பள்ளி நினைவுகள் – 1

பள்ளி பற்றிய நினைவு என்றால், 4- 5 வயதில் படித்த பாலர் பள்ளியில் படித்ததை முதலில் சொல்லலாம்.

எனது முறையான பள்ளி தொடங்கிய காலகட்டத்தில், தொடக்கப் பள்ளியில் சேர்ந்தபோது, பள்ளியில் சேர்ப்பது எல்லாம் பெரிய நிகழ்வு இல்லை. முதல் நாள், சினிமாவில் எழுத்தாளர்கள் போட்டிருப்பார்களே அதே போன்ற பையில் ஒரு சிலேட்டும் குச்சியும் வைத்து அம்மா தந்தார்கள். பள்ளி சென்றால் அங்கு எனக்கு முன் சென்றிருந்தவர்கள் தட்டியைச் சுற்றி ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் விளையாட்டில் சேர்ந்து கொள்வதா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருக்கும் போதே மணி அடித்தது.

karthikavasudev.blogspot.com

வகுப்பு புது ஹாலில் நடந்தது. வகுப்பில் மாணவிகள் தரையில் உட்கார வேண்டும். ஒவ்வொரு வகுப்பிற்கும் இடையே சுவர் எல்லாம் கிடையாது. ஒரு நீளமான அறையில், தேவைக்கேற்ப தட்டி வைத்து மறைப்பார்கள். தட்டிகளை ஒதுக்கி வைத்து விட்டால் அது தான் ஆடிட்டோரியம். ஒரு பக்கம் உயரமான சுவருடன் கூடிய ஓட்டு சாய்வு. மறுபுறம் உள்ளிருந்து பார்த்தால், நான்கு அடி வெளியிலிருந்து பார்த்தால், ஆறு அடி கொண்ட சுவர். சுவரின் மேற்பக்கம் மூங்கில் வேய்ந்த தட்டி. நான்கு வாசல்கள். ஒவ்வொரு வாசலுக்கும் எதிரிலான சுவரில் கரும்பலகை. அதை ஒட்டி ஆசிரியைக்கான மேசை/நாற்காலி. இது தான் அமைப்பு.

பள்ளியின் முன்பக்கம் சிறு வளாகம். வளாகத்தில் வாசலின் ஒருபுறம் வேப்பமரம் மறுபுறம் லெச்சட்டை மரம். வளாகத்தின் தெற்குப் பகுதியில் மஞ்சளாக பார்ப்பதற்கு ஆவாரம்பூ போல பூ பூக்கும் (சிறிய கொன்றை) ஒரு மரம். வடக்குத் தெற்காக நீளமான அறை. அறையின் வடக்கு ஓரத்தில் சிறு அரங்கு. முன்பக்கமும் பின்பக்கமும் வராண்டா, வராண்டாவின் முன்பக்கம் வடக்கு ஓரத்தில், அலுவலகத்திற்கான அறை என்பதான அமைப்பு. தெற்கு ஓரங்களில் மாடிப்படி. மாடியிலும் இதே போன்ற நீளமான அறை என்ற அமைப்புடன் அது இருந்தது.

பின்புறம், தெற்குப் பக்கம் ஒரு கான்கிரீட்டா அல்லது கட்டை குத்தியதா என நினைவில்லை. அப்படியான ஒரு நீண்ட அறை கட்டப்பட்டது. அதை ஒட்டி சமையலறை. அதன் எதிரில், நான் முதலாம், இரண்டாம் வகுப்பு படித்த வகுப்புகள் கட்டப்பட்டன. அதனால் அது புது ஹால் என அழைக்கப் பட்டது. இவ்வாறாக பள்ளியின் பின்புறக் கட்டடங்கள் ‘ப’ போன்ற அமைப்பில் இருக்கும். நடுவில் ஒரு கொடிமரம். இதற்குக் கிழக்கே வடக்குப் பக்கம் சிறு தோட்டம்; தெற்குப் பக்கம் ஒருசில வேம்பு, மஞ்சணத்தி மரங்கள். அருகில் ஒரு உரக்குழி, ஆசிரியைகளுக்கான கழிவறை. தோட்டத்தில் ஆண்டில் பாதி நாட்கள் மட்டும் ஒவ்வொரு வகுப்பும் ஏதாவது செடி வளர்ப்போம். மீதி பாதி நாளுக்குத் தண்ணீர் இருக்காது.

இதற்குப் பின்னால் மிகப்பெரிய விளையாட்டு வளாகம். அதனருகில் இருந்த இடத்தை மாணவியர் கழிவறையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். திறந்த வெளி கழிவறை. பள்ளியின் தலைமை ஆசிரியர், பணியில் இருக்கும் போது எட்டாப்பு டீச்சர் என்றும் பிற்காலத்தில் இல்லத்து டீச்சர் என்றும் மக்களால் அழைக்கப்பட்டவர். கன்னியாகுமரி மாவட்டம் நெய்யாற்றைச் சார்ந்தவர்கள். வேலை நிமித்தம் எங்கள் ஊர் வந்தவர்கள். வந்த ஊரைத் தனது சொந்த ஊராக கருதியவர்கள். ஊரில் பெண்களுக்கான உயர்கல்வியில் அதிகம் அக்கறை காட்டிய காலகட்டத்தில் தான் அவர்கள் பணியில் சேர்ந்தார்கள்.

அந்த காலகட்டத்தில் ஊரில் பல இளம் பெண்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்திருந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்தனர். இதனால் பல ஆசிரியர்கள் உருவானார்கள். அந்த ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பை
உருவாக்குவதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியை பல முயற்சிகளை எடுத்தார்கள்.மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் தான் படித்துவிட்டுவந்த ஆசிரியைகளுக்கு வேலை வாய்ப்புக்கள் அமையும் என உணர்ந்த அவர், சுற்றி உள்ள கிராமங்களில் வீடு வீடாகச் சென்று மாணவிகளைப் பள்ளியில் சேர்த்தார்.

இதற்காகவே 1962 ஆம் ஆண்டு படிக்க வசதியில்லாத குழந்தைகள் வந்து, தங்கிப்படிக்க வசதியாக, ஒரு இல்லத்தைத் துவங்கினார். தனது சொந்த சம்பளம், தனது குடும்பத்தில் தனக்குக் கிடைத்த பங்கு, வசூலித்த நன்கொடை போன்றவற்றைக் கொண்டு இல்லத்தை நிர்வகித்தார். இதனால் பல ஏழைக் குழந்தைகள் படிக்க வாய்ப்பு கிடைத்தது. பள்ளியின் ஆசிரியைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

புதிதாக ஊரில், ITI , கல்லூரி, தட்டெழுத்து பயிற்சி நிலையம் என எது தொடங்குவதாக இருந்தாலும் தற்காலிகமாக இல்லத்தில் தொடங்குவதற்கு அவர் அனுமதி கொடுப்பார். இன்றும் இந்த இல்லம் கிட்டத்தட்ட 200 சிறுவர்கள், 100 முதியோருடனும் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர், தனக்குப் பின் இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பைத், தனது குடும்பத்தாரிடம் கொடுக்கவில்லை. பொது சேவைக்கு என கொடுத்து விட்டார்.

துவக்கப் பள்ளியில் படித்த காலகட்டத்தில் தான் கர்மவீரர் காமராசர் இறந்தார். ஊரே அழுதது. மிகப் பெரிய ஊர்வலம் நடந்தது. பல ஆண்கள் வெற்றுடம்பில் கொடியைக் குத்திருந்தார்கள். அவர்கள் மார்பில் ரத்தம் வடிந்தது. இந்த கால கட்டத்தில் மிசா சட்டம் நடைமுறையில் இருந்தது. எங்கள் தெரு பெண்கள் இந்திரா காந்தியை தீவிரமாக ஆதரித்தவர்கள். அதனால் அவர்கள் பேச்சில் அது சரியான சட்டம் என்பது போன்ற பார்வை இருந்ததாக எனக்குத் தெரிந்தது.

tamilvu.org

பள்ளியிலிருந்து ஆண்டுதோறும் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்வார்கள். தொடக்கத்தில், ஊரில் இருக்கும் சர்வோதயத்திற்கு மட்டுமே அழைத்துச் செல்வார்கள். விலையில்லா சுற்றுப் பயணம். நடந்து போகும் பாதை அவ்வளவு அழகாக இருக்கும். சாலையில் இருபுறமும் நிற்கும் ஆலமரங்கள் ஏதோ பச்சை நிற குகைக்குள் நுழைந்தது போன்ற உணர்வைத் தரும். ஐந்தாறு கிலோமீட்டர்கள். இப்படித்தான் மரக்குகைக்குள் நடப்பதுபோல இருக்கும். இது குறித்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எங்கள் ஊர் கல்லூரி விழாற்கு வந்த போது ‘இயற்கையே எனக்குத் தோரணம் கட்டியது’, என்று ஆலமரங்கள் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..

அப்போது சர்வோதயம் மிகவும் செழிப்பாக பசுமையாக இருக்கும். உள்ளே ஒரு நூற்பாலை இருந்தது. பலரும் அதில் வேலை செய்வார்கள். பெரும்பாலும் பெண்களாக இருப்பார்கள். எங்கள் தெருவிலிருந்தும் சில அக்காக்கள் அங்கு வேலை செய்தார்கள். சம்பளம் மிக சொற்பம். பொங்கலின் போது போனஸாக துணி, சோப்பு என பொருட்கள் கொடுப்பார்கள். அதை அவர்கள் விற்று பணமாகிக் கொள்ளவேண்டும். பொதுவாக துண்டு, பாவாடை துணி போன்றவை பெண்கள் அதிகம் வாங்குவார்கள். உடலுக்கு இதமாக இருக்கும்.

என் கண்கள்

பருத்தியிலிருந்து பஞ்சு பிரித்தெடுப்பது. பஞ்சிலிருந்து நூல் நூற்பது, பின் ராட்டையில் சுற்றி கண்டாக்குவது, கண்டு நூலை பாவு வைப்பது, பாவை தறியில் ஏற்றுவது, சாயமிடுவது போன்ற அனைத்து நிலைகளையும் அங்கு பார்க்கலாம். சாலையில் கூட பாவு கட்டுவார்கள்.

மேலும் சோப்பு செய்தல், தேனீ வளர்ப்பு, பட்டுப்பூச்சி வளர்ப்பு என பல தொழில்கள் நடந்தன. அங்கு கொய்யாப் பழம் மிகவும் சுவையாக பெரிதாக இருக்கும். எல்லாவற்றையும் பார்த்து திரும்பும் போது கொய்யாப்பழம் ஆளுக்குப் பாதி தருவார்கள். அதுவே வயிறு நிறைந்து விடும்.

மூன்றாம் வகுப்பிலிருந்து பெரிய சுற்றுலா போகலாம். பெரும்பாலும் குற்றாலம்/ பாபநாசம்/ மணிமுத்தாறு அல்லது கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரை அல்லது கன்னியாகுமரியிலிருந்து தூத்துக்குடி வரை என்பதாகத்தான் இருக்கும். பள்ளியிலிருந்து காலை, இரவு உணவு தந்து விடுவார்கள். பொதுவாக காலைக்கு இட்லியும், மாலைக்கு பூரியும் தருவார்கள். இரண்டுக்குமே துவையல் தான். மதியத்திற்கு புளி சோறு நாங்கள் கட்டிக் கொண்டு போவோம்.

பள்ளி ஆண்டு பொதுவாக ஜூன் மாதத்தின் முதல் புதன் கிழமை தொடங்கும். பள்ளி தாளாளர் வந்து, வகுப்பு வாரியாக பெயர்களை வாசிப்பார். பெயர் சொல்லப் படவில்லை என்றால், தேர்ச்சி பெறவில்லை என்பது பொருள். நமது தோழியர் யார் யார் தேர்ச்சி பெறவில்லை என்பதை பதட்டத்தோடு பார்ப்போம். இதற்கு வகுப்பு மாத்துதல் என்று பெயர்.

பின் நாங்கள் வகுப்பிற்குப் (பழைய) போவோம். அங்கு எங்கள் ஆசிரியை ஒவ்வொருவரது பெயராக வாசித்து அடுத்த வகுப்பில் (ஆறாம் வகுப்பு என்றால் ஏழாம் வகுப்பு) ‘அ’ பிரிவா அல்லது ‘ஆ’ பிரிவா என சொல்லுவார்கள். நாம் உடனே நமது பையைத் தூக்கிக் கொண்டு அடுத்த வகுப்பிற்குப் போக வேண்டும். பொதுவாக ‘அ’ பிரிவில் முதல், மூன்றாம், ஐந்தாம்…என ஒற்றைப் படை இடம் (ரேங்க்) எடுத்தவர்களும் ‘ஆ’ பிரிவில் இரட்டைப் படை இடம் எடுத்தவர்களும் அடுத்த வகுப்பில் ‘அ’ பிரிவு செல்வர். ‘ஆ’ பிரிவில் ஒற்றைப் படை இடம் எடுத்தவர்களும் ‘அ’ பிரிவில் இரட்டைப் படை இடம் எடுத்தவர்களும் அடுத்த வகுப்பில் ‘ஆ’ பிரிவு என பிரிக்கப் படுவர். நாங்கள் நம் வகுப்பிற்கு யார் வருவார்கள் என்பதை பதட்டத்தோடு பார்ப்போம்.

என்னைப் பொறுத்த வரை வசந்த காலம் என்றால், நடுநிலைப் பள்ளியில் படித்த காலகட்டம் தான். அக்காலம், பொறுப்புக்களும் சுதந்திரமும் ஒரு சேர கிடைத்த காலம். பள்ளி நிர்வாகம் முழுவதும் எங்கள் கையில் தான். வீட்டிலும் நாங்கள் எப்போது போனாலும் ஏன் என கேட்க மாட்டார்கள். பள்ளியில் பள்ளி அமைச்சரவை ஒன்று உண்டு. அதன் மூலமே முழு நிர்வாகமும் நடக்கும். பள்ளி ஆண்டு தொடங்கிய முதல் வெள்ளி அன்றே முதல் அமைச்சரவை கூடிவிடும்.

வாக்காளர்கள் -நான்காம் வகுப்பிற்கு மேல் படிக்கும் மாணவியர். அமைச்சர்களுக்கான தகுதி- ஆறாம் வகுப்பிற்கு மேல் படிக்கும் மாணவியர். அவர்கள் கடந்த மாதத்தில் அமைச்சராக இருந்திருக்கக் கூடாது.
அமைச்சரவை மாதமொருமுறை கூடும்.
அமைச்சர்களின் பொறுப்புக்கள்:

அவைத்தலைவர் (சபாநாயகர்) – அமைச்சரவை கூடும்போது அதை நடத்திக் கொடுக்க வேண்டும். அமைச்சர்கள் தங்கள் பணியில் தவறி இருந்தால் அதை யாராவது சுட்டிக் காட்டுவார்கள். அவைத்தலைவர், அதற்கான தகுந்த விளக்கத்தைக்கேட்டு அனைவருக்கும் அறிவிக்க வேண்டும். தவறு இருந்தால், அது தொடர்பான அமைச்சர் மன்னிப்பு கேட்பார்.
செயலாளர் -அவை குறித்த பதிவுகளை செய்ய வேண்டும். அதை மறுமாதம் அமைச்சரவை நடக்கும் போது வாசிக்க வேண்டும். அவைத்தலைவர், செயலாளர் இருவரும் ஆசிரியைகளுக்கான குடிநீர் பானையில் தினமும் நீர் பிடித்து வைக்க வேண்டும்.

பிரதம அமைச்சர் – தாளாளரிடம் இருந்து சாவியை வாங்கி வந்து பள்ளியை திறக்க வேண்டும். மாலை பள்ளியை பூட்டி சாவியை மீண்டும் கொண்டு போய் ஒப்படைக்க வேண்டும்.

சட்ட அமைச்சர் – ஒவ்வொரு வகுப்பிற்கும் இடையில் மணி அடிக்க வேண்டும். அப்போது பள்ளியில் ஒரே ஒரு கடிகாரம் தான் உண்டு. அதனால் கடிகாரம் போடப்பட்டிருக்கும் இடத்தின் அருகாமை வகுப்பு மாணவியர் தேர்ந்தெடுக்கப் படுவர்.

தொழில் – பள்ளி தோட்டத்தில் மாடு வந்தால் விரட்டுவது.

கலை – கலைநிகழ்ச்சிகள், மாணவர் மன்றம் நடந்தால் அதற்கான ஆயத்தங்கள் செய்வது. தினமும் மத்தியானம் ஆண்கள் பள்ளியில் போய் செய்தித்தாள் வாங்கி வந்து அன்று எந்த வகுப்பு மாலையில் செய்தி வாசிக்க வேண்டுமோ அங்கு கொண்டு கொடுப்பது, மாலை செய்தித்தாளை பள்ளி தாளாளரின் மேசையில் கொண்டு போய் வைப்பது.

சுகாதார அமைச்சர் – ஒவ்வொரு வாரமும் பள்ளியின் வளாகத்தை எந்த வகுப்பு சுத்தப் படுத்த வேண்டும் என நிர்ணயம் செய்வது, மதிய உணவு முடிந்த பின் சாப்பிட்ட இடத்தை எந்த வகுப்பு சுத்தப் படுத்த வேண்டுமோ அந்த வகுப்பை கண்காணிப்பது.

மதிய உணவிற்கான பொருட்கள் கூட நாங்கள் தான் அளந்து கொடுப்போம். அன்று மதிய உணவு ரவையா அல்லது கஞ்சியா (உளுந்தங்கஞ்சி) என்பதைப் பொறுத்து நாங்கள் பொருட்களை அளந்து சமையலறையில் கொண்டு போய் வைப்போம்.

அப்போது அமெரிக்காவில் இருந்து கேர் என்ற நிறுவனம் உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கும். நாங்கள் தான் அதைப் பிரித்து எடுப்போம். மக்காச்சோள மாவும், அரைக்கோதுமையும் வரும். அதன் மேல் அட்டையை கூட, நாங்கள் விலைக்கு வாங்கிதான், புத்தகங்களுக்கு அட்டை போட பயன்படுத்துவோம். அது நன்றாக மிகவும் உறுதியாக இருக்கும். எங்கள் கையில் தான் சாவி இருக்கும். எங்களை நம்பி அனைத்தையும் ஆசிரியர்கள் ஒப்படைத்தார்கள். நாங்களும் ஒரு நாளும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதில்லை.

இது போக மாதமொரு முறை மாணவர் மன்றம் நடைபெறும். அதில் அந்ததந்த மாதத்திற்கு ஏற்ப கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். ஆறாம் வகுப்பு படிக்கும் போது மாமன்னர் அசோகரைப் பற்றி கவியரசு கண்ணதாசன் எழுதிய வெண்புறா என்ற நாடகத்தை நடத்தியிருக்கிறோம். இன்னமும் அதன் வசனங்கள் பல நினைவில் உள்ளன. இத்தனைக்கும் நான் அந்த நாடகத்தில் நடிக்க கூட இல்லை. எட்டாம் வகுப்பு படிக்கும் போது நாங்கள் முழு நீள நாடகம் போட்டிருக்கிறோம். எங்கள் பள்ளியின் சீருடையாக நீல அரை பாவாடையும் வெள்ளை சட்டையும் இருந்தது.

எங்களது தமிழம்மா தமிழ் எண்கள் எழுதுவதில் மிகவும் கட்டுப்பாடாக இருந்தார். ௦, ௧, ௨, ௩, ௪, ௫, ௬, ௭, ௮, ௯, என தமிழ் எழுத்துக்கள் எழுதவில்லை என்றால், எழுத்துப்பிழை என மதிப்பெண் குறைப்பார்.

tamilvu.org

அந்த காலகட்டத்தில் தான் பெரியார் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு எழுத்து மாற்றம் நடைபெற்றது. பழைய முறையில் லை, ளை, னா, ணா, ணை, றா போன்றவை வழக்கத்திற்கு மாறான வடிவத்தில் இருந்தன. அச்சு கோர்ப்பதில் வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக பெரியார் அவரது அச்சகத்தில் இன்று புழக்கத்தில் இருக்கும் முறையை பயன்படுத்தியிருக்கிறார். அவரது அச்சகத்தில் அந்த பழைய எழுத்துக்களில் சில எழுத்துக்கள் மழுங்கி விட்டதால், சிக்கனத்தின் சிகரமான பெரியார் இந்த எழுத்துக்களை பயன்படுத்தினார் என்றும் சொல்லப் படுகிறது. தமிழம்மா புதிய பெரியார் எழுத்தை எழுதாமல் பழைய எழுத்தை எழுதினால், எழுத்துப் பிழை என மதிப்பெண்ணை குறைத்து விடுவார்கள்.

அப்போது, பெரியார் என்பவர் கடவுள் இல்லை என சொன்னவர் என தான் எங்கள் மனதில் பதிந்திருந்தது. இளமைப் பருவம் என்பது கடவுளுக்கு அஞ்சி நடந்த பருவம். அதனால், பெரியார் மீது பெரிய அபிப்பிராயம் ஒன்றும் கிடையாது. தமிழம்மா எங்களுக்கு பெரியார் என்பவர் கடவுள் மறுப்பாளர் என்பதை விட பெண்ணியவாதி என்பதைத் தான் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.

தமிழம்மா, பாடல் நாடகம் என எது எழுதினாலும், எங்களை அருகில் வைத்து எழுதுவார். எங்கள் விமரிசனங்களை ஏற்றுக் கொள்வார். பிரதாப முதலியார் சரித்திரம் போன்ற பல நூல்களை எங்களுக்கு அறிமுகப் படுத்தினார். அவர் யாரையும் அடித்ததே இல்லை.

திங்கள் காலை கொடியேற்றத்தில், தாயின் மணிக்கொடி பாரீர் பாடுவோம். தினமும் மாலை செய்தித்தாள் வாசிப்பு உண்டு. தாளாளர் மட்டுமே செய்தித்தாள் வாங்குவார். காலையில் ஆண்கள் பள்ளி மாணவர்கள் செய்தித்தாளை, அவரிடம் இருந்து வாங்கிச் செல்வார்கள். மத்தியானம் ஆண்கள் பள்ளியில் போய் செய்தித்தாள் நாங்கள் வாங்கி வந்து வாசித்து விட்டு மாலை செய்தித்தாளை தாளாளரின் மேசையில் கொண்டு போய் வைப்போம்.

இடைப்பட்ட நேரத்தில் அனைவரும் செய்தித்தாளை வாசித்து விடுவோம். அப்படி ஒரு ஆர்வம். பல செய்திகளை ஆசிரியைகளுடன் விவாதிப்போம். முன்னாள் குடியரசுத் தலைவர் வி வி கிரி அவர்களின் இறப்பு, சஞ்சய் காந்தி அவர்களின் இறப்பு போன்றவை பெரிதும் விவாதிக்கப்பட்டதாக நினைவு.

நாங்கள் ஆறு, ஏழு படிக்கும் போதுதான் எங்கள் பள்ளிக்கு முதல்முறையாக உடற்பயிற்சிக்கு என தனி ஆசிரியையை நியமித்தார்கள். ஆனால், பள்ளியில் உடற்பயிற்சி, விளையாட்டுகள் தொடர்பாக ஒரு பொருள் கூட கிடையாது. கோகோ, கபடி, கிளியாந்தட்டு, கயிறு குதித்தல், போன்றவை அப்போது பிரபலமான விளையாட்டுக்கள்.

எங்கள் பள்ளியில் மணல் பெரிதும் கிடையாது. ஆனால் கோவில் வாசலில் நிறைய மணல் இருக்கும். அங்கு பிரத்தியேகமான விளையாட்டு ஓன்று விளையாடுவோம். அதன் பெயர் கச்சபுச்சா. இப்போது யோசித்துப் பார்க்கும் போது அது எவ்வளவு கடினமான விளையாட்டு என புரிகிறது. ஆனால் அதை நாங்கள் மிகவும் எளிதாக விளையாடுவோம். விளையாட்டின் விதிமுறை இதுதான். அனைவரும் முதலில் ஒரு காலுக்கு மேல் இன்னொரு காலை போட்டு உட்கார (பத்மாசனம்) வேண்டும். பின் ஒரே நேரத்தில், கைகளை மட்டும் தரையில் ஊன்றி உடம்பை தூக்கி பத்து முறை ஆட வேண்டும். இடையில் விட்டவர் அல்லது முதலில் கையை விட்டு உடம்பால் தரையைத் தொட்டவர் அல்லது கடைசியில் ஆடி முடித்தவர் எழும்பி மற்றவர்களின் பாதத்தை மண்ணில் படுமாறு செய்ய வேண்டும். அவரிடமிருந்து உட்கார்ந்திருப்பவர் தப்பிக்க வேண்டும். தோற்று எழும்பியவர்கள் அனைவருமே முயற்சி செய்யலாம்.

எட்டாம் வகுப்பு படிக்கும் போது 59 A என ஒரு பேருந்து அறிமுகமானது. அதன் மூலம் இரண்டு ரூபாயில் கன்னியாகுமரி சென்று திரும்பி விடலாம். காலை 8 மணிக்குப் பள்ளி முன் ஏறினால் இரவு 8 மணிக்குப் பள்ளி முன் இறங்கி விடலாம். இன்றும் அந்த பேருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

அப்போது தான் கன்னியாகுமரி வரை புதிதாக ரயில் சேவை விட்டிருந்தார்கள். மத்தியானம் ஒரு ரயில் வரும். அதனால் மதிய சாப்பாட்டு வேளைக்கு பிளாட்பாரம் அழைத்து செல்வார்கள். அங்கு உட்கார்ந்து சாப்பிடுவோம். வரும் ரயிலுக்கு டாடா காட்டுவோம். அப்போது தான் முதலில் நான் ரயிலைப் பார்த்தேன்.

ஆறாம் சின்னப்பர், wikipedia

நினைவில் நிற்கும் நிகழ்வு என எடுத்துக் கொண்டால், ஆறாம் வகுப்பு படிக்கும் போது திருத்தந்தை ஆறாம் சின்னப்பர் (பால்) இறந்தார். பள்ளிக்கு விடுமுறை விட்டார்கள். நாட்டுத் தலைவர்கள் இறந்தவர்களுக்கு இரங்கல் நடத்துவது போல அவருக்கும் இரங்கல் அனுசரிக்கப் பட்டது. புதிய போப் எவ்வாறு தேர்ந்தெடுப்பார்கள் என கதை கதையாகப் பேசப் பட்டது. முதலாம் அருள் சின்னப்பர் தேர்ந்தெடுக்கப் பட்டார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாதத்தில் இறந்து விட்டார். அவருக்குப் பின் இரண்டாம் அருள் சின்னப்பர் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

பள்ளி, படிப்பை மட்டும் கற்றுத்தரவில்லை. வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுத் தந்தது. ஏழை பணக்காரர் அனைவரும் ஒன்றாகவே படித்தோம். இதனால், பலதரப்பட்ட வாழ்க்கை முறை பற்றிய புரிதல் இயல்பாகவே கிடைத்தது. சிக்கனத்தை கற்றுத் தந்தது.

அப்போதெல்லாம் இலவச பாடப்புத்தகம் கிடையாது. முடிந்தவரை பழைய புத்தகங்கள் பாதி விலைக்கு வாங்குவோம். காகிதத்தை தேவையில்லாமல் பயன்படுத்தக் கூடாது என எட்டாம் வகுப்பு வரை கூட கணக்கு செய்வது எல்லாம் சிலேட்டில் தான். நோட்டில் தேவையில்லாமல், தாள் கிழிக்கக் கூடாது என்பதற்காக பக்கத்திற்கு பக்கம் எண் போட வேண்டும்.

கடந்த ஆண்டின் நோட்டில், எழுதாத பக்கங்கள் தாள்கள் இருந்தால் அதை சிறு நோட்டாக தைத்து ரப் நோட்டாகப் பயன்படுத்த வேண்டும். நோட்டுகள், புத்தகங்களுக்கு செய்தித்தாள் கொண்டாவது அட்டை போடவேண்டும்; வேப்பமர பிசின் கொண்டு ஒட்ட வேண்டும் போன்று பல நடைமுறைகள் இருந்தன. பள்ளிக்கு வராத பிள்ளைகளை ஆசிரியர்களே மாணவியர் வீடுகளுக்கு சென்று கூட்டிவரும் நடைமுறை இருந்தது.

பள்ளி அருகில் ஓரு சிறு கடை உண்டு. தேவையென்றால் அதில் ஆரஞ்சு மிட்டாய் ஏதாவது வாங்குவோம். இல்லையென்றால், பள்ளிக்கூடம் வரும்போதே, ஏதாவது வாங்கி கொண்டு வந்து விடுவோம். கொடுக்காப்புளி, நெல்லிக்காய், புளியங்காய், கொய்யாப்பழம் போன்ற பொருட்கள் வீட்டிலிருந்து கொண்டு வருவதும் உண்டு.

காலை பள்ளி தொடங்கும் முன்னும், மாலை பள்ளி விட்ட பின்னும் சவ்வுமிட்டாய் ஒரு பாட்டி அல்லது தாத்தா எங்கள் பள்ளியின் முன்னால் வைத்து விற்பார்கள். ஐந்து பைசாவிற்கு இரண்டு மிட்டாய். ஒன்று என வாங்கினால், மூன்று பைசா. வேறு பொருட்கள் பெரிய அளவில் பள்ளி அருகில் விற்பனைக்கு வராது. ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு மூன்று இல்லத்துப் பிள்ளைகள் படிப்பார்கள். காசு கொண்டு வராத பிள்ளைகள் இருப்பார்கள். காசு இருப்பவர்கள், இருக்கும் காசை மொத்தமாக கொடுத்து ஒரு சில மிட்டாய்கள் அதிகமாக வாங்கி அனைவரும் பகிர்ந்து கொள்வார்கள். இல்லத்துப் பிள்ளைகள் சில நாட்கள் அவர்களுக்குக் கொடுக்கப்படும் சீஸை கொண்டு வந்து தருவார்கள். மிகவும் சுவையாக இருக்கும். இப்போது நான் தேடி தேடிப் பார்க்கிறேன். அவ்வளவு சுவையான சீஸ் எங்கும் இல்லை…

தொடரும்…

கட்டுரையாளரின் மற்ற படைப்பு:

படைப்பு:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.