சாதியக் கட்டமைப்பில் புரையோடி போன நம் சமூகத்தில் நடக்கும் ஆணவப் படுகொலைகளைப் பற்றிப் படிக்கும் போதெல்லாம் என் மனதில் இந்த மரபணுக் குறைபாடுகள்தான் நினைவுக்கு வருகின்றன. தென்னிந்திய மாநிலங்களில் தாய்மாமாவை,  அக்கா அல்லது தங்கையின் மகள் திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது‌. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் சொத்தும் சொந்தமும்தான் முக்கியக் காரணிகள். இது வழி வழியாக நடந்து வரும் நிகழ்வு என்றாலும் இதைப் பற்றி விவாதிப்பதற்கான அவசியம் இருக்கிறது.

மரபணுக்கள் வழியாகக் கடத்தப்படும் சில பின்னடைவு (recessive) நோய்கள் இந்தச் சொந்தத்திற்குள் திருமணம் செய்வதன் வழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பின்னடைவு நோய்கள் வருவதற்கு அம்மா அப்பா இருவரிடமும் இருந்து வரும் மாற்றுருவிலுமே (alleles) பிறழ்வு ஏற்பட்டிருக்க வேண்டும். இதற்குச் சான்றுதான் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் குறைபாடு. இந்தப் பின்னடைவு குறைபாடுகள் தாத்தாவிற்கு இருக்கும் பட்சத்தில் அடுத்த தலைமுறையினர்களில் அனைவருமே நோய் கடத்திகளாக இருப்பார்கள். ஆனால் தாத்தா, பாட்டி இருவருமே நோய் கடத்திகளாக இருக்கும்பட்சத்தில் அடுத்த தலைமுறையினர்களில் 75 சதவீதம் பேர் நோய் கடத்திகளாக இருப்பார்கள் மற்றும் 25 சதவீதம் பேர் நோயால் பாதிக்கப்படுவார்கள்.

சொந்தங்களுக்குள் திருமணம் செய்யும் பட்சத்தில் இந்தப் பின்னடைவு நோய்களுக்கான பிறழ்வுடைய மரபணு அந்தக் குடும்பத்திற்குள்ளேயே உழன்று, இரு நோய் கடத்திகள் இணையும் போது அடுத்த தலைமுறையினருக்கு அந்த நோய் கடத்தப்பட்டு குழந்தை பாதிப்பதற்கான வாய்ப்பு 25 சதவீதம் இருக்கும். 75 சதவீதத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் 25 சதவீதம் என்பது குறைவுதானே என்று கேட்பவர்களுக்கு ஒரு தலைமுறையினர் இதிலிருந்து தப்பித்தாலும் கட்டாயம் ஏதோ ஒரு தலைமுறையினர் இதனால் பாதிக்கப்படுவார்கள்.

இவற்றைத் தவிர்க்க, நெருங்கிய சொந்தங்களுக்கு இடையே திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதற்கு உலகெங்கும் பல சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சீனா, கொரியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இந்த அத்தை-மாமா பிள்ளைகளுக்கு அல்லது பெரியப்பா-சித்தப்பா பிளைளைகளுக்கு இடையே நடக்கும் திருமணங்களுக்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்களும் இந்த முதல் சுற்று உறவுகளுக்கு அதாவது நெருங்கிய சொந்தங்களுக்கு நடுவே நடக்கும் திருமணங்களுக்குத் தடை விதித்துள்ளது. இந்து மதமும் முதல் சுற்று உறவுகளுக்கு அதுவும் குறிப்பாகப் பெரியப்பா-சித்தப்பா பிள்ளைகளுக்கு நடுவே நடக்கும் திருமணங்களைத் தடை செய்துள்ளது. ஆனால் இஸ்லாமிய மாதத்தில் அம்மா வழி சித்தி-பெரியம்மா பிள்ளைகளுக்கு நடுவே திருமணம் நடப்பது வழக்கம்.

சொந்தத்திற்குள் திருமணம் செய்வதால் மட்டும்தான் இந்தப் பின்னடைவு நோய்கள் வருகின்றன எனச் சொல்லிவிட முடியாது.‌ ஓர் இனத்ததிற்குள் திருமணம் செய்வதாலும் சில வகையான பின்னடைவுக் குறைபாடுகள் அடுத்த சந்ததியினரைப் பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.‌ அதற்கான உதாரணம் அரச குடும்பங்களில் உழன்று வந்த ஹீமோஃபிலியா நோய். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் உறையும் தன்மை கிடையாது. இது அரச குடும்பங்களில் இருந்ததால் இதற்கு ’அரச நோய்’ என்னும் இன்னொரு பெயரும்‌ உண்டு. இங்கிலாந்து அரச‌ குடும்பத்தினர்கூட இந்த நோயால் பாதிக்கப்பட்டனர் அதுவும் குறிப்பாக ஆண்கள். காலப்போக்கில் அந்த‌‌ப் பிறழ்வுடைய மரபணு அடுத்தடுத்து கடத்தப்படாமல் காணாமல் போனது. சில தலைமுறைகளுக்குப் பிறகு அந்த மாதிரியான பிறழ்வுடைய மரபணுக்கள் தானாகக் கடத்தப்படாமல் மறைந்து போய்விடும். ஆனால் அதற்குள் அது பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்திவிடும்.

தாலசிமியா (thalassemia) போன்ற ரத்தம் சம்மந்தப்பட்ட குறைபாடுகள் இந்தியாவில் பல பகுதிகளில் காணப்பட்டாலும் சிந்திகள், பஞ்சாபிகள், குஜராத்திகள், வங்காளிகள், மஹர்கள், கோலிகள், சரஸ்வத்கள், லோஹானாக்கள் மற்றும் கவுர்கள் இனங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. இதற்குக் காரணம் ஒரே இனத்திற்குள் திருமணம் செய்வதால் மீண்டும் மீண்டும் அதே மரபணுப் பிழைகள் பல தலைமுறைகளாக அந்தச் சமூகத்தினருக்குள்ளாகவே கடத்தப்படுவதுதான். பிழையுள்ள மரபணுக்கள் வேறொரு சமூகத்தைச் சேர்ந்த ஆரோக்கியமான மரபணுக்களுடன் சேர்ந்தால் இந்த நோய் கடத்தல்கள் நின்றுவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்‌.

இனங்களைத் தாண்டி வரக்கூடிய மற்ற அரிய வகை நோய்களில் ஒன்றுதான் இழைமணி  குறைபாடுகள் (mitochondrial disorders). இழைமணி எனப்படும் மைட்டோகாண்டிரியாதான் நம் உடலுக்குத் தேவையான சக்தியை உருவாக்கக்கூடிய செல் உறுப்பு. இதிலும் சில குறிப்பிட்ட புரதங்கங்களை உருவாக்குவதற்கான தாயனை உண்டு. இந்த இழைமணி தாயனை (mitochondrial DNA) முற்றுலுமாக அம்மாவிடம் இருந்து வரக்கூடியது.

கருத்தரித்தலின் போது ஆணுடைய விந்தணுவில் இருக்கும் இந்த இழைமணி தாயனை முற்றிலுமாக நீக்கப்பட்டு, கருமுட்டையிலிருக்கும் இழைமணி தாயனைதான் கருவிற்குக் கடத்தப்படும்‌. அதனால் ஆண்களுக்கு இழைமணி குறைபாடுகள் இருந்தால் அது அடுத்த தலைமுறையினரைப் பாதிக்காது‌. ஆனால் மாறாகப் பெண்களுக்கு இருக்கும் இழைமணி குறைபாடுகள் அடுத்த தலைமுறையினரைக் கட்டாயம் பாதிக்கும். இந்த வகை நோய்களை ஆங்கிலத்தில் maternal inheritance (தாய்வழி விளைவுகள்) என்பர்.

இது தவிர அம்மாவின் ரத்தம் RHஆக இருக்கும் பட்சத்தில் குழந்தைப் பேறின் போது கவனமாக இருக்க வேண்டும். கணவருக்கு RH+ இருந்து மனைவிக்கு RH- இருந்தால் பிறக்கப் போகும் குழந்தைக்கு RH+ இருப்பதற்கான வாய்ப்பு 50% உள்ளது. ஒருவேளை குழந்தைப்  பிறந்ததும் RH+ உறுதி செய்யப்பட்டால், பிரசவத்தின் போது அம்மாவின் உடலில் RH+க்கு எதிராகச் சுரக்கப்பட்ட ஆண்டிபாடிகளைச் சமன் செய்வதற்காக ஊசி ஒன்று போடப்படும். அப்போதுதான் அடுத்து பிறக்க போகும் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. இல்லையென்றால் அடுத்து உருவான கரு மீண்டும் RH+ ஆக இருந்தால் ஏற்கெனவே அம்மாவின் உடலில் முதல் குழந்தையின் RH+வை சமன் செய்வதற்காக உருவான ஆண்டிபாடிகள் இந்தக் கருவின் RH+க்கு எதிராகப் போராடி கருச்சிதைவு ஏற்படும்.

அதனால் குழந்தைப் பிறந்ததும் ரத்தப் பரிசோதனை மிக அவசியம். குழந்தை எந்த ரத்த வகையைச் சார்ந்தது என்பதைத் தெரிந்து வைப்பதும் மிக முக்கியம். அம்மா, அப்பாவிற்கு இருக்கும் ரத்த வகைகளில் ஏதோ ஒன்றோ அல்லது அதன் கலவையோதான் குழந்தைக்கு இருக்க வேண்டும். உதாரணத்திற்கு அப்பாவிற்கு A வகை ரத்தமும் அம்மாவிற்கு B வகை ரத்தமும் இருந்தால் குழந்தைக்கு A, B, O அல்லது AB வகை ரத்தம் இருக்கலாம். ஆனால் அப்பாவிற்கு A வகை, அம்மாவிற்கும் A வகை இருந்தால் குழந்தைக்கு A அல்லது O வகைதான் இருக்கும்.‌ இது தவிர வேறு எந்த வகை ரத்தமும் அந்தக் குழந்தைக்கு இருப்பதற்கு வாய்ப்பில்லை‌.

ரத்த வகைகளை அறிந்து வைத்திருந்தால் பிற்காலத்தில் அவசரக் காலத்தில் உதவியாக இருக்கும். ரத்ததானம் செய்வது தானம் கொடுப்பவர், பெறுபவர் இருவருக்குமே நல்லது. ரத்ததானம் செய்வதற்கு முன்பாக ரத்தத்தால் பரவக்கூடிய தொற்று ஏதேனும் இருக்கிறதா என்பதைப் பரிசோதித்து பார்ப்பது மிக முக்கியமான மருத்துவ முறை. ரத்த தானம் செய்வதற்கு முன்பாக முறையான பரிசோதனைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு, கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ரத்ததானம் கொடுத்த நபருக்கு எச்ஐவி தொற்று இருந்ததை முறையாகப் பரிசோதிக்காததால் அந்தக் கர்ப்பிணி பெண்ணிற்கும் தொற்றுப் பரவிய செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க இருத்தரப்பினரும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.‌

இப்படிப் பல வகைகளில் ஒரு நபரிடமிருந்து இன்னொரு நபருக்கு நோய்கள் கடத்தப்படுகின்றன. ஆனால் இந்தச் சாதிய படிநிலை சமூகத்தில் திருமணங்கள் வெறும் குடும்ப கெளரவம் சார்ந்ததாகவும் ஒழுக்கம் சார்ந்ததாகவும் மட்டுமே பார்க்கப்படுகின்றன. அறிவியல் கண்ணோட்டத்தில் திருமணங்களை அணுகுவதைப் பற்றி யாரும் சிந்திப்பது கூட இல்லை. இதைப் பற்றிய புரிதல்கள் இருந்தால் மட்டுமே மரபணு நோய்களைத் தவிர்க்க முடியும்.

(தொடரும்)

படைப்பாளர்:

வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு‌ பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார். ஹெர்ஸ்டோரிஸ் இணையதளத்தில் வெளிவந்த ‘தாயனை’ தொடர், ஹெர்ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறாது.