ஒரு ஞாயிற்றுக் கிழமை, நண்டைச் சமைப்பதற்காகச் சுத்தம் செய்து கொண்டிருந்தேன். அப்போது வீட்டு வேலைகளில் எனக்கு உதவும் பெண்மணி, நண்டைப் பார்த்தவுடன், “ஏம்மா, நண்டு செய்யறீங்களே, உங்களுக்கு உடம்புக்கு ஒத்துக்குமா?” என்று கேட்டார்.

“ஏன் நண்டு சாப்பிட்டா என்ன ஆகும்?” என்றபோது, “இல்ல… நண்டு சூடு,  சாப்பிட்டா அடுத்த நாளே தலைக்கு ஊத்திக்க வேண்டி வரும். அதான் கேட்டேன்” என்றார்.

எந்தப் பதிலையும் நான் அவருக்குச் சொல்லவில்லை. ஆனால், அவருடைய புரிதலுக்குப் பின்னால் இருக்கும் சூட்சுமம் எனக்குப் புரியத் தொடங்கிவிட்டது. உணவு அரசியல் மிகவும் ஆழமானது. அதிலும் பெண்களின் உணவுக்கான அரசியல் மிகவும் நுட்பமானது.  

இந்தியாவைச் சுற்றி கடல். கடலெல்லாம் மீன். மீனெல்லாம் புரோட்டின். ஆனால், நம் நாட்டில் புரோட்டின் குறைபாடு அதிகம் ஏன்?

பொதுவாக நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கு கால்சியம் குறைபாடு வருவது இயல்பானது. நண்டு அதற்கான மிகச் சிறந்த மருந்து. ஆனால் அதை ஏன் சாப்பிடக் கூடாது?    

போதும் போதும் என்னுமளவிற்குச் சூரிய வெளிச்சம் பெரும் நாட்டில் 72% பெண்கள் வைட்டமின் D குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏன்?

இந்திய மக்கள்தொகையில் சுமார் 55% பெண்கள் இரும்புச் சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏன்?

உணவு விஷயத்தில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் ஏன் பெண்களை நோக்கியே இருக்கின்றன. அதுவும் மாதாந்திர சுழற்சியுடன் ஏன் தொடர்புபடுத்தப் படுகின்றன?

ஏனென்றால், அது ஒன்றுதான் அவர்களைக் கட்டுப்படுத்தும் அல்லது பயமுறுத்தும். இந்த உணவு உன்னுடைய மாதாந்திர தொந்தரவுகளை அதிகப்படுத்தும் என்று சொல்லும்போது அதைச் சாப்பிடுவதற்கான தைரியம் பல பெண்களுக்கு வருவதில்லை.

பெண்களுக்கு நாற்பது வயதுக்குப் பின்னர் எலும்புகள் வலுவிழக்கும். வைட்டமின் டி உடன் போதுமான அளவு கால்சியம் எடுத்துக் கொள்வது வலுவிழந்த எலும்புகளுக்கு பலம் சேர்க்கும். இவை இரண்டின் பற்றாக்குறை என்பது பொதுவாக உடல் சோர்வு, மூட்டு வலி, கை, கால் வலி என்று உற்சாகமற்ற வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும்.

உடலுக்குத் தேவையான அளவு வைட்டமின் டி கிடைக்க வேண்டும் என்பற்காக ஒவ்வொரு கோடைக்காலத்தின் போதும் வெளிநாட்டினர்  விடுமுறை எடுத்துக்கொண்டு வெயிலில் காய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.  வைட்டமின் டி குறைபாடு என்பது இந்தியாவில் அரிதானது என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்தியாவில் தான் மிக அதிகபட்ச அளவில் 72% பெண்கள் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தேசியக் குடும்ப சுகாதார ஆய்வு நிறுவனம் 2019-21இல் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது மட்டுமல்ல, இந்திய மக்கள்தொகையில் சுமார் 55% பெண்கள் இரும்புச் சத்துக் குறைபாட்டினாலும், 21% பெண்கள் கால்சியம் குறைபாட்டினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இந்த ஆய்வின் மூலம் வெளிவந்துள்ளது.  

இன்னமும் நாம் பெண்களைப் பிரசவத்தின் போது இழந்து கொண்டுதான் இருக்கிறோம். 2018-20 வரை நடத்திய கணக்கெடுப்பின்படி ஒரு லட்சம் பிரசவங்களில் 97 பெண்கள் இறக்கின்றனர்.  2014-16 காலக்கட்டங்களில் இது 130 ஆக இருந்தது. இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது இரும்புச்சத்துக் குறைபாடு.

இரும்புச்சத்துக் குறைபாட்டுக்கு எளிதான தீர்வாக இருக்கும் முருங்கை கீரையைக்கூட இன்னின்ன நாட்களில் மட்டும்தான் சமைக்க வேண்டும் எனச் சில குடும்பங்களில் கட்டுப்பாடுகள் உள்ளன.  வெள்ளிக்கிழமையில் கீரையைக் கடையக் கூடாது; குடும்பத்துக்கு ஆகாது, என்கிற கட்டுப்பாடுகள் அந்த மொத்த குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் பின்னோக்கித் தள்ளிவிடுகிறது.

இன்னொரு வீட்டில் ரத்தக்கலரில் இருப்பதால் பீட்ரூட்டை வெள்ளிக்கிழமையில் சமைக்க மாட்டார்களாம். பீட்ரூட்டின் சுவை பிடிக்காத யாரோ ஒருவர், “அச்சச்சோ… வெள்ளிக்கிழமை அதுவுமா பீட்ரூட்டைச் சமைச்சு பாவம் பண்ணிட்டியே” என்று நம்பவைத்தக் காரணமாகக்கூட இருக்கலாம்.  யார் கண்டது? பல தலைமுறைகளை கடந்து வந்திருப்பதால் இப்படிப்பட்ட நம்பிக்கைகளுக்குக் காரணமே மறந்து போயிருக்கக் கூடும்.

ஆட்டுக்கறியில் நல்லி எலும்பைச் சுவைத்த சென்ற தலைமுறை பெண்கள் ஒருவரையாவது நினைவுபடுத்திப் பாருங்கள். எனக்கு ராஜ்கிரண் மட்டுமே நினைவுக்கு வருகிறார். ம்ஹும். சினிமாவில்கூட பெண்களுக்கு அந்த நல்லி எலும்பைக் கடிக்கும் யோகம் இல்லை. இறால் சமைக்கும்போது அதன் தலையை மட்டும் எடுத்து அதனுடன் சுரைக்காய் சேர்த்து தனியாக ஒரு குழம்பு வைப்பார்கள். அதாவது இறாலின் சுவையான சதைப் பகுதி சேர்த்துச் சமைத்தது ஆண்களுக்கான உணவாம். ஒன்றும் இல்லாத தலையைச் சேர்த்து, அதில் ஒரு நீர்க்காயை சேர்த்து செய்யும் பண்டம் பெண்களுக்கானதாம். இதெல்லாம் உலக மகா போங்காட்டம். 

சரி, இதெல்லாம் சென்ற தலைமுறையோடு முடிந்து விட்டது, இப்போது இருக்கும் பெண்கள் ஸ்விகியிலும் சோமட்டோவிலும் ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர் என்கீறீர்களா? ஆம். சமைப்பது மட்டுமே தனக்கான தனித்திறன் என்று நம்பி இருந்த காலம் மாறி, வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதாரத்தைத் தன் அறிவாலும் உழைப்பாலும் பூர்த்தி செய்து கொள்ள முடியும் எனும்போது இன்னமும் அடுப்படியில் வெந்து கொண்டு இருக்க யாருக்குத்தான் விருப்பம் இருக்கும்.

ஆனால், இப்படிப் பொருளாதாரத்தில் சுயச் சார்புடைய பெண்கள்கூட உணவு விஷயத்தில் இந்தச் சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் கட்டுப்பாடுகளை அவ்வளவு எளிதாகக் கடந்து வர முடிவதில்லை.

கருவுற்று இருக்கும் பெண்களுக்குப் பல காரணங்களைக் காட்டி சத்தான உணவு வகைகள் மறுக்கப்படுகின்றன. பப்பாளியோ அன்னாசி பழமோ மருத்துவர் பரிந்துரைத்தால் கூட அவற்றைக் கர்ப்பிணிகள் சாப்பிடத் தயங்குகின்றனர். காலம்காலமாகப் புகுத்தப்பட்ட கற்பிதங்கள் பெண்களுக்குச் சத்தான உணவு கிடைப்பதைக்கூடத் தடை செய்து விடுகின்றன. 

100 கிராம் எள்ளில் 975 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. ஒரு டேபிள் ஸ்பூன் எள் சாப்பிட்டாலே ஒரு நாளுக்குத் தேவையான கால்சியம் அளவில் 7% கிடைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எத்தனை வீடுகளில் பெண்கள் எள் சாப்பிட அனுமதி மறுக்கப்படுகிறது தெரியுமா?

அசைவ உணவைச் சாப்பிடுவதில் இருக்கும் நாள் கிழமைக் கட்டுப்பாடுகளைப் பற்றி எழுத ஆரம்பித்தால் பக்கங்கள் போதாது. அதிலும் பெரும்பாலும் ஆண்கள் தப்பித்து விடுவார்கள். இன்று இதைத்தான் சமைக்க வேண்டும்; இதைத்தான் சாப்பிட வேண்டும் என்கிற கட்டுப்பாடுகளில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்குவது பெண்கள் மட்டும்தான்.

இந்த நம்பிக்கைகள் பெரும்பாலும் தலைமுறைகள் வழியாகக் கடத்தப்படுகின்றன; போதாகுறைக்குச் சமூக விதிமுறைகளில் ஆழமாக வேரூன்றியுள்ளன.

சரி, இந்த நம்பிக்கைகளைக் கடத்துவது யார்? இந்த விதிமுறைகளைப் பின்பற்றச் சொல்வது யார்? அதுவும் பெண்களே. ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம். இந்த விதிமுறைகளால் துன்பப்படுவதும் பெண்களே. அவற்றைப் பின்பற்றச் சொல்பவர்களும் பெண்களே.

நண்டின் சுவையை நன்கு அறிந்த யாரோ ஒருவர்தான், பெண்கள் இதைச் சாப்பிட்டால் பின்விளைவுகள் வரும் என்கிற பீதியைக் கிளப்பி இருக்கக் கூடும். பின்னால் வந்த அத்தனை பெண்களும் அதைப் பத்திரமாக அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தி வந்துள்ளனர்.

அன்றைய கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை என்பது சுவையான, சத்தான உணவு வகைகள் அனைத்தும் ஆண்களுக்கானவை; வீட்டில் இருக்கும் பெண்கள் கிடைத்த மிச்சம் மீதியைத் தின்று வயிறு வளர்த்துக் கொள்ள வேண்டியதுதான் என்கிற கோட்பாட்டைக் கொண்டு இயங்கின. மீறி குரலெழுப்பும் பெண்களையும் அல்லது யாருக்கும் தெரியாமல் விதியை மீறத் துணிந்த பெண்களையும் இத்தகைய கற்பிதங்கள் அடங்கிப் போகச் செய்து விடுகின்றன.  

இனிப்பு வகைகளைப் பிடிக்காது என்று ஒரு சதவீதத்தினர் சொன்னாலே அதிகம். ஆனால் அதையும் பெண்கள் மாதாந்திர சுழற்சி நாட்களில் சாப்பிடுவதற்குத் தடை இருக்கிறது. ஒருசில வீடுகளில் இனிப்புச் சாப்பிடுவதால் குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே பீரியட்ஸ் வந்துவிடும் என்றுகூடக் காரணம் காட்டி இவை மறுக்கப்படுகின்றன. வேறு யாரும் அல்ல, அந்த அம்மாவே அதை நம்புவார், மகளிடம் கூறவும் செய்வார். உணவை அனைவருக்கும் சரி சமமாகப் பங்கிடுவதில் இருக்கும் பிரச்னையைக் கருத்தில் கொண்டு இப்படிப்பட்ட கற்பிதங்கள் உருவாக்கப்பட்டன. அதில் எப்போதும் போல் பலி கடா பெண்கள்தாம். 

குடும்பப் பராமரிப்பு வேலைக்காக ஒரு நாள் முழுவதும் தன்னுடைய உழைப்பையும் கொடுத்துவிட்டு, சத்தான உணவு வகைகளையும் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் விட்டுக் கொடுத்துவிட்டு, உடல் ஆரோக்கியத்துக்கும் முடிவுரை எழுதிவிட்டு பெண்களாகிய நீங்கள் சாதிக்கப் போவது என்ன?   

நாமாக விழித்துக் கொள்ளாவிட்டால் இந்தக் குழிக்குள் விழுந்த நிலையிலிருந்து நம்மால் தப்பிக்க முடியாது. இல்லையென்றால், பாட்டிலுக்குள் அடைத்த நண்டுகள் கதையைப் போல, யாரையும் மேலே ஏற விடாமல், நான் விழுந்த குழிக்குள் நீயும் விழ வேண்டும் என்று பிறரையும் பிடித்துத் தள்ளுவது வரும் தலைமுறையின் ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் செய்யும் துரோகமாகவே இருக்கும்.

புதிதாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எதையும் ஏன் என்று கேள்வி கேட்பதும், அது சம்பந்தமான தகவல்களைத் தேடிக் கண்டறிவதும், அறிவைக் கொண்டு எந்த ஒரு விஷயத்தையும் யோசிப்பதும் மட்டும்தான் பெண்களை இந்தச் சுழலில் இருந்து காப்பாற்றும்.

என் அம்மா எனக்குச் சொன்னார்; நான் உனக்குச் சொல்கிறேன்; பெரியவங்க சொல்வது அனைத்தும் நன்மைக்கே என்கிற பழமைவாதம் பெண்களின் ஆரோக்கியத்தில் ஒரு நூற்றாண்டுக்கான பின்னடைவைத்தான் ஏற்படுத்தும்.

(தொடரும்)

References:

  1. Modern India and Dietary Calcium Deficiency-Half a Century Nutrition Data-Retrospect-Introspect and the Road Ahead https://pubmed.ncbi.nlm.nih.gov/33889131/
  • https://main.mohfw.gov.in/sites/default/files/NFHS-5_Phase-II_0.pdf

தரங்கிணி

எல்சீவியர் என்னும் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். வாசிப்பில் நாட்டம் உடையவர். பெண்ணியம் சார்ந்த சமூக முன்னெடுப்புகளில் பங்களிப்பதில் ஆர்வம் உடையவர்.