டிங் டிங் டிங் என்று கோயில் சன்னதியில் இருந்த மணிகள் சேர்ந்து இசைக்க, கிணி கிணி என்று பூசாரியின் கையிலிருந்த கைமணி ஒலிக்க, விநாயகரில் தொடங்கி அம்மனுக்கு, பின் காவல் தெய்வங்களுக்கு என்று வரிசையாக முதலில் பத்தி ஏற்றி வைத்து, பின் சாம்பிராணி காட்டி, சக்கரைப் பொங்கல், கொண்டைக்கடலை பிராசாதத்தை ஒவ்வொரு சன்னதியிலும் வைத்து, தீபம் காட்டி வந்த பூசாரிக்கு  வெளியிலிருந்த பூடத்துக்குச் செல்ல சற்றுத் தயக்கமாக இருந்தது.

அதற்கு அடாது பெய்த விடாமழைதான் காரணம். காலையிலிருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் சின்ன பல்புகளை மட்டும் எரிய விட்டு மற்றதை அணைத்து விட்டார்.

”அம்மைக்கு நான் செய்றத வழக்கம் போல செஞ்சிட்டுப் போறேன்” என்று உதவிக்கு நின்ற மாரியைக் குடை பிடிக்கச் சொல்லி வெளியில் இருந்த பூடத்துக்கும் வழக்கமான பூஜைகளை செய்துவிட்டு, அம்மன் சன்னதிக்குள் தஞ்சம் புகுந்தார் பூசாரி.

எல்லாம் வழக்கம் போல் நடந்தது. ஆனால் இன்று வழக்கத்துக்கு மாறாக அதிக ஜனக்கூட்டம். அதே நேரத்தில் அவர் வழக்கமாகச் செய்திருந்த அதே அளவு பிரசாதம் கண்டிப்பாக இன்று வந்த எதிர்பாராத கூட்டத்துக்குப் போதாது என்று யோசித்தவாறு, எல்லாருக்கும் கற்பூரத் தட்டு காட்டிவிட்டு கூட்டத்தை விலக்கிக் கொண்டு வளைய வந்தார்.

“என்னடே, இன்னைக்குத் திருவிழாக் கூட்டமால்லா கூடிக் கெடக்கு” என்று கொடை விழாக் கமிட்டியைச் சேர்ந்த மூக்காண்டி கேட்டார்.

அவர் மகள் மல்லிகா, “எப்போவ், கொடைக்கு வரி போட்டு தேதி சொன்னாலே பாதி ஊருதான் கூடுது. பூஜைக்குன்னு கூடுறது பொம்பளக் கூட்டமும் சின்னப் பிள்ளைவளும், உங்க விழாக் கமிட்டியும்தான். ஆம்பளக் கூட்டம் பாதிப் பேரு தெருவோரத்துல சீட்டாடவும், மீதிப் பேரு சரக்கப் போட்டுட்டு கும்பம் தெருவுக்குள்ள வரப்ப குத்துப் பிடிக்கவும் மஞ்சப் பானை வைக்கிறப்ப பக்கத்துல நிக்கிறவங்கட்ட  வம்புச் சண்ட போடவுந்தான் வாராங்க. கொடைக்கா வருது கூட்டம்?” என்றாள்.

“அப்படிச் சொல்லுடி மூக்காண்டி மவளே. கொடை நடத்துறானுவளாம் கொட. கும்பாட்டம்னு குத்தாட்டம் போடவும் ஆடல் பாடல்னு அவுத்துப் போட்டுக்கிட்டு ஆடுறதப் பாக்கத்தான அடுத்த ஊருல இருந்து வண்டி கட்டிட்டு வாரானுவ. சாமி கும்முட எவன் வாரான்?” என்றார் ஒரு கிழவி.

“ஏ ஆச்சி, செம்பருத்தி தெரியல, பாக்கியலட்சுமி தெரியல என்னன்னு வந்து கொஞ்சம் பாருடா பேரப்பிள்ளன்னு கூட்டுகிட்டு வீட்டுப் பக்கம் வருவேல்ல. அப்ப வச்சுக்குறேன் உன்னய” என்றான் கேபிள்காரன்.

இடியும் மழையும் சற்றுக் குறைந்து சிறு தூறலாக மழை குறையவும் ஊர்ப் பெருசு வேலுச்சாமி, “அப்படியே வாயாடிட்டு மசமசன்னு நிக்காம, மழ கொஞ்சம் வுட்ருக்க நேரம் எல்லாரும் வீட்டப் பாத்து போய்ச் சேருங்க. பொம்பளயாளுக தனியா வந்திருந்தா எளவட்ட பயலுவ கொஞ்சம் டார்ச்சு அடிச்சு வீடு வரைக்கும் தொணைக்குப் போய் உட்டுட்டு வாங்கலேய். திண்ணைக்குத் திண்ண பழியாக் கிடக்கமா‌ நேரங்காலமா வீடு போய்ச் சேருங்க” என்று சொல்லியவாறே மடியில் கிடந்த துண்டை உதறித் தலையில் கட்டிக் கொண்டு, வெளிவாசல் அருகில் விரித்து வைத்திருந்த குடையை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். கூட்டம் கலையத் தொடங்கியது.

“எப்போ, குடு நா வண்டிய ஓட்டி அம்மய கொண்டு உட்டுட்டு வந்து உன்னய கூட்டீட்டு போறேன்” என்று தன் அப்பாவின் பையிலிருந்த புல்லட்டின் சாவியை  எடுத்தாள் மல்லிகா .

“நான் நடந்து வாரேன். நீயும் உங்காப்பாரும் வண்டில போங்க. உங்காச்சி திங்காம கிடப்பா முதல்ல அவளுக்குப் போய் அந்த பழய சோத்தப் போடு, அப்படியே என் ராசுகுட்டிப் பயலுக்கும் பால ஊத்திப்போடு” என்றார் மகளிடம்.

“ஏண்டி, எங்கம்மாளுக்கு பழையச் சோறும், அந்த நாய்க்கு பாலும் பழமுமா?” என்றவாறு மகளின் பின்னால் வண்டியில் அமர்ந்து கொண்டு மனைவியைப்  முறைத்தார்.

பூசாரியுடன் அவர் பக்கத்து வீட்டுக்காரரும் கிளம்ப, இறுதியாகக் கோயில் கேட்டைப் பூட்டிவிட்டு இளவட்டங்கள் தாங்கள் வந்திருந்த இரு சக்கர வாகனங்களைத் தள்ளிக்கொண்டு வாயாடியவாறே நடக்கத் தொடங்கினர்.

“ஏலே முருகா, என்னதான் இருந்தாலும் உன் ஆளு கெத்துடா.  ஊரு முன்னாடி அவங்க அப்பனயே எதுத்துக்கிட்டு உனக்கு சப்போட்டா பேசுனாளா இல்லையா” என்று ஒருவன் வம்பிழுக்க, சுற்றும் முற்றும் பரபரப்பாகப் பார்த்தவன் தன் நண்பனைப் பார்த்து தணிந்த குரலில், “டேய், என் ஆளுன்னு சத்தமா சொல்லித் தொலைக்காதடா. யாரு காதுலயாவது விழுந்துடப் போவுது. என் மாமன்கூட மன்னிச்சு வுட்டாலும் உட்டுருவான். ஆனா அவ காதுல கீதுல விழுந்துச்சுன்னு வச்சிக்கையேன், தனியா ரோட்ல போறப்போ என்னய அந்த புல்லட்ட ஏத்திக் கொன்னு தாமிரவரணி ஆத்துல கல்லக் கட்டி முக்கிருவா பாத்துக்க” என்று நிஜமாகவே பயம் கலந்த குரலில் சொல்ல, அவன் கூட்டாளிகளுக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.

“பாத்தியாலேய், பய இப்பவே பொண்டாட்டிக்கு பயப்பட ஆரம்பிச்சிட்டான். ஊரு குரூப்புல அவ போடுற அம்புட்டு ஃபார்வேடு மெஸேஜுக்கும் சகட்டு மேனிக்கு ஆர்ட்டீனு போட்டு வச்சிருப்பாரு துர. ஆனா நேருல பாத்தா தல தெறிக்க ஓடுவாராம்.”

“வாட்சாப்புல பாத்தியளா? கோரம்பள்ளம் குளம் உடஞ்சி போறத வீடியோ எடுத்து போட்டுருந்தானுவ.”

“ஆமாலே அந்த அட்டு பாய்ஸ் குரூப்புல நம்ம பத்மநாபன் போட்டு உட்டுருந்தான். என்னா ஃபோர்சா போவுது பாத்தியா. ஆளு வழில நின்னா அருவி மாதிரி அடிச்சிட்டுப் போயிரும் போலயே!”

“குத்தாலம் அப்படியே பொங்கி வழியுது. அந்த வீடியோ பாத்தியா? நம்ம போன பொங்குமாங் கடல்லல்லாம் நின்னா நேரா பரலோகம்தான் போல…” என்று வழக்கமாக எதையும் எதிர்மறையாகப் பேசும் ஆனந்த் சொல்லவும் எல்லாரும் சற்று முகம் சுளித்தாலும் ஒன்றும் சொல்லாமல்  அமைதி காக்க, அவன் மேலும் தொடர்ந்தான்.

“திருச்செந்தூர் முருகங் கோயில்லயும்  தண்ணில, எவனோ வீடியோ எடுத்து போட்டுருந்தான். கடல் அப்படியே கொந்தழிச்சுச்சு பாத்தியா? சுனாமி கினாமி வந்தாலும் வந்துருமோ?”

“வாயக் கழுவுலே மொக்கையா, கண்ணுல என்ன கோளாறா உனக்கு. அது மழத் தண்ணீல.”

அதை ஆமோதித்து சில குரல்கள் எழுந்தன. இருந்தாலும் அவன் விடுவதாய் இல்லை,

“சொல்ல முடியாதுலேய், சப்பான் சீனாவுல எங்கயாவது நிலநடுக்கம் வந்து இங்கன சுனாமி வந்துச்சுன்னா அவ்வளவுதா.”

’ஒருவேள ஸ்ரீவைகுண்டம் அண உடஞ்சு ஊருக்குள்ள தண்ணி வந்தா என்ன பண்ணுறது?’

என்றதைச் சொல்லாமலே விட்டுவிட்டான். ஆனால் அவன் எண்ணங்களை பிரபஞ்சம் உள்வாங்கிக் கொண்டது. அதற்குப் பதிலாக,

“கவனிச்சியளா? முதல்ல வாட்சாப்புலதான் வருது. அப்புறம் அதுதான் நியூஸ்ல போடுறானுவ. அப்ப நம்ப ஊர்காரப் பயலுவதான் அனுப்புவானுவ போல” என்றான் ஆனந்தன்.

“எல்லா வருஷமும் டிசம்பர் சென்னயதான் வச்சு செய்யும்னு மீம்சு போட்டுட்டுச் சுத்துவோம் . இப்ப என்னடான்னா நம்ம ஊரு பக்கமா திரும்பிருச்சே…” என்று வருத்தப்பட்டுக் கொண்டான் ராஜா.

“கரண்டு போறதுக்கு முன்னாடியே டவரு போய்ருச்சி. இன்னும் எத்தன நாள் கழிச்சு வரப்போதோ.”

“ஓடியாடி உதவக்கூட ஊரு பக்கம் நம்மள மாதிரி நாலஞ்சு பேருதான் கிடக்கோம். மத்த எல்லாரும்தான் பொழப்பத் தேடி வெளியூர் போய்டானுவளே” என்று அமர் சொன்ன வார்த்தைகளின் உண்மை எல்லாரையும் அமைதியாக்கியது.

“சரிடா, பாப்போம்” என்று மூன்று வண்டிகளில் ஆறு பேரும் கிளம்பி வீடு நோக்கிச் சென்றார்கள். மழை என்பதாலும் மின்சாரம் இல்லாததாலும் ஊர் நேரத்தோடு அடங்கியது.

இரவு ஒரு மணி. ஊரே ஆழ்ந்த நித்திரையில் இருந்தது.

பறவைகள் ஓலமிட்டன.

ஆடு மாடுகள் சலசலத்தன.

நாய்கள் ஊளையிட்டன.

கோயிலில் சரவிளக்குகள் வேகமாக அசைந்ததில் அம்மன் முகத்தில் இருளும் ஒளியும் மாறி மாறி விழுந்தது.

யாருமே எதிர்பாராத ஒன்று நிகழ்ந்தது.

(தொடரும்)

படைப்பாளர்:

பொ.அனிதா பாலகிருஷ்ணன் 

பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார்.  இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.