டி.சி. காமிக்ஸில் வரும் ‘வொண்டர் உமன்’ என்ற கதாபாத்திரம், கிரேக்க புராணத்தில் ‘அமேசான்கள்’ என்று அழைக்கப்படும் பெண் போராளிகளை அடிப்படையாகக் கொண்டது என்பதைப் பலரும் அறிந்திருக்கலாம். புராணமாக மட்டுமல்லாமல் இதற்கு ஒரு வரலாற்று அடிப்படை உண்டு என்று கூறுபவர்களும் உண்டு. பெண்கள் மட்டுமே கொண்ட இனக்குழு அது. ‘அமேசான்’ என்ற சொல்லுக்கு, ‘வீரர்கள்’, ‘ஆண்கள்/கணவர்களற்றவர்கள்’ என்று பலவாறாகப் பொருள் கொள்ளலாமாம்!

தென்மேற்கு அமெரிக்கா மற்றும் மெக்சிகோவின் வறண்ட பகுதிகளில் வசிக்கும் Desert Grassland Whiptail Lizard என்ற பல்லி இனத்தை, ‘வொண்டர் உமன் பல்லிகள்’ என்று செல்லமாக அழைக்கலாம். பெண் பல்லிகளை மட்டுமே கொண்ட இனம் இது! கிரேக்க புராணத்தின்படி அமேசான் வீராங்கனைகள் இனப்பெருக்கத்திற்காகவாவது ஆண் வீரர்களைத் தேடிப்போவது வழக்கம். ஆனால், நமது வொண்டர் உமன்/அமேசான் பல்லிகளுக்கு அந்தக் கஷ்டம்கூடக் கிடையாது! இனப்பெருக்கத்திற்குக்கூட ஆண்களின் தேவை இல்லாத, முழுக்க முழுக்கப் பெண்களாலான இனம் இது!

ஏழு முதல் பதிமூன்று இஞ்ச் நீளம் வரை வளரக்கூடிய இந்தப் பல்லிகளின் உடலில் மஞ்சள் நிறக் கோடுகள் உண்டு. மெக்சிகோவின் வறண்ட பகுதிகளில் பொதுவாகச் சுற்றிக்கொண்டிருக்கும் பல்லிகளைப் போல இவை சாதாரணமாகத் தோற்றமளித்தாலும் மரபணுவியலுக்கும் இனப்பெருக்க உயிரியலுக்கும் இவை விடுக்கும் சவால்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. இவற்றின் விநோதமான இனப்பெருக்க முறை முன்பே கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் பல புதிர்கள் இன்றும்கூட அவிழ்க்கப்படாமல் இருக்கின்றன.

சரி… முதல் புதிருக்கு வருவோம்.

ஆணே இல்லாமல் இனப்பெருக்கம் எப்படிச் சாத்தியமாகும்? டெஸ்ட் ட்யூப் பேபியை உருவாக்கவேண்டும் என்றால்கூட ஓர் ஆண் உயிரணுவும் பெண்ணின் கருமுட்டையும் தேவைப்படுகிறதே?

ஆண் உயிரணுவுடன் பெண்ணின் செல்கள் கலக்காமலேயே நடக்கும் Parthenogenesis என்ற ஒருவகை கருவுறுதல் முறை உண்டு. இது சில வகை சுறா மீன்கள், கொமோடோ ட்ராகன் போன்ற ஊர்வன இனம் மற்றும் பறவையினங்களில் இயற்கையிலேயே காணப்படுகிறது. ஆனால், இவை எல்லாமே தற்செயலான, அரிதான நிகழ்வுகள். சுற்றிலும் ஆண் விலங்குகளே இல்லாத சூழலில் ஒரு சில இனங்களில் அரிதாக இது நடக்கிறது. இந்த இனங்களில், தேவைப்பட்டால் ஆண்கள் இல்லாமலேயே பெண்களால் முட்டை இட முடியும். ஆனாலும் ஆண் விலங்குகள் முற்றிலுமாக அழிந்து போவதில்லை. ஆணற்ற கருவுறுதல் முறை என்பது சாதகமற்ற அவசர சூழலில் இனத்தைப் பாதுகாக்கும் ஓர் இறுதி முயற்சியாகவே இருக்கிறது.

இது எப்படி நடக்கிறது என்று பார்க்கலாம். பொதுவாக இனப்பெருக்கத்திற்காகப் பெண் செல்கள் முட்டையாகவும் போலார் செல்களாகவும் பிரியும். ஆணற்ற இனப்பெருக்கம் நடக்கும் இனங்களில், போலார் செல்களே ஆண் உயிரணுக்களின் இடத்தில் இருந்து பெண் செல்களுடன் மரபணுவைப் பரிமாறிக்கொள்கின்றன. இந்த வழியில் மரபணுக் கலப்பு நடந்துவிடுகிறது என்பதால் மரபணுவின் பல்வகைமை பாதுகாக்கப்பட்டு அப்போதைக்கு மரபணுக்கூறுகள் வலுவிழக்காமல் இருக்கின்றன.

ஆக, போலார் செல்கள் உயிரணுவாகச் செயல்பட்டு, கலப்பு சரியாக நடந்து, மரபணு வலுவிழக்காமல் இருந்தால் ஆண் விலங்குகள் இல்லாமல் இனப்பெருக்கம் செய்யும்போதும் ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்குவது சாத்தியம்தான்.

ஆனால், இதையே தொடர்ந்து செய்ய முடியாது. காலப்போக்கில் ஒரே மாதிரியான மரபணுக்களே ஜெராக்ஸ் காப்பியாக வந்துகொண்டிருந்தால் அது மரபணுவை வலுவிழக்கச் செய்யும். ஆபத்தான மாற்றங்கள் ஏற்பட்டு அந்த இனம் முழுமையாக அழியும். ஆகவேதான் ஆண்களற்ற இனப்பெருக்கம் ஓர் அரிதான நிகழ்வாக மட்டுமே இயற்கையில் நிறுத்திவைக்கப்படுகிறது.

நமது வொண்டர் உமன் பல்லிகளுக்கு அந்தப் பிரச்னையே இல்லை. இனத்தில் ஆண் பல்லிகளே இல்லை என்றாலும் அவை நூற்றுக்கணக்கான தலைமுறைகளாக வலுவிழக்காமல் இருக்கின்றன.

அது எப்படிச் சாத்தியம்?

ஏனென்றால் இது ஒரு கலப்பினம் (Hybrid).

கழுதையும் குதிரையும் இணைசேரும்போது பிறக்கும் கோவேறு கழுதை (Mule) என்ற இனத்தைப் பற்றி நாம் அறிந்திருப்போம். கழுதையும் குதிரையும் தனித்தனி மரபணுக் கூறுகளைக் கொண்டவை என்பதால் இவை இணைசேர்ந்து பிறக்கும் கோவேறு கழுதைகளின் மரபணுக்கள் தோற்ற வேறுபாடுகள் கொண்டவையாக இருக்கின்றன. ஆகவே இரு கோவேறு கழுதைகள் இணைசேர்ந்து ஒரு கோவேறு கழுதைக் குட்டியைப் பெற்றெடுப்பது என்பது இயற்கையில் சாத்தியமில்லை. பொதுவாக எல்லா கலப்பினங்களுமே குட்டிகளைப் பெறமுடியாத (Sterile) இனங்கள்தான்.

எல்லா விதிக்கும் ஒரு விதிவிலக்கு உண்டு. வொண்டர் உமன் பல்லிகள் கலப்பினங்களில் விதிவிலக்காகத் திகழ்கின்றன. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் Western Whiptail, Striped Whiptail ஆகிய இருவேறு பல்லி இனங்கள் தற்செயலாக இணைசேர்ந்தபோது தோன்றிய கலப்பினங்கள் இவை. பொதுவாக கலப்பினங்களுக்கு இனப்பெருக்கம் செய்யும் தகுதி இருக்காது என்றாலும், இந்தப் பல்லிகள் அடுத்தடுத்து முட்டையிட்டு தொடர்ந்து இனப்பெருக்கம் செய்ததால் நீடித்து நிலைத்துவிட்டன.

கலப்பினமாக இருப்பது இந்தப் பல்லிகளுக்கு எப்படிப்பட்ட பயனை அளிக்கிறது?

இணைசேரும் விலங்குகளுக்கு இடையில் எந்த அளவுக்கு மரபணுத் தொலைவு (Genetic distance) இருக்கிறதோ, அந்த அளவுக்கு மரபணுவின் பல்வகைமை அதிகரிக்கும், இது மரபணுவின் வலுவையும் கூட்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் முற்றிலும் வெவ்வேறான இனங்களைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் விலங்குகள் கூடிப் பிறக்கும் கலப்பினங்கள் மிகவும் அதீதமான பல்வகைமையையும் வலிமையையும் கொண்டவை. இனப்பெருக்கம் மட்டும் செய்ய முடிந்தால் கலப்பினங்கள்தான் மிக அதிகமான மரபணு வலிமை கொண்டவையாக இருக்கும். இந்தப் பல்லிகள் அந்த விதத்தில்தான் வெற்றி பெற்றிருக்கின்றன.

இந்தப் பல்லிகள் இன்னொரு விதிக்கும் விதிவிலக்காக இருக்கின்றன. கலப்பு மரபணுதான் இவற்றின் பலம் என்பதால், அடுத்தடுத்து தாயின் செல்களைக் கலந்து அதை இழந்துவிட்டால் இவை அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது. ஆகவே செல் பிரிதலின்போது தாயின் செல்களை இவை அச்சு அசலாகப் பிரதியெடுக்கின்றன. இப்படிச் செய்வதால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய முதல் கலப்பினத்தின் பல்வகைமையையும் வலிமையையும் அவை அப்படியே பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அனுப்புகின்றன. ஜெராக்ஸ் பிரதியாகக் குழந்தைகள் பிறப்பது ஆபத்து என்ற விதி இருக்கும் அதே இயற்கையில், தாயைப் போலவே இருக்கும் குட்டிப் பல்லிகளை உருவாக்கினால் மட்டுமே இந்த இனத்தால் பிழைக்க முடியும்.

ஆண்களே இல்லாத, பெண்கள் மட்டுமே கொண்ட இனம், நூற்றாண்டுக்கு முந்தைய கலப்பு நிகழ்வு இவற்றைக் கேடயமாகப் பாதுகாப்பது, மரபணு விதிக்கே விதிவிலக்காகும் பண்பு, கலப்பினமானாலும் இனப்பெருக்கம் செய்யும் ஆற்றல் என்ற நீண்ட ஆச்சரியப்பட்டியலில் இன்னமும் ஒன்று பாக்கியிருக்கிறது. அதுதான் இணைசேரும் நிகழ்வு (Mating).

நியாயமாகப் பார்த்தால், ஆண்களே இல்லாமல் இனப்பெருக்கம் செய்ய முடியும் என்றால், இந்தப் பல்லிகள் முட்டை போடும் வேலையில் நேரடியாக இறங்கிவிட வேண்டும். ஆனால், இயற்கையில் அப்படி நடப்பதில்லை. இந்தப் பல்லிகளின் இனபெருக்கக் காலத்தின்போது பெரும்பாலான பல்லிகள் சக பெண் பல்லிகளோடு இணைசேர்கின்றன. இது போலி இணைசேர்தல் (Pseudocopulation) என்று அழைக்கப்படுகிறது! தூரத்தில் இருந்து பார்க்கும்போது ஓர் ஆண் பல்லியும் பெண் பல்லியும் இணைந்திருப்பதாகவே இந்தக் காட்சி இருக்கும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

இனப்பெருக்கம் மற்றும் பால்சார் ஹார்மோன்களின் பங்களிப்பு இங்குதான் வருகிறது. பொதுவாகப் பெண் விலங்குகளில் ஈஸ்ட்ரோஜென்னும் ஆண் விலங்குகளில் டெஸ்டாஸ்டிரோனும் அதிகமாக இருக்கும் என்று நாம் படித்திருப்போம். ஆனால், இந்தப் பல்லிகளைப் பொறுத்தவரை, எல்லாமே பெண்கள் என்பதால், ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரொஜெஸ்ட்ரோன் என்ற இரு ஹார்மோன்கள் மேலும் கீழுமாக ஏறியும் இறங்கியும் விளையாடுகின்றன. ப்ரொஜெஸ்ட்ரோன் என்பது கருவுறுவாக்கத்திற்கான, பிரசவத்திற்கான ஹார்மோன்.

கருமுட்டை உருவாகுவதற்கு முன்னால் இந்தப் பல்லிகளின் உடலில் ப்ரொஜெஸ்டரோன் மிகவும் குறைவாகவும் ஈஸ்ட்ரோஜன் அதிகமாகவும் இருக்கும். அப்போது பெண் பல்லிகள் பெண்களாக நடந்துகொள்ளும், ஆண் பல்லிகளைப் போல நடந்துகொள்ளும் சக பெண் பல்லிகள் தங்கள் மீது அமர்ந்து இணைசேர்வதைப் போன்ற ஓர் அசைவைக் கொடுப்பதை இவை அனுமதிக்கும்! கருமுட்டை உருவானபிறகு, இந்தப் பல்லிகளின் உடலில் ஈஸ்ட்ரோஜன் குறைந்து ப்ரோஜெஸ்ட்ரோன் அதிகரிக்கும். அப்போது இந்தப் பல்லி ஆணைப் போல நடந்துகொள்ளும், கருமுட்டையை உருவாக்கக் காத்திருக்கும் சக பெண் பல்லிகளின்மீது அமர்ந்து இவை இணைசேரும்!

ஓப்பீட்டளவில் பார்த்தால் இணைசேர்வது போன்ற அசைவை மேற்கொள்ளும் பல்லிகளின் உடலில் கருமுட்டை உருவாகும் விகிதம் அதிகம் என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள், இது முக்கியமான கண்டுபிடிப்பு என்கிறார்கள். இணைசேர்தல் என்ற அந்தக் குறிப்பிட்ட செயல்பாடு, ஆண் உயிரணுவைச் செலுத்துகிறதோ இல்லையோ கருமுட்டையின் உருவாக்கத்திற்குத் தூண்டுதலாக இருக்கிறது. அறிவியல்ரீதியாக இந்த இனத்தில் நேரடியான பால்சார் இனப்பெருக்கமே கிடையாது என்றாலும் இங்கும் இணைசேர்தல் நிகழ்வுக்கான தேவை இருக்கிறது. ஏதோ ஒரு காரணத்திற்காக இயற்கை இதை வலுக்கட்டாயமாகத் தொடர்ந்து நிகழ்த்துகிறது. ஆக, பரிணாம வளர்ச்சியில் ’இணைசேர்தல்’ என்ற நிகழ்வு முக்கியமானது என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். அது ஏன் முக்கியம் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்தப் பல்லிகளில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், ஹார்மோன்கள் இப்படி ஏறி இறங்கும்போது, இவற்றின் தலைக்குள் அதிக ஆற்றலோடு இயங்கும் மூளையின் பகுதியும் மாறுபடுகிறது! இது 2008இல் நடந்த ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ’மூளைக்குப் பாலினம் கிடையாது. ஹார்மோன்கள், பால்சார் குரோமோசோம்கள், சுற்றியுள்ள சூழல், அனுபவம் எல்லாமே சேர்ந்துதான் ஆண் அல்லது பெண்போன்ற செயல்பாடுகளை மூளையிலிருந்து வெளிப்படுத்துகின்றன. பொதுவாக இதுதான் இயற்கை’ என்கிறார் இந்த ஆய்வை நடத்திய டேவிட் க்ரூஸ் என்ற நரம்பியலாளர். இரண்டே இரண்டு ஹார்மோன்களின் ஏற்ற இறக்கமான ராட்டின விளையாட்டில் இந்தப் பல்லிகள் எவ்வாறு மூளை செயல்பாடுகளை மாற்றிக்கொள்கின்றன என்பது பல கேள்விகளைத் தோற்றுவித்திருக்கிறது.

ஒரு சோதனைக்காக இதுபோன்ற வறண்ட நிலப்பரப்பின் வேறு சில இனங்களில் இருந்து பல்லிகளைப் பிடித்து அடைத்துவைத்தபோது, அதிலிருந்தும் கலப்பினங்கள் உருவாகியிருக்கின்றன! அவற்றில் பெரும்பாலானவை தாங்களே இனப்பெருக்கம் செய்யும் தன்மை கொண்டவையாகவும் இருப்பதால், ஏற்கெனவே இதுபோன்ற புது கலப்பினங்கள் இயற்கையில் உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் யூகிக்கிறார்கள். இப்போது மெக்சிகோ மற்றும் வடமேற்கு அமெரிக்காவில், கிடைக்கும் பல்லிகளை எல்லாம் பிடித்து மரபணு சோதனை செய்துகொண்டிருக்கிறது ஒரு விஞ்ஞானிகள் குழு!

1960களில் இந்தப் பல்லி இனம் கண்டுபிடிக்கப்பட்டது. இது இணைசேரும் செயல்பாட்டையும் நிகழ்த்துவதால், ஆண் பெண் இரு பால்களும் கொண்ட வழக்கமான இனம் என்றே இது முதலில் வகைப்படுத்தப்பட்டது. பெண் பல்லிகள் தங்களுக்குள் இணைசேரும் என்றோ, தாயின் ஜெராக்ஸ் காப்பியாகக் க்ளோனிங் பல்லிகள் பிறந்துகொண்டிருக்கின்றன என்றோ யாருமே நினைத்துப் பார்க்கவில்லை. 1979ஆம் ஆண்டில்தான் இது முழுக்க முழுக்கப் பெண் பல்லிகளைக் கொண்ட இனம் என்று உறுதி செய்யப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இந்தப் பல்லிகள் குறித்த எல்லா ஆய்வுகளும் பதில்களையும் கேள்விகளையும் ஒருசேர உருவாக்குகின்றன.

இந்தப் பல்லிகளில் குழந்தை வளர்ப்பு என்பதெல்லாம் தனியாகக் கிடையாது என்பதால் ’அப்பா பாசம் கிடைக்காத குட்டிப் பல்லி’ என்ற சென்ட்டிமெண்ட் பேச்சுக்கு இடமில்லை. ஆனால், பொதுவாக விலங்குகளின் உலகில் ’தந்தைமை’ (Fatherhood) என்பது எப்படிப்பட்டதாக இருக்கிறது? ஆண் விலங்குகள் குழந்தை வளர்ப்பில் எந்த அளவுக்குப் பங்கெடுக்கின்றன?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.