உங்கள் பக்கத்து வீட்டுப் பெண்மணியை நீங்கள் எவ்வாறு அழைப்பீர்கள்? நிவேதா அம்மா அல்லது அஸ்வின் அம்மா என்று பிள்ளைகளின் பெயர்களை வைத்து அழைப்பீர்களா? அல்லது நேரடியாக அந்தப் பெண்களின் பெயர்களைக் கொண்டு அழைப்பீர்களா? அந்த வீட்டு ஆண்கள் எவ்விதம் அறியப்படுகிறார்கள்? ஆடிட்டர், இன்ஸ்பெக்டர், புரோபஸர், ஐடி கய் என்று அடையாளப்படுத்தப் படுகிறார்களா?

அறுபதுகளில் தமிழ்நாட்டின் தெருக்கள் மட்டும் அல்ல, குடும்பங்கள்கூடச் சாதியைக் கொண்டே அடையாளம் காணப்பட்டு வந்தன. ரெட்டியார் வீடு, செட்டியார் வீடு, நாயக்கர் வீடு என்றுதான் குறிப்பிடப்பட்டன. பின்னர் வந்த தலைமுறையில் பெரும்பாலும் ஆணின் வேலையின் தன்மையைக் கொண்டே அறியப்பட்டு வந்தன. ஆடிட்டர் வீடு, போலீஸ்கார் வீடு என்று ஆண்களின் தொழிலை அடையாளப்படுத்தி குடும்பங்கள் அறியப்பட்டன. பெண்களின் வேலையைக் கொண்டோ அல்லது சாதியைக் கொண்டோ எந்த அடையாளத்தையும் இந்தச் சமூகம் ஏற்படுத்தவே இல்லை. அந்தக் குடும்பத் தலைவர் இறந்தே போய் இருந்தாலும்கூட அந்த வீடு ஆணின் தொழிலை அடையாளப்படுத்தி மட்டுமே அறியப்படும்.

சுமார் 25 வருடங்களுக்கு முன் ‘சித்தி’ என்று ஒரு தொலைக்காட்சித் தொடர் ஒலிபரப்பானது. அந்தத் தொடரில் வரும் சித்தி எல்லா உறவு முறையினராலும் சித்தி என்றே அழைக்கப்படுவார். அதற்குப் பிறகு ‘அண்ணி’ என்று ஒரு தொடர் வந்தது. அவரும் அனைவராலும் அண்ணி என்றே அழைக்கப்படுவார். சரி, உறவுமுறை விளித்தல்களைக் கடந்து உண்மையில் குடும்பங்களில் பெண்களின் அடையாளம் என்ன? எந்த அடையாளத்தைக் கொண்டு பெண்கள் சமூகத்தில் அறியப்படுகிறார்கள்?

சமீபத்தில் மாநிலங்களவை சபாநாயகர் ஜெகதீப் தங்கருக்கும் ஜெயா பாதுரி பச்சனுக்கும் இடையே மாநிலங்களவையில் நடந்த விவாதத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஜெயா பாதுரி பச்சன் இந்தித் திரைப்படக் கலைஞர், அரசியலாளர். சிறந்த நடிகை எனப் பாராட்டப்பட்டு 8 ஃபிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளார். 2007 ஆம் ஆண்டில் ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனை விருது இவருக்கு வழங்கப்பட்டது. 1992இல் பத்மஸ்ரீ விருது பெற்றார். நான்கு மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.  

மாநிலங்களவையில் அவரை அழைக்கும்போது ஜெயா அமிதாப்பச்சன் என்று அவைத் தலைவர் ஜெகதீப் தங்கர் குறிப்பிடுகிறார். தன்னை ஜெயா பச்சன் என்று அழைத்தால் போதுமானது என்று ஜெயா பச்சன் தெளிவாக எடுத்துரைத்த பின்னும் அவைத் தலைவர் மீண்டும் ஜெயா அமிதாப் பச்சன் என்றே அழைக்கிறார். தனக்கென ஓர் அடையாளம் உள்ளது என்று ஜெயா பச்சன் தெளிவுபடுத்திய பின்னும் அவர் அப்படியே குறிப்பிடுகிறார். ஜெயா பச்சன், அமிதாப் பச்சனின் மனைவியாக மட்டும்தான் அறியப்பட வேண்டும் என்று ஜெகதீப் தங்கர் நினைக்கிறார். ஜெகதீப் தங்கரின் இந்தச் சிந்தனைக்கு அடித்தளம் என்ன? பெண்கள் தனித்துவமான திறமைகளையும் சாதனைகளையும் கொண்டிருந்தாலும்கூட, ஏன் அவர்கள் எப்போதும் ஓர் ஆணின் மூலமாகவே அறியப்பட வேண்டும்? இன்னாருடைய மகள், இன்னாரின் மனைவி, இவருடைய தாய் என்று மட்டுமே அறியப்பட வேண்டிய அவசியம் என்ன? தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளும் பெண்களையே அப்படி அடையாளப்படுத்துவதில் தயக்கம் காட்டுகிறது இந்தச் சமூகம். 

ஆண்கள் செய்யும் வேலையின் தரம் மட்டும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. அதே வேலையைப் பெண்கள் செய்தால் சற்றுக் குறைவாகவே பார்க்கப்படுகிறது. சமமான பங்களிப்பைப் பெண்கள் அளித்தாலும்கூட இரண்டாம் நிலை கதாபாத்திரமாகவே கருதப்படுகின்றனர். எல்லாத் துறைகளிலும் பெண்கள் தங்கள் இருப்பை உறுதி செய்துள்ளனர். தங்கள் தனித்துவத்தைப் பதிவு செய்துள்ளனர். ஆனால், சமுதாயத்தைப் பொறுத்தவரை அவர்கள் ஆண்களைச் சார்ந்து வாழ்பவர்களாகவே கருதப்படுகின்றனர்.

கல்வி நிலையங்களில் இருக்கும் பெண்களிடம் நீங்கள் படித்து என்னவாக விரும்புகிறீர்கள் என்கிற கேள்வியை முன்வைக்கும்போது, யாரும் தான் ஒரு நல்ல அம்மாவாகவோ, மனைவியாகவோ ஆக விரும்புவதாகக் குறிப்பிடுவதில்லை. தனக்கென ஓர் அடையாளத்தைத் தேடிச் செல்லும் ஒரு பயணமாகவே அவர்கள் வாழ்க்கையை எதிர்கொள்கின்றனர். ஆயிரம் தடைகளைக் கடந்து அடையும் அந்த அடையாளத்தையும் கருத்தில் கொள்ளாமல் ஆண்களைச் சார்ந்து மட்டுமே அடையாளப்படுத்துவது முற்று முழுதாகப் பெண்களுக்குச் செய்யும் துரோகமேயன்றி வேறென்ன?  

தாயிடமோ தந்தையிடமோ திருமணமான மகளைப் பற்றி விசாரிக்கும் எவரும் அந்தப் பெண் என்ன வேலை செய்கிறாள், தன் தனிப்பட்ட வாழ்க்கையை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்று விசாரிப்பதோ கவலைப்படுவதோ இல்லை. அந்தப் பெண்ணின் கணவர் என்ன வேலை செய்கிறார், அவருக்கு என்ன குடும்பச் சொத்து உள்ளது என்பதை வைத்தே அந்தப் பெண்ணின் வாழ்க்கை நிலை புரிந்துகொள்ளப் படுகிறது.  

இன்னும் சொல்லப்போனால் பெண்களின் நடை, உடை, பாவனை இப்படி எல்லா விஷயத்தையும்கூட இற்றுப்போன சில பழம் பெருமைகள் தீர்மானிக்கின்றன. இந்தக் குடும்பத்து மருமகள் யாரும் இவ்விதம் உடை அணியக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. மொத்தமாகவே அந்தப் பெண் யார், அவரது தனிப்பட்ட அடையாளம் என்ன என்பதெல்லாம் துடைத்தெடுக்கப்பட்டு, அவர் அந்தக் குடும்பத்தின் மருமகளாக மட்டுமே அறியப்படுவார். ஆரம்பத்தில் மிகவும் பெருமையாக இருக்கும் இந்த அடையாளம், போகப் போக எதற்கும் உதவாது என்று தெரியும்போது பெண்கள் தங்களைக் கட்டியுள்ள இந்தப் பழம் பெருமை சங்கிலிகளுக்குப் பழக்கப்பட்டுப் போயிருப்பார்கள். வாய்ப்புக் கிடைக்கும்போது தவறாமல் அதே சங்கிலியை அந்தக் குடும்பத்தின் புது வரவுப் பெண்களுக்கும் அணிவிப்பார்கள்.  

தன் கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தேவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்காக உடல் ஆரோக்கியத்தைப் பணயம் வைத்துச் செய்யும் எந்தச் செயலும் பெண்களுக்கான எந்தவொரு தனிப்பட்ட அடையாளத்தையும் பெற்றுத் தருவதில்லை. ‘தியாகத்தின் உருவமே எங்கள் அம்மா’ என்று பிள்ளைகள் மதர்ஸ் டே அன்று ஸ்டேடஸ் போடுவதைக் கண்டு புல்லரித்துப் போவதில் எந்தப் பயனும் இல்லை.

சமூகம் கற்பித்து வைத்திருக்கும் அடையாளத்தைக் கொண்டே பெண்கள் பொது வெளியில் பார்க்கப்படுகிறார்கள். அந்த அடையாளம் சமூகப் படிநிலையில் கீழானவர்களாகவும், சார்பு உடையவர்களாகவும், தனித்து இயங்க திறன் அற்றவர்களாகவும்தான் பெண்களை உருவகிக்கிறது. பெண்கள் இதை உணரும் தருணம்தான் தங்கள் உண்மையான அடையாளத்தை நோக்கி நகரும் தருணம்.

தனக்கான அடையாளத்தை நோக்கி ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும்போதும் பெண்கள் பல முறை வீழ்த்தப்படுவார்கள். பெண்களின் திறமையும், வலிமையும், துணிவும் எப்போதும் கேள்விக்கு உள்ளாக்கப்படும். இவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு தன்னம்பிக்கையுடன் நகரும்போது வலுவான சுதந்திரமான பெண்களாக உருவெடுக்கிறார்கள்.

1966இல் சீனாவில் பிறந்த ஜெங் ஜியாங் 16 வயதிலேயே சீன தேசிய அணிக்காக டேபிள் டென்னிஸ் விளையாடியவர். ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும் என்கிற கனவு 20 வயதில் தகர்ந்து போகிறது. சிலி நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு டேபிள் டென்னிஸ் கோச்சாக அழைப்பு வர, 1986இல் சிலி நாட்டில் குடியேறினார். சில வருடங்களுக்குப் பிறகு, குடும்பம், குழந்தைகள் சொந்தத் தொழில் என்று கவனம் செலுத்தத் தொடங்க, டேபிள் டென்னிஸ் கனவு காணாமல் போனது. மீண்டும், கொரோனா ஊரடங்கு காலத்தில் விளையாட ஆரம்பிக்க, 58 வயதில் சிலி நாட்டின் சார்பாக பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றார். முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தாலும், ஒலிம்பிக் வீராங்கனையாக வேண்டும் என்கிற அவரது சிறு வயது கனவு 58 வயதில் நிறைவேறி இருக்கிறது. 

பெண்கள் தங்கள் அடையாளத்தைத் தங்களுக்குத் தாங்களே உருவாக்கும்போது, அது தனித்துவம் பெற்றதாகவும், தன் சுய முயற்சியில் உருவானதாகவும் பெருமைக்குரியதாக மாறுகிறது. நீங்கள் எதையும் நிரூபிக்க வேண்டிய ஒரே நபர் உங்களுக்கு மட்டுமே! வேறு யாருக்கும் அல்ல.

(தொடரும்)

தரங்கிணி

எல்சீவியர் என்னும் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். வாசிப்பில் நாட்டம் உடையவர். பெண்ணியம் சார்ந்த சமூக முன்னெடுப்புகளில் பங்களிப்பதில் ஆர்வம் உடையவர்.