ஆரிய சனாதனம் வரலாற்றின் சுவடுகளில், எல்லா காலங்களிலும், எல்லா மதங்களுக்குள்ளும், மக்களின் வாழ்வியல்களுக்குள்ளும் பண்பாட்டுப் படையெடுப்பைத்தான் நிகழ்த்தியிருக்கிறது. அதைத்தான் இப்போது அய்யாவழிக்குள்ளும் சனாதனம் செய்து கொண்டிருக்கிறது.

அய்யா வைகுண்டரின் வழிபாட்டுத்தலங்களை திருக்கோவிலாக்கிப் பின் வைணவத்தலமாக்கத் துடிக்கும் இந்த பண்பாட்டுப் படையெடுப்பு வெற்றி பெற்றால் வரலாற்றின் சுவடுகளில் முத்துக்குட்டி என்ற அய்யா வைகுண்டருக்கு இடமில்லாமல் போகும் அபாயம் உண்டு. அய்யா வைகுண்டர், சனாதன இந்துப் புராணக்கதைகளில் உலவுகின்ற விஷ்ணு என்ற கற்பனைக் கதாபாத்திரத்துக்குள் ஐக்கியமாகிக் கரைந்துக் காணாமல் போய் விடும் அபாய வாய்ப்புகள் அதிகம்.

அய்யா வைகுண்டர் திருச்செந்தூர் கடலுக்குள் சென்று இறையறிவு(விஞ்சை) பெற்று மூன்று நாள்கள் கழித்து வந்ததாக மட்டும்தான் அகிலத்திரட்டு அம்மானை உரைக்கின்றது. ஆனால் கிறித்தவ மதத்திலிருந்து வெளியேறிய (முத்துக்குட்டி)வைகுண்டர், சில காலம் சிவகாசிக்கு அருகேயுள்ள திருத்தங்கல் என்ற ஊரில் அமைந்திருக்கும் ஒரு வைணவ கோயிலில் தங்கியிருந்து, அங்கிருந்த பிராமண பூசாரிகளிடம் வைணவ நெறிமுறைகளைக் கற்றதாக ஒரு தகவல் நமக்குக் கிடைக்கின்றது.1*

திருத்தங்கல் தல வரலாற்று புத்தகம் ஒன்றில், இத்தகவல் இருப்பதாக ஒரு சில எழுத்தாளர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த வரலாற்றுத் தகவலை குமரி மைந்தனும் பதிவு செய்துள்ளார்.2* கடலுக்குள், தான் பெற்றதாக அய்யா வைகுண்டர் சொல்லும் இறையறிவு(விஞ்சை), திருத்தங்கல் தலத்தில் பெற்றதாகவே இருக்கக்கூடும் என்பதும் அத்தகைய சிலரின் கருத்தாக இருக்கிறது. ஆனால் அய்யாவழியில் அய்யா வைகுண்டர் வகுத்திருக்கும் வழிபாட்டு முறை, பிராமணர்களின் வைணவ வழிபாட்டோடு துளியேனும் தொடர்பற்றது. வைகுண்டர் உருவாக்கிய அய்யாவழி முழுக்க முழுக்க மனிதத்தை முன்னிலைப்படுத்தியதாகும்.

அகிலத்திரட்டு அம்மானையில் ஸ்ரீரங்கத்தில், திருமால் சிலகாலம் இருந்ததாகக் கூறப்படுவதோடு, நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற தென்கலை வடகலை சாதிச் சண்டை நிகழ்வும் சொல்லப்பட்டிருக்கின்றது. அது, அய்யா வைகுண்டர் விஞ்சை பெறுவதற்கு முந்தைய நிகழ்வாக அகிலத்திரட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்ரீரங்கத்தில் பிராமணர்களுக்குள் நிகழ்ந்த சண்டையை வெறுத்து, ஸ்ரீரங்கத்திலிருந்து திருமால் வெளியேறி விட்டதாகவே அகிலத்திரட்டு அம்மானை குறிப்பிடுகின்றது.

சான்றாக அகிலத்திரட்டு வரிகள்;

அப்படியே மாயன் அவர் ஸ்ரீரங்கமதில்

இருக்கும் பொழுது இரணிய நீசக் கலியன்

கருக்காக லோகம் கண்ட இடமே பரந்து

ஸ்ரீரங்கமானதிலே சேர்ந்திருக்கும் வேதியர்கள்

நீதம்குழறி நெறி தவறி போனதினால்

முறை வைத்த பூசை முந்தி முறை எனவே

மறையவனும் பூசல் வந்தே முகித்திடவே

பொறாமல் மற்றொருவன் பூசை எனக்கென்று சொல்லி

மறவாத மாயவரை வணங்கி நிஷ்டை செய்ய என்று

முப்பது வேள்வி மொகுமொகுவெனத்தான் வளர்த்து

இப்போது நான் வீழ்வேன் மாயன் வராட்டால்

என்று அவன் எண்ணி ஏற்ற ஓமம் வளர்த்து

அன்று அவன் வீழ ஆர்ப்பரிக்கும் அவ்வேளையில்

முறை வைத்த பூசை முந்தி முறை எனவே

மறையவனை மாயன் வந்து எடுத்துப் புத்தி சொல்லி

நிறையொத்த மாயன் நெடுமறையோனைக் கூட்டி

ஸ்ரீரங்கம் விட்டு திருவனந்தம் நோக்கி

சாரங்கர் போக’3*

பொருள்: மாயன் (திருமால்) ஸ்ரீரங்கத்தில் இருக்கும் போது, இரணியனைப் போன்ற நீசக்கலியனின் ஆட்சி தீவிரமாக உலகம் முழுவதும் பரவி பரந்தது. ஸ்ரீரங்கத்தில் சேர்ந்திருந்த வேதியர்கள் (பிராமணர்கள்) நீதம் தவறி நெறி தவறி போனதால், ‘பழைய முறைப்படி பூசை செய்வதே, முறையான பூசை’ என்று மறை ஓதும் பிராமணனும் பூசல் கொண்டார். அதைப் பொறுக்க முடியாத மற்றொருவன் பூசை வைக்கும் உரிமை எனக்கே என்று சொல்லி, முப்பது வேள்விகளை மொகு மொகுவென வளர்த்து, இப்போது திருமால் வராவிட்டால் வேள்விக்குள் வீழ்வேன் என்று உரைத்தான். அப்போது திருமால், முறையான பூசை முந்தி (முன்பு) வைத்த பூசைதான் என்று புத்தி சொல்லி, பிராமணனை அழைத்துக் கொண்டு, ஸ்ரீரங்கம் விட்டு திருவனந்தபுரம் நோக்கி செல்ல ஆயத்தமானார்.

இதில் ஸ்ரீரங்கத்துப் பெருமாள் கோயிலில் இருவேறு பிராமணப் பிரிவினரிடையே, பெருமாளுக்கு பூசை வைக்கும் முறை பற்றி ஏற்பட்ட சண்டை சொல்லப்பட்டுள்ளது. இது ஸ்ரீரங்கத்து ரங்கராஜப் பெருமாள் கோயிலில் 10ஆம் நூற்றாண்டு முதலே நிகழ்ந்து வரும் தென்கலை, வடகலை பிராமணர்களின் பூசலைக் குறிக்கிறது என்பது எனது கருத்து.

இவர்களில் வடகலை பிராமணர்கள் சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் அளிப்பர். தென்கலையினர் தமிழுக்கு முக்கியத்துவம் அளிப்பர். வடகலை பிராமணர்கள் வர்ணாசிரமக் கொள்கையை ஏற்று சாதிப்பிரிவினைகளுக்கு ஆதரவு தருபவர்கள். தென்கலை பிராமணர்கள் ராமானுஜரின் ‘மனிதர்களில் உயர்வு தாழ்வு இல்லை’ என்னும் கொள்கையை ஏற்றவர்கள்.4*

வடகலை பிராமணர்கள் ராமானுஜரை மட்டும் ஏற்றுக் கொண்டு ராமானுஜரின் ‘மனிதர்கள் எல்லோரும் சமம்’ என்னும் கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்கள். தென்கலை பிராமணர்கள் ராமானுஜரையும் ராமானுஜரின் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டவர்கள். இது வடகலை மற்றும் தென்கலை வேறுபாடு பற்றிய எனது புரிதல்.

இப்போது அய்யாவழியில், அய்யா வைகுண்டரை மட்டும் விஷ்ணுவின் அவதாரமாக ஏற்றுக் கொண்டு அய்யா வைகுண்டரின் கொள்கைகளை ஒதுக்கும் ஒரு பிரிவினரும், வைகுண்டரையும் வைகுண்டரின் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்ட இன்னொரு பிரிவினரும் இருப்பதைப் போலதான் மேற்சொன்ன தென்கலை வடகலை பிரிவுகளும்!

அய்யாவழியானது, சனாதன ஆதரவு அய்யாவழி, சனாதன எதிர்ப்பு அய்யாவழி என்று இரு பிரிவுகளாக இருப்பதைப் போலத்தான் சனாதன எதிர்ப்பு தென்கலையும் சனாதன ஆதரவு வடகலையும் காணப்படுகிறது. எனவே, இந்த வடகலை தென்கலை வேறுபாட்டையும், தற்காலத்தில் அய்யாவழிக்குள் நிலவும் இரு பிரிவுகளுக்குள் இருக்கும் வேறுபாட்டையும் தயக்கமின்றி ஒப்பிடலாம். ஆக, இயக்கங்கள், மதங்கள் என்று எல்லாவிதமான அமைப்புகளிலும் சனாதன எதிர்ப்பு பிரிவு, சனாதன ஆதரவு பிரிவு என்று இரு பிரிவுகள் இருப்பதைக் காண்கிறோம்.

இப்போது அகிலத்திரட்டு அம்மானை, வைணவத்தில் தென்கலையை ஆதரிக்கிறதா வடகலையை ஆதரிக்கிறதா என்று ஆராய்வோம்.,

10ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில், ராமானுசர் சைவத்தை எதிர்த்து வைணவத்தை விரிவு படுத்தியபோது, அவர் தென்கலை வைணவமாகத்தான் பிரபலப்படுத்தியுள்ளார். தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்பட்ட மக்களையும் ராமானுசர் தனது சமயத்தில் சேர்த்துக் கொண்டமை அதற்கு சான்று.5* ஆக, ராமானுசர் பரப்பிய வைணவம் தென்கலை வைணவமே என்பது விளங்கும்.

அதன் பிறகு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, 12ஆம் நூற்றாண்டில்தான், வேதாந்த தேசிகர் வடகலை வைணவத்தைப் பரப்பியுள்ளார்.6* அதாவது, ஆரம்பத்தில் தமிழில் வழிபாடு நிகழ்த்தப்பட்ட தென்கலை வைணவத்துக்குள், 12ஆம் நூற்றாண்டில் பிராமணியம் புகுத்தப்பட்டு வடகலை வைணவம் உருவாகியிருக்கிறது. இதில் முதலில் உருவான பூசை முறை, சனாதனக் கொள்கைக்கு எதிரான, தமிழில் செய்யப்பட்ட தென்கலை பூசை முறையாகும். அகிலத்திரட்டு அம்மானை முதலில் உருவான, தமிழை மையமாகக் கொண்ட தென்கலை வைணவ பூசை முறையைத்தான் ஆதரிக்கிறது என்பது எனது ஆய்வின் முடிவு.

முறை வைத்த பூசை முந்தி முறை எனவே

மறையவனை மாயன் வந்து எடுத்துப் புத்தி சொல்லி

  • அகிலத்திரட்டு அம்மானை.

மேலே சொன்ன தகவல்களையும், அகிலத்திரட்டின் தகவல்களையும் ஆய்ந்து அறிந்ததில், அய்யா வைகுண்டர் உள்ளூருக்குள்(திருவிதாங்கூருக்குள்) மட்டும் சுற்றித் திரிந்த ஒரு சராசரி மனிதர் என்று நம்ப முடியவில்லை. தமிழகத்தின் பல ஊர்களுக்கு சென்று, பல கோயில்களில் நடக்கும் பிராமணீய ஊழல்களைக் கண்டறிந்த அனுபவசாலியாகத்தான் வைகுண்டர் இருந்திருக்க வேண்டும்.

ஆக, ஸ்ரீரங்கம், திருத்தங்கல் என்று அய்யா வைகுண்டர் எங்கெங்கு சென்றிருந்தாலும், ‘ஒன்றே குலம்’ என்ற மனிதத்தின் அடிப்படையிலும், ‘ஒருவனே தேவன்’ என்ற ஆன்மீகத் தத்துவத்தின் அடிப்படையிலும்தான் அய்யாவழியை அவர் உருவாக்கியிருக்கிறாரே தவிர, அய்யா வைகுண்டர் உருவாக்கிய அய்யாவழியில் பிராமணிய வைணவ வழிபாட்டின் கூறுகள் எதுவும் கிடையாது என்பதே உண்மை.

அய்யா வைகுண்டர் வைணவம் அறிந்தவர். தென்கலை வடகலை வைணவக் கொள்கைகளின் வேறுபாடுகளையும், அதன் நுட்பமான அரசியலையும் அறிந்தவர். வைகுண்டர் கடவுள் நம்பிக்கை கொண்டவராதலால் வைணவத்தின் கடவுள்களை ஏற்றாரே அன்றி, வைணவத்துக்குள் புகுத்தப்பட்ட பிராமணியக் கூறுகளை ஏற்கவில்லை. தமிழையும் மனிதத்தையும் மையமாகக் கொண்டதால், தென்கலை வைணவத்தை ஆதரித்திருக்கிறாரே அன்றி, தென்கலை வைணவத்தின் பூசை, ஆராதனை போன்ற வழிபாட்டு முறைகளை ஏற்கவில்லை.

அகிலத்திரட்டு அம்மானை திருமாலை மையமாகக் கொண்டு, விஷ்ணுவைத் திருமாலில் ஓர் அம்சமாகத்தான் பேசுகிறது, விஷ்ணுவை மையமாகக் கொள்ளவில்லை.

ஆனால் வைணவ பிராமணியம் விஷ்ணுவை மையமாகக் கொண்டுதான், திருமால் உட்பட விஷ்ணுவின் பிற அவதாரங்களை உருவாக்குகிறது. இவ்விரண்டு சித்தாந்தங்களுக்கும் இடையேயான நுட்பமான இவ்வேற்றுமையைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அய்யா வைகுண்டர் விஷ்ணுவை மையமாகக் கொண்ட வைணவத்தை அறிந்தவர், அதை ஏற்றவரல்ல!

ஆனால் தற்காலத்தில் பிராமணிய வைணவ வழிபாட்டின் கூறுகளை அய்யாவழிக்குள் புகுத்திக் கொண்டிருக்கின்றனர் இந்துத்துவவாதிகள். விஷ்ணுவின் பத்து அவதாரங்களை ஓவியங்களாகவோ அல்லது சிலைகளாகவோ நிழற்தாங்கல் மற்றும் பதிகளில் வைப்பது பிராமணிய வைணவ வழிபாட்டை அய்யாவழிக்குள் புகுத்தும் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பாகும். திருக்கோவில் என்று நிழற்தாங்கல் மற்றும் பதிகளுக்கு பெயர் மாற்றம் செய்வது பிராமணியத்தை அய்யாவழிக்குள் புகுத்தும் ஆரியப் பண்பாட்டு படையெடுப்பாகும். நிழற்தாங்கல் மற்றும் பதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது அய்யாவழிக்குள் புகுத்தும் ஆரியப் பண்பாட்டு படையெடுப்பாகும். இவையெல்லாம் அய்யாவழி மக்களில் முழு ஒத்துழைப்புடன், இந்துத்துவவாதிகளால் நிழற்தாங்கல் மற்றும் பதிகளில் தற்காலத்தில் செய்யப்பட்டுக் கொண்டிருப்பது வேதனையான விசயமாகும். 

நான் அய்யாவழி அறிவோம் கட்டுரைகளை எழுதுவதற்குக் காரணமாக இருப்பது தற்போது திருக்கோவில் என்னும் பெயரில் இருக்கும், மயிலாடிப்புதூர் நிழற்தாங்கல். அது நிழற்தாங்கலாக இருந்ததற்கான சில சான்றுகள்-

ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில் ஊர்வரி வசூல் செய்த பழைய வரி வசூல் ரசீதுகள். இதில் நிழல்தாங்கல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில் கொடிமரம் நடுவதற்கு மரம் வேண்டி, வனத்துறைக்கு எழுதப்பட்ட விண்ணப்பத்தின் நகலில் நிழல் தாங்கல் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

மயிலாடிப்புதூர் ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல்தாங்கலில் இன்றும் காணப்படும் கல்வெட்டு.

மயிலாடிப்புதூர் ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலின் பழைய புகைப்படங்கள்.

நிழல் தாங்கலில் ஆரியம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் பண்பாட்டுப் படையெடுப்பை விளக்க மயிலாடிப்புதூர் நிழல்தாங்கலின் சில விழா அழைப்பிதழ்களின் புகைப்படங்களைக் கீழே தருகிறேன்-

மயிலாடிப்புதூர் ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல்தாங்கலில், 2016ஆம் ஆண்டு திருஏடு வாசிப்புத் திருவிழா அழைப்பிதழ். இதில் நிழல்தாங்கல் என்று அச்சிடப்பட்டுள்ளது.

மயிலாடிப்புதூர் ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில், 2018ஆம் ஆண்டு திருஏடு வாசிப்புத் திருவிழா அழைப்பிதழ். இதில் திருக்கோவில் என்று அச்சிடப்பட்டுள்ளது.

மயிலாடிப்புதூர் ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில் நிகழ்ந்த 2018ஆம் ஆண்டின் சித்திரைத் திருவிழா அழைப்பிதழ். இதில் திருக்கோவில் என்று அச்சிடப்பட்டுள்ளது என்றாலும் அய்யா வைகுண்டரின் பள்ளியறைக் காட்சி அச்சிடப்பட்டுள்ளது.

மயிலாடிப்புதூர் ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல்தாங்கலில் நிகழ்ந்த 2023ஆம் ஆண்டில் சித்திரைத் திருவிழா அழைப்பிதழ். இதில் அய்யா வைகுண்டரின் பள்ளியறைக் காட்சி சிறிய துண்டுப்படமாக உள்ளது. விஷ்ணுவின் படம் முழுப்படமாக உள்ளது.

மயிலாடிப்புதூர் ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல்தாங்கலில் நிகழ்ந்த 2023ஆம் ஆண்டில் திருஏடு வாசிப்பு திருவிழா அழைப்பிதழ். இதில் ஆரிய பிராமணியம் கற்பித்த, விஷ்ணுவும் விஷ்ணுவை மையமாகக் கொண்ட விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அய்யா வைகுண்டரின் பள்ளியறைக் காட்சியை காணவில்லை.

மயிலாடிப்புதூர் ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில், 2024ஆம் ஆண்டில் நிகழ்ந்த சித்திரைத் திருவிழா அழைப்பிதழ். இதில் பாலகிருஷ்ணரின் படம் முழுப்படமாக உள்ளது. அய்யா வைகுண்டரின் பள்ளியறைக் காட்சி அயோத்தி ராமருக்கு இணையாகச் சிறு துண்டுப்படமாக அச்சடிக்கப்பட்டுள்ளது.

மயிலாடிப்புதூர் ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல்தாங்கலில், 2024ஆம் ஆண்டில், கார்த்திகை மாதம் நிகழ்ந்த திருஏடு வாசிப்புத் திருவிழா அழைப்பிதழ். இதில் அயோத்தியின் ராமர் அய்யா வைகுண்டரை முழுமையாக ஆக்கிரமித்துள்ளமை தெளிவாகப் புலப்படும்.

இவ்வாறுதான் ஆரியம் அய்யாவழியை மெல்ல மெல்ல ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

தொடரும்…

அய்யாவழி அறிவோம் கட்டுரைகளை எழுதுவதற்கு, சில புத்தகங்களையும், மயிலாடிப்புதூர் ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல்தாங்கலின் பழைய வரிவசூல் ரசீதுகளையும், ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல்தாங்கலில் கொடிமரம் நடுவதற்கு மரம் வேண்டி, வனத்துறைக்கு எழுதப்பட்ட விண்ணப்பத்தின் நகலையும் தந்து உதவிய ‘தர்மசீடர் ஜெயச்சந்திரன் அவர்களுக்கு நன்றி! திருநிழல்தாங்கலை திருக்கோவிலாக மாற்றியதை எதிர்த்து சட்டப்போராட்டம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்த ஜெயச்சந்திரன் பற்றி அத்தியாயம் 1ல் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். மயிலாடிப்புதூர் ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல்தாங்கலின் பழைய புகைப்படங்களை தந்து உதவிய சகோதரர்களுக்கு நன்றி!

படைப்பாளர்

சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.

தரவுகள்

  1. கிறித்தவ வரலாற்றுச் சுவடுகள் மாத இதழ், ஜூலை 2022, பக்கம் எண் :6.
  2. https://kumarimainthan.blogspot.com/2015/12/8_21.html
  3. பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்: 99.
  4. தமிழகத்தில் விஜயநகர ஆட்சி கி.பி 1336 – 1530, முனைவர் ஆ.சிங்காரவேல், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி, முதல் பதிப்பு 2007, பக்கம் எண்: 115,116. https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM3kZpy.TVA_BOK_0008352/page/115/mode/2up?q=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D
  5. தமிழ் ஆந்திர மாநிலங்களில் வைணவம், முனைவர். சாந்தாடி சதாசிவன், முதற்பதிப்பு, ஜூன் 2002, பக்கம் எண்: 40.
  6.  தமிழ் ஆந்திர மாநிலங்களில் வைணவம், முனைவர். சாந்தாடி சதாசிவன், முதற்பதிப்பு, ஜூன் 2002, பக்கம் எண்: 53.