இனி அகிலத் திரட்டின் 23வது வரியிலிருந்து தொடர்கிறேன்.

‘நாரணா கந்தா நானுனக்கு ஏவல் பண்ணி

காரணங்கள் ஆச்சு கடசு நாள்தானாச்சு

உனக்கும் இந்த பதிதான் உறவு கேடாச்சுதய்யா

எனக்கும் ஒரு பிறவி இன்று வந்து வாச்சுதென்று

செந்தூர் தலங்கள் சில நாட்கள் செல்லும் முன்னே

மண்டூர்ந்து போகுமென்று மாது மிக சாபமிட்டாள்

சாபமிட்டு மங்கை தக்கென்று கீழ்வீழ்ந்து

சீவனது விட்டிடவே சிவனை கண் நோக்கினளே

நம்பூரி பங்கத்தாலே அந்த நாயகியும்

உம்பர் கோனுரில் உயிர் விட்டாள் மாமுனியே 1

திருச்செந்தூர் முருகனையும் திருமாலின் அவதாரங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது அகிலத்திரட்டு. எனவேதான் ‘நாரணா கந்தா’ என்று அய்யா வைகுண்டரை அழைப்பதாக வார்த்தைகள் வருகின்றன.

நம்பூதிரி பிராமணனால் வன்புணர்ச்சிக்கு ஆளான பெண் சாபமிடுவதை உணர்த்தும் வரிகள் மேற்கூறியவை.

‘நாரணா கந்தா, நான் உனக்கு பணிவிடைகள் செய்ததற்கான காரணங்கள் அர்த்தமற்றதாகியது. நான் உனக்கு பணிவிடைகள் செய்வது இன்றைக்கு கடைசி நாளாயிற்று. உனக்கும் இந்த பதியுடைய (கோயிலுடைய) உறவு, கேடாகத்தான் முடியும் அய்யா! எனக்கு இன்று, என் பிறவி அழிந்து, சாவென்ற பிறவி வந்து வாய்த்ததால், இன்னும் சில நாட்களில் இந்த செந்தூர் தலங்கள் மண்ணோடு மண்ணாகி போகும், என்று பெண் சாபமிட்டாள். சாபமிட்ட மங்கை (பெண்) தக்கென்று கீழே விழுந்து உயிரை (ஜீவனை) விட்டு விட்டு, சிவனை பார்த்தாள். நம்பூதிரி செய்த பங்கமான செயலால் அந்த பெண் (நாயகி) உம்பர் கோனூரில் உயிரை விட்டாள் மாமுனியே’ என்பதே மேற்கூறிய அகிலத்திரட்டு வரிகளின் பொருளாகும்.

உம்பர் கோனூர்: உம்பர் என்றால் ‘உயரமான’ என்று பொருள். பெரும்பாலான உரையாசிரியர்கள் உம்பர் என்றால் வானுலகம், இந்திர லோகம் என்றெல்லாம் பொருள் எழுதியுள்ளார்கள். அது அவர்களின் கற்பனையே அன்றி வேறில்லை. உம்பர் என்றால் ‘உயரம்’ அவ்வளவே!

‘உம்பர் கோனூர்’ என்ற வார்த்தை, இங்கு ‘உயரமான மலைகளின் அரசன் (கோன்) முருகன் என்பதால், ‘உயரமான மலைகளின் அரசனுடைய ஊர்’ என்ற பொருளே பொருத்தமானது என்பது எனது முடிவு.

‘தவறா மங்கை தானுரைத்த சாபமதால்

இது அறா யெனக்கு இங்கிருக்க மனம் கூடாமல்

எங்கேயோ போவோமென்று இதை விட்டு எழுந்திருந்து

மங்கை சொன்ன நாள் முதல் தெக்கு வாரியிலே போய் இருந்தேன்

அல்லாமல் இங்கு அழிமதிகள் ரெம்ப ரெம்ப

வல்லாண்மையாக வலுஞாயம் காணுது காண்’2

‘தவறாத மங்கை (பெண்) உரைத்த சாபத்தால், இது (அந்த பெண் சீரழிக்கப்பட்ட சம்பவம்) என் மனதை விட்டு நீங்காததால், எனக்கு இங்கிருக்க மனம் இல்லாமல், எங்கேயாவது போய் விடலாம் என்று நினைத்து, இதை விட்டு எழுந்திருந்து, மங்கை சொன்ன நாள் முதல் தெற்கு வாரியில் போய் இருந்தேன். இல்லாமலும் இங்கு அழிவுகளும், சீரழிவுகளும் ரொம்ப அதிகம். வலிமையான அதிகார ஆட்சியாக, வன்முறையாக, கட்டாயப்படுத்தப்பட்ட நியாயம் காணப்பெறுகிறது’ என்ற பொருளுணர்த்தும் மேற்கூறிய அகிலத்திடிரட்டின் வரிகள், பத்தொன்பதாம் நூற்றாண்டு காலகட்டத்தில், திருச்செந்தூரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலவிய, சர்வாதிகார ஆட்சியையும், எளிய மக்கள் மீது நடத்தப்பட்ட ஒடுக்குமுறையையும் எடுத்துக் கூறுவதாக உள்ளது.

அடுத்த வரிகள்,

‘முன்னடப்பு மங்கையர்கள் முங்கிக் குளித்து மிக

என் நடையில் வந்து ஏந்திழைமார் ஆடுவது

ஆட வரும் போதும் அசுத்தத்தோடு வாராள்

பாட வரும்போது பண்ணுறாள் அசுத்தமது

கோயிலிலே பூசை செய்யும் குறும்பர் மிகத் துணிந்து

தேவியர்க்கு ஈய திருடுகிறார் என் முதலை

கணக்கன் முதல் நம்பூரிக் கள்ளப் பெண்ணார்களுக்கு

இணக்கமதாய் இருந்து என் முதலை கொள்ளை கொண்டு

எடுக்கிறார் பெண்கள் எச்சில் ஆட்டும் ஆடி

ஒருக்கிறார் பெண்கள் ஒண்ணுக்கொண்ணு ஒத்திருந்து

பம்பைப் பரத்தை பகட்டு கைக்காட்டல் எல்லாம்

எம்பரனுக்கு ஏற்ற இயல்பல்லா மாமுனியே

ஆனதால் இவ்வகைகள் யான் வேண்டாம் எனவே

மானம் அழியும் முன்னே மாமுனியே தெட்சணத்தில்

பள்ளி கொண்டு நானிருந்து பார்த்து சில நாள் கழித்து

கள்ளியாட்டு காவடிக் கைக்கூலிதான் முதலாய்

நிறுத்தல் செய்ய வேண்டியதெல்லாம் மிக நிறுத்தி

பொறுத்து அரசு தர்மம் புவியாளப் போறேன் இனி’3 என்ற அகிலத்திரட்டு வரிகளின் பொருள் பின்வருமாறு;

‘முன்னடப்பு பெண்கள் முங்கிக் குளித்து என் நடையில் வந்து ஆடுவது வழக்கம். ஆனால் ஆட வரும்போதும் அசுத்தத்தோடு வருகிறார்கள், பாட வரும் போதும் அசுத்தம் செய்கிறார்கள். கோயிலிலே பூசை செய்யும் குறும்பர்கள், பெண்களுக்குக் கொடுக்க என் முதலை (முதலீட்டை) மிகத் துணிந்து திருடுகிறார்கள். கணக்கன் முதல் நம்பூதிரிகள் வரை அனைவரும் கள்ளப் பெண்களுக்கு, இணக்கமாக இருந்து, என் முதலீட்டைக் கொள்ளையடிக்கிறார்கள். பெண்கள் எச்சில் செய்யும் ஆட்டமும் ஆடி, ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக இருந்து களவாடிய பொருட்களை ஒன்று சேர்த்து ஒதுக்கி வைக்கின்றனர். பம்பை, பரத்தை, பகட்டு (ஆடம்பரம்), கைக்காட்டல் போன்றவை எனக்கு ஏற்ற இயல்பான செய்கைகள் அல்ல மாமுனியே!

கைக்காட்டல்:

திருச்செந்தூரில் வாழ்ந்த தேவதாசிகளில் ‘உதயமுறைக்காரிகள்’ என்பவர்கள் ஆடுகின்ற ஒருவகை ஆட்டத்துக்கு, கையாட்டல் என்று பெயர். திருச்செந்தூர் முருகனுக்கு நடைபெறும் நாள் வழிபாட்டில், உதய மார்த்தண்டம், உச்சிக்காலம், ராக்காலம் ஆகிய காலங்களில் திருமுழுக்கு நடைபெறும். அக்காலங்களில் உதய முறைக்காரிகள் என்னும் தேவதாசிகள் மூலவர் முன் நின்று ஆடுவர். உட்காரும் பாவனையில் நின்று கைகளை மட்டும் ஆட்டுவர். பார்வையை மூக்கு நுனியில் நிறுத்துவர். இவ்வாட்டத்துக்கு ‘கையாட்டல்’ என்று பெயர். கையாட்டல் என்பதையே அய்யா வைகுண்டர் கைக்காட்டல் என்று குறிப்பிடுகிறார் என்று நம்புவதற்கு, அகிலத்திரட்டின் வரிகள் சான்றாகின்றன. ‘பம்பை பரத்தை பகட்டுக் கைக்காட்டல்’ என்ற வரியை நோக்குக! கையாட்டல் என்பதே நாஞ்சில் நாட்டு பேச்சு வழக்கில் மருவி கைக்காட்டல் என்றாகியிருக்க வேண்டும். (திருச்செந்தூர் முருகன் கோயில் வரலாறு)

ஆகையால் இவ்வகைகள் வேண்டாமென முடிவு செய்து, மானம் அழியும் முன்னே தெட்சணத்தில் பள்ளி கொண்டு, நடப்பதையெல்லாம் சில நாட்கள் பார்த்திருந்தேன். கள்ளப் பெண்களின் ஆட்டம், காவடி, கைக்கூலி (பூசாரிகளின் கைகளில் கொடுக்கும் கூலி) முதலாக நிறுத்த வேண்டிய அனைத்தையும் நிறுத்தல் செய்து, பொறுமையாக தர்ம அரசு கொண்டு புவியாளப் போகிறேன்’ என்று அய்யா வைகுண்டர் முனிவரிடம் சொல்வதாக அகிலத்திரட்டு கூறுகிறது. இதில் அய்யா வைகுண்டர் தன்னை கடவுளாக பாவித்து பேசுவதாகவே உள்ளது.

அய்யா வைகுண்டர், நன்றி : மாலைமலர்

மேற்கூறிய வரிகளில்

‘முன்னடப்பு மங்கையர்கள் முங்கிக் குளித்து மிக

என் நடையில் வந்து ஏந்திழைமார் ஆடுவது

ஆட வரும் போதும் அசுத்தத்தோடு வாராள்

பாட வரும்போது பண்ணுறாள் அசுத்தமது’

என்ற வரிகளை நோக்குங்கால், கோயில்களில் பெண்கள் ஆடுவதும், பாடுவதுமான தேவரடியார் முறையை குறிப்பதாகத் தெரிகிறது.

தெய்வத்துக்குத் தொண்டு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ‘தேவரடியார் வழக்கம்’ காலப்போக்கில், முறைகேடாக பயன்படுத்தப்பட்டு அப்பெண்கள் பரத்தையர் ஆக்கப்பட்ட வரலாறை அகிலத்திரட்டில் குறிப்பிடுகின்றார் அய்யா வைகுண்டர் (முத்துக்குட்டி). ‘பரத்தை’, ‘கள்ளப் பெண்ணார்கள்’ போன்ற வார்த்தைகள், கோயில் சொத்தை கொள்ளையடிக்கும் தேவதாசிகளைக் கண்டித்துச் சொல்லும் வார்த்தைகளாகத் தென்படுகின்றன. ‘கள்ளியாட்டு’ என்ற வார்த்தை தேவதாசிகளின் நடனத்தையே குறிப்பிடுவதாக உள்ளது.

பாண்டிய மன்னர்களும், நாயக்க மன்னர்களும் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த கால கட்டங்களில்கூட, திருநெல்வேலியின் தென் பகுதிகள் திருவிதாங்கூர் மன்னரின் ஆட்சியின் கீழேயே இருந்தன. இச்செய்தியை திருச்செந்தூர் கோயிலின் ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்துவதாக கால்டுவெல் கூறுவதில் இருந்து, திருச்செந்தூரும் திருவிதாங்கூர் சமஸ்தானத்து ஆட்சியின் கீழ் இயங்கியது என்பது தெளிவு.4

கேரள மன்னர் உதய மார்த்தாண்ட வர்மா (1729-1758) திருச்செந்தூர் கோயிலில், காலை ஆறு மணிக்கு நடைபெறும் உஷத்கால பூசைக்கு பொருளுதவி வழங்கிய செய்தி, மேற்கூறிய தகவலை இன்னும் உறுதி செய்கிறது. அதனால்தான் மற்ற கோவில்களில் விளா பூசை என்று வழங்கப்படும் உஷத்கால பூசை, திருச்செந்தூர் முருகன் கோவிலில் ‘உதயமார்த்தாண்ட அபிசேகம்’ என்று சொல்லப்படுகிறது. 1940ஆம் ஆண்டு வரை உதயமார்த்தாண்ட வர்மா ஏற்படுத்தியபடி உஷத்கால பூசைக்கான பொருளுதவி திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் வழங்கப்பட்டது.5

நன்றி: தேவஸ்தானம் வலைதளம்

தென் கனராவில் உள்ள மங்களூரில் உள்ள மங்களபுரம் பகுதியிலிருந்து உருவாக்கப்பட்ட மாத்வ அத்வைத பிரிவைச் சேர்ந்த பன்னிரண்டு போற்றிகளின் குழுவால் திருச்செந்தூர் முருகனின் முக்கிய சன்னதியில் வழிபாடு நடத்தப்படுகிறது. அவர்கள் பேசும் பேச்சுவழக்கு துளு. சடங்கு முறை குமார தந்திரத்தால் நிர்வகிக்கப்படுகிறது. போற்றிகளின் வழிபாடு இந்த கோவிலில் 18ஆம் நூற்றாண்டில் கேரள அரசர் மகாராஜா மார்த்தாண்ட வர்மா (1729-1758) அல்லது திருமலை நாயக்கரின் பிரதம மந்திரி மற்றும் தளபதியான தளவோய் ராமப்பய்யனால் (1623-1659) அறிமுகப்படுத்தப்பட்டது என நம்பப்படுகிறது. நாயக்க மன்னர்கள் 17ஆம் நூற்றாண்டில் மலபாரை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து முக்கிய வழிபாட்டை போற்றிகளிடம் ஒப்படைத்தனர்.

நன்றி : தேவஸ்தானம் வலதளம்

இன்றும் அவர்கள் கட்டுப்பாட்டில்தான் முக்கிய சன்னதி உள்ளது. சடங்குகள் மலபார் நம்பூதிரி குலத்தைச் சேர்ந்த ஒரு தாந்திரியரால் வழிநடத்தப்படுகின்றன. போற்றிகள் அரசரிடமிருந்து மாதாந்திர ஊதியம் பெற்றது மாறி, தற்போது தேவஸ்தானத்திடம் இருந்து மாதாந்திர ஊதியம் பெறுகிறார்கள். அவர்கள் தனியான போற்றி மடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சண்முக மற்றும் பிற சன்னதிகளில் வழிபாடு பன்னிரண்டு சிவாச்சாரியர்கள் அல்லது குருக்கள் கொண்ட மற்றொரு சமூகத்தால் செய்யப்படுகிறது.

பின்னாளில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்த சர்.சி.பி. ராமசாமி ஐயரால் உதய மார்த்தாண்ட வர்மாவின் கட்டளை நிறுத்தப்பட்டது. 1931 முதல் 1949 வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆட்சி செய்த மன்னர் சித்திரைத் திருநாள் மகாராஜா ஆவார்.

உதய மார்த்தாண்ட வர்மா கட்டளை நிறுத்தப்பட்டதற்கான காரணங்கள்:

திருவிதாங்கூர் மன்னர் பிறந்த நட்சத்திரத்தன்று உதய மார்த்தாண்ட அபிசேகத்துக்கு, திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பால் குடம் வருவது வழக்கமாக இருந்தது. ஒருமுறை பால் குடம் வருவதற்கு தாமதமானதால், அபிசேகத்தை பால் குடம் வருவதற்கு முன்பாகவே முடித்து விட்டனர். இதனால் திருவிதாங்கூர் மன்னர் கோபம் கொண்டார்.

உதய மார்த்தாண்ட அபிசேக பூசை காண வந்த சமஸ்தானத்து அதிகாரிகளுக்கு கோயில் நிர்வாகம் தகுந்த மரியாதை கொடுக்கவில்லை, திருவிதாங்கூர் கட்டளை அலுவலகம் அமைக்க, கோயில் நிர்வாகம் இடம் ஒதுக்க மறுத்தது, போன்ற காரணங்களாலும் ‘உதய மார்த்தாண்டக் கட்டளை’ திரும்ப பெறப்பட்டதாகக் கூறப்படுகின்றன. திருவிதாங்கூர் மன்னர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குக் கொடுத்த பொருட்களையும், திருவிதாங்கூர் அரசின் அதிகாரிகள் திரும்பக் கொண்டு சென்று விட்டனர். குழம்பு வைக்கும் கல் தொட்டியை உடைத்தனர். இவ்வாறாக திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும் திருச்செந்தூர் கோவிலுக்கும் உள்ள தொடர்பை அறிய முடிகிறது.6

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ‘போற்றிமார் தங்குமிடம்’ அமைக்கப்பட்டிருப்பது திருச்செந்தூர் கோவிலின் பூசாரிகள், கேரளாவை சேர்ந்த போத்தி (போற்றி) என்பதை உறுதி செய்கிறது.7 போத்தி என்பது கேரளா கோவில்களில் பூசை செய்யும் பூசாரிகளை அழைக்க பயன்படுத்தப்படும் சொல் என்பதை முன்பே பார்த்தோம்.

திருச்செந்தூர் கோவிலின் மூலவருக்கு, போற்றிமார், கேரள முறைப்படி ‘தந்திர சமுச்சயம்’ என்னும் நூலில் கூறப்பட்டுள்ள படியும், வைதீக தாந்த்ரீக முறைப்படியும் குமார தந்திர முறைப்படியும் பூசை நிகழ்த்துகின்றனர்.8

‘திருச்செந்தூர் கோவில் திருவிழா சமயத்தில் உற்சவர் வீதி உலா வரும் போது, அன்றைய பணியிலுள்ள தேவதாசி அக்கோயில் அர்ச்சகர்களை ஏழு முறை சவுக்காலே அடிக்க வேண்டும் என்ற வழக்கம் நிலவியது. அவ்வழக்கம் 1940ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது’ என்று ‘வரலாற்றில் தேவதாசிகள்’ என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. எனவே திருச்செந்தூர் கோயிலிலும் தேவதாசியர் இருந்தனர் என்பதை உறுதி செய்யலாம்.9 போலவே, ‘திருச்செந்தூர் கோயில் வரலாறு’ நூலில், ‘இக்கோயிலில் தேவதாசி முறையிருந்த காலத்தில் ஆடல் (நிருத்தம்) இருந்தது’ என டாக்டர் ந. கல்யாணசுந்தரம் குறிப்பிடுகிறார்.10

‘ஐந்து வயது தொடங்கப்‌ பன்னிரண்டு வயது முடியப்‌ பரதம்‌ பயில்வர்‌. இருக்கோயிலில்‌ அலகிடுதல்‌ (பெருக்குதல்‌) மெழுகுதல்‌, கோலமிடுதல்‌, மாவிடித்தல்‌, விளக்கேந்துதல்‌, முதலிய பணிகளையும்‌ ஆடல்‌ பாடலோடு செய்து வந்தனர்‌. இத்திருக்கோயிலில்‌ ஏறத்தாழ இருபத்தைந்து தேவதாசி குடும்பத்தினர்‌ பணி புரிந்தனர்‌. இவர்கள்‌ ‘உதய முறைக்காரி’ என்றும்‌, ‘எட்டுக்‌ குடிக்காரி’ என்றும்‌ இரு பிரிவினராக வாழ்ந்து வந்தனர்‌’ எனவும் ஆ. சொக்கலிங்கம்‌ அவர்களின் ‘ஆலயங்களின்‌ உட்பொருள்‌ விளக்கம்‌’ நூலில் இருந்து தரவுடன் இந்நூலாசிரியர் சுட்டுகிறார்.

உதய முறைக்காரி – ‘நாள்‌ வழிபாட்டில்‌ உதயமார்த்தாண்டம்‌, உச்சிக்காலம்‌, இராக்காலம்‌ ஆகிய காலங்களில்‌ திருமுழுக்கு நடைபெறும்‌ காலத்து இவர்கள்‌ மூலவர்‌ முன்‌ நின்று ஆடுவர்‌. உட்காரும்‌ பாவனையில்‌ நின்று கைகளை மட்டும்‌ ஆட்டுவர்‌. பார்வையை மூக்கு நுனியில்‌ நிறுத்துவர்‌. இதற்குக்‌ ‘கையாட்டல்‌’ என்று பெயர்‌. அப்போது பாடப்படும்‌ பாடல்‌ கெளத்துவம்‌ எனப்பட்‌ டது. திருவிழாக்காலத்திலும் இவர்கள் பல்வேறு திருப்பணிகள் செய்தனர்…’

எட்டுக்குடிக்காரிகள் – ‘இவர்கள்‌ உதய முறைக்காரிகளுக்குப்‌ பின்பு வந்து குடியேறிய தாகக்‌ கூறுகிறர்‌ திருமதி சங்கர காந்தம்மாள்‌. ஆறுமுகப்‌ பெருமான்‌ மலையாளத்திலிருந்து வந்தபோது அவருடன்‌ வந்து திருச்செந்தூரில்‌ குடியேனறிராம்‌. எட்டுக்குடிக்காரிகள்‌ இத்‌ இருக்கோயிலில்‌ அலகிடுதல்‌, பொரிப் பொரித்தல்‌, மாவிடித்தல்‌, நைவேத்தியம்‌ கொண்டு செல்லும்‌ போதும்‌ சீபலி எழுந்தருளும்‌ போதும்‌ விளக்கு ஏந்திச்‌ செல்லுதல்‌, பள்ளியறையில்‌ தம்புரா வுடன்‌ ஊஞ்சல்‌ பாட்டுப்‌ பாடுதல்‌, முதலிய பணிகளைச்‌ செய்து வந்தனர்‌.’ எனவும் திருச்செந்தூர் முருகன் கோயில் வரலாறு நூல் குறிப்பிடுகிறது

இவ்வாறான வரலாற்றுத் தகவல்களையும், அகிலத்திரட்டில் அய்யா வைகுண்டர் எழுதியிருக்கும் மேற்கூறிய இழி சம்பவத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியம் தற்காலத்தில் ஏற்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதியன்று, அய்யா வைகுண்டர் பற்றி உண்மைக்குப் புறம்பானக் கருத்தைப் பேசிய, இப்போதைய தமிழக ஆளுநர் R.N. ரவி அவர்களுக்கு ஆதரவு கொடுத்த, ‘அய்யாவழிப் பாடகர் ஒருவர்’ மார்ச் 7ஆம் தேதியன்று தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், “எதுலயும் அகிலத்திரட்டுல பிராமணரை அய்யா கொறைச்சு பேசினதே இல்ல”, என்று அடித்துப் பேசியிருந்தார்.11 அவர் மட்டுமல்ல! அவரைப் போல் தவறான புரிதலுள்ள அய்யாவழி மக்கள் அனைவரும் மேற்சொன்ன அகிலத்திரட்டின் வரிகளை கட்டாயம் படிக்க வேண்டும்.

நம்பூதிரி பிரமணர்களின் நிர்வாகத்தின் கீழிருந்த கோயில்களில், நடைபெற்ற முறைகேடுகளையும், தேவதாசிப் பெண்களின் இழிநடத்தையையும், பூசாரி ஒருவனால் பெண்ணொருத்தி சீரழிக்கப்பட்ட சம்பவத்தையும் விளக்கிக் கூறி, ஆனதினால், காவடி, கைக்கூலி, காணிக்கை, தேவதாசி ஆட்டம் போன்றவற்றை நிறுத்த வேண்டும் என்று கூறும் அகிலத்திரட்டும், அகிலத்திரட்டை அஸ்திவாரமாகக் கொண்ட அய்யாவழியும், இந்துத்துவத்தின் சித்தாந்தத்தோடு எப்படி பொருந்திப் போகும்? இந்துத்துவத்தின் முறைகேடுகளை காத்திரத்தோடு எதிர்க்கின்ற அகிலத்திரட்டை மீறி இந்துத்துவம் (RSS) அய்யாவழியை விழுங்கி விடுமா?

தொடரும்…

தரவுகள்:

  1. அரிகோபால் சீடர் எழுதிய, தெட்சணத்துத் துவாரகாபதி தர்மயுக மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அகிலத்திரட்டு அம்மானை, வைகுண்டர் பதிப்பு 178, [2011] இரண்டாம் பதிப்பு, 1*, 2*, 3* – பக்கம் எண் 283 & 284.
  2. பொ.முத்துக்குட்டி சாமியவர்களால் இயற்றப்பட்டு, தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, 1963 ஆம் ஆண்டு, 1*, 2*, 3* – பக்கம் எண் 226 & 227
  3. நா.விவேகானந்தன் எழுதிய ‘அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும்’ பாகம் 1 & 2.
  4. அய்யா வைகுண்டர் நற்பணி மன்றம், அம்பலபதி’, வெளியிட்டுள்ள ‘திருஏடு என்னும் அகிலத்திரட்டு அம்மானை’ நான்காம் பதிப்பு, 2020. பதிப்பித்தவர், ஆ.அரிசுந்தரமணி.
  5. பொ.மு.ச.பா.த.பா. சங்குமன்னன் அவர்களால் அச்சிலியற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, பதின்மூன்றாம் பதிப்பு
  6. ‘The political and the general history of the district if tinnevely in the presidency of Madras from the earliest period to its cession to the English government in A.D.1801’, the right rev. R.CALDWELL D.D, L.L.D,. BHISHOP, 1881, 4* – page no: 67 & 68
  7. ‘கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்’, மொழியாக்கம்:  பேராசிரியர். ந. சஞ்சீவி எம்.ஏ, பி.எச்.டி & பேராசிரியை. திருமதி. கிருஷ்ணா சஞ்சீவி எம்.ஏ, பி.டி, 1977, 4*- பக்கம் எண் 104.
  8. திருச்செந்தூர் முருகன் கோயில் வரலாறு, பேராசிரியர், டாக்டர். ந. கலியாண சுந்தரம், M.A, P.hd, தமிழ்த்துறை தலைவர், ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர், முதல் பதிப்பு, ஆகஸ்டு, 1980, 5*- பக்கம் எண் 50, 6*- பக்கம் எண் 127, 7*- பக்கம் எண் 13 & 183, 8*- பக்கம் எண் 52
  9. வரலாற்றில் தேவதாசிகள், சி.எஸ். முருகேசன், M.A, P.G.Dip. in temple art, இரண்டாம் பதிப்பு, 2012 9*- பக்கம் எண் 113.
  10. திருச்செந்தூர் முருகன் கோயில் வரலாறு, டாக்டர். ந. கலியாண சுந்தரம், M.A, P.hd, தமிழ்த்துறை தலைவர், ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர், முதல் பதிப்பு, ஆகஸ்டு, 1980, பக்கம் 61, 76, 10*
  11. https://youtu.be/FkYEh1aAljc?si=GKZLPwY9fRS6dyBP  காணொலியில் 1.40 நிமிடம் முதல் 1.50 நிமிடம் வரை, 11*

படைப்பாளர்

சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.