பானு முஷ்டாக்கின் சிறுகதைத் தொகுப்பாகிய Heart Lamp, 2025-ம் ஆண்டிற்கான புக்கர் விருதினைப் பெற்றிருக்கிறது. முஷ்டாக்கின் சிறுகதைகள் உள்ளூரில் முஸ்லிம் குடும்பங்களில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளன. ஆனால், அவை எல்லா சமூகங்களிலும் பெண்கள் தினம்தினம் படும் அவஸ்தைகளையும் மனித இயல்புகளையும் நகைச்சுவையுடன் கலந்த கதை வடிவில் எழுதப்பட்டிருப்பதால், நம் மனதில் பசைப்போல ஒட்டிக்கொள்கின்றன.
நூலின் ‘Black Cobras'(கருநாகங்கள்) என்னும் சிறுகதையை வாசித்தபோது ஏனோ 2005 இல் செகந்திராபாத்தில் பார்த்த ஒரு சம்பவம் நினைவிற்கு வந்தது. நாங்கள் அப்போது ஹைதராபாத்திற்குப் புதிதாக குடிபெயர்ந்திருந்தோம். என் நான்கு வயது பையனுக்கு இரயிலில் பெங்களூரிலிருந்து வந்துகொண்டிருக்கும் அப்பாவை இரயில் நிலையத்தில் பார்க்கப் போகிறோம் என்று ஒரே குஷி. அவனுக்கு இரயிலோடு தொடர்புடைய எல்லாமே பிடிக்கும் என்பதால் வண்டி வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே நாங்கள் இருவரும் இரயில் நிலையம் சென்று முதலாம் பிளாட்பாரத்தில் ஒரு வசதியான இருக்கையில் உட்கார்ந்துவிட்டோம். மகன் தோளைச் சுற்றி என் கையைப்போட்டு அரவணைத்தபடி நாங்கள் இருவரும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.
ஓர் உள்ளூர் வண்டி க்கீரீச்ச் என்ற சத்தத்துடன் வந்து நின்றதும் அவசரம் அவசரமாக ஒரு குடும்பம் அதிலிருந்து இறங்கியது. தந்தை வலது கையில் ஒரு பெரிய பையையும், இடது கையில் ஐந்து அல்லது ஆறு வயதுடைய மகளைப் பிடித்துக்கொண்டும் பிளாட்பாரத்தில் இறங்கினார். சாமானை வைத்துவிட்டு மனைவியையும் இன்னொரு சிறு குழந்தையையும் அழைத்து வந்தார். மனைவி கறுப்பு சாதோர் அணிந்திருந்தார். இப்போதும் என் நினைவில் நிற்பது அவளது அந்த மெலிந்த உருவம். அடுத்த இரயிலைப் பிடித்து வேறு இடம் செல்ல வந்திருப்பவர்கள் போல் தோன்றியது.
சற்று நேரத்திற்குள் அந்தப் பெண் ஒரு கையில் இடுப்பைப் பிடித்தவாறு அருகிலிருந்த தூணில் மெதுவாக சாய்ந்து அமர்வதைப் பார்த்தேன். தூண் அவரை மறைத்ததால் மேற்கொண்டு சரியாகப் பார்க்கமுடியவில்லை. பசி மயக்கத்தில் கீழே உட்கார்ந்திருப்பார் என்று நினைத்தேன். அடுத்த சில விநாடிகளில், “சாக்கு! சாக்கு!” (Read: Chakoo! Chakoo!) என்ற சத்தம் கேட்டது. கொஞ்சம் அரைகுறை ஹிந்தி தெரிந்திருந்காலும் சட்டென்று எனக்கு என்ன நடக்கிறதென்றும் விளங்கவில்லை, கத்தியைக் கேட்கிறார் என்பதும் புரியவில்லை. படபடவென மூன்று, நான்கு பெண்கள் கூடி அப்பெண்ணைச் சுற்றி ஒரு புடவையை வைத்து மறைப்பு அமைத்தனர். எனக்கு நிலைமை புரிந்ததும், மகனை கூட அழைத்துச் செல்வதா, அல்லது அவனை இருக்கையில் விட்டுவிட்டு அவரிடம் போய் ஏதாவது உதவலாமா என்று யோசிக்கையில் அடுத்த உள்ளூர் இரயில் வந்து தடகளத்தில் நின்றது.
அதற்குள் மெல்ல அப்பெண்ணும், உடன் வந்தவர்களும் எழுந்து இரயிலில் ஏறத் தயாராயினர். பார்த்துக்கொண்டிருந்த எனக்கு மயக்கம் வராத குறை ஒன்றுதான். நான் மகனை சிசேரியன் மூலம் பெற்றெடுத்த பிறகு நார்மலாக நடப்பதற்கே எட்டு-பத்து நாள்களானது நினைவுக்கு வந்து போனது. ஓ! நார்மல் டெலிவரி என்றால் சட்டென்று எழுந்து நடந்து விடலாமோ? இருக்காதே! ம்ம்ம்… இல்லை! அவளது நடையில் வலிகளை விழுங்கிப் பழகிய அனுபவம் தெரிந்தது… அந்தப் பெண் இரயில் படிகளில் ஏறியவாறே கையிலிருந்த சின்ன குப்பையைத் தண்டவாளத்தில் வீசி எறிந்தாள். பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு நொடி இதயம் நின்று மீண்டும் துடிக்க ஆரம்பித்தது.
ஜன்னலருகே அமர்ந்த அவள் இடது கையில் குழந்தையைப் பிடித்திருப்பது தெரிந்தது. வண்டி நகர ஆரம்பித்தது. எதிரில் அமர்ந்திருந்த கணவரைப் பார்த்து ஆள்காட்டி விரலைக் காட்டி அவள் கோபமாக எதோ சொல்வது தெரிந்தது. என்ன சொல்லியிருப்பாள்?
இப்படியிருக்குமோ: “இனி என் பக்கத்துல வந்தே, மவனே என்ன நடக்கும்னு தெரியாது? தொப்புள்கொடியை நறுக்கினது போல… ***** நறுக்கிப்புடுவே(ன்).” அல்லது இப்படி சொல்லியிருப்பாளோ: “இதப்பாரு, நீ கேட்டமாறியே ஆம்புள பிள்ளையைப் பெத்துக் குடுத்துட்டேன். இனி போதும்.” அல்லது இப்படி: “இதும் பொம்பள பிள்ளையாப் பிறந்துடிச்சி. இனிமேலும் ஆம்பிள பிள்ள வேணும்னு என்கிட்ட வராதே! போதும்! நான் பட்டது போதும்!” எதைச் சொல்லியிருந்தாலும் அவளுக்கு சொல்லுவதைத் தவிர அதிகபட்சம் வேறு ஏதாவது செய்வதற்குச் சுயாதீனம் இருந்திருக்குமா? தெரியவில்லை.
இனி சிறுகதைச் சுருக்கத்திற்கு வருவோம்.
மழை சோவென பெய்துக்கொண்டிருக்கும் ஒரு மாலை வேளை. அந்த ஊர் தொழுகைக் கூடத்தில் பொறுப்பாளராக இருக்கும் அப்துல் காதர் சாகிபின் பிள்ளைகள் ஓன்றன்பின் ஒன்றாக குரான் ஓதும் பயிற்சியை முடித்துவிட்டு வீட்டிற்குள் வருகின்றனர். தொழுகைக் கூடத்தில் ஹசீனாவும், அவளது தாயும், ஜனாசா வைக்குமிடத்தில் காத்துக்கொண்டிருப்பதாக படபடப்புடன் அப்துல் காதர் சாகிபிடம் தெரிவிக்கின்றனர். ஆனால், அன்று இரவு ஈஷா தொழுகை (ஒரு நாளின் ஐந்தாவது தொழுகை நேரம்) முடிந்தவுடன் மன்றம் கூடுகிறது என்பதை மறந்தவராய் அல்லது அதுபற்றி கரிசனை இல்லாதவராய் உட்கார்ந்திருக்கிறார்.
நல்ல ஹோட்டல் சாப்பாட்டிற்குப் பிறகு யாருக்கும் தெரியாமல் சரியான அளவு போதை ஏற்றியபின், தங்கப்பதுமை போலிருக்கும் மனைவி அமீனாவுடன் சல்லாபம் செய்யலாம் என்று அவரது கற்பனை, வானில் படபடவென சிறக்கடித்து பறந்துக் கொண்டிருந்தது. ஏழு பெற்றிருந்தாலும் அமீனாவின் வாளிப்பிற்குக் குறைவில்லாததற்குக் காரணம் அவளது வயது.
அந்நேரம் பார்த்து அமீனா அடுப்படியிலிருந்து வருகிறாள். சிறுவயதிலேயே இத்தனைக் குழந்தைகளைப் பெற்று முதுகு ஒடிந்து போய்விட்டதாகப் புலம்புகிறாள். அவளுக்கு எந்த குறையும் வைக்கவில்லை என்று தன் நிலையை நியாயப்படுத்திய அப்துல் காதர் சாகிப், அவள் கேட்கும் அறுவை சிகிச்சையைச் செய்துக் கொள்வதற்கு அனுமதி கொடுக்கப்போவதில்லை என்று உறுதியாகச் சொல்லிவிடுகிறார். ஒரு முத்தவலியாக தன் வீட்டிலேயே ஒரு பெண்ணிற்கு இப்படி செய்யப்பட்டிருந்தால் எல்லாருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலை தனக்கு ஏற்பட்டுவிடும் என்று எச்சரித்துக் கொண்டிருந்தபோது யாகுப் கதவைத் தட்டும் சத்தம் கேட்கிறது. அவர்களின் உரையாடல் தடைபடுகிறது.
யாகுப் ஓர் ஆட்டோ ஓட்டுனர். பத்து ஆண்டுகளில் ஓர் ஆண் மகனைக் கூட பெற்றுத் தராமல் தன் மனைவி மூன்று பெண் பிள்ளைகளைப் பெற்றதால், இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துக் கொள்கிறான். அங்கே தொழுகைக் கூடத்தில் மூன்று குழந்தைகளோடு காத்திருக்கிறாள் யாகுபின் மனைவி அஷ்ரஃப். அல்லாவின் சன்னிதானத்தில் தனக்கு ஒன்றும் கிடைக்கவில்லையென்றாலும், தன் பிள்ளைகளுக்கு நீதி கிடைக்குமென்று காத்திருக்கிறாள். பல முறை அப்துல் காதர் சாகிப் வீட்டிற்கு நடை நடையாய் நடந்தும் அவளுடைய மனுவை அவர் வாங்கவில்லை.
ஒரு நாள் யாகுப் இன்னொரு நிக்காஹ் செய்துகொண்டான் என்று அவளுக்குத் தெரியவந்தபோது நொறுங்கிப்போனாள் அஷ்ரஃப். உடனே அப்துல் காதர் சாகிப் வீட்டிற்கு ஓடோடி வருகிறாள். அப்துல் காதர் சாகிப் தனக்கே உரித்தான தொனியில் அவளிடம் ஒரு முஸ்லிம் ஆண் நான்கு பெண்களைத் திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று சட்டம் பேசினார். அவள் குறுக்கிட்டு, தனக்கு தன் இளைய மகள் முன்னிக்கு மருந்து வாங்கக்கூட பணமில்லை என்று சொல்லி அழுகிறாள். அதற்கு அப்துல் காதர் சாகிப் அல்லாவின் முன்குறித்தல் மீது நம்பிக்கை வைக்குமாறு அறிவுறுத்துகிறார். அவரிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்காத நிலையில் தன் பிள்ளைகளுடன் தொழுகைக் கூடத்திற்கு வருகிறாள் அஷ்ரஃப்.
அப்துல் காதர் சாகிப் தொழுகைக் கூடத்திற்குச் செல்வதற்கு முன் யாகுப் அவரை நல்ல ஹோட்டலுக்கு அழைத்துச் செல்கிறான். இருவரும் மூக்குப் புடைக்க சாப்பிடுகிறார்கள். பின்பு ஒன்றும் செய்யாதவர்கள் போல இருவரும் தொழுகைக் கூடத்திற்கு வந்து சேர்கிறார்கள். யாகுபிற்கு முன்னியைத் தூக்குக்கொண்டு நின்றிருந்த அஷ்ரஃபைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறி, ஒரே வேகத்தில் அஷ்ரஃபைத் தள்ளிவிட்டதில், முன்னி கீழே விழுந்து இறந்துவிடுகிறாள். அஷ்ரஃபின் அலறல் ஊர் முழுக்க எதிரொலிக்கின்றது.
பெய்த அடைமழை ஓய்ந்தது.
அதுநாள்வரை அப்துல் காதர் சாகிப்பை மரியாதையோடு பார்த்தவந்த அங்குள்ள பெண்கள் தினசரி அவரை ஜாடை மாடையாக திட்டித் தீர்த்தார்கள். இது தொடர்ந்தது. அங்குள்ள பெண்கள் கொடுக்கும் உள்குத்துக்கள் அப்துல் காதர் சாகிபுக்குக் கிடைத்த ஆயுள் தண்டனை.
அதுவரை பிள்ளைப் பிறக்காமலிருக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டால், ஜன்னத் போகமுடியாது என்று நம்பிக்கொண்டிருந்த ஆமீனா சிகிச்சைக்காகப் புறப்படுவதோடு முடிகிறது கதை.
யாகுபிற்கு ஆண் வாரிசு இருந்தால் ஆட்டோ ஓட்டி சம்பாதிப்பான் என்பது மட்டுமே அவனது ஆசையாக இருந்தது. அதற்குப் பாவம் அஷ்ரஃப் என்ன செய்வாள்? ஆமீனா சொல்வதுபோல, ‘மூன்றும் பெண் குழந்தைகளாகப் பிறந்ததற்கு அவள் (அஷ்ரஃப்) என்ன தப்பு செய்தாள்? அது என்ன? சப்பாத்தியா? நம் இஷ்டத்திற்குச் உருட்டிக்கொள்வதற்கு?’
சமயம் கருத்தடைக்குத் தடை விதிக்கும்போது பாதிக்கப்படுவது பெண்ணினம் மட்டுமே. தன் உடல் மீது கூட உரிமையில்லாத நிலை ஏற்படுவதற்குப் பல நிறுவனமயமாக்கப்பட்ட அமைப்புகளின் கூட்டுச்சதி ஒருவகையில் காரணம் எனலாம். அதோடுகூட இருபாலரின் ஆசைகள், விருப்பு-வெறுப்புகள், குழந்தையின் பாலின தேர்வு போன்றவைகூட சமயம், கல்வியறிவு எனும் நிலைகள் தாண்டி சமூக-வகுப்பு சார்ந்தும் மாறுபடுகிறது.
நிறைவில் கருவூலமே வாகை சூடுகிறது.
நூலை வாங்க: https://www.penguin.co.in/book/heart-lamp/
படைப்பாளர்
ஜா. கிறிஸ்டி பெமிலா
ஜா. கிறிஸ்டி பெமிலா, B.E., B.D., M.Th., MA., Ph.D., காரைக்காலில் பிறந்தவர். பொறியியல் துறையில் அடிப்படைத் தகுதி பெற்று ஆசிரியர் பணியாற்றிய அனுபவம் உண்டு, அத்துறையில் நாட்டம் குறைந்து சமயத்தறையில் ஆர்வம் ஏற்படவே மதுரையிலுள்ள தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கிறிஸ்தவ இறையியலில் இளம்தேவியல் பட்டத்தையும், இஸ்லாமிய கல்வியில் முதுகலைப் பட்டத்தை ஹைதராபாதிலும் பெற்றார். பாரசீக மொழியில் முனைவர் பட்டத்தை உத்திர பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் 2023-ம் ஆண்டு பெற்றார். தற்போது தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் சமயத் துறையில் பேராசிரியையாகப் பணிபரிந்து வருகிறார்.
மன்னார்புரம் தென் நெல்லை மாவட்டத்தின் இணைப்புப் புள்ளி. பெருக்கல் குறி போன்று நான்கு புறமும் செல்லும் சாலைகள் பல சிற்றூர்களை இணைக்கும் பாலம். இந்த ஊரின் சிறிது வடக்கிலிருக்கும் ஊர் சங்கனான்குளம். சில ஆண்டுகளாகவே…
“சனாதன இந்துக்களுக்கு ரிக், யஜூர், சாமம், அதர்வனம் என வேதங்கள் உண்டு. இஸ்லாமியர்களுக்கு வேதம் குர்ஆன். அதுபோல பௌத்தர்களுக்கு, சமணர்களுக்கு, பார்சிகளுக்கு, சீக்கியர்களுக்கு, எல்லோருக்குமே வேதங்கள் உண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சீர்திருத்தக் கிறிஸ்தவம்…