இன்று சமூக ஊடகங்களில் அதிகமாக நவீன அறிவியல் தோரணையில் வலம் வரும் ஒரு வார்த்தைதான் வாடகைத் தாய். அதுவும் பிரபலங்கள் குழந்தைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த மருத்துவ முறையைப் பின்பற்றுவது மக்கள் மத்தியில் கூடுதல் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது‌. சமீபத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாகக் கருதப்படும் ஒரு பிரபலம் இந்தச் சிகிச்சை முறை மூலம் குழந்தைப் பெற்றுக் கொண்டது பொதுவெளியில் விவாதத்துக்குள்ளானது. ஆளாளுக்குக் கருத்துத் தெரிவித்துவந்த நிலையில் இந்தச் சர்ச்சை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. இது போன்ற சிகிச்சையை மேற்கொள்வதற்குச் சட்டத்தில் இடமில்லை என்பது போன்ற பல கருத்துகளை முன்வைத்தும் விவாதம் தொடர்ந்தது.

இது இன்று, நேற்று நடக்கும் விவாதமில்லை. இதன் பின்னால் நான்கைந்து தசாப்தங்கள் தாண்டிய வரலாறுண்டு. 2000இல் விக்ரம், சௌந்தர்யா நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தில், கதாநாயகனின் மருத்துவச் செலவிற்காக ஒரு பெரும் தொகையைத் திரட்ட வேண்டிய நிலைக்குக் கதாநாயகி தள்ளப்பட்ட போது, அவள் வாடகைத் தாயாக இருக்க ஒப்புக் கொண்டு, அதில் வரும் தொகையை வைத்து கணவனைக் காப்பாற்றுவாள். உயிர்ப் பிழைத்து வந்த கணவன் உண்மை தெரிந்து விவாகரத்து வழக்கு தொடர்வான். இறுதியில் விவாகரத்தும் கிடைத்துவிடும். இப்படியான திரைக்கதையில் வாடகைத் தாயாக இருப்பவள் மீது சமூகம் சுமத்தும் குற்றச்சாட்டுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பார்கள். ஆனால் இங்கு சாமானியர்கள் யாருக்கும் இதன் பின்னால் இருக்கும் அறிவியலும் சட்டமும் புரிவதில்லை.

முதலில், வாடகைத் தாய் முறையைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்ளும் இந்த மருத்துவ முறைக்கு surrogacy என்று பெயர். ஆணுடைய விந்தணுவையும் பெண்ணுடைய கருமுட்டையையும் செயற்கைக் கருத்தரிப்பு மூலம் சேர்த்து, அதிலிருந்து உருவான ஒரு கருவை வேறொரு பெண்ணுடைய கருப்பையில் வைத்து குழந்தையாகப் பெற்றெடுப்பதுதான் வாடகைத் தாய் சிகிச்சை முறை. இதில் அந்தக் குழந்தையின் குணாதிசயங்கள் அனைத்தும் விந்தணு மற்றும் கருமுட்டை வழங்கிய தம்பதியைப் போலதான் இருக்கும். கருவைச் சுமக்கும் அந்தப் பெண்ணிற்கும் (வாடகைத் தாய்) அந்தக் குழந்தைக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது. அந்தப் பெண் அவளது கருவறையை அந்தக் கரு தங்குவதற்காகப் பத்து மாதங்கள் கொடுத்திருக்கிறாள். அதுதான் இந்தச்‌ சிகிச்சை முறையின் காரணப் பெயர்.

வெளிநாடுகளில் எல்லாம் கரு வங்கிகளில் (embryo bank) செயற்கைக் கருத்தரிப்பு மூலம் கருத்தரித்த ஐந்திலிருந்து ஆறு நாட்கள் வரையான கருவை அப்படியே உறைய வைத்து கரு வங்கிகளில் சேமித்து வைப்பர். பிற்காலத்தில் தேவைப்படும் போது அதைக் குழந்தையாகப் பெற்றெடுப்பர்‌. அல்லது அந்தக் கருவைத் தேவைப்படும் தம்பதிகளுக்குத் தானமாகவும் கொடுப்பர். அதற்காக அந்தந்த நாடுகள் விதித்த வழிமுறைகளைக் கடைபிடிப்பது அவசியம். வேறொருவர் கருவைத் தானமாகப் பெறும் போது அது வாடகைத் தாய் சிகிச்சை முறைக்குள் வருகிறது.‌ வெளிநாடுகளில் சரி, இந்தியாவிலும் இதுபோன்ற சட்டங்கள் நடைமுறையில் உள்ளதா?

இந்தியாவில் வாடகைத் தாய் சிகிச்சை முறை 1990களில் இருந்தே வழக்கத்திலிருந்தது. 2002இல் இந்தியா வணிக ரீதியான வாடகைத் தாய் சிகிச்சை முறைக்கு அனுமதி வழங்கியது. இந்தியாவில் வாடகைத் தாய் சிகிச்சை முறைக்கான செலவு மற்ற நாடுகளைவிடக் குறைவாக இருந்ததும் வாடகைத் தாயாக இருப்பதற்குப் பொருளாதாரத்தில் பின்தங்கிய இந்திய பெண்மணிகள் முன்வந்ததும் அயல்நாடுகளில் வசிப்பவர்கள் இந்தியாவைத்தான் வாடகைத் தாய் சிகிச்சை முறைக்கு நம்பி இருந்ததற்கான காரணம். இதில் மருத்துவச் செயல்முறைக்கான செலவும், மருத்துவக் காப்பீடும், வாடகைத் தாயாக இருப்பவரின் சிகிச்சை செலவு, பிரசவ செலவு மற்றும் இழப்பீட்டுத் தொகையும் உள்ளடங்கும். வெளிநாட்டு தம்பதிகள் மட்டுமன்றி ஒற்றைப் பெற்றோர், தன்பாலீர்ப்புக் கொண்டவர்கள், பால் புதுமையினர் முதலியோர் இந்தச் சிகிச்சை முறையைப் பயன்படுத்தி வந்தனர்.

2008இல் நடைபெற்ற ஒரு வழக்கு இந்திய வாடகைத் தாய் சிகிச்சை முறைக்கான சட்டத்தில் சில முக்கியமான திருத்தங்களைக் கொண்டுவந்தது. மன்ஜி யமடா எனும் குழந்தை ஒரு ஜப்பானிய தம்பதியருக்கு இந்திய வாடகைத் தாய் மூலம் பிறந்தது. ஆனால் குழந்தைப் பிறப்பதற்கு முன்பாகவே அந்த ஜப்பானிய தம்பதி விவாகரத்துப் பெற்றுப் பிரிந்துவிட்ட நிலையில், குழந்தையை யாரிடம் ஒப்படைப்பது, குழந்தைக்கு எந்த நாடு குடியுரிமை வழங்குவது போன்ற சட்ட சிக்கல்கள் ஏற்பட்டன. இதனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு குழந்தையைப் பாட்டியிடம் ஒப்படைத்து ஜப்பானுக்கே அனுப்பி வைக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2009இல், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தம்பதிக்கு இந்திய வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தை பிறந்தது. ஆனால் வாடகைத் தாய் சிகிச்சை முறையை ஜெர்மன் அரசு தடைசெய்திருந்ததால் அந்நாட்டு அரசு அந்த இரட்டையர்களுக்குக் குடியுரிமை வழங்க மறுத்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வாடகைத் தாய் மூலம் பிறந்த இரட்டையர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கி அவர்களை ஜெர்மன் அனுப்பி வைத்தது. பிறகு அந்த ஜெர்மன் தம்பதியே அந்த இரட்டையர்களைத் தத்தெடுத்துக் கொண்டனர்.

இதுபோன்ற சட்டச் சிக்கல்களைத் தொடர்ந்து ஒரு தசாப்தம் வரை இந்திய உச்சநீதிமன்றம் எதிர்கொண்டது. இதன்‌ விளைவாக 2012இல் தன்பாலீர்ப்பாளர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் வாடகைத் தாய் சிகிச்சை முறை மேற்கொள்வதற்கு உள்துறை அமைச்சகம் தடைவிதித்தது. ஆனாலும் வாடகைத் தாய் சார்ந்த சுரண்டல்களும் மோசடிகளும் தொடர்ந்த நிலையில் 2016இல் வணிக ரீதியான வாடகைத் தாய் சிகிச்சை முறையைத் தடை செய்யக்கோரி பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி, வாடகைத் தாய் சிகிச்சை முறையை ஒற்றைப் பெற்றோர் பயன்படுத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பல விவாதங்கள் எழுந்த நிலையில் வாடகைத் தாய் சிகிச்சை முறையின் வழிமுறைகளுக்கான சட்டம் (surrogacy regulation act) 2021இல் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்கீழ் வாடகைத் தாயாக இருப்பவருக்கு மருத்துவச் செலவுகள் மற்றும் காப்பீட்டுக்கான செலவுகளைத் தவிர வேறு எந்தப் பணமும் வழங்கப்படாது. வாடகைத் தாய் ஏற்கெனவே குழந்தைப் பெற்றவராக இருக்க வேண்டும். அதுவும் 25லிருந்து 35 வயதிற்குட்பட்டவராக இருப்பது அவசியம். அதுமட்டுமன்றி வாழ்நாளில் ஒரே ஒருமுறைதான் வாடகைத் தாயாக இருக்க வேண்டும்.

வாடகைத் தாய் சிகிச்சை முறையைப் பயன்படுத்த விரும்பும் தம்பதிக்குத் திருமணமாகி குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகி இருக்க வேண்டும். தம்பதியின் வயது: கணவர், 26 முதல் 55 வரை, மனைவி 23 முதல் 50 வயது வரை இருக்க வேண்டும். அவர்களுக்கு ஏற்கெனவே குழந்தை இருந்தால் இந்தச் சிகிச்சை முறையைப் பயன்படுத்த முடியாது. ஒருவேளை அவர்களுக்கு இருக்கும் குழந்தைக்கு ஏதேனும் உடல் அல்லது மனநலக் குறைபாடு இருந்தால் இந்தச் சிகிச்சை முறையைப் பயன்படுத்தலாம்.

இந்தச் சிகிச்சை முறையை அரசால் அங்கீகரிக்கப்பட்ட மையங்களிலோ அல்லது மருத்துவமனைகளிலோ மட்டுமே மேற்கொள்வதற்கு அனுமதியுண்டு. சிகிச்சைப் பெற விரும்பும் தம்பதிக்குக் கருத்தரித்தல் குறைபாடு இருப்பதை உறுதிசெய்து சான்றிதழ் வழங்கிய பிறகே அவர்கள் இந்தச் சிகிச்சையை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வாடகைத் தாயாக இருப்பவரும் உரிய மருத்துவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதில் ஏதேனும் தவறுகள் நடந்தால் அது தண்டனைக்குரிய குற்றம்.

இத்தனை வழிமுறைகளையும் பின்பற்றித்தான் வாடகைத் தாய் சிகிச்சை முறையைப் பயன்படுத்த முடியும்.‌ இதில் இந்தியா கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால் பிரமிப்பாகத்தான் இருக்கிறது. பல சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டு, பல மருத்துவ முறைகேடுகளை ஆராய்ந்து இன்று வலுவான விதிமுறைகளோடு வாடகைத் தாய் சிகிச்சை முறையை இந்தியா வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது‌‌. இந்தச் சட்டத்தின்படி இந்தியர்கள் மட்டுமே இந்தச்‌ சிகிச்சை முறையைப் பயன்படுத்த முடியும் என்பதும் உலக நாடுகள் இந்தியப் பெண்கள் மீது நடத்திய மருத்துவச் சுரண்டலுக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக இந்தியா எதிர்கொண்ட சட்டச் சிக்கல்கள் பற்றிய புரிதலும், இது போன்ற மருத்துவச் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் ஏற்பட்டாலொழிய, சமீபத்தில் சென்னையில் நடந்த வாடகைத் தாய் சிகிச்சை முறை முறைகேடு போன்ற வழக்குகளை நீதிமன்றங்கள் சந்திக்காமல் இருக்கும். அநாவசிய வாதங்களையும் அறியாமையால் ஏற்படும் குற்றங்களையும் தவிர்க்க முடியும்.

(தொடரும்)

படைப்பாளர்:

வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு‌ பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார். ஹெர்ஸ்டோரிஸ் இணையதளத்தில் வெளிவந்த ‘தாயனை’ தொடர், ஹெர்ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறாது.