராகப் பட்டம் சூட்டப்பட்டார்.
இந்தத் தோல்வியைத் தாங்கமுடியாத கிழக்கிந்தியக் கம்பெனி கான்பூரிலிருந்து மேலும் படைகளை அனுப்பியது. மூன்றே மாதங்களில் லக்னோவின் ஆலம் பாகை கம்பெனி கைப்பற்றியது. கான்பூரும் ஆங்கிலேயர்வசம் சென்றது. ஆனாலும் மனம் தளராத பேகம், தொடர்ந்து படைதிரட்டி வந்தார். பிப்ரவரி 25, 1858 அன்று கம்பெனிப் படைக்கும், அவத் நாட்டுப் படைகளுக்கும் இடையே நடந்த போரில் யானை மேலேறி பேகம் போரிட்டதாக அவத் வாய்மொழிக் கதைகளும் பாடல்களும் சொல்கின்றன.
போரில் பேகம் தோல்வியடைய, 16 மார்ச், 1858 அன்று ஆங்கிலேயப் படைகள் லக்னோவை முழுவதும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன. லக்னோவிலிருந்து தப்பிய பேகம் தன் படைகளுடன் நேபாளத்தின் காடுகளுக்குள் ஊடுறுவினார். 30 செப்டம்பர் 1858க்குள் படைகள் அனைவரும் ஒன்று திரண்டு லக்னோ நோக்கி வர வேண்டும் என்று தன் ஆளுமையின் கீழுள்ள வீரர்களுக்குக் கடிதம் அனுப்பினார் பேகம். நாட்டை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று துடித்தார். இந்நிலையில் நவம்பர் 1, 1858 அன்று இங்கிலாந்தின் அரசியான விக்டோரியா இந்தியாவை தன் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவருவதாகப் பிரகடனம் செய்தார்.
“ ஆங்கிலேய அரசு இனி ஆட்சியைக் கையில் எடுக்கப்போவதாகச் சொல்கிறது. கிழக்கிந்தியக் கம்பெனியின் உரிமையாளர்கள் மாறப்போவ்வதில்லை, ஆளும் நபர்கள் மாறப்போதில்லை, எல்லாமே அரசியின் ஆளுமைகீழ் தான். ஆங்கிலேயர்களை நம்புவதற்கில்லை. கம்பெனியின் எல்லா ஒப்பந்தங்களையும் அரசி அப்படியே ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருப்பது இந்தியாவை முழுக்க ஆங்கிலேய ஆளுமையின் கீழ் கொண்டு வருவதற்கே. அவதின் அரசை எடுத்துக்கொள்ளமாட்டோம் என்று ஒரு பக்கம் சொன்னாலும் அதை அவர்கள் ஆளுமைக்கு உட்படுத்திவிட்டார்கள். இவர்களை எப்படி நம்புவது?”
நேபாளத்தின் காடுகளில் சுற்றித்திரிந்த காரணத்தால் படை வீரர்கள் அயர்ந்து விலகத் தொடங்கினார்கள். 1859ம் ஆண்டு தெராய் பகுதியில் தங்கியிருந்த பேகம், நேபாளத்திடம் அடைக்கலம் வேண்டினார். ஜனவரி 15, 1859 அன்று அடைக்கலம் தர மறுத்து கடிதம் எழுதியது நேபாளம். பின்னர் மனம் மாறிய நேபாள மன்னர், ஒரு வழியாக நேபாளத்தில் பேகமும் அவரது படைகளும் தங்க அனுமதித்தார். ஆனால் இந்தியாவில் யாருடனும் எந்தத் தகவல் பரிமாற்றமும் செய்யக் கூடாது என்ற கடும் கட்டளை பேகத்துக்கு விதிக்கப்பட்டது.
அவத் நாட்டின் விலைமதிக்க முடியாத நகைகளைப் பேகத்திடமிருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கியபின் தான் நேபாள மன்னர் ஜங் பஹாதுர் அவருக்கு நேபாளத்தில் அடைக்கலம் தந்தார். இந்தியாவுக்கோ, அவத் நாட்டுக்கோ செல்லப்போவதில்லை, எந்தத் தகவல் பரிமாற்றமும் செய்யப்போவதில்லை என்று சம்மதம் தந்து, காத்மண்டு நகரில் குடியேறினார் பேகம்.
ஆங்கிலேய அரசோ, பேகத்துடன் நேபாளத்தில் அடைக்கலம் புகுந்த மொத்தப் படைகளுடன் ராணி சரணடைந்தால், அவர்களை உயிருடன் விட்டுவிடுவதாக வாக்களித்தது; ராணிக்கு பெரும் பணம் ஓய்வூதியமாக வழங்குவதாக ஆசைகாட்டியது. பேகம் அதை மறுத்துவிட்டார். சில ஆண்டுகளில் மகன் பிர்ஜிஸ் உடல்நலம் குன்ற, அவருக்குச் சிகிச்சை தர இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும் என்று பேகம் ஆங்கிலேய அரசுக்கு மனு செய்தார்.
சூழலைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த ஆங்கிலேய அரசு, அவ்வாறு சிகிச்சைக்கு இந்தியா வந்தால், அவருக்கு அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காது என்றும், மாவட்ட நீதிபதியிடம் தினமும் கையெழுத்திட வேண்டும் என்றும் தெரிவித்தது. மகனின் வாழ்க்கையைக் காப்பாற்ற இயலாத சூழலில், அதையும் ஏற்க மறுத்தார் பேகம். 1859 முதல் 1879 வரை 20 ஆண்டுகள் இந்தியா பற்றிய கனவிலேயே கழித்து காத்மண்டு நகரில் இறந்தும் போனார் பேகம் ஹஸ்ரத் மஹல்.
காத்மண்டு ஜாமா மஸ்ஜிதில் பெயரிடப்படாத கபர் ஒன்றில் மீளாத்துயில் கொண்டிருக்கும் பேகம்தான், விக்டோரியா மகாராணிக்கு சவால் விடுத்த வீரப்பெண்மணி!
***
கட்டுரையாளரின் மற்ற படைப்பு:
கட்டுரையாளர்:
நிவேதிதா லூயிஸ்
எழுத்தாளர், வரலாற்றாளர்.