பேதை (1-8 வயது), பெதும்பை (9-10 வயது), மங்கை (11-14 வயது), மடந்தை (15-18 வயது), அரிவை (19-24 வயது), தெரிவை (25-29 வயது), பேரிளம் பெண் (30 வயதுக்கு மேல்) எனத் தமிழ் இலக்கியம் கூறும் பெண்களின் ஏழு பருவங்களைப் பற்றிப் பேசும் நாம், அதே தமிழ் இலக்கியம் ஆண்களுக்கென வகுத்து வைத்துள்ள ஏழு பருவப்பெயர்களைப் பற்றி யோசிப்பதுகூட இல்லை. பாலகன் (1-12 வயது), விடலை (12 – 24 வயது), காளை (24-36 வயது), மீளி (36-48 வயது), மறவோன் (48-60 வயது), திறவோன் (60-72 வயது), முதுமகன் (72 வயதுக்கு மேல்) என ஆண்களுக்கான பருவங்களைப் பெண்களோடு ஒப்பிடும்போது சில முக்கியமான அறிவியல் உண்மைகள் புலப்படுகின்றன. பெண்ணுடலும் ஆணுடலும் எதிர்கொள்ளும் மாற்றங்கள் அலாதியானது. இரண்டும் ஒரே மாதிரியான மாற்றங்களை எதிர்கொள்வதில்லை. பெண்களின் உடல் வளர்ச்சியைக் குறிப்பிடும் ஏழு பருவங்களும் 30 வயதிற்குள் நடந்து விடுகின்றன. ஆனால் ஆண்களின் உடல் மாற்றங்களைக் கவனித்தால் 72 வயது வரை ஆணுடல் பொறுமையாக அதன் மாற்றங்களை நிலைப்படுத்துகிறது.
ஒன்பது வயதிலிருந்து முப்பது வயதிற்குள் பெண்ணுடலின் பரிணாமமானது சாதாரணமானதல்ல. பொதுவாக ஒரு பெண் ஒன்பது வயதில் பருவகாலப் பயணத்தைத் தொடங்கி, பதினான்கு வயதிற்குள் பூப்படைந்து, இருபதுகளில் தாயாகி விடுகிறாள். இந்தக் காலத்தில் அவள் உடலும் மனதும் எண்ணற்ற மாற்றங்களை அடைகிறது. ஹார்மோன் ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்கிறது. முப்பது வயதிற்கு மேல் கருமுட்டையின் ஆரோக்கியம் குறையத் தொடங்கிக் கொஞ்சம் கொஞ்சமாக அவள் கருத்தரிக்கும் காலத்தைக் கடக்கிறாள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் மெனோபாஸை எட்டி விடுகிறாள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வயதில் மெனோபாஸ் வரும் என்பதால் மெனோபாஸை அடையும் சராசரி வயதாக 40 – 50 என வைத்துக் கொள்வோம்.
பெண்களைப் பொறுத்த வரையில் பருவமடைதலும் மெனோபாஸும் மிக முக்கியமான நிகழ்வுகள். எனக்குத் தெரிந்த ஒரு குழந்தை ஆறு வயதிலேயே பூப்படைந்து விட்டது. தொடர் மருத்துவ சிகிச்சையால் அந்தக் குழந்தையின் மாதவிடாய் சுழற்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழந்தை மாதவிடாயின் போது என்ன பாடுபட்டிருக்கும். பூப்படைதல், மாதவிடாய் என்பதைப் பற்றித் தெரியாத, சொன்னாலும் புரியாத வயதிலிருக்கும் அந்தக் குழந்தையைப் பராமரிக்க பெற்றோர் படும்பாட்டை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
பதினான்கு, பதினைந்து வயதில் பூப்படைவது போய் இப்போதெல்லாம் ஒன்பது வயதிலேயே குழந்தைகள் பருவமடைந்து விடுகின்றன. இதற்குக் காரணம் உணவு பழக்கவழக்கங்களும் தொழில்நுட்ப வளர்ச்சியும்தான். துரித உணவு வகைகளும், கலப்புக் காய்கறிகளும் இன்றைய தலைமுறையைக் கவர்ந்திருக்கும் நிலையில் உடல் பருமன், விரைவாகப் பூப்படைதல் போன்றவையும் இனாமாக வருகின்றன. இது போக தொழில்நுட்ப வளர்ச்சியும் உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்து வைத்திருக்கிறது. ஓடியாடி விளையாடுவதைப் பிள்ளைகள் மறந்தே போய்விட்டனர். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றைத் தனியாகச் செய்யவில்லை என்றாலும்கூட, பள்ளியில் இருக்கும் விளையாட்டு வகுப்பிலாவது ஓடியாடி விளையாடலாமே. பள்ளிகளில் இருக்கும் P.E.T வகுப்புகளைக் கணிதத்திற்கும் அறிவியலுக்கும் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு பிள்ளைகளைக் குறை சொல்லி என்ன பயன்? என்னதான் இது பழைய பஞ்சாங்கத்தைத் தூசி தட்டுவது போல இருந்தாலும், உணவு பழக்கவழக்கங்களும் வாழ்க்கை முறையும்தான் இன்றைய குழந்தைகளுக்கு இருக்கும் பெரும்பான்மையான பருவகால சிக்கல்களுக்குக் காரணம்.
இதில் பெண் பிள்ளைகளுக்கு இருக்கும் உடல் மற்றும் மனரீதியான சிக்கல்கள் பல. அதில் முதலாவது மாதவிடாய் உதிரப் போக்கைத் தாங்கும் சக்தியும் உடல் வலிமையும் அந்தக் குழந்தைக்கு இல்லாமல் இருப்பது. இரண்டாவது அதைப் பற்றிய புரிதலும் கையாளும் பக்குவமும் இல்லாமல் இருப்பது. பெரியவர்களே கரை படிந்து விடுமோ என்று பார்த்துக் கவனமாக இருக்க வேண்டிய சூழலில் சிறுபிள்ளைகள் என்ன செய்யும்?
பள்ளிகளில் இதற்கென்றே தனியாக மாதத்தில் ஒருமுறையாவது குழந்தைகளிடம் பேசுவது அவசியம். இதைப் பூதாகரமாக ஆக்காமல், இது உடலில் இந்த வயதில் ஏற்படும் மாற்றத்தின் வெளிப்பாடு, அனைத்துப் பெண்களுக்கும் ஏற்படக்கூடிய நிகழ்வு என்கிற புரிதலை ஏற்படுத்த வேண்டும். அதை ஒரு சாதாரண நிகழ்வாகப் பார்ப்பதற்குப் பிள்ளைகளைப் பழக்கப்படுத்த வேண்டும். இது தவிர மாதவிடாய் நாட்களில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளைப் பற்றியும் விளக்க வேண்டும். பொதுவாகவே அந்த நாட்களில் உடல் சூடு அதிகரித்து அடிவயிற்றில் வலி இருக்கும். அதனால் குளிர்ந்த உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது போக அந்த நாட்களில் பயன்படுத்தப்படும் சாதனங்களைத் தேர்வு செய்வதில் கவனம் வேண்டும். மாதவிடாய் கால அணையாடைகள் (Sanitary pads), மாதவிடாய் கோப்பைகள் (menstrual cup), துணி என எதுவாக இருந்தாலும் அதைப் பயன்படுத்தும் போது தனிப்பட்ட சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
பேட்களை உபயோகிக்கும் பட்சத்தில் அதை அகற்றுவதில் பொறுப்பாக இருப்பது நம்மையும் சுற்றத்தையும் பாதுகாக்கும். மாதவிடாய் நாட்களில் உதிரப்போக்கின் அளவையும் தன்மையையும் கவனிப்பது கருப்பைவாய் புற்றுநோயையும், கட்டிகளையும் ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும். மாதவிடாய் எத்தனை நாட்களுக்கு வருகிறது, ஒரு மாதத்திற்கும் அடுத்த மாதத்திற்கும் எத்தனை நாட்கள் இடைவேளை இருக்கிறது, போன்றவற்றைக் குறித்து வைப்பது நல்லது. இவற்றில் ஏதேனும் மாற்றம் இருந்தால் உடனடியாக மருத்துவரை ஆலோசிப்பது அவசியம். சினைப்பைக் கட்டிகளான PCOD மற்றும் PCOS பருவக்காலத்தில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் அத்தனை மாற்றங்களும் முக்கியமானவை. சிறுநீரகத் தொற்றுகளும் பொதுவாக அனைத்து வயதினற்கும் வரும் என்பதால் தனிப்பட்ட சுகாதாரத்தில் கருத்தாக இருப்பது நல்லது.
ஒரு பேடை பயன்படுத்திய பிறகு அதை எப்படி முறையாக அகற்றுவது தொடங்கி, தனிப்பட்ட சுகாதாரம் வரை அனைத்துமே வகுப்பறையில் கற்பிக்கப்பட வேண்டிய பாடங்கள். நான் படித்த பள்ளியில் இது போன்ற வகுப்புகளை எடுக்க மாதம் ஒருமுறை மருத்துவரோ, சுகாதாரத்துறையினரோ அல்லது அந்தத் துறை சம்பந்தப்பட்ட வேறு சிலரோ வருவது வழக்கம். அந்த வயதில் முழுமையாகப் புரியாவிட்டாலும், மாதவிடாயைச் சமாளிக்கும் அளவிற்காவது பக்குவம் கிடைத்தது. இவற்றைப் பற்றிப் பேசுவதற்குத் தயங்கவோ கூச்சப்படவோ எதுவுமில்லை என்பதை அந்தக் குழந்தை உணர வேண்டும். பெண் பிள்ளைகளுக்கு மட்டுமல்லாமல் இதைப் பற்றிய புரிதல் ஆண் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஒரு பெண் பருவமடைந்ததிலிருந்து மெனோபாஸ் வரை சராசரியாக 300-400 கருமுட்டைகளை மாதவிடாய் காலத்தில் வெளியேற்றுகிறாள். இந்த எண்ணிக்கை ஒருவருக்கொருவர் வேறுபடும். மெனோபாஸ் காலத்தில் ஹார்மோன்களின் சீற்றம் அதிகமாக இருப்பதால் உணர்ச்சிகள் ஊசலாடுவதை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது. மாதவிடாய் சுழற்சி நிற்கும் தருவாயில் அவர்கள் அதிக மன உளைச்சலுக்கும் உடல் சோர்வுக்கும் ஆளாவர். இது போக கர்ப்பப்பை கட்டிகள், சினைமுட்டைப்பை நீர்க்கட்டிகள், கருப்பையின் வெளிச்சுவர் தடிமனாவது (endometrial hyperplasia) போன்ற பல உபாதைகள் மெனோபாஸ் காலத்தில் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதால் மிக கவனமாக இருக்க வேண்டும்.
எல்லாம் பெண்களுக்குதான் இருக்கிறதா? ஆண்களுக்கு எதுவும் இல்லையா என்று கேட்டால், ஆண்களுக்கும் ஏகபோக சிக்கல்கள் உள்ளன. உடல்ரீதியாக அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கலைவிட மனரீதியாக எதிர்கொள்ளும் சிக்கல்கள் அவர்களோடு சேர்ந்து சமூகத்தையும் பாதிக்கின்றன. அதற்கு உதாரணமாகத் திரிபுராவில் நிகழ்ந்த ஒரு மிக துயரமான சம்பவத்தைப் பற்றி அடுத்த பகுதியில் விரிவாகப் பேசுவோம்.
(தொடரும்)
படைப்பாளர்:
வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார். ஹெர்ஸ்டோரிஸ் இணையதளத்தில் வெளிவந்த ‘தாயனை’ தொடர், ஹெர்ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறாது.