‘நான் யார்?’ என்கிற கேள்வி சுயதேடலையும் தன்னை அறிந்துகொள்ளவும் உதவும் என்பதைவிட, அதற்கான பதிலை நாம் கூறாவிட்டால், அதற்கான பதிலை அந்த நாலு பேர் நம் மீது திணிக்கத் தயங்க மாட்டார்கள்.

‘நீ யார்?’ என்கிற கேள்விக்கு ஒரு பெண்ணிடம் அவர்கள் எதிர்பார்ப்பது மூன்று விடைகள் மட்டுமே. முதலில் ஒருவருக்கு மகள், ஒரு குடும்பம், ஒரு சமூகம் என்கிற அடையாளங்கள் நாம் கேட்காமலே நமக்குப் பிறப்பால் எளிதில் கிடைத்துவிடும். கிடைக்காதது இவற்றையும் அது சார்ந்த பழக்க வழக்கங்களையும் எதிர்த்துக் கேள்வி கேட்கும் உரிமை மட்டுமே.

இரண்டாவது ஒருவருக்கு மனைவி. இத்தனை நாள் தான் பார்த்து வளர்ந்த பழக்க வழக்கங்கள், இத்தனை வருடம் தன்கூட வந்த அப்பா பெயர், சொந்த பந்தங்கள் எல்லாம் விடுத்து இன்னொரு குடும்பத்திற்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொண்டாக வேண்டும்.

மூன்றாவது அவள் யார் என்றால் அவள் குழந்தைகளுக்குத் தாய் என்று பதில் சொல்லியாக வேண்டும். அதுவும் அந்த இரண்டாம் மூன்றாம் நிலைகளுக்கு அந்த நாலு பேர் நிர்ணயத்திருக்கும் காலகட்டத்திற்குள் சென்று சேரவில்லை என்றால், ஒரு பெண் சந்திக்க வேண்டிய கேள்விகள் ஏராளம்.

கனவுகள், திறமைகள், சுயதேடல், கேள்வி கேட்டல் போன்றவை அந்த மூன்று கோ(கூ)ட்டுக்குள் வராததால் அவர்களைப் பொறுத்தவரை பெண்கள் அகராதியில் அவை இடம்பெறக் கூடாது.

அவள் முதலில் மருத்துவத்துறையில் சேர விரும்பிய போது பெண் பிள்ளைகளுக்கு ஏன் இவ்வளவு செலவு செய்து படிக்க வைக்க வேண்டும் என்று கேள்வி கேட்ட அவர்கள், அவள் ஊரில் சொந்தமாகப் பல் மருத்துவமனை திறந்த போது வாசலிலேயே காத்திருந்தார்கள். இதற்கு ஆன செலவில் அவளுக்கு ஜாம் ஜாம் என்று கல்யாணம் முடித்திருக்கலாமே என்று அவள் பெற்றோரிடம் கேள்வி கேட்டு வழிமறித்துக் கொண்டு.

மருத்துவத்துறையில் அவள் சேர்ந்தால் நிச்சயம் அவள் வேறு இனத்தவனைக் காதல் திருமணம் செய்து கொண்டு போய்விடுவாள் என்று ஆருடம் சொன்னவர்கள்தாம், அவள் முப்பது வயதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த போது அவளை மருத்துவராக இல்லாமல் வேறு துறையில் சேர்த்திருந்தால் முன்பே திருமணம் நடந்திருக்கும் என்று அவள் பெற்றோரைக் குறை கூறி, பொருத்தமே இல்லாத வரன்களைக் காட்டி திருமணம் செய்து வைக்க வற்புறுத்தினார்கள்.

மேற்படிப்புக்குத் தயாராக மருத்துவமனையை மூடிய போது, அது திறக்க எதிர்ப்பு தெரிவித்த அதே வாய்கள்தாம், ஏன் வருமானம் வரும் மருத்துவமனையைப் பொறுப்பில்லாமல் மூடுகிறீர்கள் என்று கேள்வி கேட்டன.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செயற்கை விக் செய்ய முடிதானம் செய்தபோது, பெண்களுக்கு நீண்ட முடிதான் அழகு, இதெல்லாம் தவறான செயல் என்று அவள் கேட்காத அறிவுரைகளை அள்ளி வழங்கினார்கள் அந்த நாலு பேர். வேறு துறைக்குப் பணிக்குச் சென்ற போது, டாக்டருக்குப் படித்துவிட்டு இந்த வேலை ஏன் செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்டது.

அவள் தன் சிறு கூட்டைத் தாண்டி வெளியுலகைக் காணச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்த போது, பெண்களுக்குச் சுதந்திரம் குடுத்தால் தவறான பாதையில் சென்று விடுவார்கள் என்று எச்சரிக்கை செய்தார்கள். பெற்றோர் தேர்ந்தெடுத்த, தனக்கும் பிடித்த ஒருவரைத் திருமணம் செய்த போது, வேலையிலிருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்த போது, வீட்டில் இருப்பதற்கு எதற்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்றார்கள் அந்த நாலு பேர். வேலைக்குச் செல்லத் தொடங்கிய பின் வீட்டை எப்படிக் கவனித்துக்கொள்வாள், பிள்ளைகளை எப்போது பெற்றுக்கொள்வார்கள் என்று கேள்விகள் கேள்விகளைக் கேட்டார்கள் அந்த நாலு பேர். இனியும் அவை தொடரும்.

இத்தகைய கேள்விக்கணைகள் அவளைத் துளைக்கும்போது ஒரு புன்னகையை மட்டுமே பதிலளித்த அவளுக்குள் எழுந்த ஒரே ஒரு கேள்வி, “நான் என் வாழ்க்கையில் என்ன செய்தால் இவர்களுக்கு என்ன?” என்பது மட்டுமே.

தன் விருப்பப்படி மருத்துவத்துறையில் சேர்ந்தாள். சொந்த மருத்துவமனையைத் தன் ஊரில் நடத்தினாள். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை முடிதானம் செய்தாள். வேறு துறைக்கு மாறினாள். வெளியுலகைத் தனியாகப் பயணித்து கண்டு வந்தாள், அதை வார்த்தைகளாக, ஓவியங்களாகக் கிறுக்கினாள். விரும்பிய நேரத்தில் திருமணம் செய்துகொண்டாள்.

ஓய்வு எடுக்க வேண்டிய நேரத்தில் எடுத்தும் , பின் மீண்டும் பணிக்கு திரும்பியும். இப்போது வேறு மாநிலத்தில்… வேறு வாழ்க்கை முறை… இனியும் அவள் வாழ்க்கை அவள் விரும்பும் வண்ணம் மட்டுமே தொடரும்.

அந்த நாலு பேர் நானூறு விதமாகக் கேள்வி கேட்டாலும், அவளுக்கு அவள் யார், அவள் வாழ்க்கையை அவள் விரும்பிய வண்ணம் வாழ என்ன செய்ய வேண்டும் என்கிற தெளிவிருந்தால், அவளை அவள் கேட்டுக் கொள்ளும் கேள்விகளுக்கு அவள் உளமார பதில் அளிக்க முடிந்தால், அவள் நிம்மதியாக வாழ முடியும். நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

படைப்பாளர்:

rbt

பொ. அனிதா பாலகிருஷ்ணன்

பல்மருத்துவர். சிறுவயதுமுதல் தன் எண்ணங்களை கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைத்தளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகளைப் பெற்றுவருகிறார். மாநில அளவிலான கவிதைப் போட்டி, செஸ் ஒலிம்பியாட், ரங்கோலி போட்டி போன்றவற்றில் பரிசுகளை வென்றுள்ளார். இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர்.