சிறந்த ஆண் தொழிலதிபரான விருதை இந்த ஆண்டு வாங்கி இருக்கும் சுமந்துடன் ஒரு பேட்டி. நெறியாளர் சீமா.

“வணக்கம் சுமந்த். வாழ்த்துகள்.”

“வணக்கம் சீமா. நன்றி.”

“சொல்லுங்க சுமந்த், எப்படி இவளோ அழகா இருக்கீங்க? இதுதான் உங்க வெற்றியின் ரகசியமா? ஹிஹி.”

சுமந்த் அசௌகரியமாக நெளிகிறான்.

“அவ்ளோ அழகெல்லாம் இல்லைங்க.”

கேள்வி: பெண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் தொழில் துறையில் எப்படி முன்னுக்கு வந்தீர்கள்? ஓர் ஆணாக இதற்கு என்ன விலை கொடுக்க வேண்டி இருந்தது?

சுமந்த்: எனக்குச் சிறு வயதிலிருந்தே பெரிய கனவுகள் இருந்தன. நான் நன்றாகப் படித்தேன். கல்லூரியில் கேம்பஸ் நேர்முகத் தேர்விலேயே புகழ்பெற்ற ஏபிசி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. பத்தாண்டுகள் அங்கு பணிபுரிந்தேன். பின்பு எனது லட்சியமான சொந்தத் தொழிலைத் தொடங்கினேன்.

(நெறியாளர் இடைமறிக்கிறார்) ஏன் அப்படிச் செய்தீர்கள்?

சுமந்த்: புரியவில்லை.

நெறியாளர்: இல்லை, இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள், நல்ல வேலையிலும் இருந்துள்ளீர்கள். திருமணம் குழந்தை என்று மகிழ்ச்சியுடன் வாழ்வைத் தொடர ஏன் விருப்பமில்லை?

சுமந்த்: எனது லட்சியம் ஒரு சிறந்த தொழிலதிபராக வேண்டும் என்பதே.

நெறியாளர்: அப்படியா? உங்கள் குழந்தைப்பருவம் மகிழ்ச்சிகரமாக இருந்ததா? திருமண வாழ்வை வெறுக்கும்படி ஏதும் சம்பவங்கள்…

சுமந்த: அப்படியெல்லாம் எதுவுமில்லை. நாங்கள் மிடில் க்ளாஸ் குடும்பம். அப்பாவும் அம்மாவும் ஆசிரியர்கள். நானும் எனது தம்பியும் என்று மகிழ்ச்சியான குடும்பம்தான்.

நெறியாளர்: நீங்கள் எதையோ மறைப்பது நன்றாகவே தெரிகிறது. போகட்டும். உங்கள் தம்பி என்ன செய்கிறார்?

சுமந்த்: அவர் டென்னிஸ் விளையாட்டு வீரர்.

நெறியாளர். ஓ! பரவாயில்லை. உங்கள் பெற்றோர் உங்கள் இருவரையும் பெண்கள் போலத் தைரியமாக வளர்த்திருக்கிறார்கள். அதற்காகப் பாராட்ட வேண்டும்.

சுமந்த்: ஆமாம், நான் இளவயதில் ஒரு போதும் என்னை ஆண் போலக் கருதிக்கொண்டதில்லை. எப்போதும் பெண்களுடன்தான் இருப்பேன். பெண் நண்பர்கள்தான் எனக்கு அதிகம். அதனாலேயோ என்னவோ பெண்கள் சூழ்ந்த இந்தத் துறையிலும் என்னால் ஜெயிக்க முடிந்தது.

நெறியாளர்: சரி, என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை. உங்கள் கூந்தல் அலை அலையாக இவ்வளவு அழகாக இருப்பதற்கு என்ன செய்கிறீர்கள்?

சுமந்த்: வெட்கப்பட்டுச் சிரிக்கிறான். ஒன்றும் இல்லை. தேங்காய் எண்ணெய்யும் சீயக்காயும்தான். எனது அப்பா சிறு வயது முதலே எங்கள் கூந்தலை நல்ல முறையில் பராமரிப்பார்.

நெறியாளர்: அப்படியா? அப்பாவிடமிருந்து சமையல் கற்றுக் கொண்டீர்களா? உங்கள் ஸ்பெஷல் டிஷ் என்ன?

சுமந்த்: ஹஹா… ஓரளவு சமைப்பேன். ஆனால், அப்பா அளவுக்கு இல்லை. மீன் குழம்பு அருமையாகச் செய்வேன்.

நெறியாளர். அப்போ கண்டிப்பாக ஒருநாள் உஙக்ள் கையால் மீன் குழம்பு சாப்பிட வேண்டும்.

சுமந்த்: யூ ஆர் மோஸ்ட் வெல்கம் சீமா!

நெறியாளர்: சரி, மீண்டும் சீரியஸான விஷயத்துக்கு வருவோம். திருமணம் வேண்டாம் என்பதற்குக் காரணம் என்ன? ஏதும் காதல் தோல்வியா?

சுமந்த்: அதெல்லாம் இல்லை. எனது தொழிலை விரிவடையச் செய்ய என்ன முயற்சிகள் எடுத்தேன் என்றால்…

நெறியாளர்: (மீண்டும் இடைமறித்து) உங்கள் குருவான தீபம் தொழில்குழு நிறுவனர் திவ்யாவைப் பற்றிச் சொல்லுங்கள். அவர்தான் உங்கள் வெற்றிக்கு முழுக்காரணம் என்று பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறீர்கள்.

சுமந்த்: ஆமாம் ஒரு தொழில் மாநாட்டில்தான் திவ்யாவை முதன் முதலில் சந்தித்தேன். சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த அவரது பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. மாநாட்டின் இடைவேளையில் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். எனது வளர்ச்சிக்கு உதவும் வகையில் மெண்டராக இருப்பதில் விருப்பம் என்றார். பின்பு நாங்கள் நல்ல நண்பர்களாகிவிட்டோம். எப்போது என்ன சிக்கல் என்றாலும் திவ்யாவைத்தான் அழைப்பேன். எனது வளர்ச்சியில் அவருக்கு முக்கியப் பங்கு உள்ளது.

நெறியாளர். உங்களுக்கும் அவருக்கும் நட்பு தாண்டிய உறவிருப்பதாகவும் அதனால் திவ்யாவின் குடும்பத்தில் சிக்கல் என்றும் பேசிக் கொள்கிறார்களே?

சுமந்த் (கோபமாகிறான்) இந்தக் கேள்விக்குப் பதில் கூற எனக்கு விருப்பமில்லை.

நெறியாளர். எங்கள் வாசகர்கள் அறிந்துகொள்ள விரும்புவார்கள். சொல்லுங்கள். ஓர் ஆணாக உங்கள் குறுகிய கால வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் திவ்யா போன்றதொரு வலிமையான துணை இருந்ததுதான் சாத்தியம் என்பது உங்கள் துறையில் ஊரறிந்த ரகசியமாக இருக்கிறது. இந்த விருதுக்குக்கூட அவர் கடுமையாகப் பரிந்துரை செய்ததாக ஒரு பேச்சு. ஆனால், உங்கள் கருத்தை அறிய விரும்புகிறோம்.

சுமந்த் பேட்டியை முடித்துக்கொள்ளலாம் என்று சைகையுடன் எழுந்து செல்கிறான்.

(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.