பெண்ணை அடிமைப்படுத்திய பின்னர் ஆண் தனது ஆதிக்கத்தை இதில்தான் என்றில்லாமல் எல்லா விஷயங்களிலும் ஏற்றி வைத்திருக்கிறான். மரபணுவிலேயே இத்தகைய சிந்தனைகள் ஊறிப் போய்விட்டன. முன்னேர் செல்வதையொட்டியே பின்னேர் செல்வது போல முன்னோர்கள் செய்த விஷயங்களையே அது சரியா, தவறா, இந்தக் காலக்கட்டத்துக்கு ஒத்து வருமா என்றெல்லாம் சிந்திக்காது நிறைய ஆண்களும், ஆண்களின் சிந்தனைகளை அப்படியே மூளையில் ஏற்றிக் கொண்ட பெண்களும் இயல்பாகக் கடைபிடிக்கிறார்கள். அதாவது தாங்கள் செய்வதும், பேசுவதும் இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்.
சமீபத்தில் ஓர் உரையைக் கேட்க நேர்ந்தது. பேசியவர் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டு, “இதற்காக ஒரு பெண்மணி முதலில் ஒரு திட்டம் வகுத்தார். அதைச் செயல்படுத்தும் போது அது மிகவும் வெற்றிகரமானதாக மாறியது. அதன் மூலம் பலருக்கும் உதவி செய்ய முடிந்தது” என்றெல்லாம் சொல்லிவிட்டு, “எந்த ஒரு ஆண்மகனும் செய்யத் துணியாத, செய்ய இயலாத, செய்ய தைரியமில்லாத ஒரு செயலை, ஒரு பெண் (உரத்த குரலில் உச்சரித்தார்) தயக்கமின்றிச் செய்தார்.. அது மிகவும் சிறப்பாக அமைந்தது..” என்று குறிப்பிட்டார். மேலோட்டமாகப் பார்க்கும் போது அந்தப் பெண்ணைப் பாராட்டுவது போலத் தோன்றினாலும், எந்த ஓர் ஆண்மகனும் (உயர்வு நவிற்சி) செய்யாத ஒன்றை, ஒரு பெண் (அதாவது கேவலம் ஒரு பெண் என்னும் தொனி) செய்திருக்கிறார் என்பதாகத்தான் இருந்தது. ஏன் பெண்கள் எந்தவிதமான புதிய ஐடியாக்களையும் சொல்ல முடியாதவர்களா என்ன? எல்லாச் சிந்தனைகளும் ஆண்களிடமிருந்தேதான் வரும் என்று பொதுப்புத்தியில் புகுத்தியிருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. பெண் என்பதாலேயே அவளது சிந்தனைகள் இன்னும் இந்தச் சமூகத்தில் ஒதுக்கப்படுகின்றன. இது இயல்பாகவும் பார்க்கப்படுகிறது என்பது வேதனையான ஒன்று.
வழக்கமாக நடைப்பயிற்சி செல்லும் போது எதிரே வரும் ஆண்கள் புருவம் உயர்த்திப் பார்ப்பார்கள். அதன் பொருள் என்னவென்று ஒருநாள் தோழி ஒருவர் சொன்னார். “காலையில வாசலைப் பெருக்கித் தெளிச்சு, கோலம் போட்டு, சமையலைப் பார்க்காம வாக்கிங் போறோம்ல.. அதான்..” என்றார். அதற்கேற்ப வழியில் எங்களைப் பார்த்த பெரியவர் ஒருவர், “வீட்ல வேலை குறைவா இருக்கா?” என்று சொல்லிவிட்டுச் சென்றார். ஏன் சார் பெண்களுக்கென்றேதான் வீட்டுப் பணிகள் எழுதி வைக்கப்பட்டு இருக்கின்றனவா? ஆண்கள் அந்தப் பணியைச் செய்தால் சரிவர நடக்காதா என்ன? காலையில் எழுந்து வாக்கிங் செல்வதற்கு ஓர் ஆணுக்கு இருக்கும் அதே அளவு உரிமை பெண்ணுக்கும் இருக்கிறது. அவள் தன் உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வதில் அக்கறை காட்டாவிட்டால் வேறு யார் கவனித்துக் கொள்வார்கள்? இதனால் சமையல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கிறது என்றால் இருவரும் இணைந்து வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொண்டால் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி கிடைத்துவிடும் அல்லவா?
எங்கள் பகுதியில் துக்க நிகழ்வுகளுக்குச் செல்லும் போது, இறந்தவர்களை வழிபடும் நிகழ்வில் தேங்காய் உடைத்துக் கற்பூரம் ஏற்றுவார்கள். அப்போது ஆண்களுக்குத்தான் முதலில் வழிபடும் உரிமை உண்டு. அவர்கள் சென்ற பின்னரே பெண்கள் வழிபடுவார்கள். ஆனால் அந்த வழிபாட்டு நிகழ்வுக்குப் பொருட்களைச் சுத்தம் செய்து எடுத்து வைப்பது, படையலுக்குச் சமைப்பது எல்லாம் பெண்கள் மட்டும்தான். அதிலெல்லாம் ஆண்கள் உரிமை கேட்க மாட்டார்கள். ஆனால் இதிலென்ன கொடுமை என்றால், எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு, ஆண்களை வழிபட முதலில் அழைப்பதே பெண்கள்தான். வேலை செய்த தாங்கள்தான் முதலில் வழிபட வேண்டும் என்கிற எண்ணம் கொஞ்சம்கூட எழாத வண்ணம் இது இயல்பாகி விட்டிருக்கிறது. முன்பெல்லாம் ஆண்கள் சாப்பிட்ட பின்னரே பெண்கள் உணவருந்துவார்கள். “ஆம்பளைங்க முதல்ல சாப்பிடட்டும். அப்புறம் பொம்பளைங்க சாப்பிடலாம்” என்று பெண்களே கூறுவார்கள். ஆனால் இது இப்போது மாறிவிட்டது மட்டும் கொஞ்சம் ஆறுதலான விஷயம்.
அதேபோல் கூட்டங்களில் பேசுவோர் எப்போதும் “பெரியோர்களே… தாய்மார்களே…” என்று தான் பேச்சைத் தொடங்குகிறார்கள். ஆண்களைப் பெரியோர்களே என்று விளிப்பவர்கள் பெண்களை மட்டும் தாய்மார்களே என்று அழைக்கிறார்கள். ஏன் பெருமாட்டிகளே என்று குறிக்கலாம். அல்லது ஆண்களைத் தந்தைமார்களே என்று பெருமை இல்லை இல்லை புனிதப்படுத்தலாமே!. அது என்ன தாய்மைப் புனிதத்தை மட்டும் உயர்த்துவது? தந்தைமையும் புனிதம்தானே?. இப்படிப் பேசுவது குறித்து யாரும் யோசிப்பது இல்லை.
வாரிசு என்றாலே ஆண் பிம்பம்தான் பொதுப்புத்தியில் தோன்றுகிறது. ஆண் வாரிசுகள் கொண்டாடப்படும் அளவுக்கு, முதன்மைப்படுத்தப்படும் அளவுக்குப் பெண் வாரிசுகள் பேசப்படுவதில்லை. சில வருடங்களுக்கு முன்பு ‘வம்சம்’ என்றொரு திரைப்படம் வந்தது. அதில் ‘எப்பாடு பட்டாலும் பிற்பாடு கொடாதவர்’ என்றொரு வம்சத்துக்குக் கடைசி வாரிசாகக் கதாநாயகன் இருப்பார். அவருக்குப் பெண் கொடுக்க எல்லாரும் மறுப்பார்கள். ஆனால் ‘கொட்டமுக்கி’ வம்சத்துப் பெண் அதாவது அவர் கடைசி வாரிசு இல்லை. அவரது வம்சத்தில் இதரர்களின் வாரிசுகள் இருப்பார்கள். அவரது தந்தைக்கு அவர் ஒரே மகள். ஆனால் கதாநாயகனின் வம்சத்துக்கு மட்டும் அவர் மாத்திரமே இறுதி வாரிசு. கடைசியில் அவர் நாயகியைத் திருமணம் செய்து கொண்டு ஆணும், பெண்ணுமாக வாரிசுகளைப் பெற்று வம்சத்தை வளர்ப்பார்கள். இதில் ஒரு கேள்வி என்னவென்றால் இரு குழந்தைகளுமே பெண்களாகப் பிறந்தால் ஏன் வாரிசாக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்பதுதான். இதெல்லாம் காலங்காலமாக இயல்பாகிப் புரையோடிப் போயிருக்கின்றன.
நான் பள்ளியில் படித்த காலத்தில் வருகைப் பதிவேட்டில் முதலில் ஆண் குழந்தைகளின் பெயர்களைத்தான் வாசிப்பார்கள். அப்புறம்தான் பெண் குழந்தைகளின் பெயர்கள் வரும். இப்போதும் நிறையப் பள்ளிகளில் இது நடைமுறையில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. சில கல்வி நிலையங்களில் அகர வரிசைப்படி இருக்கிறது. ஆனால் இன்னும் பெரும்பான்மையில் மாற்றம் தேவை. அதேபோல் சினிமாத்துறையில் நயன்தாரா ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுகிறார். ஆனால் ரஜினிகாந்த் ‘ஜென்ட்ஸ் சூப்பர் ஸ்டார் ‘ என்று அழைக்கப்படுவதில்லையே ஏன்? சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பாலின பேதம் இல்லாமல் இருவருக்கும் ஒன்று போல வழங்கப்படுவது தானே நியாயம்? அதேபோல் பொதுவிலும் எல்லோரும் உணர வேண்டும்.
“அவனுக்கென்ன? ஆம்பள சிங்கம்”, “சாண் பிள்ளைன்னாலும் ஆண்பிள்ளைதானே..”, “ஆம்பளப் பயலா?..கொக்கா?..” இதெல்லாம் ஆண்களின் அதிவீர(?) பராக்கிரமங்களுக்குச் சில பெண்கள் அவ்வப்போது சிதறவிடும் சில்லறை டயலாக்குகள்தான். இப்படித் தினமும் செயல்களிலும் பேச்சுகளிலும் நம்மையறியாமலேயே ஆணாதிக்கத்தைச் செயல்படுத்தி வருகிறோம். இதை உணர்ந்தவர்கள் இனியாவது கொஞ்சம் யோசித்து எதையும் பேச, செய்யக் கற்றுக் கொள்வோம்.
படைப்பாளர்:
கனலி என்கிற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.