1855-ம் ஆண்டில் மன்னர் உத்திரம் திருநாள் ஆட்சியில், திருவிதாங்கூரின் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.1*

தோள்சீலைப் போராட்ட வரலாற்றின் வழிநெடுக, ‘ரவிக்கைகளை கிழித்தெறிந்தனர்’ என்ற வாக்கியமே நிரம்பி வழிகிறது. படிக்கும் போதே எனக்கு சலிப்பு தட்டுகிற, இந்தச் செயலை கிட்டத்தட்ட 140 ஆண்டுகளாக சலிக்காமல் செய்திருக்கின்றன, உயர்சாதிகளாகத் தங்களைத் தாங்களே வரையறுத்துக் கொண்ட ஆதிக்க வர்க்கங்கள்.

இன்றைய சமுதாயத்தில் இரு வேறு சாதிகளைச் சார்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து, குழந்தை பெற்றுக் கொள்வதை, இயல்பற்றதாகவும் இயற்கைக்கு விரோதமானதாகவும் பலரும் கருதுகின்றனர். இதேபோல, பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் திருவிதாங்கூரின் நான்காம் வர்ணத்து சாதிப்பெண்கள் மற்றும் அவர்ண சாதிப்பெண்கள், தங்களின் மார்பை மறைக்கத் துணி உடுத்துவதை, இயல்பற்றதாகவும் இயற்கைக்கு விரோதமானதாகவும் கருதினார்கள், அங்கிருந்த பெரும்பாலான ஆதிக்க சாதியினர்.

திருவிதாங்கூரின் திவானாக பணியாற்றிய ஷங்கூனி மேனன், கிறிஸ்தவச்சாணார் பெண்கள் தோள்சீலை அணிவது பற்றிக் கூறிய கருத்து மேற்சொன்ன என் கருத்தை உண்மையென நிறுவும். ஷங்கூனி மேனனின் கருத்து பின்வருமாறு;

‘திரு மேட்டீரின் புத்தகமான ‘THE LAND OF CHARITY’யில் பக்கம் எண் 277ல் இருக்கும் சித்திரமானது, கிறிஸ்தவச் சாணார் பெண்கள், எவ்வாறு இந்து மதத்தின் உயர்சாதிப் பெண்களைப் போல் உடையணியக் கற்றுக் கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. ஐரோப்பிய நாடுகளில், கிறித்தவப் பெண்களுக்கான விதவிதமான உடைகள் இருக்கும் போது, கிறித்தவ மிஷனரிகள், உயர்சாதி இந்துப்பெண்களைப் போல் தோள்சீலை (தாவணி) அணிய, சாணார் பெண்களுக்குக் கற்றுக் கொடுத்திருப்பது, உயர்சாதி இந்துக்களை எரிச்சலூட்டும் நோக்கத்துக்காகத்தான்!’ என்று ஆதங்கத்தோடு சொல்கிறார் ஷங்கூனி மேனன்.2*

 ‘THE LAND OF CHARITY’ புத்தகத்தில் காணப்படும், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த கிறிஸ்தவப்பெண்ணின் வரைபடம்.

அதாவது சாணார்(நாடார்), பறையர், ஈழவர், புலையர் முதலான ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்கள், கிறித்தவ மதத்துக்கு மாறியிருந்தால்கூட, மேற்கண்ட வரைபடத்தில் இருப்பதைப் போல் உடையணிந்தால், பழைய இந்து மதப்பழக்கவழக்கங்கள் குலைந்து போய் விடுமாம். அதனால் உயர்சாதி இந்துக்களின் மனம் புண்பட்டு, எரிச்சல் அடைந்து விட்டார்களாம். நன்கு படிப்பறிவு பெற்று திவான் பதவியிலிருந்த ஷங்கூனி மேனன் சொல்கிறார்.

எனில் இந்து மதத்தில் இருந்து கொண்டே, சாணார்*(நாடார்)  முதலான ஒடுக்கப்பட்ட பெண்கள் மேற்கண்ட வரைபடத்தில் இருப்பதைப் போல் உடையணிந்தால், ஆதிக்க(உயர்) சாதி இந்துக்களின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? என்பதை வாசகர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

ஷங்கூனி மேனன் கடுமையாக எரிச்சலடைந்துள்ளார் என்பது, அவரது எழுத்தில் தெளிவாகப் புலப்படுகிறது. 

‘உயர்சாதி இந்துக்களுடைய சகோதரர்களான சாணார் சாதியினரை, உயர்சாதி இந்துக்களுக்கு எதிரியாக மாற்றவே, கிறிஸ்தவ மிஷனரிகள் சாணார் சாதியினருக்கு தோள்சீலை அணிய கற்றுக் கொடுத்துள்ளார்கள்’ என்று மனம் வெதும்பியிருக்கிறார் ஷங்கூனி மேனன்.3*

தன் சகோதர சாதியான, சாணார் (நாடார்) சாதிப்பெண்கள், தன் உயர்சாதிப் பெண்களைப் போல் உடையணிவதை, உயர்சாதி சகோதரர்களால் ஏன் பொறுத்துக் கொள்ள இயலவில்லை? என்ற கேள்வி ஷங்கூனி மேனனுக்குள் எழவேயில்லை போலும்! எவனோ ஒரு வெளிநாட்டு மிஷனரி 18-ம் நூற்றாண்டுக்குப் பிறகு, சாணார் (நாடார்) சாதியினருக்கு நாகரீகமாக உடையணியக் கற்றுக் கொடுத்துள்ளான் என்று வெதும்பும் ஷங்கூனி மேனனிடம், ’18-ம் நூற்றாண்டுக்கு முன்பு, பல நூற்றாண்டுகளாக உங்கள் சகோதர சாதியான, சாணார் (நாடார்) சாதி உங்களுடனேயே வசித்து வந்துள்ளது. எனில் பல நூற்றாண்டுகளாக, நீங்களும் உங்கள் உயர்சாதியும், உங்கள் சகோதர சாதியான சாணார் (நாடார்) சாதியினருக்கு, நாகரீகமாக உடையணிய ஏன் கற்றுக் கொடுக்கவில்லை?’ என்று கேட்கத் தோன்றுகிறது.

இன்னொரு குட்டி வரலாற்றுச் சம்பவத்துக்கு ஷங்கூனி மேனன் கொடுத்திருக்கும் கருத்தும் ஆதிக்கச்சாதியினரின் மனநிலையை தெளிவுபடுத்தும்.

‘புத்தன் குட்டி என்ற சாணார் சாதியைச் சார்ந்த ஒருவரும், அவருடைய மனைவி இசக்கியும், மாடம்பிள்ளை என்பவரின் நிலத்தில், ஊழியம் இல்லாத விவசாயிகளாக வேலை செய்தார்கள். அதாவது அடிமைகளாக இருந்தார்கள். புத்தன் குட்டியும் இசக்கியும் திடீரென்று கிறிஸ்தவ மதம் மாறி விட்டார்கள்.4* புத்தன் குட்டி தன் பெயரை அருமைநாயகம் என்று மாற்றிக் கொண்டார்.5*

அவர் விரைவில் ஒரு கிறித்தவ மத போதகரானார். புத்தன் குட்டி என்னும் அருமைநாயகத்தின் மனைவி மாடம்பிள்ளையின் மனைவி உடுத்துவதைப் போல் தோள்சீலை (தாவணி) அணிந்து கொண்டார். இப்போது புத்தன் குட்டியும், அவரது மனைவியும் மாடம்பிள்ளையின் வீட்டுக்கு வந்து சமத்துவம் பேசி விட்டார்கள்,  நீங்கள் ‘அறியாமையில் இருக்கிறீர்கள்’ என்று தங்கள் முதலாளியைப் பார்த்து சொல்லி விட்டார்கள். இவ்வாறெல்லாம் மாடம்பிள்ளையிடம் பேசினால் மாடம்பிள்ளை கோபப்படாமல் இருக்க முடியுமா?’ என்று கேட்கிறார் ஷங்கூனி மேனன். அத்துடன் இசக்கி மாடம்பிள்ளையின் மனைவியைப் போல் தோள்சீலை (தாவணி) அணிந்து வந்தால் அது மாடம்பிள்ளைக்கு எரிச்சலை ஊட்டாதா? என்றும் ஆதங்கப்படுகிறார் ஷங்கூனி மேனன்.6*

அதனால்தான் அப்பாவியான மாடம்பிள்ளையும், நாயர் சாதியை சார்ந்த இன்னொருவரும் சேர்ந்து, அருமைநாயகம் என்னும் புத்தன் குட்டியை, அடித்துக் காயப்படுத்தினர்.7* இதில் மாடம் பிள்ளையின் தவறென்ன? என்று ஆவேசமாகக் கேட்கிறார் ஷங்கூனி மேனன்.8* இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வந்த போது, மாடம்பிள்ளைக்கு நீதிமன்றம் 5 ரூபாய் அபராதம் விதித்து விட்டது. இந்த வழக்கை மெட்ராஸ் அரசுக்கு மேல்முறையீடு செய்தார் ஒரு கிறிஸ்தவ மிஷனரி. அப்போது மாடம்பிள்ளைக்கு 70 ரூபாய் அபராதம் விதித்தது நீதிமன்றம்.9*

இவ்வாறாக 1858, அக்டோபர் வரையில், திருவிதாங்கூரின் கடைத்தெருக்களிலும், பொதுவிடங்களிலும் ரவிக்கை மற்றும் சேலை அணிந்து சென்ற சாணார்* (நாடார்) முதலான ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்களின் ரவிக்கைகளை மதப்பாகுபாடின்றி கிழித்தெறிந்து கொண்டிருந்தனர் ஆதிக்கச்சாதியினர். அதனால் அங்காங்கே கலவரங்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன.10*

1858-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி இந்தியாவின் ஆட்சி அதிகாரம், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டிலிருந்து, நேரடியாக ஆங்கிலேய அரசி விக்டோரியா மகாராணியின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அன்று விக்டோரியா மகாராணி வெளியிட்ட பேரறிக்கையின் முக்கியமான இரண்டு அம்சங்கள், 1. இந்தியாவின் பழைமையான உரிமைகள், வழக்கங்கள், வழக்காறுகள், நம்பிக்கைகள் ஆகியவைகளுக்கு உரிய மதிப்பும் மரியாதையும், பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வழங்கப்படும், 2. இந்திய மக்களின் மத வழிபாட்டிலும் மத நம்பிக்கையிலும் பிரிட்டிஷ் அரசு தலையிடாது, முழுமையான மத வழிபாட்டுரிமை வழங்கப்படும், என்பவை ஆகும். ‘சாணார்(நாடார்) முதலான ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்கள் மார்பை மறைக்கக்கூடாது’ என்பதை ஆதிக்க சாதிகள் தங்களின் பழமையான உரிமைகளில் ஒன்றாகவும், இந்து மத நம்பிக்கைகளில் ஒன்றாகவும் நம்பியதால், உயர்சாதியினராகத் தங்களைக் கருதிக் கொண்ட ஆதிக்க சாதியினர், விக்டோரியா ராணியின் அறிக்கை தங்களுக்கு சாதகமானது என்று எண்ணி உற்சாகம் அடைந்தனர்.11* ரவிக்கைகளைக் கிழித்தெறியும் ஆற்றல் பெருகியிருக்கும் அல்லவா?!

கிராமச் சந்தை ஒன்றில், சிறிய அரசு அதிகாரி ஒருவர் பெண்களின் ஆடைகளைப் பற்றி இழுப்பதற்கு அரசாங்கம் தனக்கு முழுமையான அதிகாரம் அளித்துள்ளது என்று கூறிக் கொள்ளும் அளவுக்கு ரவிக்கைகளை கிழித்தெறியும் ஆற்றல், திருவிதாங்கூரின் அரசு அதிகாரிகளாக இருந்த ஆதிக்க சாதியினருக்கு பெருகியது. அந்த அரசு அதிகாரியின் பேச்சால் உருவான கலவரம் 20 நாள்களுக்கு தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பரவியது.

1858-ம் ஆண்டில் திருவிதங்கூரின் ஆங்கிலேயக் கவர்னராக இருந்த ஜெனரல் குல்லனுக்கு கிறித்தவ மதகுரு ஒருவர் எழுதிய கடிதத்தில், ‘விக்டோரியா ராணியின் பேரறிக்கையைப் படித்ததில் இருந்து சூத்திரர்கள், கீழ்சாதியினரை எதிர்த்துத் தாங்கள் விரும்பியவற்றை செய்து கொள்ளச் சுதந்திரம் இருக்கிறதென நினைத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் தங்களின் கடைகளைப் பூட்டுவதுடன் தாங்கள் விரும்பிய நபர்களுக்கு மட்டுமே பொருட்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்’ என்று குறிப்பிடுகிறார்.12* இதில் சூத்திரர்கள் என்று குறிப்பிடப்படுவது நாயர் சாதியினர் ஆவர்.

கிறிஸ்தவச்சாணார்( கிறித்தவ நாடார்) பெண்களோடு, இந்துச்சாணார் (இந்து நாடார்) பெண்களும் ரவிக்கை மற்றும் தோள்சீலை அணிவதற்கான தைரியத்தை, சாணார்கள் (நாடார்கள்) கிறிஸ்தவ மதகுருமார்களிடமிருந்துப் பெறுவதாக ஆதிக்க சாதியினர் எண்ணினர். அதனால் அவர்களில் முக்கிய நோக்கம் சீர்திருத்த (புரொட்டஸ்டண்ட்) கிறிஸ்தவத்தை அழித்தொழிப்பதாக இருந்தது.

இதன் விளைவாக, அன்றைய திருவிதாங்கூரின் பகுதிகளாக இருந்த இன்றைய  நெய்யாற்றின்கரை, கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய தாலுகாக்களில் இருந்த பல ஊர்கள் கலவரபூமியாகிப் பற்றி எரிந்தது.13*

தொடரும்…

குறிப்பு: சாணார்* என்ற சொல்லை பயன்படுத்துவதில் எழுத்தாளருக்கோ, பதிப்பாசிரியருக்கோ துளியேனும் உடன்பாடில்லை. 18,19-ம் நூற்றாண்டுகளில் இன்றைய நாடார் சாதியினர், சாணார் என்று குறிப்பிடப்பட்டதாலும், அரசு, கிறித்தவ ஆவணங்கள் சாணார்* என்ற பெயரையே பயன்படுத்தியதாலும் அன்றைய நாடான்களுக்கும் சாணார்களுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைத் தெளிவாகக் குறிப்பிடவுமே இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

தரவுகள்

  1. THE TRAVANCORE STATE MANUAL, V. NAGAM AIYA, VOL I IN THREE VOLUMES, FIRST PUBLISHED 1906, REPUBLISHED 1989, PAGE NO.: 508, 509 & HISTORY OF KANYAKUMARI DISTRICT, LIBERATION OF THE OPPRESSED A CONTINUOUS STRUGGLE (A CASE STUDY SINCE 1822) SOCIO-ECONOMIC AND POLITICAL LIBERATION STRUGGLE IN THE EXTREME SOUTH OF INDIA, Dr.D. PETER, M.A., M.LITT., Phd, Dr. IVY PETER, M.A., B.T., P.hd, first edition: 2009, page no: 49.
  2. A HISTORY OF TRAVANCORE FROM THE EARLIEST TIMES, SHANGOONNY MENON, DEWAN PEISHCAR OF TRAVANCORE, FIRST PUBLISHED IN 1878, PAGE NO. 506.
  3. A HISTORY OF TRAVANCORE FROM THE EARLIEST TIMES, SHANGOONNY MENON, DEWAN PEISHCAR OF TRAVANCORE, FIRST PUBLISHED IN 1878, PAGE NO.504.
  4. A HISTORY OF TRAVANCORE FROM THE EARLIEST TIMES, SHANGOONNY MENON, DEWAN PEISHCAR OF TRAVANCORE, FIRST PUBLISHED IN 1878, PAGE NO.507.
  5. THE LAND OF CHARITY, REV. SAMUEL MATTEER, F.L.S., OF THE LONDON MISSIONARY SOCIETY, FIRST PUBLISHED IN 1871, PAGE NO. 296.
  6. A HISTORY OF TRAVANCORE FROM THE EARLIEST TIMES, SHANGOONNY MENON, DEWAN PEISHCAR OF TRAVANCORE, FIRST PUBLISHED IN 1878, PAGE NO: 507.
  7. THE LAND OF CHARITY, REV. SAMUEL MATTEER, F.L.S., OF THE LONDON MISSIONARY SOCIETY, FIRST PUBLISHED IN 1871, PAGE NO. 296.
  8. A HISTORY OF TRAVANCORE FROM THE EARLIEST TIMES, SHANGOONNY MENON, DEWAN PEISHCAR OF TRAVANCORE, FIRST PUBLISHED IN 1878, PAGE NO. 507.
  9. THE LAND OF CHARITY, REV. SAMUEL MATTEER, F.L.S., OF THE LONDON MISSIONARY SOCIETY, FIRST PUBLISHED IN 1871, PAGE NO. 296.
  10. தமிழக நாடார்கள், ஒரு சமுதாய மாற்றத்தில் அரசியல் பண்பாடு, இராபர்ட்.எல். ஹார்டுகிரேவ், தமிழாக்கம்: எஸ்.டி. ஜெயபாண்டியன், முதல் பதிப்பு 2019, பக்கம் எண்: 85.
  11. HISTORY OF KANYAKUMARI DISTRICT, LIBERATION OF THE OPPRESSED A CONTINUOUS STRUGGLE (A CASE STUDY SINCE 1822) SOCIO-ECONOMIC AND POLITICAL LIBERATION STRUGGLE IN THE EXTREME SOUTH OF INDIA, Dr.D. PETER, M.A., M.LITT., Phd, Dr. IVY PETER, M.A., B.T., P.hd, first edition: 2009, page no. 49.
  12. தமிழக நாடார்கள், ஒரு சமுதாய மாற்றத்தில் அரசியல் பண்பாடு, இராபர்ட்.எல்.ஹார்டுகிரேவ், தமிழாக்கம்:எஸ்.டி. ஜெயபாண்டியன், முதல் பதிப்பு 2019, பக்கம் எண்: 85,86.
  13. HISTORY OF KANYAKUMARI DISTRICT, LIBERATION OF THE OPPRESSED A CONTINUOUS STRUGGLE (A CASE STUDY SINCE 1822) SOCIO-ECONOMIC AND POLITICAL LIBERATION STRUGGLE IN THE EXTREME SOUTH OF INDIA, Dr.D.PETER.M.A,..M.LITT,..Phd, Dr.IVY PETER, M.A., B.T., P.hd, first edition:2009, page no.50

படைப்பாளர்

சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.