இரண்டு கொலைகள். பாலியல் வன்புணர்வு. பெண்களின் ஆடைகளைக் களைந்து ஊர்வலம். வைரல் வீடியோவுக்குப் பின் இருக்கும் இந்தச் சம்பவங்கள் நடந்தது மே 4ஆம் தேதி. நியூஸ்க்ளிக் இது பற்றி ஜூன் 1ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது. அதே நாளில் இரு பெண்களை அறைக்குள் வைத்து பல மணிநேரம் வன்புணர்ந்து கொன்ற சம்பவத்தையும், மேலும் இதுபோல பல சம்பவங்களையும் விளக்கமாகப் பட்டியலிட்டுள்ளது இந்தத் தளம்.

தி பிரிண்ட் செய்தித் தளத்தில் இந்தச் சம்பவம் பற்றிய செய்தி ஜூன் 12ஆம் தேதி வெளியாகியுள்ளது. மேலும் சில செய்தி ஊடகங்களும் இதைப் பற்றி செய்தி வெளியிட்டுள்ளன. போலீஸ் எஃப்ஐஆரில் இருக்கும் தேதி ஜூன் 21. இந்திய ஊடகங்கள் இதைப் பற்றிப் பெரிதாகச் செய்தி வெளியிடவில்லை. இரு இனங்களுக்குள் மோதல் என்கிற தலைப்புச் செய்தியில் ஆரம்பித்து பெட்டிச் செய்தியாகி காணாமல் போயிருக்கிறது மணிப்பூர்.

இந்தியாவில் உள்ள பொதுமக்கள் வீடியோவைக் கண்டு அதிர்ச்சியும் அவமானமும் அடைவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அரசு அதிகாரத்தையும் கூடவே செங்கோலையும் வைத்திருக்கும் பிரதமர் மோடி முதன்முறையாக இதைப் பற்றிக் கேள்விப்படுவது போலப் பேசுகிறார். காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இந்தியாவின் எல்லா மாநில முதல்வர்களும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்கிறார். உண்மையைச் சொல்வதென்றால் இப்போதும் அவர் மணிப்பூர் பற்றிப் பேசவில்லை. தன் கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்தில் என்ன நடக்கிறது என்றுகூடத் தெரியாமல் சுற்றுப்பயணக் களைப்பில் இருந்தாரா என்பதை அவர் அருகில் இருப்பவர்கள்தாம் சொல்ல வேண்டும்.

மணிப்பூர் மாநிலத்தில் ஐம்பது சதவீதத்துக்கும் மேல் இருக்கும் மெய்தி இன மக்களுக்கும் நாற்பது சதவீதம் இருக்கும் குக்கி இன மக்களுக்கும் இடையேயான சிக்கல் என்பதைத் தற்போது இந்திய ஊடகங்கள் படம் போட்டு விளக்கிக் கொண்டிருக்கின்றன. நகரில், பத்து சதவீதம் இருக்கும் சமவெளியில் வாழும் மெய்தி மக்கள் பெரும்பாலும் இந்துக்கள். மலைப்பகுதிகளில் உள்ள குக்கிகள் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள். மெய்தி மக்களும் பழங்குடி அந்தஸ்து பெற்று மலைகளில் நிலம் வாங்கி நெரிசல் மிகுந்த நகரில் இருந்து மாநிலம் முழுக்கக் குடியேறுவதில் என்ன தவறு என்கிறார்கள் மெய்தி தரப்பினர். அரசு அதிகாரம், பதவிகள் என எல்லா இடங்களிலும் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி மக்கள் எங்களின் உரிமைகளையும் சலுகைகளையும் பெற்று இன்னும் எங்களைப் பின்னுக்குத் தள்ளிவிடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள் குக்கி மக்கள். அது மட்டும்தான் சிக்கலா?

மணிப்பூர் இனக்குழக்களுக்கு இடையேயான மோதல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பும் இருந்திருக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவுடன் இணைந்த பிறகும் அங்கு வன்முறை போராட்டங்கள் இருந்திருக்கிறது. அமைதிப் போராட்டங்களும்கூட. ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டமும் அதை எதிர்த்த இரோம் ஷர்மிளாவின் பல வருட உண்ணாவிரதமும் நினைவிருக்கிறதா? இந்திய ராணுவம் வன்புணர்ந்து கொன்ற மனோரமாவுக்கு நீதி கேட்டு ஆடைகளைக் களைந்து போராட்டம் நடத்திய மணிப்பூர் பெண்களை நினைவிருக்கிறதா? இப்போது ஒன்றாக இருக்கும் நாகா மற்றும் குக்கி பழங்குடியினருக்கும் இடையிலும்கூட வன்முறை மோதல் நடந்திருக்கிறது. மெய்தி குக்கி இனத்துக்கிடையே உள்ள சச்சரவும் பல காலமாக இருப்பதுதான். இப்போது நடக்கும் வன்முறை இதுவரை நடந்த வன்முறை போன்றதல்ல என்பதுதான் இதல் கவனிக்க வேண்டியது.

கடந்த நான்கைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள் குக்கி இனத் தலைவர்கள். தற்போது மணிப்பூர் முதல்வராக இருக்கும் பிஜேபியின் பிரேன் சிங் தொடர்ந்து குக்கி இனமக்களை வந்தேறிகள், போதைப்பொருள் கடத்துபவர்கள், தீவிரவாதிகள் என்று பேசி வருகிறார். கலவரத்துக்கு முன்பும், கலவரம் நடக்கும் போதும்கூட. நீதிமன்றம் மெய்திக்குப் பழங்குடி அந்தஸ்து வழங்குவது தொடர்பான ஆணை வெளியிட்ட பிறகு குக்கி மக்கள் ஊர்வலம் சென்றார்கள் மே 3ஆம் தேதி. அப்போது தீ வைப்புச் சம்பவங்கள் நடந்தன. மறுநாள் மே 4 அன்று 37 மெய்தி இனப் பெண்கள் வன்புணர்ந்து கொல்லப்பட்டு மருத்துவமனையில் உடல்கள் இருக்கின்றன, அதில் 7 வயதுக் குழந்தையும் அடக்கம் என்ற செய்தி திட்டமிட்டுப் பரப்பப்பட்டது. அருணாச்சல் பிரதேசத்தில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படம் வன்புணரப்பட்ட மெய்தி இனப் பெண் என்று வதந்தி பரப்பப்பட்டது. இந்த வதந்தியைத் தொடர்ந்து குக்கி இன மக்கள் மீது வன்முறை கட்டுக்கடங்காமல் போய்விட்டது என்று கூறுகிறார்கள்.

இந்த வதந்தி மட்டும் இல்லாமல் இருந்தால் மணிப்பூர் மக்கள் அமைதியாகத்தான் இருந்திருப்பார்கள் என்பது போல வாதம் ஒன்று முன்வைக்கப்படுகிறது. இது முன்பே அறிமுகமான வாதம்தான். கோத்ரா ரயில் எரிப்பு மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் பெரும்பான்மை இந்துக்கள் உணர்ச்சிவசப்பட்டு கலவரத்தில் இறங்கியிருக்க மாட்டார்கள் என்று சில வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட அந்தக் கலவரத்தில் பில்கிஸ் பனோ வழக்கு பல வருடங்களைக் கடந்து நீதியை நிலைநாட்டியது. சிறையில் இருந்திருக்க வேண்டிய நாள்களில் பல மாதங்கள் பரோலில் வெளியே இருந்த குற்றவாளிகள் நன்னடைத்தைக்காக முன்கூட்டியே ரிலீஸ் செய்யப்பட்டார்கள். இன்றும் பில்கிஸ் பனோ நீதிமன்ற வாசலில் உட்கார்ந்திருக்கிறார். மணிப்பூர் வீடியோவில் இருப்பவர்கள் புகார் பதிவு செய்த பிறகும் சுதந்திரமாகத்தான் இருந்தார்கள். வீடியோ வைரல் ஆன பிறகு ஒரே நாளில் கைது செய்யப்பட்டுவிட்டார்கள். முடிவு என்ன என்பதற்கு பில்கிஸ் பனோவின் வழக்கே சாட்சி.

இந்த வெறுப்பரசியல் இதோடு முடியவில்லை. துப்பாக்கிகளைத் தூக்கிக் கொண்டு ஓடிவிட்டார்கள். கோயில்களை இடித்துவிட்டார்கள். இங்கிருக்கும் குக்கிகள் நல்லவர்கள், மியான்மரிலிருந்து வந்த அகதிகள்தாம் கலவரத்தைத் தூண்டுகிறார்கள். இப்படி அடுக்கடுக்காகத் தொலைக்காட்சிகளில் வலதுசாரிகளால் வைக்கப்படும் வாதங்களை மறுக்கிறார் பத்திரிகையாளர் கிரிஷ்மா. “துப்பாக்கிகள் கொண்டு போனது மெய்தி மக்கள் என்றும் கோயில்கள் இடிக்கப்படவில்லை என்றும் காவல்துறையே சொல்கிறது. மியான்மரில் இருந்து வந்த அகதிகள் எண்ணிக்கை 1500தான். அதிலும் கிட்டத்தட்ட 500 பேர் திரும்பச் சென்றுவிட்டார்கள்” என்று உண்மையை விளக்குகிறார் கிரிஷ்மா.

இதெல்லாம் எங்கோ நடக்கிறது என்று நாம் நினைக்கலாம். இதெல்லாம் ஒரு நாளில் நடக்கவில்லை. தொடர்ந்து வெறுப்பும் பொய்களும் எல்லார் மனதிலும் விதைக்கப்படுகின்றன. நேற்று குஜராத். இன்று மணிப்பூர். நாளை தமிழகமாகவும் இருக்கலாம். வட இந்திய சினிமாக்களும் சீரியல்களும் செய்தித் தெலைக்காட்சிகளும் தமிழ்நாட்டைப் பிரிவினை பேசும் மாநிலமாகத் தொடர்ந்து சித்தரிக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கும் ஒரு ஸ்க்ரிப்ட் தயாராக இருக்கலாம். ஏற்கெனவே நீங்களும் நானும் அதன் பாத்திரங்களாத்தாம் இருக்கிறோம். உங்கள் மனசாட்சியைக் கேளுங்கள். சமீபக் காலங்களில், “நாம் பெரும்பான்மையாக இருந்தாலும் அமைதியை விரும்புகிறோம். ஆனால், நம்மை சும்மா இருக்கவிடாமல் இவர்கள் திமிராக நடக்கிறார்கள்” என்கிற எண்ணம் எத்தனை முறை தோன்றியது? திட்டமிட்டுக் கலவரங்கள் தொடங்குவது இந்தியாவில், ஒரு பேட்டர்னாகவே மாறிக் கொண்டிருக்கிறது. பெரும்பான்மை சமூகம் பயந்து நடுங்கி அநீதி இழைக்கப்பட்டு வாழ்வதாக நம்ப வைப்பது அந்த பேட்டர்னின் முதல் படி. ஹிட்லர் காலத்தில் இருந்தே இதுதான் ஃபார்முலா.

ஹிட்லரின் நாஜிக் கொடுமைகள் பற்றிய மார்ட்டின் நெய்மொலரின் கவிதை ஒன்று இருக்கிறது.

First they came for the socialists, and I did not speak out—because I was not a socialist.

Then they came for the trade unionists, and I did not speak out—because I was not a trade unionist.

Then they came for the Jews, and I did not speak out—because I was not a Jew.

Then they came for me—and there was no one left to speak for me.

—Martin Niemöller

பலமுறை பல்வேறு விதமாக மாற்றி எழுதப்பட்ட இந்தக் கவிதையின் அடிநாதம் ஒன்றுதான். மற்றவர்களுக்கு அநீதி நடக்கும் போது நமக்கென்ன என இருந்தால் நமக்கு அநீதி நடக்கும்போது கேள்வி கேட்க யாருமே இருக்கமாட்டார்கள் என்பதுதான் அது.

பெரும்பான்மை மக்கள்தாம் வெறுப்பரசியலைத் தடுக்க முடியும். குறிப்பாகப் பெண்கள். எல்லாக் கலவரங்களிலும் பெண்களே அதிகப் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பெண்கள் ஆண்களின் உடைமை என்கிற எண்ணமே அதன் அடிப்படை. கணவனின் காலைக் கழுவி இன்ஸ்டாவில் போஸ்ட் போடும் பெண்களே சற்றே நிமிர்ந்து பாருங்கள். பெரும்பான்மை இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணாக இருப்பவர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கலாம். அது நிரந்தரம் அல்ல. கண்களைத் திறந்து நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று பாருங்கள். வாயைத் திறந்து பேசுங்கள். யாரோ பெயர் தெரியாத மணிப்பூர் பெண்ணுக்காக மட்டுமல்ல, நமக்காகவும் நம் சந்ததிகளுக்ககாவும்.

படைப்பாளர்:

இரா. கோகிலா. இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும்.  கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்