படியெடுப்பு என்கிற வார்த்தையின் ஆங்கிலப் பெயரான cloning தான் அனைவருக்கும் பரிட்சயம். இந்த அறிவியல் உத்தியைப் பல திரைப்படங்களும், நாவல்களும் பல வருடங்களாகப் பயன்படுத்தி வருகின்றன. இதன் பின்னால் இருக்கும் அறிவியல் கோட்பாட்டைப் பற்றி அறிந்துக் கொள்வதற்கு முன்னால், பரிணாம வளர்ச்சியில் இருக்கும் ஒரு முக்கியமான நிகழ்வைப் பற்றிப் பார்ப்பது அவசியம்.
ஓடியாடி விளையாடும் போது கீழே விழுந்து கைகளைச் சிராய்த்துக் கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, தானாகக் காயம் பட்ட அந்த இடத்தில் தோல் வளர்ந்திருப்பது ஒரு சாதாரண நிகழ்வு. ஆனால், இந்த நிகழ்வுக்குப் பின்னால் ஒரு முக்கியமான அறிவியல் கோட்பாடு இருக்கிறது. பொதுவாக, உடலில் ஏதேனும் காயம் பட்டால், அந்த இடத்தைச் சரி செய்வதற்காக, அந்த இடத்தில் புதிதாக செல்கள் உருவாகும். இந்தச் செல்கள் எங்கிருந்து வருகின்றன?
இந்தப் புதிய செல்கள் எல்லாம் குருத்தணுக்களில் (stem cells) இருந்து வருகின்றன. ஒரு செல் இரண்டாக, பின் நான்காக, அதன்பின் எட்டாகப் பிரியும். இப்படித்தான் ஒரு செல்லிலிருந்து இவ்வளவு பெரிய மனித உடல் தோன்றுகிறது. இந்தச் செயல்முறையின் போது, குருத்தணுக்கள் உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும் ஏற்றவாறு உருவத்திலும் செயலிலும் வேறுபட்டு அந்தந்த உறுப்பின் தனித்துவமான செல்களாக மாறும். இந்த வகை குறுத்தணுக்களை multipotent stem cells என்பர். இந்நிகழ்வின் போது அனைத்துக் குறுத்தணுக்களும் வேறுபடுவதில்லை. சில குருத்தணுக்கள், ஒவ்வோர் உறுப்பிலும் அதற்கென்றே உரிய பிரத்யேகமான இடத்தில் குறுத்தணுக்களாகவே இருக்கின்றன. ஒவ்வோர் உறுப்பிலும் குருத்தணுக்கள் இருக்கும் இடத்தை niche என்று அழைப்பர்.
காயம் ஏற்படும் போது, பழுதான இடத்தைச் சரிசெய்வதற்காக, அந்த உறுப்பிலிருக்கும் குறுத்தணுக்கள் காயம் பட்ட அந்த உறுப்பிற்கு ஏற்றவாறு வேறுபடும். குருத்தணுக்களுக்குத் தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ளும் திறன் இருப்பதால், குருத்தணுக்களின் எண்ணிக்கைக் குறையாது. இப்படித்தான் கீழே விழுந்து கைகளைச் சிராய்த்துக் கொள்ளும் போது, தோல் செல்களாக அதற்குரிய குருத்தணுக்கள் வேறுபடுகின்றன. பிறகு, மிச்சமிருக்கும் குருத்தணுக்கள் தாமாகவே எண்ணிக்கையில் பெருகி ஏற்கெனவே இருந்த தங்கள் எண்ணிக்கையைத் தக்க வைத்துக் கொள்கின்றன.
இதைவிட மிக சுவாரசியமான நிகழ்வு ஒன்று இருக்கிறது. ஐந்திலிருந்து ஆறு நாட்கள் வரையான கருவில் இருக்கும் செல்கள் அனைத்தும், மனிதனின் உடலில் இருக்கும் அத்தனை உறுப்புகளையும் உருவாக்கும் ஆற்றல் கொண்டது. அதாவது, அந்தச் செல்களால் இதயம், நுரையீரல், மூளை போன்ற அத்தனை உறைப்புகளின் செல்களாகவும் வேறுபட முடியும். அந்த வகை குறுத்தணு செல்களுக்கு pluripotent stem cells என்று பெயர். ஆனால், அந்த செல்களால் ஒரு முழு மனிதனை உருவாக்க முடியாது. காரணம், இந்த வகை குருத்தணுக்களால் கருவுக்கு ஊட்டமளிக்கும் தொப்புள்கொடி, நஞ்சுக்கொடி போன்ற உறுப்புகளின் செல்களை உருவாக்க முடியாது. இந்த உறுப்புகள் இல்லாததால் மனித உடலில் இருக்கும் அத்தனை உறுப்புகளையும் உருவாக்க முடியும். ஆனால் அவற்றையெல்லாம் ஒருங்கிணைத்த ஒரு மனிதனை உருவாக்க முடியாது.
இந்த வகை குருத்தணு செல்களைச் சிகிச்சையில் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை. காரணம், கருவிலிருந்து இந்த வகை குறுத்தணுக்களைப் பிரித்தெடுப்பது, அந்தக் கருவையே அழித்துவிடும் என்பதால். இதில் சட்டம் மற்றும் நெறிமுறை சிக்கல்கள் உண்டு. அதே போல மொத்த உயிரினத்தையுமே உருவாக்கக்கூடிய குருத்தணு செல்களை totipotent என்று சொல்வார்கள். மூன்றிலிருந்து நான்கு நாட்கள் வரையான கருவின் செல்கள் அனைத்தும் முழுமையான மனிதனை உருவாக்கும் ஆற்றல் கொண்டது. இதிலும் நெறிமுறை சிக்கல்கள் உள்ளதால் இந்த வகை குறுத்தணுக்களைப் பயன்படுத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குருத்தணுக்கள் கரு உருவான நொடியிலிருந்து உறுப்புகளை உருவாக்குவதற்கும், உறுப்புகள் உருவான பிறகு அவற்றைப் பழுதுப் பார்ப்பதற்கும்தான் அர்ப்பணிக்கப்பட்டன. இந்தச் செயல்முறை மனிதனிடம் மட்டும்தான் இருக்கிறதா?
ஒரு செல் உயிரினங்கள் தொடங்கி மனிதன் வரை இந்தச் செயல்முறை பரிணாம வளர்ச்சியின் ஒரு முக்கியப் பகுதியாகக் கருதப்படுகிறது. அனைத்து உயிரினங்களுமே சிறு சிறு மாற்றங்களுடன் இந்த அறிவியல் கொள்கையைத் தக்கவைத்துக் கொள்கின்றன. தட்டைப்புழுக்களை (flat worms) துண்டுத்துண்டாக வெட்டினாலும், ஒரு சிறிய துண்டிலிருந்து தன்னுடைய முழு உடலையும் உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் அதற்குண்டு. அதன் உடலில் pluripotent stem cells அதிகமாக இருப்பதுதான் இதற்குக் காரணம்.
பல்லி வகையைச் சார்ந்த சாலமன்டர் எனும் உயிரினத்தின் கால்களை வெட்டினாலும், அது முன்பு இருந்தது போல முழுமையாகத் தனது கால்களை மீண்டும் வளர்த்துக் கொள்ளும். அதே போல பல்லிகளின் வால் துண்டிக்கப்பட்டாலும், மீண்டும் அது முழுமையாக வளர்ந்துவிடும். இதற்கெல்லாம் காரணம் குருத்தணுக்கள்தான். இவை அனைத்தும் பிழைத்தலுக்காகப் பயன்படுத்தப்பட்ட பண்புகள். குறிப்பாக எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்வதற்காக உபயோகப்படுத்தப்பட்டவை.
கடல்வாழ் உயிரினங்களிலும் இந்தப் பண்பு உண்டு. மனிதனின் கல்லீரல், தோல், ஒரு வகை இதய செல்கள் உட்பட சில உறுப்புகளுக்கு இந்த உயிர்ப்பித்துக் கொள்ளும் ஆற்றல் உண்டு. குறிப்பாக 70 சதவீதக் கல்லீரலை நீக்கிய பிறகும், முழுமையான கல்லீரலைத் திரும்பிக் கொண்டு வரும் ஆற்றல் அந்தக் கல்லீரல் குருத்தணுக்களுக்கு (hepatic stem cells) உண்டு. இவ்வளவு நன்மைகளுடன் இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் நிலையில், ஏன் இன்னும் இதற்கான மருத்துவ சிகிச்சை முறை நடைமுறையில் இல்லை?
வயதாக ஆக இந்தக் குருத்தணுக்களின் ஆற்றல் குறையத் தொடங்கும். அதனால், சேதமடைந்த உறுப்புகளைச் சரிசெய்வது சிரமமாகும். இது தவிர மதுப்பழக்கம் உடையவர்களுக்குக் கல்லீரலின் புதுப்பிக்கும் ஆற்றல் ஆரோக்கியமாக இருப்பவர்களைவிடக் குறைவாக இருக்கும். Pluripotent குருத்தணு வகை கரு நிலையில் மட்டும்தான் இருக்கும். அதுவும் குறிப்பிட்ட நாட்கள் வரைதான். அதன் பிறகு எல்லாம் multipotent குருத்தணுக்களாக மட்டுமே இருக்கும்.
இதை மையமாக வைத்து தற்போதிருக்கும் அறிவியல் உலகம் உறுப்பு படியெடுப்பு (organ cloning) என்னும் புதிய உத்தியைக் கையாள தொடங்கியுள்ளது. இந்த உறுப்பு படியெடுப்பு முறையில் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இயற்கையின் அற்புதமான கட்டமைப்பைப் படியெடுப்பதில் பல சவால்கள் உள்ளன. கூடவே நெறிமுறை சிக்கல்களும் சட்ட சிக்கல்களும் உண்டு. ஆனால், இந்த உறுப்பு படியெடுப்பு முறை மட்டும் வெற்றி பெற்றால், தவிர்க்க முடியாத சிகிச்சை முறையாக இது மாறும் என்பதில் எந்த ஐயமுமில்லை. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஏற்படும் ஒவ்வாமைகளை இந்த படியெடுப்பு முறை முறியடிப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
இன்னும் ஆராய்ச்சியிலிருக்கும் இந்த முறையைப் பயன்படுத்தி, ஆய்வகத்தில் கோழியின் செல்களை மட்டுமே வைத்து தயாரித்த கறியை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்து உள்ளது. அதை உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு நிர்வாகம் அங்கீகரித்துள்ளது. ஆனால், தற்போதைக்கு அது சில குறிப்பிட்ட உணவகங்களின் பயன்பாட்டிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
(தொடரும்)
படைப்பாளர்:
வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார். ஹெர்ஸ்டோரிஸ் இணையதளத்தில் வெளிவந்த ‘தாயனை’ தொடர், ஹெர்ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறாது.