உங்கள் வாழ்க்கை துணையைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள். இந்த முடிவு உங்களின் 90 சதவீத மகிழ்ச்சிக்கோ துக்கத்துக்கோ காரணமாக இருக்கும் என்கிற ஜாக்சன் பிரவுன் வார்த்தைகளின் உண்மை, திருமணம் ஆனவர்களுக்கு மட்டுமே புரியும்.
20 அல்லது 30 களில் தொடங்கி நம் மீதமுள்ள வாழ்நாளை நாம் தேர்ந்தெடுக்கும் அந்த ஒரு நபருடன் மட்டுமே வாழப்போகிறோம். அதன்பின் வேறு நண்பர்கள், சொந்தங்கள், குழந்தைகள் எனப் பலர் நம் வாழ்வில் வந்தாலும் அந்த நபரிடம் செலவழிக்கும் நேரம்தான் அதிகபட்சமாக நம் வாழ்நாளில் நாம் ஒருவருடன் செலவழிக்கும் நேரமாக இருக்கும்.
இந்த நபர் நமக்குப் பிடித்தவராகவும் நம்மை அன்புடனும் மரியாதையுடனும் நடத்துபவராகவும், நம்மை நமக்காக நேசிப்பவராகவும், நம் சுற்றத்தினரைத் தன் சுற்றத்தினராக எண்ணி அன்பு செலுத்துபவராகவும், நம் கனவுகளைத் தன் கனவுகளாக எண்ணி அவற்றை நிறைவேற்ற பாடுபடுபவராகவும், நம் சிறந்த குணங்களையும் மோசமான குணங்களையும் புரிந்து எல்லாவற்றையும் ஏற்று, வேறுபாடுகளை மதித்து, விட்டுக் கொடுத்து, நம்மை எந்தச் சூழலிலும் பிறரிடம் விட்டுக் கொடுக்காமல் இவர்கள் என்னுடையவர்கள், இவர்களை வாழ்க்கை எனக்குப் பரிசளித்திருக்கிறது, அந்தப் பரிசை நான் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வேன். அவர்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்வது என்னுடைய பொறுப்பு என்று இருவர் முடிவு செய்துவிட்டால் அது நிச்சயம் ஓர் ஆரோக்கியமான குடும்ப உறவாக இருக்கும்.
ஆனால், இந்த நிலையை அடையும் முன் அந்த ஒரு நபரைக் கண்டுபிடிப்பது பெரிய சவாலாக இருக்கிறது. படிப்பு, வேலை, குடும்பம், ஜாதகம், மதம், இனம் என்று அந்த இரண்டு பேர் இணை சேர்வதற்குள் கடக்கப் பல படிகளை இந்தச் சமூகம் விதித்திருக்கிறது. புரிதல், அன்பு, ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசி இந்த நபர் எனக்குச் சரியான நபராக இருப்பாரா என்று முடிவு செய்யும் பொறுப்பை அந்த இருவரிடம் தராமல், ஜாதகம் பார்க்கும் ஜோசியர் கைகளில் என்று சமூகம் ஒப்படைத்ததோ அன்றே பேருக்காகவும் ஊருக்காகவும் பிறந்த குழந்தைக்காகவும் என்று தன் விருப்பத்தைத் தவிர்த்துப் பல காரணங்களுக்காக இருவர் இணைந்து வாழும் அவல நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அதையும் தாண்டி பிடித்த இணையரைப் பிற சமூகத்தில் தேர்ந்தெடுத்தாலோ, இல்லை பெற்றோர் தேடித் தந்த மண வாழ்க்கை தனக்குச் சரிவராது என்று பிரிந்து வாழ வேண்டும் என்று முடிவெடுத்தாலோ அவர்கள் வாழ்க்கையை எப்படி நரகமாக்குவது என்று அந்த நாலு பேர் சிந்திக்க தொடங்கிவிடுவார்கள்.
அவள் கல்லூரிப் படிப்பை முடிக்கும் தருவாயில் தொடங்கிய மணமகன் தேடல் படலம் வெற்றிகரமாக அவளுக்குப் பொருத்தமான, மனதுக்குப் பிடித்த வாழ்க்கை துணையைக் கண்டடையும் முன் அவள் பெற்றோருக்கு 10 வருடங்களில் 20 வருடங்கள் வயது அதிகரித்து விட்டதாகவே அவளுக்குத் தோன்றியது.
‘பெண்னை ஏன் இவ்வளவு படிக்க வச்சீங்க, இப்ப மாப்பிள்ளை தேடுவது கஷ்டமா இருக்கும்னுதான் அதிகம் படிக்க வைக்காதீங்கன்னு முதல்லயே சொன்னோம் என்பதில் தொடங்கி இந்த ஜோசியரை பாருங்க, அந்தப் பரிகாரம் பண்ணுங்க, இந்தத் திருமண தகவல் மையத்தில பதிவு பண்ணுங்க, வீட்டுல இந்தத் திசையில் இருக்கச் சொல்லுங்க, அந்த ஸ்லோகத்தை வாசிக்கச் சொல்லுங்க, இவளுக்கே இன்னும் முடிக்கலைன்னா அடுத்த ரெண்டு பேருக்கு எப்ப முடிப்பீங்க, வயசு 30 ஆகப்போகுது ஏதோ ஒரு வரனைப் பார்த்து முடிச்சு அனுப்பிட வேண்டியதுதானே இன்னும் எதை எதிர்பார்த்து தேடிக்கிட்டு இருக்கீங்க, இப்படிப் பொறுப்பில்லாமல் இருக்கீங்களே இவளைவிட வயசுல சின்னப் பொண்ணுங்க எல்லாம் கையில ஒன்னு வயித்துல ஒன்னுன்னு கல்யாணம் காட்சிக்கு வந்து போறதைப் பாக்குறீங்களே, அதெல்லாம் எப்பதான் நீங்க உங்க பொண்ணுக்குப் பாக்கப் போறீங்க’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு ஏதோ திருமணம் மட்டும்தான் ஒரு பெண்ணின் எதிர்காலம் என்றும் அதைச் சரியான நேரத்தில் செய்ய முடியாத பெற்றோரை, பெற்றோராக அவர்கள் தோற்றுவிட்டார்கள் என்று எண்ணி நடுஇரவில் உறக்கத்தைத் தொலைத்து புலம்பும் அளவுக்குக் கொண்டுவந்து விட்டுவிட்டார்கள் அந்த நாலு பேர்.
ஆனால், அவள் பெற்றோர் அந்தக் கேள்விகளை எல்லாம் அவளிடம் கேட்காமல் அவை அவளிடம் வந்து சேராமல் ஒரு கேடயம் போல் அவள் முன் நின்றதால் பல வருடங்கள் அவள் நிம்மதியாகவும், அவள் பெற்றோருடன் நல்ல உறவில் இருக்க முடிந்ததோடு தன் கனவுகள், சுயதேடல், தனக்கென்று ஒரு வேலை, தனக்கென்று ஓர் அடையாளம் என்று தனக்குத் தேவையான ஓர் உலகைத் தானாக அமைத்துக் கொள்ள முடிந்தது.
அதையும் தாண்டி சில நேரம் கேள்விகள் அவளைத் துளைக்கும் வேளையில், ‘நல்ல பையன நீங்களே பார்த்துச் சொல்லுங்க நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கிறேன்’ என்று புன்னகையுடன் பதில் அளித்துவிட்டு அவர்கள் வாயடைத்துவிட்டுக் கடந்து வந்திருக்கிறாள்.
அவள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதைவிட, அதை நினைத்து அவள் வருத்தப்படாமல் இருப்பதே பலருக்கு வயித்தெரிச்சலாக இருக்கிறது என்று சிலரிடம் பேசும் போது அவளுக்குத் தோன்றியுள்ளது.
சண்டையும் கோபமாகச் சென்று செய்து வந்த பரிகாரங்களுக்கு ஆன செலவில் மேனேஜ்மென்ட் சீட்டில் முதுகலை பட்டதாரியாக ஆகி இருக்கலாம் என்று பலமுறை அவள் கேலியாகச் சொன்னதுண்டு.
அதிகம் வரதட்சணை, கார், பங்களா என்று கேட்டவர்களை வேண்டாம் என்று நிராகரித்த போது கல்யாணம்னா அப்படித்தான் இருக்கும் இதெல்லாம் பார்த்தா கல்யாணத்தை முடிக்க முடியுமா என்று சொன்னார்கள்.
பெண் படித்திருக்க வேண்டும் ஆனால், வேலைக்குச் செல்லக் கூடாது என்று சொன்னதற்காக நிராகரித்ததற்கு வயதாகிக் கொண்டிருக்கிறது, வேலை லட்சியம் அது இதுன்னு வீண் பேச்சு பேசாமல் திருமணம் செய்து குடும்பத்தை நடத்தற வழியைப் பார் என்று அறிவுரை சொன்னார்கள்.
பொருத்தம் இல்லாத வேலையில் இருந்த வரன்களை மறுத்தபோது படித்த திமிரில் பேசுகிறாள் என்றார்கள்.
நான் பையனிடம் பேசி எனக்குப் பிடித்திருந்தால் மட்டுமே திருமணத்திற்குச் சரி என்று சொல்வேன் என்று சொன்னபோது, இது என்ன புது வழக்கம் நீ சின்னப்பெண் உனக்கு ஒன்றும் தெரியாது. பெரியவங்களுக்கு தெரியாததா உனக்கு தெரியப் போகிறது என்று ஆத்திரப்பட்டார்கள். அந்த எதுவும் தெரியாத சின்னப் பெண்ணுக்கு எதற்கு இப்போது திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறீர்கள் என்று வாய்விட்டு அலற வேண்டும் என்று சில நேரம் தோன்றினாலும் அவர்களுக்குப் பதிலளித்து எதற்குத் தன் நேரத்தை வீணாக்க வேண்டும் என்று புன்னகையுடனே கடந்து சென்று இருக்கிறாள்.
உனக்குத் திருமணம் பண்ணிக்கிற மாதிரி ஐடியா இருக்கா இல்லையா என்று நெருங்கிய வட்டத்திலிருந்து கேள்வி வந்தபோது பதில் சொல்ல முடியாமல் அவள் பெற்றோர் சோர்வடைந்தனர், பதில் சொல்ல விருப்பமில்லாமல் அவளும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லவும் பழகிக்கொண்டாள். ஆனால், அந்த நாலு பேர் மட்டும் சோர்வடையாமல் கேள்விகளை நிறுத்தாமல் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் திருமண வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்த பின்தான் அவள் வாழ்வில் ஒரு வழியாக வந்து சேர்ந்தான் அவளுக்காகப் பிறந்தவன். முதல் சந்திப்பிலேயே இருவரின் குணங்களையும் எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் வாழ்க்கை குறித்த கண்ணோட்டங்களையும் இந்த உறவில் இருவருக்கான பொறுப்புகளையும் மனம்விட்டுப் பேச கிடைத்ததுதான் அவர்களிடையே உள்ள ஒரு நல்ல உறவுக்கு முக்கியக் காரணமாக இருந்தது.
வீட்டிற்குச் சென்று பதில் செல்கிறோம் என்று சம்பிரதாயத்துக்காகக் காக்க வைக்காமல் அந்த இடத்திலேயே பெண் பிடித்திருக்கிறது என்று சொல்லி அவளைப் பிரமிக்க வைத்தவன். அவள் யோசிக்க வேண்டும் என்று சொல்லி, வேண்டாம் என்று சொல்ல எந்தக் காரணமும் இல்லை என்றும், வேண்டும் என்று சொல்ல தினம் ஆயிரம் காரணங்களை இன்றுவரை சொல்ல முடியும் அளவுக்கு நடந்து கொள்பவன்.
அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாளா என்று அடிக்கடி கேட்டு அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தேடித்தேடிச் செய்பவன். அவளுக்கென தனி அடையாளம் இருப்பதே தனக்கு மகிழ்ச்சி என்று சொல்வதோடு நிற்காமல் அதற்காக அவளுடன் எல்லாச் சூழ்நிலைகளிலும் ஆதரவாக நிற்பவன் . வீட்டுப் பணிகளைப் பகிர்ந்து கொள்பவன். அவளே தவிர்த்து வந்த அவள் கனவான எழுத்துலகில் சாதிக்க வேண்டும் என்பதை அவளுக்கு நினைவூட்டி, உற்சாகமூட்டி இன்று இந்தத் தொடரை எழுதக் காரணமானவன்.
அவள் மனம்விட்டு எதையும் பேச முடியும், அவன் புரிந்துகொள்வான் என்று நம்பிக்கை அளித்த நல்ல நண்பன். அவளுக்காக அவள் பெற்றோர் வேண்டுதல்களின் பலன் அவன். அவளுக்கு வாழ்க்கை அளித்த மிகப்பெரிய பரிசு அவன். தனக்கு வரப்போகிறவன் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாளோ அவை எல்லாவற்றை விடவும் அதிகமான நல்ல குணங்களைக் கொண்டு, அவளுக்காக அவளை நேசிக்கும் ஒருவன் அவன் .
கருத்து வேறுபாடுகள் பிரச்னைகள் என எது வந்தாலும் அதையும் கடந்து இந்த நபர் எனக்கு வாழ்வில் வேண்டும் என்று இருவரும் நினைக்கும் அளவுக்கு பரஸ்பரமான விட்டுக் கொடுத்தல், புரிதல் என வாழ்க்கையைக் கைகோத்துக் கடக்க ஒரு நல்ல துணை வேண்டும் என்று அவளை நினைக்க வைத்த அவன், அவளுக்கான அவன் .
எந்த நாலு பேரின் கேள்விக்காகவோ அவசரத்துக்காகவோ ஒருவரை மணம் முடித்து, ஏதோ ஒரு வாழ்வை வாழ்ந்தேன் என்று இல்லாமல் எனக்கானவன் எனக்காக என் வாழ்க்கையில் வர வேண்டிய நேரத்தில் வருவான் என்று தன் வாழ்க்கையைப் பார்த்து தன்னைத்தான் நேசிக்க அவள் கற்றுக்கொண்ட போதுதான், அவளை அவளுக்காக நேசிக்கும், அவள் கனவுளை அவளுக்காக நிறைவேற்ற போராடும் ஒருவனை அவளுக்குப் பிடித்தமானவனை வாழ்க்கை அவளுக்கு அனுப்பி வைத்தது.
(தொடரும்)
படைப்பாளர்:
பொ. அனிதா பாலகிருஷ்ணன்
பல்மருத்துவர். சிறுவயதுமுதல் தன் எண்ணங்களை கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைத்தளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகளைப் பெற்றுவருகிறார். மாநில அளவிலான கவிதைப் போட்டி, செஸ் ஒலிம்பியாட், ரங்கோலி போட்டி போன்றவற்றில் பரிசுகளை வென்றுள்ளார். இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர்.