மீன் இனங்களில் சுறாக்களும் திருக்கைகளும் தனித்தன்மை கொண்டவை. அதிலும் சுறாக்களின் உடல் மற்றும் இயங்கியலின் எல்லா அம்சங்களுமே வித்தியாசமானவை. குருத்தெலும்புகளால் ஆன உடல், மின்சார சக்தியை உணரும் உறுப்புகள், அதீத மோப்ப சக்தி, வித்தியாசமான தோல் அமைப்பு எனச் சுறாக்களுக்குப் பல சிறப்பம்சங்கள் உண்டு. வேட்டையாடி உணவு உண்பதை மட்டுமே இலக்காகக் கொண்ட காட்டுமிராண்டி இயந்திரங்களாக இவை திரையில் சித்தரிக்கப்படுகின்றன. ஆனால், டைனோசர் உட்பட எத்தனையோ விலங்குகளை அழித்தொழித்த நிகழ்வுகளையும் தாண்டி பல லட்சம் ஆண்டுகளாகத் தப்பிப் பிழைத்து இன்னும் வாழ்ந்துவரும் வெற்றிகரமான உயிரினங்கள் இவை.
எல்லாமே தனித்துவமானது எனும்போது இனப்பெருக்க முறை மட்டும் விதிவிலக்கா என்ன?
சுறாக்களில் மூன்று வித இனப்பெருக்க முறைகள் உண்டு. முட்டை போடுவது, குட்டி ஈனுவது, முட்டையை உடலுக்குள்ளேயே பொரித்துக் குட்டிகளாகவே ஈனுவது.
சுறாக்களின் இனப்பெருக்க முறையை விவாதிப்பதற்கு முன், முட்டை போட்டுக் குஞ்சு பொரிப்பதற்கும் குட்டி ஈனுவதற்கும் என்னென்ன சாதக பாதகங்கள் உண்டு என்று பார்த்துவிடலாம்.
முட்டையிட்டுவிட்டு எதையும் கண்டுகொள்ளாமல் அப்படியே கிளம்பிவிடும் விலங்குகள் உண்டு. ஆனால், இந்த விலங்குகள் ஆயிரக்கணக்கில் முட்டையிடும் இயல்புடையவை என்பதால், பத்தில் ஒரு பங்கு முட்டைகள் பிழைத்தாலே நூறு குஞ்சுகள் அடுத்த தலைமுறைக்குக் கிடைத்துவிடும். இந்த இனங்களில் முட்டை போட்ட பின்பு பெற்றோருக்கு அதைப் பாதுகாக்கும் வேலை இல்லை என்றாலும் ஒவ்வொரு முட்டைக்கும் தேவையான மஞ்சள் கருவின் புரதத்தை உருவாக்க அதிக ஆற்றல் வீணாகும்.
குறைவான எண்ணிக்கையில் முட்டைகளை இடும் இனங்களில், பெரும்பாலான முட்டைகள் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே அடுத்த தலைமுறை உருவாகும். அந்த முட்டைகளை வேட்டையாடிகளிடமிருந்தும் சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்களிடமிருந்தும் நுண்ணுயிரிகளிடமிருந்தும் பாதுகாக்க வேண்டும். அதீத வெப்பத்தில் நீர்ச்சத்துக் குறையாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆகவே பெற்றோருக்கு, குறிப்பாக தாய்விலங்குக்கு வேலை அதிகமாக இருக்கும்.
பறவைகள் எல்லாமே முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பண்பு கொண்டவை. பறவைகளிடம் இந்த எல்லாப் பிரச்னைகளையும் சமாளிக்கும் உத்திகள் உண்டு. அடைகாப்பதன் மூலமாக சீரான வெப்பத்தில் முட்டை பாதுகாக்கப்படுகிறது. தாய்ப்பறவை அல்லது தந்தைப்பறவை எப்போதுமே முட்டைகளைக் கவனித்தபடி இருக்கும் என்பதால் வேட்டையாடிகளால் அத்தனை எளிதில் முட்டைகளை நெருங்கிவிட முடியாது. நீர்ச்சத்து குறையாமல் நுண்ணுயிரிகளும் உள்ளே வராமல் வெள்ளைக்கருவும் முட்டை ஓடும் காப்பாற்றுகின்றன. சில முட்டைகளின் மேல் உள்ள வடிவங்கள், வேட்டையாடிகளின் கண்ணில் படாமல் முட்டைகள் மறைய உருவமறைப்புக்கும் (camouflage) உதவுகின்றன. இந்த உத்திகள் இல்லாத விலங்கினங்களில் முட்டையிடுவது என்பது கொஞ்சம் சிக்கலானதுதான்.
குட்டி போடும் விலங்குகளுக்கு வேறு பல பிரச்னைகள் வரும். கருவில் குட்டியைச் சுமந்திருக்கும் விலங்கு உணவு தேடவும் வேட்டை விலங்குகளிடமிருந்து தப்பவும் மிகவும் சிரமப்படும். அதுவே குட்டிக்கும் தாய்க்கும் ஆபத்தாக முடியலாம். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே குட்டிகளைக் கருவில் சுமக்க முடியும் என்பதால் தாயின் உடல் அமைப்பைப் பொறுத்துக் குட்டிகளின் எண்ணிக்கை மாறுகிறது. குட்டிகளைச் சுமந்து, ஈன்றெடுத்த பின்பே அடுத்த இனப்பெருக்கத்துக்குத் தாயால் தயாராக முடியும் எனும்போது இனப்பெருக்க விகிதம் இயல்பாகவே குறைகிறது.
இரண்டு முறைகளிலுமே சாதக பாதகங்கள் உண்டு என்றாலும், தண்ணீருக்குள் வாழும் பெரிய விலங்குகளுக்குக் குட்டி ஈனும் முறையே ஓரளவு சரியாக அமையும் என்பது சூழலியல் ஆராய்ச்சியாளர்களின் கருத்து. ஆனால், அதில் ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது. நட்சத்திரக் குறியிட்டு நிபந்தனைகளுக்குட்பட்டது என்பார்களே, அதைப் போல.
சில இனங்களில், முதலில் பெண் விலங்கு சினைமுட்டைகளை உடலுக்கு வெளியில் இடும். பிறகு ஆண் விலங்கு உயிரணுக்களை வெளியேற்றி அந்த முட்டைகளைக் கருவுறச் செய்யும். கருவுற்ற முட்டைகளிலிருந்து சில நாட்களில் குஞ்சுகள் வெளியேறும். இதை வெளிப்புறச் சூழலில் நடக்கும் கருவுறுதல் (External fertilization) என்பார்கள். இந்தப் பண்பைக் கொண்ட விலங்குகளால் குட்டி ஈன முடியாது. ஏனென்றால் உடலுக்குள்ளிருந்து முட்டை வெளியேறிய பின்பு மீண்டும் அது உள்ளே செல்வது நடைமுறையில் சாத்தியமில்லை.
ஆகவே, பெண்ணின் உடலுக்குள்ளேயே சினைமுட்டைகள் கருவுறும் Internal fertilization பண்பைக் கொண்ட நீர்வாழ் விலங்குகளில் மட்டுமே குட்டி போடுவதும் சாத்தியப்படும். சுறாக்கள் இந்தப் பண்பைக் கொண்டவை என்பதால் மூன்று வகை இனப்பெருக்க முறைகளையும் அவற்றால் வெற்றிகரமாகப் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. பெண் சுறாக்களின் உடலுக்குள் உயிரணுக்களைச் செலுத்த ஆண் சுறாக்களுக்குத் தனி இனப்பெருக்க உறுப்புகளும் உண்டு.
முதலில் முட்டை போடும் சுறா இனங்களைக் கவனிப்போம். 40% சுறா இனங்கள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பண்பு கொண்டவை. நீரில் முட்டை போடுவதில் பல ஆபத்துகள் உண்டு. அதைச் சுறாக்கள் எப்படிச் சமாளிக்கின்றன?
அங்குதான் ’கடற்கன்னிகளின் மணிபர்ஸ்’ (Mermaid’s purse) உதவிக்கு வருகிறது. அலையடிக்கும் சிவப்பு நிறக் கூந்தலோடு கையில் பர்ஸ் ஒன்றை ஏந்தியிருக்கும் ஒரு கடற்கன்னி நம் நினைவுக்கு வரலாம். ஆனால், கடற்கன்னிக்கும் சுறாக்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கவித்துவம் கொண்ட ஒரு கடல்சார் ஆராய்ச்சியாளர் வைத்த அழகான பெயர் இது. அவ்வளவே.
கடற்கன்னிகளின் பர்ஸ் என்பது, சுறா முட்டைகளுக்கான வெளிப்புறக் கூடு. ஒவ்வொரு மணிபர்ஸுக்குள்ளும் ஒன்று அல்லது இரண்டு சுறாக்குஞ்சுகளும் அவற்றுக்கு உணவூட்டும் மஞ்சள் கருவும் இருக்கும். கடல்நீரின் அலைக்கழிப்புகளிலிருந்தும் வேட்டையாடிகளிலிருந்தும் உள்ளிருக்கும் குஞ்சைப் பாதுகாப்பதற்கான தடிமனான அமைப்பு இது. ஒவ்வொரு சுறா இனத்துக்கும் மணிபர்ஸின் வடிவமும் தனித்துவமானதாக இருக்கும். அதன் சூழலைப் பொறுத்து வடிவம் மாறுபடும். அலைகளில் மாட்டிக்கொண்டு அடித்துச் செல்லப்படாமல் இருப்பதற்காகச் சில இனங்களின் கூடுகளில் சுருள்கள் உண்டு. இந்தச் சுருள்கள் கடற்பாசிகளோடு பிணைந்துகொள்கின்றன. Horn shark என்ற ஒருவகை சுறா இனத்தின் கூடு ஒரு பெரிய ஸ்க்ரூ போலவே இருக்கும்! இந்தச் சுறா இனங்கள் வாழும் கடற்பகுதிகளில் நிறைய பாறைகள் உண்டு என்பதால், முட்டையிட்ட பின்பு தாய்ச்சுறா அந்த முட்டையைக் கவ்விக்கொண்டு போய் ஏதாவது ஒரு பாறை இடுக்கில் பொருத்திவிடும். ஸ்க்ரூ போன்ற அமைப்பு இருப்பதால் முட்டையும் நன்றாகப் பொருந்திக்கொள்ளும், எவ்வளவு பெரிய அலை அடித்தாலும் முட்டை அசையாது!
குட்டி போடும் சுறா இனங்களில் தாயின் கருவில் குட்டிகள் வளரும். தொப்புள் கொடி போன்ற அமைப்பு மூலமாக அவற்றுக்கு உணவூட்டப்படும். நீலச்சுறா, கொம்பன் சுறா, மாக்கோ சுறா, போன்ற பல இனங்களுக்கு இந்தப் பண்புகள் உண்டு. இவற்றின் பேறுகாலம் 7 மாதங்கள் முதல் 22 மாதங்கள் வரை இருக்கும்.
மூன்றாவது இனப்பெருக்கப் பண்பு மிகவும் சுவாரஸ்யமானது. கருவுற்ற பிறகு அவை அந்த முட்டைகளை உடலுக்குள்ளேயே வைத்து அடைகாத்துக் குஞ்சு பொரிக்கின்றன.இது ovoviviparity என்று அழைக்கப்படுகிறது.
இதனால் நன்மைகள் ஏதேனும் உண்டா?
உடலுக்குள்ளேயே முட்டைகளைப் பாதுகாத்து குஞ்சு பொரித்துவிடுவதால் கடற்கன்னிகளின் மணிபர்ஸ் போன்ற சிக்கலான அமைப்புகளை உருவாக்கத் தேவையில்லை. முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகளோடு ஒப்பிடும்போது உள்ளேயே முட்டை பொரிந்து வெளிவரும் குட்டிகளின் சராசரி நீளம் அதிகம். ஓரளவு வளர்ந்த பின்பே தாயின் உடலுக்குள்ளிருந்து அவை வெளியில் வருவதால் வேட்டையாடிகளிடமிருந்து தப்பிப் பிழைக்கவும் வாய்ப்பு அதிகமாகிறது. குட்டி போடும் இனங்களில் தாயின் உடலுக்குள்ளிருந்து தொப்புள் கொடி மூலமாக உணவு தரவேண்டியிருக்கும். ஆகவே தாய்க்கு வேலை அதிகம். ஆனால், முட்டையிலேயே மஞ்சள் கரு இருக்கிறது என்பதால், தாய்ச்சுறா பாதுகாப்பு மட்டும் அளித்தால் போதுமானது.
அப்படியானால் குஞ்சு பொரிந்த பின்பு இன்னும் வளர்ந்து வெளியேறுவதற்கு முன்னால் எங்கிருந்து உணவு கிடைக்கும்?
பல சுறா இனங்களில், முட்டையிலிருந்து முதலில் வரும் குஞ்சுகள், பொரியாமல் இருக்கும் மற்ற முட்டைகளை எல்லாம் தின்றுவிடுகின்றன! சில சுறா இனங்கள், குஞ்சுகள் தின்பதற்காகவே கருவுறாத முட்டைகளை வயிற்றுக்குள் இட்டுவைக்கின்றன. இப்படித் தின்பதற்காகவே உடலுக்குள் முட்டையிடும் எல்லாச் சுறா இனங்களிலும் குஞ்சுகளுக்குக் கூடுதல் கோரைப்பற்கள் உண்டு.
Sand tiger shark என்ற ஒருவகை சுறா இனத்தின் கதை இன்னும் திகிலானது. இந்த இனத்தில், முட்டையிலிருந்து முதலில் வரும் குஞ்சு, அடுத்தடுத்து பொரிந்து வரும் எல்லாக் குட்டிகளையும் தின்னும்! இந்தச் சுறா இனத்தில் இரு கருப்பைகள் உண்டு. தாய்ச்சுறா ஒவ்வொரு கருப்பையிலும் 50 முட்டைகளை இடும். ஒவ்வொரு கருப்பையிலும் வெளிவரும் முதல் குஞ்சு, மற்ற 49 குட்டிகளையும் உள்ளேயே ஒவ்வொன்றாகத் தின்று முடித்துவிட்டு, 12 மாதங்கள் உள்ளேயே கொழுத்து வளர்ந்து 3 அடி கொண்ட குட்டியாக வெளியில் வரும்.
பாஸ்கிங் சுறா, நாய்ச்சுறா, ஃப்ரில்ட் சுறா, திமிங்கிலச் சுறா போன்ற பல இனங்கள் உடலுக்குள்ளேயே முட்டையிடும் பண்பு கொண்டவை. இவற்றில் திமிங்கிலச் சுறாக்கள் (வளுவம் / Whale shark) மிக அதிகமான எண்ணிக்கையில் குட்டிகளை ஈனுகின்றன. 1996இல் தாய்வானில் பிடிபட்ட ஒரு திமிங்கிலச் சுறாவின் வயிற்றில் 300 குட்டிகள் இருந்தன! இதை Mega Mommy என்று ஆராய்ச்சியாளர்கள் செல்லமாக அழைக்கிறார்கள்.
சுறாக்களின் இனப்பெருக்க முறையில் தொடர்ந்து பல விநோதங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. குட்டி போடும் பண்பு இருந்தாலும் நேரடியான தொப்புள்கொடி அமைப்பு இல்லாமல் கருப்பையின் சுவர் மூலமாகவே குட்டிக்கு உணவு தரும் சுறாக்கள் உண்டு. சில சுறாக்களின் முட்டையிடும் பண்பே வித்தியாசமானது என்று பல ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இன்னும் பல சுறாக்களில் யாருமே குட்டிகளையோ முட்டைகளையோ பார்த்ததில்லை என்பதால் அவை எப்படி இனப்பெருக்கம் செய்கின்றன என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.
இருக்கிற விநோதங்கள் போதாதென்று ஆண்களே இல்லாமல் இனப்பெருக்கம் செய்யும் பெண் சுறாக்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்! பல ஆண்டுகளாக ஆண் சுறாவே இல்லாமல் தனியாகத் தண்ணீர்த் தொட்டியில் வைக்கப்பட்ட இரு பெண் சுறாக்கள் குட்டிகளை ஈன்றிருக்கின்றன! இது கன்னிப்பிறப்பு (Parthenogenesis) என்று அழைக்கப்படுகிறது. வேறு வகையில் இனப்பெருக்கம் செய்ய முடியாத, ஆண் விலங்குகள் கிடைக்காத சூழலில் இது நடக்கும். மீன் காட்சியகத்தில்தான் இது முதலில் நடந்தாலும் இது இயற்கையிலும் ஆங்காங்கே நடக்கலாம் என்கின்றன முதல்கட்ட ஆராய்ச்சிகள்.
திருக்கைகளிலும் குட்டி போடும் இனங்கள் உண்டு. மீனவர்கள் திருக்கைகளின் வயிற்றை அழுத்தி வருடிக்கொடுத்து பிரசவிக்கச் செய்யும் பல வீடியோக்களை நாம் பார்த்திருக்கலாம். அறிவியல் ரீதியாக இந்த இனப்பெருக்க முறைகள் சுவாரஸ்யமானவை என்றாலும் இந்தப் பண்பே சுறா மற்றும் திருக்கைகளின் அழிவுக்குக் காரணமாகிவிடுகிறது. இந்த மீன் இனங்கள் இனப்பெருக்க வயதை எட்டவே அதிக காலம் எடுக்கும் என்பதாலும் மூன்று வகை இனப்பெருக்க முறைகளிலும் குட்டிகள்/குஞ்சுகளின் எண்ணிக்கை குறைவு என்பதாலும் இவை எளிதில் மீன்பிடி அழுத்தத்திற்கு ஆளாகின்றன. கூடை கூடையாக மற்ற மீன்களைப் பிடிப்பதைப் போல சுறாக்களும் பிடிக்கப்பட்டால் அந்த அழிவின் வேகத்துக்கு ஈடாக இனப்பெருக்கம் செய்ய முடியாமல் இவை அழிந்துவிடுகின்றன.
குட்டிகளை ஈனும் இனங்களில் எல்லாமே பிரசவம் என்பது முக்கிய நிகழ்வு. அதில் சில விலங்குகளின் பேறுகாலமும் பிரசவமும் மிகவும் விநோதமானவை. அவை என்ன விலங்குகள்?
(தொடரும்)
படைப்பு:
நாராயணி சுப்ரமணியன்
கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.