28வது வாரம் தொடங்கி 40வது வாரம்வரை உள்ள கர்ப்ப காலத்தை மூன்றாம் மும்மாதம் என்று அழைப்போம்.

குழந்தையின் வளர்ச்சி

1)  29,30,31வது வாரங்களில்:

குழந்தையின் எடை, உயரம் போன்றவை அதிகரித்து இருக்கும் இப்போது. தோராயமாக 2 கிலோ வரை எடை இருக்கும் குழந்தை. தாயின் வயிறு நன்கு பெரிதாகக் காணப்படும்.

குழந்தையால் வெளியில் ஏற்படும் சத்தங்களை நன்றாகப் பிரித்தறிய முடியும். தன் தாயின் குரல் குழந்தைக்கு நன்கு புலப்பட்டு இருக்கும்.

2) 32,33வது வாரங்கள்:

குழந்தையின் எடை அதிகரிக்கும் காலம் இது. தாயின் ரத்த ஓட்டமும் அதிகரித்து இருக்கும் 32வது வாரத்தில்.

குழந்தையின் மூளையும் நரம்பு மண்டலமும் முழுமையாக வளர்ந்திருக்கும்.

நுரையீரல்களில் SURFACTANT உற்பத்தி முழுமைபெறும் நிலைக்கு வர  இருக்கும். அதனால் தானாக சுவாசிக்கும் அளவிற்குத் திறனைப் பெற்றிருக்கும் குழந்தை.

3) 34,35வது வாரங்கள்:

குழந்தையின் எடை 2 கிலோவிற்கு மேல் இருக்கும். அதனால் தாயின் குடல்களை அமுக்கச் செய்யும் குழந்தை. இதன்பொருட்டு மலச்சிக்கல் ஏற்படும் தாய்க்கு. தோராயமாக 30 செமீ நீளம் இருக்கும் குழந்தை.

பிரசவ வலி ஏற்படுவதுபோன்ற ஒரு மாயை வலி (BRAXTON HICKS CONTRACTIONS) ஏற்படும் இச்சமயத்தில். காரணம் குழந்தை பிரசவத்திற்குத் தயாராகிக்கொண்டு, தாயின் மேல்வயிற்றில் இருந்து அடிவயிறு நோக்கி இறங்கிக்கொண்டு இருக்கும்.

4) 36,37வது வாரங்கள்;-

ஆரோக்கியமான குழந்தையின் எடை 2.5 கிலோ வரை இருக்கும் இவ்வாரத்தில்.

நுரையீரல் முழு வளர்ச்சி அடைந்து இருக்கும். தாயின் வயிற்றுப்பகுதியில் கர்ப்பப்பை உயரம் இன்னும் கீழே இறங்கி இருக்கும். இதனால் தாயின் அடிவயிற்றுப் பகுதியில் அழுத்தம் ஏற்படும். அடிக்கடி சிறுநீர் கழித்தல், மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் தாய்க்கு ஏற்படும்.

5) 38வது வாரம்:

குழந்தை பிறப்பதற்கு முழுத் தகுதியையும் குழந்தை பெற்று இருக்கும். இயல்பாக குழந்தை தலைகீழாகத்தான் இருக்கும் கர்ப்பப்பையில்.

அதாவது குழந்தையின் தலை கீழேயும், குழந்தையின் இடுப்பு மேலேயும் இருக்கும்.

38வது வாரத்தில் தாய்க்குக் கட்டாயம் யோனி பரிசோதனை (per vaginal examination) செய்ய வேண்டும்.

குழந்தையின் தலை, தாயின் இடுப்பெலும்பு கூட்டுக்குள் வந்து, வெளியே வந்துவிட முடியுமா அல்லது பிரசவ நேரத்தில் எங்கேனும் தடைபடுமா என்று யோனி பரிசோதனை மூலம் 98% கண்டறிய முடியும். 2% தற்போது நன்றாக இருந்தாலும் பிரசவத்தின் போது தடைப்படவும் வாய்ப்புண்டு.

அறுவைசிகிச்சை செய்துதான் குழந்தையை எடுக்க வேண்டும் என்றால் அறுவைசிகிச்சை செய்ய உகந்த வாரம் இது.

6) 39, 40வது வாரங்கள்:

ஆரோக்கியமான குழந்தை எனில் 3 கிலோவிற்கு மேல் இருக்கும் தற்போது 50 செமீ நீளம் இருக்கும். 40வது வாரத்தில் இயல்பாகப் பிரசவவலி ஏற்படும். வெளியே வரவும், வெளியே வந்தால் தனித்து சுவாசிக்கவும் தனித்துக் கழிவுகளை அகற்றவும் குழந்தையால் முடியும். அதனால் 100% தகுதி அடைந்து குழந்தை பிறக்கிறது இவ்வாரத்தில்.

(தொடரும்)

படைப்பாளர்:

மருத்துவர் அனுரத்னா. இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றுகிறார். ஓய்வு நேரங்களில் விளிம்புநிலை மக்களை அவர்கள் இருப்பிடத்துக்கே தேடிச்சென்று மருத்துவ உதவி வழங்குகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலமாக சமூகத்தில் அறிவியல் சிந்தனைகளை பரப்பிவருகிறார். பெண்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் போராட்டங்களில் பங்குகொள்கிறார். மனிதி அமைப்பின் உறுப்பினராக உள்ளார். கட்டுரைகள் மற்றும் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். 2012ம் ஆண்டு வெளிவந்த “மனிதநேய மாமுனிவர்” என்ற நூலின் ஆசிரியர்.