“சனாதன இந்துக்களுக்கு ரிக், யஜூர், சாமம், அதர்வனம் என வேதங்கள் உண்டு. இஸ்லாமியர்களுக்கு வேதம் குர்ஆன். அதுபோல பௌத்தர்களுக்கு, சமணர்களுக்கு, பார்சிகளுக்கு, சீக்கியர்களுக்கு, எல்லோருக்குமே வேதங்கள் உண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சீர்திருத்தக் கிறிஸ்தவம் கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்ளே நுழைகிறது. சீர்திருத்த கிறிஸ்தவர்கள் போகும் இடங்களில் எல்லாம் பைபிளை வேதம் என்று அறிவுறுத்தினார்கள். சீர்திருத்தக் கிறிஸ்தவத்துக்கு மாறிய மக்கள் பைபிளை தங்களின் வேதம் என்று ஏற்றார்கள். அதனால் மதம் மாறிய அடித்தட்டு மக்களை, மற்ற அடித்தட்டு மக்கள் ‘வேதக்காரர்கள்’ என்று அழைத்தார்கள். வேத மரபுகளை ஏற்ற சனாதனிகளோ, அடித்தட்டு மக்கள் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை படிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றார்கள். இவ்வாறாக சனாதனத்தையும் ஏற்காத, பைபிளையும் ஏற்காத அடித்தட்டு மக்களுக்கு வேதம் என்று எதுவும் இல்லை. அந்த அடித்தட்டு மக்கள் வர்ணமற்றவர்களாக, வேதமற்றவர்களாக வாழ்ந்தார்கள். அத்தகைய மக்களுக்காக வைகுண்டர் அய்யாவழியை உருவாக்கினார். அந்த மக்களை உணர்வு ரீதியாக ஒன்றிணைப்பதற்காகத்தான் அய்யா வைகுண்டர் அகிலத்திரட்டு அம்மானையை எழுதினார்” என்று சொல்கிறார் இறைவனின் வைகுண்ட அவதாரம் என்ற புத்தகத்தை எழுதிய ஆ.கிருஷ்ணமணி.1*
‘குற்றம் உரைப்பான் கொடு வேதக்காரன் அவன்’ என்பது அகிலத்திரட்டு அம்மானையின் ஒரு வரியாகும். தமிழகத்தின் தென் மாவட்டங்களின் வட்டாரப் பேச்சு வழக்குகளில் வேதக்காரன் என்றாலே அது கிறிஸ்தவர்களைக் குறிக்கும் சொல்லாகத்தான் உள்ளது. எனவேதான் மேல்சொன்ன ‘குற்றம் உரைப்பான் கொடு வேதக்காரன் அவன்’ என்ற அகிலத்திரட்டு அம்மானையின் வரியில் வருகின்ற வேதக்காரன் என்ற சொல் கிறிஸ்தவர்களைக் குறிப்பதாகவும், அய்யா வைகுண்டர் கிறிஸ்தவ மதத்தை மட்டும் எதிர்த்ததாகவும் இந்துத்துவ சனாதனிகளால் பொய்யான தகவல் ஒன்று பரப்பப்பட்டு வருகின்றது. வேதக்காரன் என்றாலே கிறிஸ்தவர்கள் என்ற நம்பிக் கொண்டிருக்கும் தென் தமிழகத்து, அய்யாவழி மக்களில் பலரும் அந்தப் பொய்யை நம்புகின்றனர்.
ஆனால் அகிலத்திரட்டின் இந்த வரிக்கு முன்னும் பின்னும் வரும் வரிகளை ஆராயும் போது, கொடுவேதக்காரனாக அகிலத்திரட்டு குறிப்பிடுவது கிறிஸ்தவர்களை அல்ல என்பது புரியும்.
‘சாதிசாதி தோறும் சக்கிலி புலைச்சி வரை
ஆதிச்சாதி முதலாய் ஆராதனைக் காட்டிவிப்பேன்
காட்டிவிக்கும் சொரூபம் கண்டிரு என் மகனே
ஆட்டிவிப்பேன் ஆனால் வேதம் அதிலும் நான் மாயமிட்டு
துலுக்கன் வீடானதிலும் சூதாட்டு பார்த்திடுவேன்
கிலுக்கம் ஒன்று செய்யவே கீழும் மேலும் நடுவும்
பதறித் தெளியும் பார்த்து இரு என் மகனே
நீ பெரிது நான் பெரிது நிச்சயங்கள் பார்ப்போம் என்று
வான் பெரிது அறியாமல் மாள்வார் வீண் வேதமுள்ளோர்
ஒரு வேதம் தொப்பி உலகமெல்லாம் போடு என்பான்
மற்றொரு வேதம் சிலுவை வையமெல்லாம் போடு என்பான்
அத்தறுதி வேதம் அவன் சவுக்கம் போடு என்பான்
குற்றம் உரைப்பான் கொடுவேதக்காரன் அவன்
ஒருவருக்கு ஒருவர் உனக்கு எனக்கு என்றேதான்
உறுதி அழிந்து ஒன்றிலும் கைகாணாமல்
குறுகி வழி முட்டி குறை நோவு கொண்டு உடைந்து
மறுகி தவித்து மாள்வார்கள் வீண் வேதமுள்ளோர்
ஓடுவாரே சிலபேர் ஒழிவார் சில பேர்கள்
கேடு வருமே கேள்வி கேளா பேர்க்கு எல்லாம்’2*
ஆகிய அகிலத்திரட்டு அம்மானையின் வரிகள், திருமால், அய்யா வைகுண்டருக்கு வழங்கும் விஞ்சைகளாக (அறிவுரைகளாக) அகிலத்திரட்டில் குறிப்பிடப்படும் வரிகளாகும். அதன் பொருள் பின்வருமாறு:
‘எல்லா சாதிகள் தோறும், முதலாவது சாதியான பார்ப்பன சாதி முதல் சக்கிலிச்சி*, புலைச்சி* வரை அனைவரையும் ஆராசனை காட்டி வைப்பேன். ஆராசனை காட்டும் சொரூபத்தை பார் மகனே! எல்லோரையும் ஆட்டி வைப்பதோடு, வேதம் அதிலும் மாயமாக இருப்பேன். முஸ்லீம்களின் வீடுகளிலும் சூதாட்டம் பார்த்து விடுவேன். கிலுக்கு ஒலியைப் போல் ஒரு சிறு ஒலி செய்தால், பதறித் தெளிவு வரும் என் மகனே! அர்த்தமில்லாத வீணான வேதத்தைக் கொண்டவர்கள், நீ பெரியவனா? நான் பெரியவனா? என்று சண்டையிட்டுச் செத்து விடுவார்கள். ஒரு வேதக்காரன் உலகிலுள்ள மக்கள் அனைவரையும் தொப்பி போடச் சொல்லுவான். இன்னொரு வேதக்காரன் உலகிலுள்ள மக்கள் அனைவரையும் சிலுவை போடச் சொல்லுவான். அறுதியற்ற வேதத்தை உடைய வேதக்காரன் சவுக்கம் என்னும் இசை அளவீட்டில் கர்நாடக இசையின் தாளத்தை போடு என்பான். குற்றங்கள் பேசுவான் கொடுமையான வேதக்காரன். இவ்வாறான வேதக்காரர்கள் அனைவரும் உனக்கு எனக்கு என்று அவர்களுக்குள் சண்டையிட்டு இந்த வேதம்தான் ஏற்புடையது என்ற உறுதியழிந்து எந்தவொரு வேதத்திலும் நிலையாக நிற்காமல், குறுகி, முட்டுச்சந்து போன்ற பாதையில் முட்டி, குறையும், நோயும் கொண்டு, உடைந்து, மருகி தவித்து மாள்வார்கள். வீணான வேதத்தை பின்பற்றுபவர்களில், சிலர் தோற்று ஓடி விடுவர், சிலர் ஒழிந்து போவார்கள். தனக்கு முன்னால் நிகழும் அநீதிகளை எதிர்த்து கேள்வி கேட்காத பேர்களுக்கெல்லாம் கேடு வரும்.’
குறிப்புகள்:
ஆராசனை = லேசான சாமியாட்டு வருவதை தென்மாவட்டத்து கிராமப்புறங்களில் ஆராசனை என்று சொல்வதுண்டு. அகிலத்திரட்டு பல பிரதிகள் எடுக்கும்போது ஏற்பட்ட சொல் மாறாட்டத்தால் இங்கு ஆராசனை என்பது ஆராதனை என்ற வார்த்தையாகத் திரிந்து காணப்படலாம். ஆனால், மேற்சொன்ன வரிகளில் வருகின்ற ‘ஆட்டிவிப்பேன்’ என்ற வார்த்தைக்கு பொருத்தமாக ஆராசனை என்ற பொருளே ஏற்புடையது.
ஆதிச்சாதி = முதலாவது சாதி, (18,19 ஆம் நூற்றாண்டுகளின் சமூகச் சூழலில் சாணார்* சாதி, சாதிய அடுக்கின் முதல் படியில் வைக்கப்படவில்லை, பார்ப்பன சாதியே முதல் சாதியாகக் கருதப்பட்டது. நான் ஏற்கனவே முந்தைய அத்தியாயங்கள் சிலவற்றில் குறிப்பிட்டபடி, அகிலத்திரட்டின் சில இடங்களில் சாணார் சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் போது, பார்ப்பன்பனியத்தை எதிர்த்து, சாணார் சாதியை ‘முதல் சாதி’ என்று அகிலத்திரட்டு குறிப்பிடுகின்றது. ஆனால் மேற்சொன்ன வரிகளில், அய்யா வைகுண்டரிடம் திருமால் எல்லா சாதி மக்களிடமும் ஆராசனையாக வருவதாக சொல்கிறார். சாணார் சாதியை மையமாகக் கொண்டே, வைகுண்டரின் பயணம் அமைவதால், ‘சாணார் சாதியில் ஆராசனை ஆட்டுவிப்பேன்’ என்பதை திருமால் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ‘பார்ப்பன சாதியிலுள்ள பார்ப்பனியக் கொள்கையற்ற சாமான்ய மக்களையும் நான் ஏற்கிறேன்’ என்று திருமால் சொல்லும் விதமாக, ஆதிச்சாதி என்பது பார்ப்பன சாதியையே குறிக்கிறது)
துலுக்கன் = முஸ்லீம்கள், கிலுக்கம் = சிறு மணிகளை குலுக்கும் போது எழும் சிறு ஒலி, அத்தறுதி = அற்றறுதி என்பதன் திரிபு, அறுதி=உறுதி (அறுதியற்ற, இறுதியற்ற).
சவுக்கம் என்பது சதுரம் என்றே பல இடங்களில் பொருள் தரும், ஆனால் இங்கு சவுக்கம் என்பது இந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசைகளில் செய்யப்படும் தாளங்களின் வேகத்தைக் குறிக்கும் அளவீட்டினைத்தான் குறிக்கிறது என்பது என் கருத்து. அதிலும் இந்துஸ்தானி இசை, இந்துக்களால் மட்டுமல்லாது முஸ்லிம் மக்களாலும் பாடப்பெறுகின்றது. மேற்சொன்ன அகிலத்திரட்டின் வரிகளில் ‘ஒரு வேதம் தொப்பி உலகமெல்லாம் போடு என்பான்’ என்று முஸ்லிம்களைப் பற்றி முதலிலேயே சொல்லப்பட்டு விட்டதால், அத்தறுதி வேதம் அவன் சவுக்கம் போடு என்பான் என்ற அகிலத்திரட்டின் வரியானது இந்துக்களைக் குறிப்பிடுகிறது என்னும் முடிவுக்கு எளிதாக வந்து விடலாம்.

அத்துடன், ‘அறுதியில்லாத வேதத்தைக் கொண்டவர்கள்’ (அத்தறுதி) என்பதை, உறுதியில்லாமல் மீண்டும் மீண்டும் பலப்பல வேதங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கும் வேதக்காரர்கள் என்று பொருள் கொள்வோமேயானால், இந்தியாவின் வடக்குப் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட வைதீக மக்கள், குறிப்பிட்ட ஒரு வேதத்தை அறுதியிட்டு ஏற்க இயலாமல், ஒவ்வொரு காலத்திலும், ரிக், யஜூர், சாம, அதர்வணம் போன்ற பல வேதங்களை உருவாக்கிக் கொண்டே இருந்தவர்கள் என்பதால், ‘அத்தறுதி வேதக்காரர்கள்’ என்று அய்யா வைகுண்டர் குறிப்பிடுவது வைதீக மதத்தினரை என்பது எனது முடிவு. அதாவது, இக்காலத்தில் பார்ப்பனர்களாக வரையறுக்கப்பட்டிருக்கும் மக்களை! ஆக, பார்ப்பன வர்ணத்து வேதங்களை பின்பற்றுபவர்களைத்தான் ‘அத்தறுதி வேதக்காரன்’ என்று சொல்கிறது அகிலத்திரட்டு அம்மானை. பார்ப்பன வர்ணத்து வேதங்களை ஏற்றுக் கொண்ட இந்து மதத்தையும் அகிலத்திரட்டு அம்மானை ஒதுக்கித் தள்ளுகிறது என்பது இதன் மூலம் தெளிவு.
மேற்சொன்ன அகிலத்திரட்டின் வரிகளை மிக எளிமையாக சொல்வதென்றால், குர்ஆனை வேதமாகக் கொண்ட முஸ்லிம் தன் மதம்தான் பெரிது என்பான், சிலுவை போடும் கிறிஸ்தவன் தன் மதம் பெரிது என்பான், நான்கு வேதங்களையும் இன்னும் பல வேதங்களையும் பின்பற்றிக் கொண்டு இந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசைகளை இசைக்கும் இந்து மதத்தவனோ தன் மதம்தான் பெரிது என்பார்கள், குற்றங்களை உரைப்பான் கொடுமையான வேதத்தை பின்பற்றுபவன். ஆனால் இவ்வாறு வேதங்களை அடிப்படையாகக் கொண்ட மதத்தை பின்பற்றுபவர்கள் அனைவரும் தங்களுக்குள்ளேயே சண்டை போட்டு மாண்டு போவார்கள் என்கிறது அகிலத்திரட்டு அம்மானை. ஆக மொத்தத்தில், அகிலத்திரட்டு அம்மானை வேதங்களை அடிப்படையாகக் கொண்ட ‘மதம் என்ற அமைப்புகள்’ அனைத்தும் தானாகவே அழிந்து போகும் என்றுரைக்கிறது.
மேற்சொன்ன வரிகளில், இந்து, முஸ்லிம், கிறித்தவ மதத்தவர்கள் அனைவரையும் வேதக்காரர்கள் என்றுதான் குறிப்பிடுகிறது அகிலத்திரட்டு அம்மானை. ஆக, அய்யாவழி, வேதக்காரர்களுக்கு எதிராக வேதமற்ற மக்களுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட ஓர் இயக்கமே ஆகும். அன்றியும், அய்யா வைகுண்டர் அய்யாவழியை மதம் என்ற அமைப்பாக உருவாக்க விரும்பியதாகத் தெரியவில்லை.
அதாவது அகிலத்திரட்டு அம்மானை கிறிஸ்தவ மதத்தை மட்டும் ‘வேண்டாம்’ என்று சொல்லவில்லை. எல்லா மதங்களையும் வேண்டாம் என்று உதறித் தள்ளி விட்டு, சாதிப் பிரிவினைகளை அழிக்க வேண்டும் என்று சொல்லி விட்டு, பொதுவுடைமை நோக்கி நகர்கிறது..
கொடுவேதக்காரன் கிறித்தவன் அல்ல!
‘மற்றொரு வேதம் சிலுவை வையமெல்லாம் போடு என்பான்’என்று ஒருமுறை கிறிஸ்தவத்தைக் குறிப்பிட்டு விட்ட பிறகு, மேற்கண்ட பாடலில் மீண்டும் கிறிஸ்தவத்தைக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. எனவே ‘குற்றம் உரைப்பான் கொடு வேதக்காரன்’ என்று அகிலத்திரட்டு அம்மானை குறிப்பிடுவது கிறிஸ்தவர்களை அல்ல. வேறு ஏதோவொரு மதத்தை என்பது எமது கருத்து…
மனிதர்களின் செயல்கள் அனைத்தையும் குற்றம் என்று சொல்கின்ற வேதம் எதுவாக இருக்கும்? ‘கொடு வேதக்காரன்’ யார்? ஆய்வு தேவை…
*சாதிப்பெயர்கள் அந்த காலகட்டம் மற்றும் சூழலில் மூலநூலில் பயன்படுத்தப்பட்டதைப் போலவே குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றின் பயன்பாட்டில் எழுத்தாளருக்கோ, பதிப்பகத்தினருக்கோ எவ்வித உடன்பாடும் இல்லை.
தொடரும்…
தரவுகள்
- ‘இறைவனின் வைகுண்ட அவதாரம்’, ஆ.கிருஷ்ணமணி, முதற்பதிப்பு [4.3.2014], 4 பக்கம் எண்: 67,68,69,71.
- பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்: 209.
தொடரும்…
படைப்பாளர்
சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.




